முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பொறுப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் கடந்த சில வாரங்களாகப் பேசுபொருளாகியிருந்த நிலையில், சுதந்திரக் கட்சி மாத்திரமன்றி ஏனைய கட்சிகளும் தம்மைப் பலப்படுத்துவதற்கான முயற்சிகளில் தீவிரம் காட்டியுள்ளன.
2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படுமென்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொருளாதார நிலைமைகளால் தேர்தல்களை நடத்த முடியாமல் போனது. இருந்தபோதும் அடுத்த வருடம் அதாவது 2024 ஆம் ஆண்டு நிச்சயம் தேர்தல் ஆண்டாக அமையப் போகிறது என்பதை உணர்ந்து கொண்டுள்ள அரசியல் கட்சிகள், தம்மை அதற்குத் தயார்படுத்தத் தொடங்கியுள்ளன.
பிரதான கட்சிகளில் ஒன்றான பொதுஜன பெரமுன உள்ளிட்ட பல கட்சிகள் தொகுதி ரீதியாக கட்சிக் கூட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளன. தொகுதி அமைப்பாளர்களை ஊக்கப்படுத்தி கட்சி செயற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
நாட்டில் தற்பொழுது காணப்படும் பொருளாதார சூழலின் அடிப்படையில் எந்தவொரு தனிக்கட்சியாலும் பெரும்பான்மையைப் பெறமுடியாத நிலைமை காணப்படுவதால், பாரிய கூட்டணிகளை அமைப்பதற்கே சகல கட்சிகளும் முனைப்புக்காட்டி வருகின்றன. அடுத்த வருடம் தேர்தல் ஆண்டாக அமையும் என்ற போதிலும், ஜனாதிபதித் தேர்தலா அல்லது பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலா முதலில் நடத்தப்படும் என்பது உறுதியாகத் தெரியாத போதும், தேர்தலொன்றுக்குப் பொதுவான ஆயத்தப்படுத்தல்களில் கட்சிகள் இறங்கியுள்ளன எனக் கூற முடியும்.
அரசியலமைப்புக்கு அமைய அடுத்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். இருந்தபோதும் அதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி நிறைந்த சூழ்நிலையில் அடுத்த வருடம் நடைபெறக் கூடிய தேர்தல்கள் தீர்மானம் மிக்கவையாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. சுமார் ஒரு வருடத்துக்கு முன்னர் நாடு எதிர்கொண்டிருந்த நிலையையும், நாட்டில் தற்பொழுது காணப்படும் நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த மாற்றத்துக்கு வித்திட்டவர் யார் என்பது அனைவருக்கும் புரியும்.
இவ்வாறான பின்னணியில் நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்கக் கூடிய பலம் கொண்ட ஒருவர் ஜனாதிபதியாகத் தெரிவாவதே பொருத்தமாகவும் இருக்கும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்று கடந்த ஒருவருட காலத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மக்கள் மத்தியில் நம்பிக்கை உருவாகியுள்ளது. ஜனாதிபதியின் இந்த செயற்பாடுகள் தொடர்ந்தும் நாட்டை சரியான பாதைக்கு இட்டுச் செல்லும் என்ற சாதக எண்ணப்பாடொன்றும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியும், பிரதான ஆளும் கட்சியான பொதுஜன பெரமுனவும் கூட்டணி அமைக்கவிருப்பதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றபோதும், இதுபற்றிய உறுதியான நிலைப்பாடு இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஜனாதிபதித் தேர்தலொன்று நடத்தப்படும் பட்சத்தில் பொதுவேட்பாளராகத் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனப் பொதுஜன பெரமுனவின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தலைமையில் அண்மையில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்திலேயே இந்த நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டிருப்பதாக ஊடகங்கள் அறிக்கையிட்டிருந்தன.
ஐக்கிய தேசியக் கட்சியும் தமது ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க என்பதைத் தீர்மானித்துள்ள நிலையில், அந்த அடிப்படையிலான அரசியல் முயற்சிகளை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது.
அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து வந்த குழுவினரே தற்போது ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் பிரதான எதிர்க்கட்சியாகச் செயற்படுகின்றனர். இதில் உள்ள சிலர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை முன்வைத்திருப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
இருந்தாலும், ஐக்கிய மக்கள் சக்தியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச என்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருந்தபோதும் இது இன்னமும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
மறுபக்கத்தில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுனவிலிருந்து பிரிந்த டலஸ் அழகப்பெரும தலைமையிலான குழுவினர் மற்றும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினருடனும் கூட்டணி குறித்த பேச்சுக்களில் ஈடுபட்டு வருவதாக ஊடகங்கள் அறிக்கையிட்டுள்ளன.
இதனை அடிப்படையாகக் கொண்டு கடந்த காலங்களில் சந்திப்புக்களும் கலந்துரையாடல்களும் இடம்பெற்றுள்ளன. பொதுஜன பெரமுனவில் அதிருப்தியடைந்த குழுவினரை இணைத்துக் கொள்வது குறித்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதேநேரம், ஆளும் கட்சியில் உள்ள பொதுஜன பெரமுனவின் அதிருப்தியாளர்கள் குழுவொன்று ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாகச் செயற்படுவதற்கு முயற்சிப்பதாகவும் தெரியவருகிறது. இந்தக் குழுவில் சுமார் 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது இவ்விதமிருக்க, இந்த வருடம் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தமது பலத்தைக் காண்பிக்க முடியும் என எதிர்பார்த்திருந்த ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எதிர்வரும் தேர்தலில் அவர்கள் தனியாகக் களமிறங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவருகிறது. ஆரம்பத்தில் இவர்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதுபோன்ற தோற்றப்பாடு உருவாக்கப்பட்டிருந்தபோதும், இந்தச் சூழல் தற்பொழுது முற்றாக மாறியிருப்பதாகவே சுட்டிக்காட்டப்படுகிறது.
எதுவாக இருந்தாலும், முன்னர் குறிப்பிட்டது போன்று நடைபெறவிருக்கும் தேர்தல் எந்தவொரு கட்சிக்கும் இலகுவானதாக இருந்துவிடப் போவதில்லை. பொருளாதா ரீதியில் மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களுக்கும், மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களுக்கும் பதில் கூறக்கூடிய வகையில் அரசியல் கட்சிகள் தம்மைத் தயார்படுத்த வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. எனவே, இம்முறை தேர்தல் களம் அரசியல் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் இலகுவானதாக அமைந்துவிடாது என்பதால் பலமான கூட்டணிகளுக்கான முக்கியத்துவம் தோன்றியுள்ளது.
பி.ஹர்ஷன்