Home » தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

by Damith Pushpika
October 29, 2023 6:00 am 0 comment

உடல்நிலை சரியில்லை என்றாலும் சமீஹா அதிகாலையில் எழும்பினால்தான் அன்றைய நாளின் அவளது உணவுத்தேவைகள் நிறைவேறும். முகம் கழுவி இறைவனையும் தொழுதுவிட்டு இடியப்பம் அவிக்க அடுப்பங்கறை நோக்கி நகர்கையில், மகன் றினாஸ் இருமும் சத்தம் கேட்டு பக்கத்து அறைக்கு சென்றாள்.

“நேரம் மூனாகியும் இன்னுமா தூங்கல மகன் ?”

“இல்லம்மா. நான் தூங்கி இப்போதான் எழும்பினன். ஆனா என்ட வயசுல இருக்குற பிள்ளையல் போல மணிக்கணக்கா என்னால தூங்கமுடியல்லம்மா. நான் தூங்க நினச்சாலும் என்ட மனசு தூங்க விடுதில்லமா. நீங்க படுற கஷ்டங்கள என்னால பார்த்துட்டு இருக்க முடியல்ல.

“மகன்….. இங்க பாருங்க. வாழ்க்கைனா ஆயிரம் கவலைகள் வரத்தான் செய்யும். அதெல்லாம் நினைச்சுட்டு இருந்தா நம்ம வாழ்க்கைய நம்ம வாழாமலே போய்டுவம். எது நடந்தாலும் அதெல்லாம் அனுபவ பாடமா எடுத்துட்டு எல்லார் முன்னாடியும் வாழ்ந்து காட்டணும். உங்க வாப்பா சொல்வார், சோதனைகள் வந்தா அத சாதனையாக்க இறைவன் நமக்கு தன்னம்பிக்கையையும் அறிவையும் தந்திருக்கான். எப்பவுமே சோர்ந்து போகாம நம்ம வாழ்க்கைய நமக்கு பிடிச்சாமாதிரி வாழ நம்மதான் முயற்சிக்கணும்னு அடிக்கடி சொல்வார். அந்த முயற்சியும் அவர்ட நல்ல குணமும்தான் அவர நிம்மதியா வாழ வச்சிச்சி. அவரோட பிள்ள நீங்க சோர்ந்து போய் பேசலாமா?”

“றினாஸ், உங்களுக்கு நிறைய சாதிக்கவேண்டிய வயசு இருக்கு. தைரியமா இருங்க மகன்” என ஆறுதல் சொல்லிட்டு தனது வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.

றினாஸ் உம்மாவை பின் தொடர்ந்து சென்று ” உம்மா எத்தன நாளைக்கிதான் ஏலாத வயசுல இடியப்பம் அவிச்சும், விறகு தேடியும் கஷ்டப்படுவிங்க. நான் இருந்தும் நீங்க கஷ்டப்படுறத என்னால பார்க்க முடியல . வாப்பா மரணிச்ச பிறகு பல பேர்ட பழிச்சொற்களுக்கு ஆளாகி தனிமரமா நிண்டு யாரோட துணையுமில்லாம நீங்க சிரமப்பட்டு என்ன வளர்த்திருக்கிங்க. அப்போ நம்ம உறவுகள் ஏன் உதவல்ல?” சொல்லுங்க என மகன் வினவ தாய் மௌனமாய் நின்றாள்.

“உம்மா, நீங்க என்ன வளர்க்க பட்ட கஷ்டமெல்லாம் இப்பவும் என் கண்ணுக்குள்ளே நிக்கி, படிச்சி பட்டமெடுத்தும் தொழில எதிர்பார்த்து எதிர்பார்த்து காலம்தான் போகுதும்மா. அரச வேலை கிடைக்குறப்போ கிடைக்கட்டும். வேற ஏதாச்சும் வேல செஞ்சாத்தான்ம்மா நம்ம கஷ்டங்கள போக்கலாம். முதல்ல நம்ம உறவுகள பத்தி சொல்லுங்க, உங்க வாழ்க்கைல என்ன நடந்திச்சினு சொல்லுங்கம்மா” தாய்க்கு சிறு உதவிகளை செய்து கொண்டு கேள்விகளை அவிழ்த்துக் கொண்டிருந்தான்.

