இஸ்ரேல்-_ஹமாஸ் போர் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கத் தயாராக உள்ளது. அரபுக்களுக்கும் யூதர்களுக்குமான மோதல் என்பது வரலாற்றுக்காலம் முதல் நிகழ்ந்துவருகிறது. 1947ஆம் ஆண்டு யூத தேசம் உருவான போதே அதன் பிரதிபலிப்பு மேற்காசியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் எதிரெலிக்க ஆரம்பித்துள்ளது. இஸ்ரேல் உருவான காலம் முதல் அமெரிக்காவினது ஒத்துழைப்பினால் தனது இருப்பை பாதுகாத்து வருகிறது. இருபதாம் நூற்றாண்டு முழுவதும் ஒரு தேசிய இனம் அரசமைக்கவும் அத்தகைய அரசைப் பாதுகாக்கவும் வலுவான ஒரு தேசத்தின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியமானதென்பதை இஸ்ரேல் உலகத்திற்கு உணர்த்தியுள்ளது. அதனையே தற்போதுவரை இஸ்ரேல் கடைப்பிடித்து வருகிறது. இஸ்ரேலின் இருப்பானது அமெரிக்கா மட்டுமல்லாது அனைத்து நேட்டோ நாடுகளினது ஒத்துழைப்புடனும் நிகழ்கிறது. இக்கட்டுரையும் ஹமாஸ்-இஸ்ரேல் போரின் அரசியலை தேட முனைகிறது.
ஹமாஸ்-_ இஸ்ரேல் போர் அனைத்து ஊடகங்களும் கூறுவது போல் மொசாட்டுக்கு தெரியாததோ அமெரிக்க புலனாய்வுக்கு தெரியாததோ ஒன்றும் கிடயாது. இந்தப் போர் அமெரிக்க, -இஸ்ரேல் கூட்டினால் உருவானதென்றே கருத வேண்டியுள்ளது. காரணம் மொசாட் அமைப்பின் அண்மைய பதிவுகளைப் பார்க்கும் போதே ஈரானிய அணுவாயுத தயாரிப்பு நிலையம் மீதான இஸ்ரேல் தாக்குதல் ஈரானிய இராணுவத் தளபதி சுலைமானி கொல்லப்பட்டது மற்றும் ஈரானிய அணு விஞ்ஞானி Mohsen Fakhrizadeh கொல்லப்பட்டதிற்கு பின்னால் மொசாட் செயல்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு தரப்பினரே ஒப்புதல் அளித்துள்ளனர். கொலையின் வடிவங்களும் அமெரிக்க-, இஸ்ரேலிய கூட்டு நடவடிக்கையாகவே கருத வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மொத்தத்தில் இந்த போருக்கான தயாரிப்பு ஏறக்குறைய 500 ஹமாஸ் அமைப்பினர் 2021ஆம் ஆண்டு முதல் பயிற்சியில் ஈடுபட்டதாகவும் தாக்குதலை இஸ்ரேலியர்களே ஆரம்பித்ததாகவும் தகவல்கள் உண்டு. மொசாட்டின் உளவுக்குள் சிக்காமல், இரு ஆண்டுகளாக பயிற்சியில் ஹமாஸ் செயல்பட்டதென குறிப்பிடுவது வேடிக்கையான உரையாடலாகும். மேற்காசியாவில் மொசாட்டின் வலையில் சிக்காது எத்தகைய நடவடிக்கையையும் இஸ்ரேலுக்கு எதிராக திட்டமிட முடியாது. அப்படியிருக்கும் போது தாக்குதலை மேற்கொள்ளும் முயற்சியை மொசாட் கண்டுகொள்ளாமல் இருந்ததென கணிப்பிட முடியாது. ஆனால் அராபியர்களும் மொசாட்டின் வலைக்குள்ளால் தாக்குதலை வெற்றி கொள்ள திட்டமிட்டனர் என்பதே யதார்த்தமானதாகும். அப்படியாயின் யூதர்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டும் மூவாயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயப்பட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் கைதிகளாக்கப்பட்டும் எதிர்கொண்ட இழப்புகள் ஏன் என்ற கேள்வி நியாயமானதே. இத்தகைய இழப்புகள் நிகழும்வரை யூத இராணுவம் மற்றும் உளவுப் பிரிவு மௌனம் காத்துக் கொண்டிருந்ததா என்ற குழப்பம் முக்கியமானது. அதனை விரிவாக விளங்க முயல்வது அவசியமானது.
