1950களுக்கு முன்னர் முஸ்லிம்களிடையே காணப்பட்ட ஒலிக் கலைகள் மற்றும் பாடல் மரபுகளை திரும்பிப் பார்க்க வைக்கும் சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர் நாதியா பெரேராவின் முயற்சி-
இலங்கை வாழ் முஸ்லிங்களுக்கென தனியான இசைப் பாரம்பரியமொன்று இருக்கிறதா? இதற்கு முன்னர் இருந்ததா என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இலங்கையிலுள்ள சிங்கள, தமிழ், கிறிஸ்தவ சமூகங்களுக்கென தனித்துவமான இசை மரபுகள் இருக்கும் நிலையில் முஸ்லிம்கள் மார்க்க ரீதியான கருத்து வேறுபாடுகளைப் பேசிக் கொண்டு தமது தனித்துவத்தை இழந்துள்ளார்களா என்ற கேள்வி எழத்தான் செய்கிறது.
முஸ்லிம்களின் இசை மரபு பற்றிய விடயம் மீண்டும் பேசுபொருளாவதற்கு இளம் சிங்கள திரைப்படத் தயாரிப்பாளர் நாதியா பிமானி பெரேராவின் விவரணத் திரைப்படம் தான் முக்கிய காரணம். இலங்கை முஸ்லிம்களின் ஒலிக் கலைகள் மற்றும் பாடல் மரபை அலசும் அவரின் ஆவணத் திரைப்படம் இன்று முஸ்லிம் சமூகத்தைத் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
‘ மினாரத் ‘ அவரது ஆவணப் படத்தின் நாமம். பள்ளிவாசல்களில் இரு பக்கமும் உருளை வடிவை ஒத்ததாக உயரமாக அமைக்கப்படும் கட்டட வடிவமே மினாரத் எனப்படுகிறது. அதனை பெயராகச் சூட்டி தனது விவரணப்படத்தை அழகாக நகர்த்திச் சென்றுள்ள நாதியா நாட்டின் பலபாகங்களுக்கும் சென்று படப்பிடிப்புக்களை மேற்கொண்டிருக்கிறார்.
பேராதனைப் பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் எஸ்.எம்.எம். அனஸ், மூத்த ஒலிபரப்பாளர் புர்கான் பீ இப்திகார்,கல்வியாளரும் சமூக ஆர்வலருமான ஜஸீம்மா இஸ்மாயில் உட்பட முக்கியஸ்தர்களின் கருத்துக்கள் இந்த விவரணத் திரைப்படத்துக்கு மெருகேற்றியிருப்பது முக்கிய அம்சமாகும்.
1950 களுக்கு முன்னர் வாழ்ந்த இலங்கை முஸ்லிம்களின் வாழ்வு, சமூக கலா ரசனையும் ரசா ஞானமும் கலந்தாக இருந்துள்ளது. ஆனால் 1950களின் பின்னர் அது மங்கத் தொடங்கியதாக இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். இதனை மேற்கு அவுஸ்திரேலிய மெர்டொக் பல்கலைக்கழக கலாநிதி அமீரலி தனது கட்டுரைகளின் ஊடாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
முஸ்லிம்களின் இசை மரபில் பல்வேறு வகையான பாடல்களும் கவிதைகளும் காலம் காலமாக பாடப்பட்டு வந்துள்ளன. களிகம்பு, ஊஞ்சல் பாட்டு, பக்கீர் பைத், றப்பான், நாட்டுக் கவி, மீன் வலை இழுப்போரின் ஏலோலே பாடல்கள், திருமண நிகழ்வில் படிக்கும் வாழ்த்துப் பாடல், விருத்தம், பதம், நெல்வயலில் ஏர்பூட்டி உழுகையில் படிக்கும் பாடல், பெண்கள் களை பிடுங்குகையில், பறவை விரட்டுகையில் பாடும் பாடல், வயற்காட்டில் பரண் அமைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் போட்டி போட்டுப் பாடும் கவிப்பாடல். கிழக்கிலங்கையில் அறுவடை செய்த தானியங்களை மாட்டுவண்டியில் ஏற்றி எடுத்துச் செல்கையில் பாடும் காதல் சுவையுடனான பாடல் என இந்தப் பட்டியல் நீண்டு செல்கிறது. களிகம்பாட்டம் மற்றும் கோலாட்டம் போன்ற மரபுகள் இன்றும் சில பிரதேசங்களில் காணப்படும் அதேவேளை அண்ணாவியாரின் வழிகாட்டலுடன் அவை மேடையேற்றப்படுகின்றன.
