கடந்த கால போட்டி முடிவுகள், அணியில் இடம்பிடித்திருக்கும் வீரர்கள் மற்றும் போட்டித் தந்திரங்கள் அனைத்தையும் பார்க்கும்போது உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் வெற்றி வாய்ப்பு என்பது ஒப்பீட்டளவில் குறைவு. போதாக் குறைக்கு அணியில் முன்னணி வீரர்களின் காயம், உலகக் கிண்ணத்திற்கான இரு பயிற்சிப் போட்டிளிலும் தோல்வி என்று எதுவும் இலங்கைக்கு சாதகமாக இல்லை.
ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இருந்த உலகக் கிண்ணத்திற்கும் தற்போது நடைபெறும் உலகக் கிண்ணத்திற்கும் இடையே ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. அணிகளின் பலத்தை இதனை வைத்து கணிக்க வேண்டி இருக்கிறது.
அதாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 400 ஓட்டங்கள் பெறப்பட்ட சந்தர்ப்பங்கள் 24 பதிவாகி இருக்கின்றன. இதில் 15 தடவைகள் 2011 உலகக் கிண்ணத்திற்கு பின்னரே பெறப்பட்டிருக்கின்றன. எனவே தற்கால ஒருநாள் கிரிக்கெட்டில் 300க்கு குறைவான வெற்றி இலக்கு என்பது மிக அரிதாகவே சவால் மிக்க இலக்காக மாறிவிட்டது.
தனிப்பட்ட முறையில் பார்த்தாலும் 2011 உலகக் கிண்ணத்திற்கு முன்னர் வீரர் ஒருவர் ஒருநாளில் இரட்டைச் சதம் பெற்ற சந்தர்ப்பம் ஒன்றே ஒன்று தான் பதிவானது. ஆனால் அதற்குப் பின்னர் ஒன்பது இரட்டைச் சதங்கள் பெறப்பட்டிருக்கின்றன.
எல்லாவற்றுக்கும் காரணம் கிரிக்கெட் உலகில் டி20 போட்டிகளின் செல்வாக்கு அதிகரித்ததாகும். சர்வதேச டி20 தவிர்த்து ஐ.பி.எல், எல்.பி.எல் போன்ற டி20 லீக்குகளும் கிரிக்கெட்டை முழுமையாகப் புரட்டிப்போட்டுவிட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளை பார்த்தோம் என்றால் விளையாடப்பட்ட மொத்த ஒருநாள் சர்வதேச போட்டிகளின் எண்ணிக்கை 396. அதுவே இந்தக் காலப்பகுதியில் 1190 டி20 சர்வதேச போட்டிகள் விளையாடப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்த கிரிக்கெட்டும் டி20 போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளித்து சுழலுவதால் உருவாகும் புதிய வீரர்களும் அதற்கு ஏற்பவே மாறிவிட்டார்கள்.
எனவே இம்முறை உலகக் கிண்ணத்தில் இதன் தாக்கத்தை முழுமையாக பார்க்க முடியுமாக இருக்கும். துடுப்பாட்ட வீரர்கள் முதல் பந்து தொடக்கம் கடைசி பந்து வரை தொய்வின்றி வேகமாக ஓட்டங்களை குவிக்க முயல்வார்கள் என்பதோடு பந்துவீச்சாளர்கள் ஓட்ட வேகத்தை கட்டுப்படுத்தும் பாணிக்கு தமது பந்துவீச்சை மாற்றி வருகிறார்கள்.
பொதுவாக இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்துக்கு சாதகமாக இருக்கும் அதேநேரம் துடுப்பாட்ட வீரர்களும் ஓட்டங்களை தன்னிஷ்டத்திற்கு குவிப்பதற்கு வசதியானதாகவே இருக்கும்.
