தமிழில் ரோஜா, ஜென்டில் மேன் போன்ற ஏராளமான படங்களில் நடித்தவர் மதுபாலா. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திப் படங்களிலும் 1990களில் பிரபலமாக இருந்தார்.
சமீபத்தில் தனது பேட்டி ஒன்றில் தனது திருமணம் குறித்துப் பேசியிருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், ”1999ம் ஆண்டு ஆனந்த் ஷாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டேன். நான் தில் ஜாலே என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது முதல் முறையாக ஆனந்த் ஷா என்னைச் சந்தித்தார். அப்போது எங்களுக்குள் அறிமுகம் கிடையாது. அப்படத்தின் இயக்குநருக்கு ஆனந்த் ஷா நெருங்கிய நண்பர். எனவே அண்டி பால்ராஜிடம் பேசி என்னைச் சந்திக்க உதவும்படி ஆனந்த் ஷா கேட்டுக்கொண்டார்.நான் ஹப்தா வசூலி என்ற படத்தில் நடித்துக்கொண்டிருந்த போது ஆனந்த் ஷாவை என்னிடம் அண்டி பால்ராஜ் அறிமுகம் செய்தார். நாங்கள் இருவரும் 5 நிமிடம் பேசினோம். அவருடனான உரையாடல் எனக்குப் பிடித்திருந்தது. அவரைப்போன்ற ஒருவரை வாழ்க்கையில் சந்தித்தது கிடையாது. அவர் பிசினஸ் குடும்பத்தை சேர்ந்தவர். அதோடு ஸ்விட்சர்லாந்தில் படித்தவர். ஆனால் நான் வேறு பின்னணியில் இருந்து வந்தவள். ஒரு முறை நாங்கள் பாலி கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். அந்நேரம் அவர் என்னை ஈர்க்கும் விதமான காரியங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.அவர் என்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டார். நான் அந்த நிமிடமே சம்மதம் தெரிவித்தேன் . எங்கள் உறவில் உள்ள எல்லா நினைவுகளும் பசுமையானது. ஒரு முறை தொழில் விஷயமாக சிங்கப்பூர் சென்று வந்த போது ஒரு சூட்கேஸ் முழுக்க எனக்கு உடைகள் வாங்கி வந்திருந்தார். இருவரும் சில காலம் காதலித்த பிறகு திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம். எங்களின் பெற்றோரிடம் அனுமதியைப் பெறுவது சவாலாக இருந்தது,
என் தந்தை ஏற்கெனவே எனக்கு வரன் தேடிக்கொண்டிருந்தார். நான் ஆனந்த் குறித்து கூறியவுடன் அவர் ஏற்றுக்கொண்டார். எனக்குத்தான் ஆனந்த் அம்மா என்ன சொல்லப்போகிறாரோ என்ற தயக்கம் இருந்தது. நான் நடிகை என்பதால் அவர்கள் என்ன நினைப்பார்களோ என்று நினைத்தேன். ஆனால் அவர் எங்களை ஏற்றுக்கொண்டார். ” என மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்திருக்கிறார் மதுபாலா.