சமீஹாவும் இடியப்பங்களை ஒவ்வொன்றாக அடுக்கியவளாய் இருண்ட மேகங்கள் கலைவது போல் இருண்ட வாழ்விலிருந்து சற்றே அவளின் மகிழ்வான வாழ்வின் பக்கம் நினைவுகளை பின்னோக்கினாள்.

சிறுவயதில் சமீஹா அந்த ஊருக்கே செல்லப்பிள்ளையாக திகழ்ந்ததுடன் , அந்த ஊரிலே அழகி என்று சொல்லுமளவு உடலாலும், உள்ளத்தாலும் அழகானவளாயிருந்தாள். சமீஹாவுக்கு பணத்திற்கு பஞ்சமில்லையென்றாலும் அவள் எளிமையான வாழ்வையே வாழ விரும்பினாள்.

அதிகாலை எழும்பி பூமரங்களுக்கு தண்ணீர் ஊற்றுவதும், வயல் பக்கம் சென்று பச்சை பசேலென்ற நெற்கதிர்களை ரசித்து வரம்போரம் காலார நடந்து செல்வதும், வீட்டில் சொகுசான குளியலறை இருந்தாலும் வாய்க்காலில் குளிப்பதையே விரும்புபவளாகவும், பசுக்கன்றுகளை தடவி மகிழ்வதும், தென்னை ஓலைகளில் சவாரி செல்வதுமென அவள் பொழுதுகள் கழிந்தன.

இப்படி இயற்கையோடு மகிழ்வுற்று வாழ்ந்த அவளை நகரத்திலிருந்து வந்த வாலிபரான வைத்தியருக்கு பிடித்துப்போக பெண் கேட்டு வந்தனர். வைத்தியரான மாப்பிள்ளை பார்க்க அழகான தோற்றமும், வசதியும் அதிகமா இருந்தாலும் அவள் மனம் ஏனோ பணத்தை விட நல்ல குணத்தைதான் அதிகம் எதிர்பார்த்தது. அனைவருக்கும் மாப்பிள்ளையை பிடித்துப் போக சமீஹாவிற்கோ மனம் ஏற்க மறுத்தது.

ஏன் மகள் இந்த மாப்பிள்ளைக்கு என்ன கொற? உனக்கேத்த மாப்ள. வேண்டாம்டு சொல்லாதிங்க மகள். என தந்தை அவள் மனதை மாற்ற முயற்சித்தார்.

“இஞ்ச பாருங்க, நான் கலியாணம் கட்டினா நல்ல குணமுள்ள ஒருவரத்தான் முடிப்பன். இந்த மாப்பிள்ளையை எனக்கு பிடிக்கல்ல. என்ன கட்டாயப்படுத்தாதிங்க….”

சமீஹா சொன்னதை ஏற்க மறுத்த அவளது உறவுகள் வாக்குவாதம் செய்தனர். அவனைத்தான் முடிக்க வேண்டும் என வற்புறுத்தினர். இரவு முழுவதும் தூங்காமல் அழுதுவிட்டு காலையில் கவலை மறக்க இயற்கையை நாடி வயல் நோக்கி புறப்பட்டாள்.

சமீஹா தான் விரும்பும் ஒருவன் தன் எதிர்கால காணவன், தன் மனங்கவர்ந்த கள்வன் எப்படி இருக்க வேண்டும் என கனவு கண்டாளோ, கற்பனைகளை வளர்த்தாளோ அதே போன்ற ஒரு வாலிபனை அந்த ஊரில் கண்டாள். அவனது அன்பான செயல்களாலும், கனிவான பேச்சினாலும் ஈர்க்கப்பட்ட சமீஹாவிற்கு வாய்க்காலின் சல சல சத்தத்தோடு காதோரம் வந்த இவனைப்பற்றிய பேச்சுக்கள் இன்னும் ஈர்ப்பை ஏற்படுத்தவே ஊர் பெயர் தெரியாத இவன் யார்? என் மனதை சத்தமில்லாமல் பறித்தவன் யார்? என அறிய முயற்சித்தாள். அவனைப் பற்றி யாரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என அவள் சிந்தனை வயப்பட்டவளாய் வந்த போது, எதிரில் சமீஹாவின் தூரத்து உறவான அந்தப் பாட்டி வந்தாள்.

பாட்டியை கண்ட சமீஹா ” பாட்டி பாட்டி நில்லுங்க பாட்டி கொஞ்சம் நில்லுங்க “என்றாள்.