எனவே மாறி இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் போட்டித் தந்திரங்களுக்கு ஈடுகொடுத்து ஆடினாலேயே இந்த உலகக் கிண்ணத்தில் இறுதி வரை தாக்குப் பிடிக்க முடியும்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இதற்கு மிகப் பொருத்தமான அணிகளாக இருப்பதோடு நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இதற்கு ஏற்ப சவாலான அணிகளாக செயற்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் கூட தமது ஆட்டப் போக்கை டி20 கிரிக்கெட்டுக்கு ஏற்ப மாற்றிக்கொண்டிருக்கின்றன.
இதில் இலங்கை அணிக்கு இருக்கும் மிகப்பெரிய கவலை அது தனது இரண்டு முன்னணி பந்துவீச்சாளர்களை இழந்தே உலகக் கிண்ணத்திற்கு வந்திருக்கிறது. சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீர ஆட்டத்தை திசை திருப்பக் கூடியவர்கள்.
என்றாலும் இவர்கள் இல்லாதபோதும் இந்திய ஆடுகளத்திற்கு பொருந்தும் வகையில் மஹீஷ் தீக்ஷன மற்றும் துனித் வெல்லாளகேவின் சுழற்பந்து வலுவாகவே உள்ளது. டில்ஷான் மதுஷங்க, லஹிரு குமார, மதீஷ பதிரண மற்றும் கசுன் ராஜித்த ஆகியோரை கொண்ட வேகப்பந்து முகாமை குறைத்து மதிப்பிட முடியாது.
இலங்கையின் துடுப்பாட்ட வரிசை பந்துவீச்சை விடவும் பலமாக இருந்தபோதும் அண்மைய போட்டிகளில் ஏகப்பட்ட குறைகளை வெளிப்படுத்தியது. ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் 50 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை வீரர்கள் நடந்த பயிற்சிப் போட்டி இரண்டிலும் தடுமாற்றம் கண்டது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி 240 ஓட்டங்கங்களுக்கு 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்திருந்தபோதும் 294 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
ஆரம்ப வீரர் குசல் ஜனத் பெரேராவுக்கு பயிற்சிப் போட்டியின்போது தோள்பட்டையில் ஏற்பட்ட அசெளகரியம் மற்றும் அணித் தலைவர் தசுன் ஷானக்க ஓட்டம் பெற தவறியது என்ற குறைகளும் உலகக் கிண்ணம் ஆரம்பிக்கும் வரை நீடித்தது.
எப்படி இருந்தபோதும் உலகக் கிண்ணத்திற்கான போட்டி அட்டவணை என்பது ஓர் அணி பலவீனங்களை சரிசெய்து மீண்டு வருவதற்கு போதிய அவகாசத்தை தருவதாகவே உள்ளது.
அதாவது பத்து அணிகள் பங்கேற்கும் இம்முறை உலகக் கிண்ணத்தின் ஆரம்ப சுற்று போட்டிகள் ரவுன்ட் ரொபின் அடிப்படையில் நடத்தப்பட்டு பின்னர் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ரவுன்ட் ரொபின் என்பதால் முதல் சுற்றில் ஒரு அணி மற்ற அணியுடன் ஒரு தடவை மோதும். இதன்படி ஓர் அணிக்கு மொத்தம் 9 போட்டிகள் கிடைக்கும்.
எனவே ஓர் அணி தன்னை ஸ்திரப்படுத்திக்கொள்ள இது வாய்ப்பை தருகிறது. குறிப்பாக இலங்கை எப்போதுமே தொடரின் இடையில் பெரிதான மாற்றங்களை செய்யாததை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. இது வீரர்களிடையே நம்பிக்கை மற்றும் அனுபவத்தை ஏற்படுத்துவதோடு அணியை பலப்படுத்தவும் உதவுகிறது. இம்முறை உலகக் கிண்ணத்திலும் இலங்கை இந்த உத்தியை கையாளும் என்று எதிர்பார்க்கலாம்.
எஸ்.பிர்தெளஸ்