தற்போது கொழும்பு உட்பட நாட்டின் பல பிரதேசங்களில் ஒரு வகை கண் நோய் பரவியுள்ளது. குறிப்பாக கொழும்பு வலயத்திற்கு உட்பட்ட சில பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியிலும் இந்நோய் பரவியுள்ளமை அவதானிக்கப்பட்டிருக்கிறது.
அதனால் இந்நோய்க்கு உள்ளான பாடசாலை மாணவர்கள் காணப்படுவார்களாயின் அவர்கள் தொடர்பில் பிரதேசத்திலுள்ள மருத்துவ அதிகாரி அலுவலகத்துக்கு அறிவிக்குமாறு சகல பாடசாலைகளதும் அதிபர்களுக்கும் கொழும்பு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு மாநாகர சபையின் பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் ருவன் விஜேமுனி, கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பல பிரதேசங்களிலும் கண்நோய் பரவியுள்ளது. குறிப்பாக மேல், மத்தி மற்றும் வடக்கு பிரதேசங்களிலும் பொரளை பகுதியிலும் இந்நோய்க்கு பலர் உள்ளாகியுள்ளனர். அதனால் இந்நோய் மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொழும்பு மாவட்டத்திலுள்ள பாடசாலையொன்றின் வகுப்பொன்றில் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளனர். அந்தளவுக்கு வேகமாகப் பரவக்கூடியதாக விளங்குகிறது இந்நோய். அதனால் குறித்த பாடசாலையில் இந்நோய்க்கு அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் உள்ளாகியுள்ள வகுப்புகளுக்கு கடந்த வாரம் விடுமுறை வழங்க மாகாண கல்விப் பணிப்பாளர் நடவடிக்கை எடுத்தார்.
என்றாலும் தற்போது பரவும் கண் நோய் அவ்வப்போது தோற்றம் பெறக்கூடிய ஒரு தொற்று நோயான போதிலும் அது அச்சப்பட வேண்டியதொரு நோய் அல்ல. சாதாரணமாக மூன்று நான்கு நாட்களில் குணமடைந்துவிடும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறான சூழலில் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஏ.ஆர்.எம். தௌபீக், இந்நோய் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
கொழும்பு உட்பட நாட்டின் சில பிரதேசங்களில் கண் நோயொன்று பரவி வருவதை உறுதிப்படுத்திய அவர், கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைக்கு நாளொன்றுக்கு 40 முதல் 70 க்கும் இடைப்பட்ட நோயாளர்கள் சிகிச்சை பெற வருவதாகவும், அவர்களுக்கு வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவில் உரிய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறினார்.
இக்கண் நோய் ஒரு புது வகை நோய் அல்ல. இது ‘வைரல் கன்ஜங்க்டிவிட்டிஸ் (viral Conjunctivitis) என்ற வைரஸ் நோயே அன்றி வேறில்லை. இந்நோய் விரைவாகத் தொற்றக்கூடிய நோயாக விளங்கிய போதிலும் சில தினங்களுக்குள் பெரும்பாலும் குணமடைந்துவிடும். அதனால் இந்நோய் குறித்து அச்சமடையத் தேவை இல்லை என்பது தான் மருத்துவர்களின் கருத்தாகும்.
ஆனாலும் இந்நோய்க்கு உள்ளானவர்களுக்கு கண்களில் கண்ணீர் வடிதல், கண்கள் சிவப்படைதல், கண்களில் வலி, கண்களில் அரிப்பு, கண்களைத் திறப்பதற்கு சிரமம், கண்களில் பூழை வெளிப்படல் போன்றவாறான அறிகுறிகள் வெளிப்படலாம். இவ்வறிகுறிகள் தீவிர நிலையில் காணப்படாவிட்டால் நோய் சில தினங்களுக்குள் குணமடைந்துவிடும். இந்நோய் நிலையுடன் கண்களில் கடும் சிவப்பு நிறத்துடன் அதிகம் அரிப்பும் காணப்படுமாயின் அருகிலுள்ள தகுதி வாய்ந்த மருத்துவரை அணுகி ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது என்றும் அவ்வாறானவர்களின் ஆலோசனை மற்றும் அறிவுரையைப் பெறாமல் இந்நோய்க்கு உள்ளாகியுள்ளவர்கள் எவ்வித மருந்தையும் கண்களுக்குப் பாவிக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார் தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் தௌபீக். உண்மையில் இது காலத்திற்கு அவசியமான அறிவுரையும் ஆலோசனையும் ஆகும். எந்த நோயென்றாலும் அதிலும் கண் நோய்களுக்கு மருத்துவரின் ஆலோசனை, சிபாரிசு இன்றி எந்த மருந்தையுமே பாவிக்கக்கூடாது.
இந்த கண் நோய்க்கு எல்லா வயது மட்டத்தினரும் உள்ளாகலாம். அதனால் பாடசாலை மாணவர்கள் இந்நோய்க்கு உள்ளானால் அவர்கள் பாடசாலைக்கு செல்வதையும் ஏனைய வயது மட்டத்தினர் உள்ளானால் அவர்கள் தொழில்களுக்கும் சன நெரிசல் மிக்க இடங்களுக்கும் செல்வதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதன் ஊடாக இந்நோயின் பரவுதலைக் குறைத்துக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.
அதேநேரம் தற்போதைய சூழலில் அடிக்கடி சவர்க்காரம் இட்டு கைகளை கழுவிக் கொள்ளுதல், கண் மற்றும் முகத்தைக் கைகளால் அடிக்கடி தொடுவதைத் தவிர்த்துக் கொள்ளுதல் என்பவற்றின் மூலம் இந்நோயின் தொற்றைப் பெரும்பாலும் தவிர்த்துக் கொள்ளலாம். அத்தோடு
இன்றைய நாட்களில் சனநெரிசல் மிக்க இடங்களுக்கு செல்வதையும் நோய்க்கு உள்ளாகியுள்ளவருடன் நெருக்கமான தொடர்பைப் பேணுவதும் சன நெரிசல் மிக்க இடங்களில் கண்ணாடிகளை அணிந்து கொள்வதும் இந்நோயின் தொற்றைத் தவிர்த்துக் கொள்வதற்கு பெரிதும் உதவக்கூடியதாக அமையும்.
ஆகவே கண் நோயின் தொற்றைத் தவிர்த்துக் கொள்வதிலும் தேவைப்படும் பட்சத்தில் உரிய மருத்துவ ஆலோசனையுடன் ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை பெற்றுக்கொள்வதிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவை இன்றியமையாதவையாகும். ஆனால் கவனயீனமும் அசிரத்தையும் ஆரோக்கியத்துக்கு உவப்பானதல்ல என்பதையும் மறந்து விடலாகாது.
மர்லின் மரிக்கார்