பாட்டியோ ” ஏன் என்ன நிக்க சொல்ற?” என்றதும்…

“அது ஒண்ணுமில்ல பாட்டி. நம்ம ஊருக்கு புதுசா வந்திருக்காரே ஒருத்தர் அவர் யார்?” என கொஞ்சம் வெட்கப்பட்டவாறே கேட்டாள்.

பாட்டியோ “ஓ அவனா” என்றவள், சிறிது சிந்தித்தாள். சமீஹா அவனைப்பற்றி கேட்டது போல் அவனும் இந்தப் பாட்டியிடமே சமீஹாவைப்பற்றி இரண்டு நாள் முன்பு விசாரித்ததை மனதிற்குள் நினைத்து சிரித்தவாறு அவனைப் பற்றி சொல்லத் தொடங்கினாள்.

“இறைவன் மேல் பக்தியும், பெண்களை மதிக்கும் குணமும் கொண்டவன். அழகிலும் குறையில்லாதவன், பணத்தில் பற்றாக்குறை இருந்தாலும் குணத்தில் செல்வந்தன். தன்னிடமிருப்பதை பிறருக்கு கொடுத்து விட்டு அதில் இன்பமடைபவன். தான் உழைக்கும் பணத்தில் தானம் வழங்கி பல உயிர்களை வாழ வைப்பவன். வைத்தியரென்றாலும் விவசாயத்தொழிலையும் நேசிப்பவன். நல்ல தங்கமான பொடியன்.

“அவன கல்யாணம் கட்ற புள்ள குடுத்துவச்சவ” எனக் கூறி முடித்ததுவிட்டு பாட்டி சற்று சிந்தித்தாள்.

அவனுக்கும் சமீஹா மீது சிறு விருப்பமிருப்பது போல் அவன் பேசியது பாட்டியின் நினைவிற்கு வந்ததும் பாட்டியோ “அவன் உனக்கு கணவனா கெடச்சா ஒன்ட வாழ்க்க சிறப்பா இருக்கும். பேசாம நீயே கட்டிக்க பேத்தி ” என சமீஹாவிடம் கதையோடு கதையாக பேசினாள் .

“போங்க பாட்டி, நா எது கேட்டாலும் எங்கிட்ட கிண்டல் செய்றதே உங்களுக்கு வேலயாச்சி. சும்மா தெரிஞ்சிக்கலாமேன்னு கேட்டேன்” என வெட்கப்பட்டவாறு, “நேரமாச்சி பாட்டி நா வீட்ட போறன்” என பாட்டியிடம் கூறிவிட்டு நகர்ந்தாள். சமீஹாவிற்கும் விருப்பமிருப்பதை அவளது பேச்சில் உணர்ந்தாள் பாட்டி. சமீஹாவோ அவனிடம் பேச வேண்டுமென நினைத்துக்கொண்டே வீடு திரும்பினாள்.

வீட்டின் வாசற்படியில் காலைவைத்தவள் முன்னே நடந்து கொண்டிருந்த காட்சியைக் கண்டு ஆச்சரியமானாள். நடப்பது நிஜம்தானா என கிள்ளிப்பார்த்தாள். ஆம் பாட்டியிடம் விசாரித்த பையன் அஜாஸ் தன்னை பெண்கேட்டு வந்திருந்தான்.

இவர் எப்படி இங்க? இப்பதானே பாட்டிகிட்ட விசாரிச்சிட்டு வந்தன்! என்ன இது, எதுவுமே புரியாமல் திகைத்து நின்றாள்.

அஜாஸ் சமீஹாவின் தந்தையை பார்த்து “உங்கட மகள நான் திருமணம் முடிக்க சம்மதம் கேட்டு வந்தன் ” தந்தைக்கோ எதுவும் புரியவில்லை. சமீஹாவையும் அஜாஸையும் மாறி மாறிப் பார்த்தார்.

