ஹீரோ மடியில் உட்கார மாட்டேன் என சுஹாசினி கூறியதை கேட்டு டான்ஸ் மாஸ்டர் அதிர்ச்சி அடைந்தாராம். அந்த காலத்தில் ஹீரோயின் ஒருவர் முடியாது, மாட்டேன் என சொல்வது எல்லாம் அரிது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் அந்த அதிர்ச்சி.
கமல் ஹாசனின் அண்ணன் மகளான சுஹாசினி ஒரு பிரபலமான நடிகை. அவர் ஹீரோயினாக நடித்த படங்கள் இன்றளவும் பிரபலம். அழகோடு அறிவும், நல்ல நடிப்புத் திறமையும் கொண்டவர் சுஹாசினி.இயக்குநர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்ட அவருக்கு ஒரு மகன் இருக்கிறார். அவரும் தன் பெற்றோரை போன்றே சினிமா துறையில் தான் இருக்கிறார்.சுஹாசினி படங்களில் நடிப்பதுடன் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அவர் சுவராஸ்யமாக பேசுவது பலருக்கும் பிடிக்கும்.இந்நிலையில் தான் ஹீரோயினாக நடித்த காலத்தில் நடந்த சம்பவம் குறித்து பேசியிருக்கிறார் சுஹாசினி. அவர் கூறியிருப்பதாவது,
ஹீரோவின் மடியில் என்னை உட்காரச் சொன்னார்கள். நான் முடியவே முடியாது என கூறிவிட்டேன். இது இந்தியா, நாம் இருப்பது ஒரு பூங்காவில். 1981ல் எந்த பெண்ணும் பூங்காவில் ஒரு ஆணின் மடியில் உட்கார மாட்டார். அதனால் நானும் ஹீரோ மடியில் உட்கார மாட்டேன் என கூறினேன்.
இன்னொரு ஷாட்டில் ஹீரோ சாப்பிட்ட அதே ஐஸ்கிரீமை நானும் சாப்பிட வேண்டும். அவர் சாப்பிட்ட ஐஸ்கிரீமை நான் தொடக் கூட மாட்டேன். எனக்கு வேறு ஐஸ்கிரீம் வேண்டும் என கேட்டேன். நான் சொன்னதை கேட்டு டான்ஸ் மாஸ்டருக்கு ஒரே ஆச்சரியம். முடியாது என்று சொல்லக் கூடாது. அப்படி இருக்கும்போது நான் நோ சொன்னதால் ஆச்சரியம்.ஒரு காட்சியில் நடிக்க ஷோபனா மறுத்திருக்கிறார். இதையடுத்து நீ யார் என்று நினைக்கிறாய், நீ என்ன சுஹாசினியா என இயக்குநர் அவரிடம் கேட்டிருக்கிறார். உடனே அவர் என்னை தொடர்பு கொண்டு, நீ என்ன சுஹாசினியானு இயக்குநர் கேட்டார். என்ன செய்தீர்கள் என கேட்டார் ஷோபனா.நிறைய சுஹாசினிக்கள், ஷோபனாக்கள் இருக்க வேண்டும். அப்பொழுது தான் முடியாது என்கிற வார்த்தையை கேட்டு யாரும் ஆச்சரியப்பட மாட்டார்கள்.
ஒரு முறை பாடல் காட்சியை ஷூட் செய்தார்கள். அந்த பாடல் வரிகளை கேட்டதும் நான் காரில் இருந்து வெளியே வர மாட்டேன் என கூறினேன். அந்த காலத்தில் இப்படி முடியாது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஆனால் நான் சொன்னேன் என்றார்.பொன்னியின் செல்வன் படம் குறித்து சுஹாசினி பேசியதாவது,
பொன்னியின் செல்வன் படம் வேண்டாம், வேண்டாம் என மணி ரத்னத்திடம் கூறி வந்தேன். அந்த படத்தை எடுக்க அவருக்கு நான் தான் தடையாக இருந்தேன். தமிழ்நாட்டின் வரலாறு மற்றும் அரசியல் பற்றி நாங்கள் எடுத்த இருவர் படத்திற்கு நடந்ததை பார்த்து நான் அதிருப்தி அடைந்தேன். அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து ரொம்ப அதிருப்தியாக இருந்தது.
நான் தான் படத்திற்கு ரைட்டர். நான் தான் வசனம் எழுதினேன். நம் மக்களுக்கு பாரம்பரியமும், வரலாறும் தேவையில்லை போன்று. பேசாமல் காதல் கதைகளை கொடுத்துவிடுங்கள் என்றேன். இருவருக்கு நடந்தது பொன்னியின் செல்வனுக்கும் நடந்துவிடுமோ என பயந்தேன். ஆனால் நான் நினைத்தது தவறு என்றார்.