Home » நரிக்குறவர்களிடம் அன்பு பரிமாறிய இசையமைப்பாளர் டி.இமான்

நரிக்குறவர்களிடம் அன்பு பரிமாறிய இசையமைப்பாளர் டி.இமான்

by Damith Pushpika
October 8, 2023 6:44 am 0 comment

நெய்வேலி கிராமத்தில் நரிக்குறவர்களிடம் அன்பு பரிமாறிய இசையமைப்பாளர் டி.இமான்நெய்வேலி அருகே உள்ளது பெரியாக்குறிச்சி கிராமம்.

இப்பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் 20-க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு இப்பகுதிக்கு வருகை தந்ததிரைப்பட இசையமைப்பாளர் டி.இமான், பழுதடைந்திருந்த நரிக்குறவர்களின் 5 குடிசை வீடுகளை சரி செய்ய ரூ.2 லட்சம் வழங்கினார். மேலும், மழை பெய்தால் ஒழுகும் நிலையில் இருந்த 3 குடிசைகளுக்கு, தார்பாய் கொண்டு வீட்டின் மேல் பகுதியை மூடவும் உதவி செய்தார்.

கடந்த ஒரு ஆண்டாக இப்பகுதியில் மரத்தடி ஒன்றில் நரிக்குறவர்களுக்காக இந்திரா என்ற ஆசிரியை இரவு பாடசாலை ஒன்றை மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடத்தி வருகிறார்.

இவர் கடலூரில் தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இமானை இங்கு அழைத்து வந்தவர்கள் இதுபற்றி ஏற்கெனவே கூற, அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த இமான், அதே பகுதியில் இடத்தை சுத்தம் செய்து, செட் ஒன்றை அமைத்து, இரவு பாட சாலையை அமைத்து கொடுத்தார்.

“நீங்கள் யார் என்ற அடையாளத்தை மாற்றி, சமூகத்தில் உங்களுக்கு மரியாதையை ஏற்படுத்தி தருவது கல்வி ஒன்றால் மட்டுமே முடியும்” என்று அப்போது அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கிருந்த பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கிய டி.இமான், நரிக்குறவ இன மக்கள் தங்களின் அன்பை வெளிப்படுத்தும் வகையில் அவர்கள் அணிவித்த மணி மாலைகளை பெற்றுக் கொண்டார். அவர்களுடன் பேசிக் கொண்டிருந்த டி.இமான், அப்பகுதி மக்களுக்காக தான் இசையமைத்த ‘கண்ணான கண்ணே’ என்ற பாடலை பாடினார். நரிக்குறவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதை கேட்டு மகிழ்ந்தனர். அவருடன் தங்கள் செல் போனில் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

அந்த மக்களிடையே பேசிய டி.இமான்,“நான் இப்பகுதிக்கு ஒரு சமூக ஆர்வலராக தான் வந்துள்ளேன். இப்படி வருவது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. ‘டி இமான்’ என்கின்ற கல்வி அறக்கட்டளையை கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறேன். அதன்மூலம் ஏதேனும் செய்யலாம் என்று கருதி நண்பர்கள் சிலரின் துணையோடு இங்கு வந்தேன். நான் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவன்.

மதத்தை பரப்புவதற்காக இங்கு வரவில்லை. சம்பாதிப்பதில் பத்தில் ஒரு பங்கை எடுத்து இவ்வாறு செலவு செய்ய முடிவெடுத்து, இதைப்போன்ற பணிகளைச் செய்து வருகிறேன்.

இந்தப் பணிகள் அனைத்தையும் இறைப்பணியாகவே பார்க்கிறேன்” என்றார். டி.இமானுடன் சமூக ஆர்வலர் செல்வம் உமா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

lakehouse-logo

இலங்கை மக்களால் அதிகம் விரும்பப்படும் தேசிய தமிழ் நாளிதழ்

editor.vm@lakehouse.lk
Call Us : (+94) 112 429 429

Web Advertising :
77 770 5980
 
Classifieds & Matrimonial
Chamara  +94 77 727 0067

Facebook Page

All Right Reserved. Designed and Developed by Lakehouse IT Division