முதலாவது, இது மேற்குலக-, கீழைத்தேச அதிகாரப் போட்டியின் எல்லையாகவே தெரிகிறது. இது ஒரு நீண்ட போராக விளங்க வாய்ப்புக்கள் அதிகம். ஹமாஸ்-_ இஸ்ரேல் ஆகிய இரு தரப்புக்குமான சண்டை முடிவுக்கு வந்தாலும் போர் நீடிக்க வாய்ப்புள்ளது. மேற்காசியாவிலுள்ள இஸ்லாமிய நாடுகளது அண்மைய மாற்றங்களும் சவுதி அரேபிய, ஈரான் நெருக்கம் ஏனைய நாடுகளுடனான ஈரானின் உறவும் ஆபிக்க நாடுகளது நகர்வுகளும் பிறிக்ஸ் அமைப்பின் விரிவாக்கமும் மேற்குலகத்திற்கு எதிரானதாகவே அமைந்திருந்தது. அவை அனைத்துக்கும் பின்னால் ரஷ்யாவும் – -சீனாவும் கைகோர்த்துக் கொண்டிருந்தன என்பது யாவரும் அறிந்ததே. இவை அனைத்துக்கும் ஹமாஸ்_இஸ்ரேல் போர் முற்றுப்புள்ளி வைக்க முனைந்துள்ளது. இது அனைத்தினது போக்கினையும் திசைதிருப்பியுள்ளதாகவே தெரிகிறது.
இரண்டு, ஹமாஸ்-_ இஸ்ரேல் போர் மேற்குலகத்தின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை எட்ட எத்தனிப்பதாகவே தெரிகிறது. காரணம் மேற்குலகம் அதிக பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வந்துள்ளது. இதனால் போர் பொருளாதாரம் வளர்ச்சியடைவதோடு மேற்காசியாவின் வளங்கள் அமெரிக்காவினாலும் ஏனைய மேற்கு நாடுகளாலும் இலகுவாக சுரண்டப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு காப்பிரேட் கம்பனிகளின் போராகவே மாறுகிறது. குண்டுத் தாக்குதல் செய்த நாடே மருந்தும் பஞ்சும் பலஸ்தீனர்களுக்கு வழங்குகிறது என்பதை கண்டு கொள்ள முடிகிறது. இதற்கு அனுசரணையாக அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் காணப்படுகின்றன. குறிப்பாக இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிரான போரைப் பிரகடனப்படுத்திய அடுத்த மூன்று மணித்தியாலத்தில் அமெரிக்கா, இஸ்ரேலின் போர்ப் பிரகடனத்தை ஆதரித்து அறிவிப்பு செய்தது. அது மட்டுமன்றி உடனடியாக தனது வெளியுறவு செயலாளரை இஸ்ரேலுக்கும் அனுப்பியுள்ளது. தற்போது ஜோர்தானில் அரபுத் தலைவர்களை அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் பிளிங்டன் சந்தித்து உரையாடி வருகிறார். பாதுகாப்புச் சபையில் இஸ்ரேலுக்கு ஆதராவாக வீட்டோ பயன்படுத்த அமெரிக்கா தயாராகிறது.