அஜாஸ் சமீஹாவின் தந்தையை நோக்கி “நீங்க நினைக்குறமாதரி இல்ல. நான் உங்க மகள திருமணம் முடிக்க விரும்புறன். நீண்ட நாளா நா உங்க மகளுக்கு தெரியாமலே அவவ நேசிச்சன். சமீஹாவின் விருப்பம் தெரியாம எப்டி சொல்றனு இவ்ளோ நாளும் யோசிச்சிட்டு இருந்தன்”. என தந்தையை நோக்கி கூறிய அஜாஸ் சற்றே தனது கண்களை சமீஹாவின் பக்கம் திருப்பினான். “சமீஹா .. நீங்க அடிக்கடி உங்க உறவுக்கார பாட்டியோட பேசுறப்போ நான் உங்கள கண்டிருக்கன்.

பாட்டிதான் உங்களப்பத்தி எங்கிட்ட பேசினாங்க. பாட்டிக்கிட்டதான் உங்களபத்தி நிறைய தெரிஞ்சு கொண்டன். முறப்படி வீட்டயே பொண்ணு கேட்டு வரலாம்னு இருந்தன். இப்போதான் நீங்களும் என்ன பத்தி விசாரிச்சத பாட்டி சொன்னாங்க. உங்களுக்கும் விருப்பம் இருக்குற மாதிரினு சொன்னாங்க. இத கேள்விப்பட்டதும் தாமதப்படுத்தாம உடனே கேட்டுடலாம்னு வந்தன் “.

சமீஹா வெட்கத்தால் த​ைலகுனிந்தாள்.

” ஊர் பேர் தெரியாத உன்ன மாப்பிள்ளையா எடுக்க சம்மதமில்ல ” என வீட்டிலுள்ளோர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

” எனக்கு அவரை பிடிச்சிருக்கு” என சட்டென்று சமீஹா சம்மதம் தெரிவித்தாள். அனைவரின் கண்களும் சமீஹாவின் பக்கம் திரும்பியது.

“என்ன சொல்ற சமீஹா நம்ம அந்தஸ்துக்கும், மதிப்புக்கும் யாருன்னே அறிமுகமில்லாத ஒருத்தருக்கு எப்டி இப்டி சம்மதம் சொல்ல உனக்கு தோனிச்சி ?” என தந்தை கேட்டார்.

“என்ன மன்னிச்சிடுங்க. நான் பணத்தையோ, அந்தஸ்தையோ எதிர்பார்க்கல வாப்பா . நா எதிர்பார்த்தது நல்ல குணம். அது இவங்கள்ட நிறைய இருக்கு .”

சமீஹாவின் தந்தைக்கோ அவள் சொன்னதைக் கேட்டு கோபம் அதிகரித்தது.

“அவனை முடித்தால் உனக்கும் இந்தக் குடும்பத்திற்கும் எந்த உறவுமில்லை, சொத்திலும் பங்கில்லை”

“எனக்கு எந்த சொத்தும் வேண்டாம். வாழ்க்கைல நிம்மதியும் மகிழ்ச்சியும், இறைபக்தியும், நல்ல குணமும்தான் முக்கியம். எனக்கு எதுவும் வேண்டாம்.”எனக் கூறினாள்.

அஜாஸின் பக்கம் தந்தையின் பார்வை திரும்பியது. கண்டபடி அஜாஸை திட்டினார். சமீஹாவும் ” வீட்டார் சம்மதத்தோடு, அவனைத் தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய சம்மதிக்கமாட்டேன்” என அடம்பிடிக்க நாட்கள் நகர்ந்தன. சமீஹாவிற்கும் வயது செல்வதை நினைவில் கொண்டு ஊரார் முன்னிலையில் உறவுகளின் பூரண சம்மதமின்றி திருமணம் செய்து வைத்தாள் தாய்.

பக்கத்து ஊருக்கு சென்று இருவரும் சந்தோசமாக வாழ்ந்தனர். காலம் சென்றது. சமீஹாவிற்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

“சமீ, நான் உங்கள சந்தோசமா வச்சிருக்கனா? ” என அஜாஸ் வினவ ” ஏன் .. ஏன்ங்க இப்டி கேக்கிங்க ? ஏதும் கனவு கண்டிங்களா.? ”

” இல்லம்மா, உங்களோட உறவுகள் என்னால தூரமா இருக்குறத நினச்சா மனசுல….”

” மனசுல என்ன.. சொல்லுங்க .” என மனைவி கேட்டாள். ” “என்னாலதானே, உறவுகள் பேசாம இருக்கு, சீக்கிரமாவே நம்மல ஏத்துக்கனும்னு நானும் கேட்காத பிரார்த்தனையில்ல. ஒருநாள் நம்மல ஏத்துப்பாங்கனு நம்புறன்.” என கணவன் கூறினான்.

