* அவசர நிலைமைகளின் நிமித்தம் மோட்டார் படகுகள், சிறப்பு வாகனங்கள், மீட்புக் குழுக்கள் தயார் நிலையில்
* நில்வள, அத்தனகல்லு ஓயா மற்றும் குடா கங்கை பெருக்கெடுக்கும் அபாயம்
* நாட்டின் சில பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு குறித்து சிவப்பு எச்சரிக்கை
* மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு 09,10ஆம் திகதிகளிலும் விடுமுறை
* நிவாரண மற்றும் மீட்பு பணிகளில் 600 இராணுவ வீரர்கள் மாத்தறை மாவட்டத்தில்துரித நிவாரண நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி பணிப்பு
* 13,027 குடும்பங்களை சேர்ந்த 53,399 பேர் பாதிப்பு, 1556 பேர் நலன்புரி நிலையங்களில்
நாட்டின் சில மாகாணங்களில் மழையோ மழை. தாழ் நிலங்களில் வெள்ளநிலை. மண்சரிவு அச்சுறுத்தல். மக்களின் இயல்பு நிலையும் பெரும் பாதிப்பு. தென் மேல் பருவ பெயர்ச்சி மழைக் காலநிலையின் வெளிப்பாடுகள் இவை.
இதன் விளைவான சீரற்ற காலநிலை நாட்டில் கடந்த இரண்டொரு வாரங்களாக நீடித்து வருகிறது. நாடும் மக்களும் வெள்ளம், மண்சரிவு அச்சுறுத்தலை மாத்திரமல்லாமல் கடும் காற்று மற்றும் இடி மின்னல் என்பவற்றினாலான அனர்த்தங்களையும் எதிர்நோக்கிய வண்ணமுள்ளனர்.
இந்நிலையில் வளிமண்டலவியல் திணைக்களம் அண்மையில் (7.10.2023) விடுத்த அறிவித்தலின் படி, மேல், தென், சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் தற்போதைய மழைக்காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்கலாமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தென் மேல் பருவப் பெயர்ச்சி மழைவீழ்ச்சி தீவிரமடைந்திருப்பதால் சில பிரதேசங்களில் 100 மில்லி மீற்றர்களுக்கும் மேல் மழை வீழ்ச்சி கிடைக்க பெறலாமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த சில வாரங்களாகப் பெய்துவரும் மழை காரணமாக களுகங்கை, நில்வளா கங்கை, அத்தனகலு ஓயா என்பவற்றின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகின்ற அதே நேரம் மௌசாக்கலை, காசல் ரீ, கென்யோன், லக்ஷபான, நவ லக்ஷபான, விமல சுரேந்திர உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் அதிகரித்த வண்ணமுள்ளது.
களுகங்கை, நில்வளா கங்கை, அத்தனகலு ஒயா ஆகியவற்றின் இரு மருங்கிலும் உள்ள தாழ் நிலப்பிரதேசங்களில் வெள்ள நிலையும் ஏற்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டிலும் நீர் மின்னுற்பத்தி நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் உயர்ந்துவரும் நிலையில் மேலதிக நீரை வெளியேற்றும் வகையில் நீர்த்தேக்கங்களின் வான்கதவுளை திறந்துவிட வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. அதனால் தாழ் நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்க வேண்டுமென நீர் மின்னுற்பத்தி நிலைய அதிகாரியொருவர் தெரிவித்திருக்கிறார்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் அஜித் குணசேகர, தற்போது கிடைக்கப்பெறும் கனத்த மழைவீழ்ச்சியினால் பல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாகவும் குறிப்பாக நில்வளா, குடா கங்கை, அத்தனுகலு ஓயா ஆகிய கங்கைகளின் தாழ் நிலங்களில் பாரிய வெள்ளநிலை ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து உடனடியாக செயற்பட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர்கள் குறித்த கங்கைகளின் இரு மருங்கிலுமுள்ள தாழ் நிலங்களில் வசிக்கும் மக்களை ஒலிபெருக்கி மூலம் அறிவூட்டினர். அதனால் சில தாழ் நிலப் பிரதேசங்களில் வசிப்பவர்களில் சிலர் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துமுள்ளனர்.