மூன்றாவது, ரஷ்ய-ா உக்ரைன் போரிலிருந்து அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் வெளியே வந்துள்ளதாக தெரிகிறது. அமெரிக்காவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் உக்ரைன் போர் பெரும் சுமையாகவே காணப்பட்டது. அதிலிருந்து விடுபடுவதற்கு அமெரிக்காவுக்கு இன்னோர் போர் தேவைப்பட்டது. அத்தகைய போரை தொடக்குவது பற்றிய தேவை நீண்டகாலமாக நிலவியது. அதனை அமெரிக்க – -இஸ்ரேல் கூட்டு திட்டமிட்டு தொடங்கியுள்ளது. இதில் ரஷ்யா –சீனா நேரடியாக வெற்றியை அடையா விட்டாலும் மறைமுகமாக இலாபகரமானதாகவே உள்ளது. அதேநேரம் முழுமையாக வெற்றியை மேற்குலகம் அனுபவிப்பதாகவே தெரிகிறது. ரஷ்யாவுக்காக உக்ரைன் போரை நிகழ்த்திய நேட்டோ நாடுகளை திசைதிருப்பியுள்ளது இஸ்ரேல்- – ஹமாஸ் போர் என்றவகையிலும் சீனாவுக்கு தாய்வான் போரை தவிர்க்க இப் போர் உதவியுள்ளது என்ற வகையிலும் இலாபகரமானதாகவே உள்ளது.
ஆனால் மேற்குலகத்துக்கு அரசியல், பொருளாதார, இராணுவ ரீதியில் இஸ்ரேல்-_ ஹமாஸ் போர் இலாபகரமானதே. இதில் அதிக இழப்பினை உள்நாட்டிலும் பிராந்தியத்திலும் உலகளாவிய ரீதியிலும் எதிர்கொள்ளும் நாடாக இந்தியா மாறியுள்ளது. இந்தியாவின் வெளியுறவு முற்றிலும் முரணான கொள்கைத் தீர்மானத்தை எடுத்துள்ளது. இஸ்ரேலை ஆதரிப்பதான இந்தியாவின் முடிவு மேற்குலகத்துக்கு இலாபகரமானதேயன்றி இந்தியாவுக்கானதல்ல. நான்காவது, இஸ்ரேலுக்கு சேவகம் செய்யும் ஐக்கிய நாடுகள் சபையின் நகர்வுகள் காஸாவை துடைத்தொழிக்க தீர்மானித்துள்ளமை தெரிகிறது. பாலஸ்தீனியர்களை முழுமையாக வடக்கு காஸாப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு ஐ.நா.அறிவித்துள்ளமை கவனத்திற்குரிய விடயமாகும். உலக சமாதானத்தை முதன்மைப்படுத்தும் ஐ.நா.சபை இஸ்ரேலை கட்டுப்படுத்துவதை விடுத்து பாலஸ்தீனர்களை வெளியேற்ற முனைவது அதன் நியாயமற்ற வடிவத்தைக் காட்டுகிறது. உலகத்தின் ஒழுங்கென்பது பாதுகாப்புச் சபை நாடுகளின் ஒழுங்கே அன்றி உலக நாடுகளின் ஒழுங்குமல்ல உலகத்தின் நீதியுமல்ல. உலக வரைபில் சர்வதேச நீதிக்கு இடமில்லை என அரசியலுக்கான இலக்கணத்தை தந்த ஹரோல் லக்ஸ்கி குறிப்பிட்டதையே நினைவுபடுத்த வேண்டியுள்ளது. ஐ.நா.பாதுகாப்பு சபை நாடுகளின் பொம்மையாகவே உள்ளது. பாதுகாப்புச் சபை நாடுகளின் நலன்களைப் பேணும் ஓரமைப்பாகவே விளங்குகிறது.
