இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கிண்ணப் போட்டியில் ஒவ்வொரு அணியும் மைதானத்தில் ஆடுபவதற்கு அப்பால் அந்த மைதானங்களுக்கு பயணிப்பதற்கே தனியாக காலம் ஒதுக்க வேண்டும்.
உலகக் கிண்ணப் போட்டிகள் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் இருக்கும் மொத்தம் 10 மைதானங்களில் நடைபெறுகின்றன. ஆனால் ஒவ்வொரு மைதானத்திற்கான தூரம் பல நூறுகள் தொடக்கம் ஆயிரம் கிலோமீற்றர்களை தாண்டக் கூடும். இந்த பத்து நகரங்களுக்கும் இடையிலான தூரத்தை சேர்த்தால் 72,543 கிலோமீற்றர்கள் வரும்.
இதன்படி பார்த்தால் போட்டியை நடத்தும் நாடு என்பதால் இந்திய அணிக்கே சிரமம் அதிகம். இந்திய அணி அனைத்து மைதானங்களையும் உள்ளடக்கும் வகையில் தனது லீக் போட்டிகளில் ஆட வேண்டி இருக்கிறது. இதனால் இம்முறை உலகக் கிண்ணத்தில் இந்திய அணியே வான் வழியாக அதிக தூரம் பயணிக்கிறது.
அதாவது மற்ற எந்த அணியை விடவும் இந்திய அணி உலகக் கிண்ணப் போட்டிகளில் ஆடுவதற்கு மேலதிகமாக 3,000 கிலோமீற்றர்கள் பயணிக்க வேண்டி இருக்கிறது. உலகக் கிண்ணத் தொடர் முடியும்போது கிட்டத்தட்ட 13,000 கிலோமீற்றர் தூரம் வான் வழியாக பறக்க வேண்டி இருக்கும்.
லீக் போட்டிகளுக்காக இந்தியா மொத்தமாக பயணிக்கும் தூரம் 12,897 கிலோமீற்றர்கள். இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் கூட 10,000 கிலோமீற்றருக்கு மேல் பறக்க வேண்டி இருக்கும்.
ஆனால் இந்த விடயத்தில் பாகிஸ்தானுக்கு வசதி தான். அந்த அணி மொத்தம் ஐந்து மைதானங்களில் தான் ஆடப்போகிறது. இதனால் அந்த அணி 6,892 கிலோமீற்றர்கள் பயணித்தால் போதுமானது. இலங்கைக்கு சற்று சிரமம் தான் மொத்தம் ஏழு மைதானங்களில் ஆடும் இலங்கை அணி அதற்காக 9,132 கிலோமீற்றர் தூரம் பறக்க வேண்டும்.
உலகக் கிண்ணம் ஒன்றில் பங்கேற்பது என்று வரும்போது இப்படி பயணிக்க வேண்டியது எதிர்பார்த்தது என்றாலும் இது போட்டிகளில் சிறிய அளவேனும் தாக்கம் செலுத்த வாய்ப்பு இல்லாமல் இல்லை.