மாத்தறை மாவட்டத்தில் வெள்ளம்
ஆனால் நில்வளா கங்கையின் இரு மருங்கிலும் அமைந்துள்ள அக்குரஸ்ஸ, மாலிம்பட, திககொட, கம்புருப்பிட்டிய. திக்வெல்ல போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் ஏற்கனவே வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. திக்வெல்ல மின்ஹாத் வித்தியாலயத்தின் வகுப்பறை கட்டடங்களுக்குள் வெள்ள நீர் புகுந்ததோடு வேறு சில பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன. பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மாவட்டத்தின் பல பாடசாலைகளுக்கு கடந்த 5ஆம்,6ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்பட்டதோடு நிலைமையைக் கருத்தில் கொண்டு மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை 9, மறுநாள் 10ஆம் திகதிகளிலும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தின் 16 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,350 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 9,448 பேர் இச்சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 399 வீடுகளும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இவ்வாறான சூழலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மாத்தறை மாவட்ட மக்களின் தேவைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் அந்த மக்களுக்கு அவசியமான சமைத்த உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய வசதிகளை குறைவின்றி வழங்குமாறும் அதற்காக முப்படையினரின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ளுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அத்தோடு வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் பட்சத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முன்னாயத்தங்களை மேற்கொள்ளுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
அந்த வகையில் மாலிம்பட, அக்குரஸ்ஸ, கம்புருப்பிட்டிய, திககொட ஆகிய பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண உணவு தயார்படுத்தல் நிலையங்கள் ஊடாக சமைத்த உணவு வழங்கப்படுகிறது. 6,967 குடும்பங்களைச் சேந்த 25,553 பேர் வெள்ளத்தில் சிக்கியுள்ளதோடு அவர்களுக்கு இராணுவம் சமைத்த உணவு வழங்குகிறது.
இவ்வெள்ள நிலையினால் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ள மாலிம்பட பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்கென விசேட நிவாரணத் திட்டமொன்றும் இராணுவத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை மாத்தறை மாவட்டத்தில் மாத்திரம் 600 இராணுவ வீரர்கள் அனர்த்த மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அனர்த்த முன்னாயத்த ஏற்பாடு
இவை இவ்வாறிருக்க, இச்சீரற்ற காலநிலையினால் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ஏற்படக்கூடிய அனர்த்தங்களின் சேதங்களையும் பாதிப்புக்களையும் குறைப்பதற்கும் தவிர்ப்பதற்கும் தேவையான ஏற்பாடுகளை முன்னெடுக்கவும் தேவையான அறிவுறுத்தல்களை ஜனாதிபதி அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோனும், சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைக் குறைப்பதற்கும் தவிர்ப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கேட்டுக் கொண்டுள்ளார். அதனால் சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய அவசரகால நிலைமைகளில் மக்களை மீட்பதற்காக மோட்டார் படகுகள், இராணுவ சிறப்பு வாகனங்கள் மாத்திரமல்லாமல் மீட்புக்குழுக்களும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான நிதியொதுக்கீடுகளும் அந்தந்த மாவட்ட செயலகங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மண்சரிவு அச்சுறுத்தல்
மேலும் இச்சீரற்ற காலநிலை ஆரம்பமானதைத் தொடர்ந்து மலையகத்திலும் மலை சார்ந்த பிரதேசங்களிலும் மண்சரிவு அச்சுறுத்தலும் ஏற்பட்டது. குறிப்பாக கேகாலை சென் ஜோசப் மகளிர் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மண்சரிவு அச்சுறுத்தலால் கடந்த வாரம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது. அக்குரஸ்ஸ, தியலுபே, தெனிப்பிட்டிய பிரதேசத்தில் கடந்த 5ஆம் திகதி (10.2023) பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டது. இம்மண்சரிவானல் எவருக்கும் உயிராபத்து ஏற்படாத போதிலும் அப்பிரதேசத்தில் வசித்த 30 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன.