” நம்ம நல்ல நிலைக்கு வந்தபிறகு அவங்க முன்னாடி போவம். கண்டிப்பா ஏத்துப்பாங்க. நீங்க ஒன்டயும் நெனச்சி கவலப்படாதிங்க” எனக் கூறினாள்.

“ஹ்ம். கண்டிப்பா சமீ ” என கூறிவிட்டு தூங்கச் சென்றான். பொழுதுகள் விடிந்தன. தாய் இல்லாத குறையை அஜாஸ் நிவர்த்தி செய்தான். வீட்டு வேலைகளிலும் பிள்ளை வளர்ப்பதிலும் சமீஹாவிற்கு ஒத்தாசை வழங்கினான். இருவரும் பிள்ளையுடன் சந்தோசமாக வாழ்ந்ததை கண்டு பொறாமை கொண்ட காலம் அவள் சந்தோசத்தை ஒரு நொடியில் பறித்தது. ஆம் அஜாஸ் சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகி மரணித்து விட்டான்.

கணவன் மரணித்த செய்திகேட்டு கண்ணீர் விட்டுக் கதறினாள். மடியில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையின் தலையை தடவியபடி” உன்னோட இந்த சிரிப்புதான் மகன், என்ன வாழ வச்சிட்டிருக்கு. உங்க வாப்பா என்ன விட்டுட்டுப் போன பிறகு என் வாழ்க்கையே போனமாரி இருக்கு. கணவன் இல்லாததால என்ன எந்த விசேசத்துக்கும் கூப்புடாம ஒதுக்கிட்டாங்க. நா வாழ்றது உனக்காகத்தான் மகன்.” என கண்களில் கண்ணீர் சிந்தியவாறு தனது குழந்தையிடம் மனக்குமுறல்களை சொல்லிக் கொண்டிருந்தாள்.

சமீஹாவின் கண்கள் கண்ணீர்க் குளமானது. கணவனை இழந்தவள் பல இன்னல்களை சந்தித்தாள். கயவர்களின் கேலிக் கிண்டல்களும் அவளைச் சீண்டியது. சொற்களும் கற்களாக அவளை வதைத்தது.

இருந்த போதும் அவள் தன்னம்பிக்கையை கைவிடாமல் தனக்கென்று ஒரு தொழிலை செய்து பிள்ளையை வளர்த்தெடுத்தாள். கடந்தகாலம் சற்றே அவளை நிகழ்காலத்தின் பக்கம் திருப்பியது. தன் வாழ்க்கை வரலாற்றை தன் மகனிடம் கூறி முடித்தாள்.

“உம்மா, உங்கள நினச்சி நா பெரும படுறன். வாப்பாவ போல நானும் நல்ல குணமுள்ள பிள்ளையா கண்டிப்பா இருப்பன். இனி நான் எந்த சோதன வந்தாலும் சோர்ந்து போக மாட்டன். நீங்க சொன்ன தன்னம்பிக்க வரிகள் எனக்கு உற்சாகத்த தந்திட்டுது. நான் தொழிலுக்கு போறன். நம்மலால என்ன தொழில் செய்ய ஏலுமோ அந்த தொழில செஞ்சி முன்னேறுறதுதான் அறிவாளிக்கு அழகு.”

“உம்மா….. மாமாவிடம் சிறு உதவி கேட்டு தொழில் செய்யப்போறன். ”

உம்மாவும் சம்மதம் தெரிவித்தாள்.

“மாமா…. உங்கட பாவனையில்லாத இந்த அறைய வாடகைக்கு தாங்க ஒரு சிறிய கடை போடப்போறன்.

அவர் றினாஸின் முகத்திற்கு முன்னே …

“நீ சின்ன பையன். உனக்கு அனுபவமில்ல. உனக்கிட்ட வசதியுமில்ல. உனக்கு கடைய தந்தா நீ எப்டி வாடகை தருவாய் ? அதெல்லாம் தர முடியாது ” என கூறி அவனை அவமானப்படுத்தினார். தெரிந்தவர்களிடமெல்லாம் உதவி கேட்டான். உதவ விரும்பாத உள்ளங்கள் அவன் மனதை வார்த்தையால் அழ வைத்தன.