ஐந்தாவது, இஸ்ரேலுக்கு ஹமாஸை முடிவுக்குக் கொண்டு வரவும் மேற்காசியாவில் நிகழும் மாற்றங்களை கட்டுப்படுத்தவும் ஒரு போர் தேவைப்பட்டது. அதற்கான தயாரிப்பினை முன்கூட்டியே ஆரம்பித்திருந்தது. காஸாவை கைப்பற்றவும் தனது மக்களை பாதுகாக்கவும் இத்தகைய போரும் இழப்பும் தவிர்க்க முடியாதது என்பதை புரிந்துள்ளது. மீளவும் இஸ்ரேல் யூத தேசியவாதத்தை பலப்படுத்தியுள்ளது. ஈரானின் அணுவாயுதத்தை மட்டுமல்ல மேற்காசிய மற்றும் இஸ்லாமிய நாடுகளின் இராணுவ பலம் ஆயுததளபாட பலம் பொருளாதார பலம் அனைத்தையும் இந்தப் போர் முடிவுக்கு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இதன் எல்லை தீவிரமடையுமாயின் இஸ்ரேல் அணுகுண்டையும் பாவிக்க தயாராக உள்ளது. இஸ்ரேலிடம் 90 அணுகுண்டுகள் உள்ளதாக தகவல்கள் உண்டு. இஸ்ரேலிடம் அணுகுண்டு உள்ளதற்கோ அல்லது பரிசோதித்ததற்கான ஆதாரங்களே உலகத்திடம் இல்லை. ஆனால் அதன் இராணுவ தொழில்நுட்ப வளர்ச்சி பிரமண்டமானது. இஸ்ரேல் கண்டுபிடித்துள்ள புதிய ஆயுதங்கள் காஸா போரில் பாவனைக்கு வந்துள்ளதை கண்டு கொள்ள முடியும். ஹமாஸின் நகர்வு முழுவதையும் எதிர்கொள்ள போதிய ஆயுத தளபாடங்கள் இஸ்ரேலிடமுண்டு. இஸ்ரேலின் அயன்டோமை ஹமாஸ் இராணுவம் தகர்த்ததென்பது உண்மையே. ஆனால் அதற்கு பதிலீட்டை களத்தில் இஸ்ரேல் பயன்படுத்த தயாராகி வருகின்ற சந்தர்ப்பத்தில் அயன் டோமின் பாவனையால் அதிக பாதுகாப்பை யூத நகரங்கள் அடைந்துள்ளன. தரைவழித் தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல் காஸாவை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர எத்தனிக்கிறது. ஹமாஸையும் காஸாவையும் முழுமையாக அழித்து புதிய வடிவமாக மாற்றுவதில் இஸ்ரேல் – – அமெரிக்க கூட்டு தயாராகிறது. இது மேற்குக்கு இலாபகரமான நகர்வே.
எனவே ஒட்டுமொத்த அரபுலகமும் இப்போரின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேற்காசியாவில் நிகழும் போரை உலகப் போராக மாற்றிவிடக் கூடாது என்பதில் அனைத்து தரப்பும் கவனமாக உள்ளது. அனைத்து வல்லரசுகளும் இரு தரப்புக்கும் ஆயுதங்களை வழங்கிவருகின்றதேயன்றி நேரடியாக போரில் ஈடுபடுவதை தவிர்த்து வருகின்றன. போர் முழுமையாக பாலஸ்தீனர்களை அழித்தொழிக்கும் நகர்வாகவே அமையவுள்ளது. இதனால் இஸ்ரேல் -மேற்குலகத்தின் அரசியல், பொருளாதார, இராணுவ, வல்லமை பாதுகாக்கப்படுவதுடன் ஒரு புதிய வடிவத்தை நோக்கி உலகம் நகர வாய்ப்புள்ளது. இது மேற்குலகத்தின் ஆதிக்கத்தை மீள வடிவமைக்க வாய்ப்புள்ளது. ஹமாஸ் அமைப்பில் 40 ஆயிரம் இராணுவம் உண்டானாலும் வெளிப்படையாக ஆதரவளிக்க எந்த அரசும் முன்வரவில்லை என்பதே முக்கியமானது. சுன்சூ போர்க் கலையில் குறிப்பிட்டது போல் இஸ்ரேல் வெற்றியை உறுதிப்படுத்திவிட்டு போரை ஆரம்பித்துள்ளது. ஆனால் அது இலகுவான வெற்றியாக அமையுமா என்பது கடினமானதே. இதுவரை யூத நகரங்களுக்குள் புகுந்த ஹமாஸ் இராணுவம் பற்றிய தகவல்களோ யூதர்களது இழப்புப் பற்றியோ முழுமையான தகவலும் இல்லை என்பது கவனத்திற்குரியது. ஊடகப்போரில் யூதர்கள் வெற்றியை முழுமைப்படுத்திவிட்டனர். காஸாவை யூத இராணுவத்திற்கு பொறியாக மாற்றுவதும் தோல்வியை மாற்றி அமைப்பதுவும் ஹமாஸிடமே உண்டு.