காலி மாவட்டத்தின் துவக்கு கலவத்தை பிரதேசத்திலும் விகாரையொன்றுக்கு அருகிலுள்ள வீடொன்றில் மண் மேடொன்று சரிந்து விழுந்ததில் 78 வயதுடைய நபரொருவர் உயிரிழந்திருக்கின்றார். அத்தோடு மலையகத்திலும் மலை சார்ந்த பிரதேசங்களிலும் சிறுசிறு மண்சரிவுகளும் பதிவாகியுள்ளன. இந்நிலையில் மக்களை விழிப்பூட்டும் வகையில் நாட்டிலுள்ள 09 மாவட்டங்களின் 30 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு தினமும் மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுத்து வந்த தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம், நேற்று முன்தினம் (06.10.2023) மாலை முக்கிய அறிவிப்பொன்றை விடுத்தது. அவ்வறிவிப்பில் காலி மாவட்டத்தில் 09 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண் சரிவு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட போதிலும் எல்பிட்டிய, நாகொட, யக்கலமுல்ல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய, வலலாவிட்ட, மத்துகம ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் சிகப்பு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர பிரதேச செயலகப் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் குருவிட்ட பிரதேச செயலகப் பிரிவுக்கும் கூட இச்சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் களுத்துறை மாவட்டத்தில் மேலும் 4 பிரதேச செயகப் பிரிவுகளுக்கும் மாத்தறை மாவட்டத்தில் 11 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 10 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை ஆகிய மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் கூட இவ்வெச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதனால் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் வாழும் மக்கள் சேறு சகதியுடன் திடீரென நீரூற்று ஏற்படல், உயர்ந்த மரங்கள், தொலைபேசி, மின்கம்பங்கள் சரிதல், வீடுகள் உள்ளிட்ட கட்டடங்களிலும் நிலத்திலும் திடீரென வெடிப்புக்கள், பிளவுகள் ஏற்படல், அவை விரிவடைதல், தாழிறக்கங்கள், இயற்கையாகக் காணப்படும் நீரூற்றுக்கள் தடைபடுதல் அல்லது காணாமல் போதல் போன்றவாறான அறிகுறிகளை அவதானித்தால் தாமதமின்றி விரைவாக அவ்விடங்களை விட்டு அகன்று பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர வேண்டும். அவ்வறிகுறிகள் பெரும்பாலும் மண்சரிவுக்கான முன்னெச்சரிக்கையாகவே இருக்கும். இதேவேளை, கொழும்பு லிபட்டி பிளாஸாவுக்கு முன்பாக உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகிலிருந்த 100 வருடங்கள் பழமையான ‘ரொபரோஸியா வகையைச் சேர்ந்த பாரிய மரமொன்று இச்சீரற்ற காலநிலையினால் திடீரென பயணிகள் பஸ் வண்டி மீது கடந்த வெள்ளியன்று காலையில் சரிந்து விழுந்தது. இதனால் ஐவர் உயிரிழந்ததோடு 17 பேர் காயமடைந்தனர். அதனால் சீரற்ற காலநிலையினால் சரிந்து விழக்கூடிய அபாயத்தைக் கொண்டுள்ள உயர்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவதற்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அதற்கு தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
பாதிப்புக்கள்
என்றாலும் தற்போதைய சீரற்ற காலநிலையினால் சப்ரகமுவ மாகாணத்தில் 278 குடும்பங்ளைச் சேர்ந்த 1058 பேரும், மேல் மாகாணத்தில் 10,373 குடும்பங்களைச் சேர்ந்த 42,683 பேரும், தென் மாகாணத்தில் 2,119 குடும்பங்ளைச் சேர்ந்த 8,615 பேரும் அடங்கலாக முழு நாட்டிலும் 13,0 27 குடும்பங்களைச் சேர்ந்த 53,399 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் 16 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 381 குடும்பங்களைச் சேர்ந்த 1556 பேர் இவ்வாறு தங்கியுள்ளனர். அவர்களில் 334 குடும்பங்களைச் சேர்ந்த 1,382 பேர் கம்பஹா மாவட்டத்திலுள்ள 13 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி தெரிவித்திருக்கிறார். இவ்வாறான பாதிப்புக்களையும் சேதங்களையும் இச்சீரற்ற காலநிலை ஏற்படுத்தியுள்ள போதிலும் பருவ பெயர்ச்சி மழைவீழ்ச்சி தீவிரமடைந்திருப்பதால் இப்பாதிப்புகளும் சேதங்களும் மேலும் அதிகரிக்கக்கூடிய அச்சுறுத்தல் நிலவவே செய்கின்றது. அதுவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கருத்தும் ஆகும். அதனால் எதிர்வரும் நாட்களிலும் விழிப்புடனும் முன்னெச்சரிக்கையுடனும் செயற்பட வேண்டிய பொறுப்பு மக்கள் முன்பாக உள்ளது. அதன் ஊடாக சீரற்ற காலநிலையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களினாலான சேதங்களையும் பாதிப்புக்களையும் தவிர்த்துக் குறைத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
மர்லின் மரிக்கார்