இறைவன் மீதுள்ள நம்பிக்கையை மட்டும் அவன் இழக்கவில்லை. வரும் வழியில் விவசாயம் செய்து நெல் மூட்டைகளை வாகனத்தில் ஏற்றும் காட்சியை கண்ணுற்றவன், முதலாளியிடம் சென்று,”நானும் நெல் மூட்டைகளை தூக்குகிறேன். தொழில் தாருங்கள்” என வினவினான்.

“தம்பி, பார்க்க பணக்கார வீட்டுப்புள்ளமாதிரி இருக்க நீயெல்லாம் இத செய்யமாட்ட போப்பா” எனக்கூற கோபமுற்ற றினாஸ் நெல் மூட்டைகளை தன் முதுகில் ஏற்றும்படி கூற அவர்களும் ஏற்றினார்கள். மூட்டைகளை சுமந்தவனைப்பார்த்து முதலாளி திகைத்துப் போனார். வேலையை முடித்து விட்டு றினாஸ் முதலாளி அருகே வந்தான்.

“என்ன தம்பி, நீயா இந்த வேலைகள செய்தாய்? என்னால நம்ப முடியல”

“முதலாளி, மனசில தைரியமும், தன்னம்பிக்கையும் இருந்தா முடியாததையும் செய்யலாம். எல்லாம் மனசுதான் காரணம். ” எனக் கூறிவிட்டு செய்த வேலைக்கு கூலியை வாங்கிச் சென்றான்.

இப்படி எந்த தொழிலையும் நிராகரிக்காது நேர்மையாக உழைத்து பணம் சேமித்தான். இரவில் உடல் வலி வரும்போதெல்லாம் தாய்க்கு காண்பிக்காது தூங்கினான். அந்த பணத்தில் வெளிநாடு சென்றான். நாட்கள் கடந்து வருடங்களாகின. தேவையான பணத்தை உழைத்து நாடு திரும்பினான்.

றினாஸின் மாமா பக்கத்து ஊருக்கு சென்ற வழியில் கண்ணெதிரே தோன்றிய கடை ஒன்றுக்குச் சென்றார். “இந்த சேட் எவ்ளோப்பா ” என கடையில் வேலை செய்யும் பொடியனிடம் கேட்டார்.” மேல போய் கேளுங்க சேர் என்றான்.” … “ஹ்ம் சரிப்பா” எனக் கூறிவிட்டு மேலே படியேறுகையில், எங்கேயோ கேட்ட குரல் காதில் ஒலித்தது.

“ஹலோ, இண்டைக்குள்ள உங்களுக்கு அனுப்ப வேண்டிய காச தந்துடுவன். இண்டைக்கி ஒருநாள் டைம் தாங்க” என தொலைபேசியில் கதைத்த றினாஸை உற்று நோக்கினார். ஏதேச்சையாக திரும்பிய றினாஸ் “மாமா என்ன இங்க நீங்க? மதிக்கலயா? நான்தான் றினாஸ் எப்படி இருக்கீங்க மாமா?”

“நீ இந்த கடைலயா வேல பார்க்குற? நீயெல்லாம் உருப்படமாட்டாய்னு எனக்கு எப்பவோ தெரியும். இப்ப யார்கிட்ட கடன்பட்டு கடன கொடுக்காம இருக்கியோ! நீ வாடகைக்கு கடைய கேட்டப்போ நான் தந்திருந்தா நீ லொஸ்டாயிருப்ப இதெல்லாம் தெரிஞ்சிதான் தரல்ல. ”

