கிரிக்கெட்டுக்கும் ஒலிம்பிக்கிற்கும் நீண் வரலாறு உண்டு. 1896 ஆம் ஆண்டு முதலாவது ஒலிம்பிக் போட்டி ஏதென்சில் நடைபெற்றபோது அதில் கிரிக்கெட்டும் இடம்பெற்றிருந்தது. என்றாலும் போதுமான நாடுகள் பங்கேற்காததால் அதனை கைவிட வேண்டி ஏற்பட்டது.
பின்னர் 1900ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உள்ளடக்கப்பட்டது. நான்கு அணிகள் பங்கேற்பதாக இருந்தபோதும் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து விலகிக் கொண்டதால் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையே ஒரே ஒரு போட்டி மட்டும் நடந்தது.
டெஸ்ட் போட்டியாக நடைபெற்ற அந்த ஆட்டத்தில் அணிக்கு 12 பேர் சேர்க்கப்பட்டிருந்ததார்கள். இரண்டு நாட்கள் நடந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்றது.
அமெக்காவின் செயின்ட் லுவிசில் நடைபெற்ற 1904 ஒலிம்பிக் போட்டியிலும் கிரிக்கெட் சேர்க்கப்பட்டபோதும் பின்னர் அது ரத்துச் செய்யப்பட்டது. அதற்குப் பின் கிரிக்கெட் என்ற பேச்சே ஒலிம்பிக்கில் இடம்பெறவில்லை.
ஆனால் 2028இல் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறப்போகும் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெறப்போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் கிரிக்கெட்டை சேர்த்துக்கொள்ள பரிந்துரைத்திருக்கிறார்கள்.
மும்மையில் நடைபெறும் சர்வதேச ஒலிம்பிக் குழு மாநாட்டில் இதற்காக வாக்கெடுப்பு நடைபெறும். பெரும்பாலும் ஆதரவாகவே வாக்குகள் விழும் என்று எதிர்பார்க்கலாம்.
உண்மையில் 123 ஆண்டுகளுக்கு முன்னர் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற்றபோதும் அப்போது ஒலிம்பிக்கிற்கு பொருத்தமான விளையாட்டாக கிரிக்கெட் இருக்கவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர்த்து கிரிக்கெட் ஆட்டத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாத காலம் அது.
பின்னர் ஒருநாள் போட்டி அறிமுகப்படத்தப்பட்டு அணிக்கு 60 ஓவர்கள் என்பது 50 ஓவர்களாக பரிணாமம் பெற்று காலத்திற்கு ஏற்ப டி20 கிரிக்கெட்டும் அறிமுகமான நிலையிலேயே கிரிக்கெட்டின் வீச்சு பெரிதாகி இருக்கிறது.
ரசிகர்களின் எண்ணிக்கை மற்றும் ஒளிபரப்பு உரிமைக் கட்டணங்கள் அடிப்படையில் பார்க்கப்போனால் உலகின் இரண்டாவது மிகப்பெரிய விளையாட்டாக கிரிக்கெட் வளர்ந்துவிட்டது. குறிப்பாக அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் கிரிக்கெட் பிரபலமாக இருப்பதே இதற்குக் காரணம்.
சர்வதேச கிரிக்கெட்டுக்கு அப்பால் டி20 லீக் கிரிக்கெட்டின் பிரபலம் வளர்ந்துவிட்டது. இந்திய பிரிமியர் லீக்கின் போட்டிக்கான ஒளிபரப்பு உரிமைக் கட்டணம் இங்கிலாந்தின் பிரீமியர் லீக் கால்பந்து தொடரை விஞ்சி இருப்பதோடு அமெரிக்காவின் என்.எப்.எல் இற்கு மாத்திரமே இரண்டாவதாக உள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டு தொடக்கம் சர்வதேச கிரிக்கெட் கெளன்ஸில் கிரிக்கெட் வளர்ச்சிக்கான ஆதரவை அதிகரித்த நிலையில் சம்பிரதாயமான கிரிக்கெட் ஆடும் நாடுகளுக்கு அப்பால் இந்த விளையாட்டு வேகமாக பிரபலமடைந்து வருகிறது. குறிப்பாக டி20 கிரிக்கெட் புதியவர்கள் இந்த விளையாட்டை தழுவுவதற்கான சந்தர்ப்பத்தை அதிகரித்திருக்கிறது.
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டு டி20 வடிவத்தில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவுகளில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் தரவரிசையில் முதல் ஆறு இடங்களை பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக்கிற்கு நேரடி தகுதியை வழங்க ஐ.சி.சி திட்டமிடுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலே ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெறுவது என்பது இலங்கைக்கு ஒலிம்பிக் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிகரிக்கும் என்று அர்த்தம்.