“உண்மைதான் மாமா, என் லைபே லொஸ்ட் ஆகியிருக்கும். அதுக்காகதான் உங்களுக்கு நன்றி சொல்றதுக்காக உங்கள நேர்ல சந்திக்க இருந்தன் ரொம்ப நன்றி மாமா. “… ” அன்னைக்கி நீங்க இல்லனு சொல்லாம இருந்திருந்தா எனக்கு முன்னேறனும்னு எண்ணம் வந்திருக்காது. வாடகை கடைலயே ஏதோ வாழ்க்க போயிருக்கும். நான் உதவி கேட்டப்போ எனக்கு எந்த உதவியும் கிடைக்கல. நீங்க என்ன அவமானப்படுத்தினப்போ எனக்குள்ள ஒரு வெறி வந்திச்சி. என்னால முடியும்னு அப்போதான் எனக்குள்ள இருந்த திறமைகள தேடி எடுத்தன். மாமா இறைவன் ஒன்றை தாமதப்படுத்தினாலோ, நமக்கு கிடைக்காம செஞ்சாலோ, அதுல நலவு இருக்கும். அப்போ சோர்ந்து போறவங்க வாழ்க்கைய வாழ தெரியாதவங்க. அத பாடமா எடுத்து முயற்சிய விடாம சிந்திச்சி செயல்படுறவங்க முன்னேறிடுவாங்க. பொறுமயா இருந்தன். என் உம்மா தைரியத்த தந்தாங்க. இறைவனின் உதவியும் கிடைத்தது. இப்படி ஒரு கடைய சொந்தமாக உருவாக்கினேன். ரொம்ப நன்றி மாமா.” இதைக்கேட்ட மாமா அதிர்ந்து போனார், தான் அன்று நடந்து கொண்ட விதத்தை எண்ணி தலைகுனிந்தார்.

றினாஸிற்கு கோல் வந்தது. “ஹலோ என்ன சொல்றிங்க…? சீரியஸ்ஸா? இதோ இப்போ வர்ரேன்” என அவசரமாக கிளம்பினான்.

மாமா இமைமூடாது திகைத்து நின்றதை கண்டு பக்கத்தில் வேலை செய்த பொடியன் “சேர்.. என்ன அப்டி பார்க்கிங்க? நீங்க ரெண்டுபேரும் பேசினத கேட்டன். அவங்க முதலாளி மட்டுமில்ல ஒரு டொக்டரும்கூட.

பல ஏழைகளுக்கு உதவிபண்றாங்க. நீங்க வரும்போது இல்லங்களுக்கு பணம் அனுப்பத்தான் பேசிட்டிருந்தாங்க. நீங்க கடனாளின்னு நினச்சி தப்பா பேசிட்டிங்க.” யாரையும் தாழ்வாக எடைபோடக்கூடாதென்று மாமா மனதுக்குள் எண்ணிக் கொண்டார்.

றினாஸிற்கு வைத்தியத் தொழிலும் கிடைத்து தாயின் கஷ்டங்களையும் போக்கினான். இத்தனையும் கேள்விப்பட்ட சமீஹாவின் உறவுகள் அவளை தேடி வந்தன.

“சமீஹா, பணத்தை விட குணம்தான் முக்கியம்னு புரிய வச்சிட்ட , அன்னைக்கி வந்த மாப்பாள்ளய நா பணத்த பார்த்து உனக்கு கட்டி தந்திருந்தா நம்ம குடும்பமே நடுத்தெருவுல நின்னிருக்கும். யாரோ புள்ளய கலியாணம் பண்ணி சொத்தயெல்லாம் அவன் பேருக்கு மாத்தி ஓடிட்டானாம்மா. பணத்த பார்த்தேனே தவிர குணத்த பார்க்கல, நல்ல குணம்தான் முதல் முக்கியம்னு புரிய வச்சிட்ட என்ன மன்னிச்சிடுமா” என சமீஹாவின் தந்தை அழுதார்.

“தாத்தா அழாதிங்க, இதெல்லாம் கடந்ததுதான் வாழ்க்க” என றினாஸ் ஆறுதல் கூறினான்.

“ஆமாம் எல்லாத்தையும் மறந்துடுங்க. இனி நம்ம ஒன்னா இருக்கலாம் வாப்பா”. என மகள் கூறியதைக் கேட்டு தந்தையின் முகம் சிறிதாய் புன்னகைத்தது.

றினாஸ் தந்தை செய்து வந்த சமூகப் பணிகளிலும் அநாதை, முதியோர் இல்லங்களிலுள்ளோரையும் பராமரித்து வருகிறான். றினாஸின் குணங்களும், தன்னம்பிக்கையும் பற்றி ஊரிலுள்ளோர் கேள்விப்பட அவனைப்போல நம்மாலும் முன்னேற முடியும், தன்னம்பிக்கையோடு முயற்சித்தால் நமது வாழ்விலும் காலம் நல்ல மாற்றத்தை தரும் என அவன் கதை கேட்டவர்கள் தனக்குள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டார்கள்.

மஜினா உமறுலெவ்வை - மாவடிப்பள்ளி

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division