இவை தவிர மீலாத் விழாக்கள், பெருநாள் பண்டிகைள், பள்ளிவாசல் கோடியேற்றங்களில் இஸ்லாமிய கீதம், பைத். கஸீதா என்பன பாடப்படுவது தான் இன்று காணக்கிடைக்கும் சில அம்சங்கள் எனலாம். அது மாத்திரமன்றி கிழக்கில் சில பகுதிகளில் நோன்பு நாட்களில் அதிகாலை எழுப்புவதற்காக பக்கீர் பாடல்கள் பாடப்படுகின்றன.
இந்த நிலையில் தான் இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் பங்களிப்புடன் முஸ்லிம்களின் இசை மரபு பற்றி ஆராயும் ஆவணப் படத்தை நாதியா தயாரித்தளித்துள்ளார். ஆரம்பத்தில் குறுந் திரைப்படமாக உருவாகி இன்று அது விரிவாக்கம் பெற்றுள்ளது.
கொழும்பு, காலி, வெலிகம, புத்தளம், கல்முனை, அம்பாறை என நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று பலரையும் சந்தித்து தனது ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறார் நாதியா.
இத் திரைப்படத்தைப் பற்றி கருத்துக் கூறியுள்ள பேராசிரியர் அனஸ், இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை மறுபரிசீலனை செய்வதாக அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
“ஒரு காலத்தில் இலங்கை முழுவதும் உள்ள முஸ்லிம்கள் மத்தியில் நாட்டுப்புற இசை பிரபலமாக இருந்தது. இது சில காலகட்டங்களில் குறைந்துள்ளதோடு சில சந்தர்ப்பங்களில் மறைந்துவிட்டது. தற்போது கல்முனை தொடக்கம் நிந்தவூர், அக்கரைப்பற்று, காத்தான்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர் பிரதேசங்களில் கிழக்கு கரையோர மக்கள் மத்தியில் இந்த இசை மரபு இன்றும் வாழ்கிறது. ஆனால் அந்த இசைப் பொற்காலம் போய்விட்டது“ என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் அறிவிப்பாளரும் மூத்த கலைஞருமான புர்கான் பி.இப்திகாரும் பல முக்கிய விடயங்களை இந்த ஆவணப்படத்தில் கோடிட்டுக் காட்டிள்ளார்.
முஸ்லிம் நுண்கலைக்கழகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பங்களிப்புகள் முஸ்லிம் சேவையின் ஊடாக அளிக்கப்பட்ட பங்கு, உள்ளிட்ட பல விடயங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“கலாசார அமைச்சின் கீழ் அமைக்கப்பட்டிருந்த முஸ்லிம் நுண்கலைக் கழகத்தின் ஊடாக இலங்கை முழுவதும் சென்று மறைந்து வரும் இசை மரபுகள் சார்ந்த போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் மூலம் மாணவர்களை ஊக்கப்படுத்தினோம். ஆனால் பின்னர், முஸ்லிம் நுண்கலை கழகம் கலைக்கப்பட்டது” என்று அவர் இதில் குறிப்பிட்டிருக்கிறார்.
கல்வியாளரும் சமூக ஆர்வலருமான ஜஸீமா இஸ்மாயில் சில விடயங்களை அழுத்தமாக கூறுயுள்ளார்.
“கிராமங்களில் இசைக்கருவிகள் வாசிப்பது பற்றியும் இறந்தவர்களுக்காக தானம் வழங்கும் வீடுகளில் பாடல் பாடப்படுவது பற்றியும் அறுவடை வீட்டுக்கு எடுத்து வருகையில் பாடப்படும் பாடல்கள் பற்றியும் தனது நினைவுகளை அவர் மீட்டியுள்ளார்.
மொகிதீன் பேக்கின் சிங்களப் பாடல்கள் பற்றியும் இந்திய நாகூர் கனியின் பாடல்களை அதே குரலில் பாடும் இலங்கை கலைஞர்கள் பற்றியும் கூட இந்த ஆவணப்படம் ஆராய்ந்துள்ளது. பாங்கு, வீடுகளில் பெண்களால் ஓதப்படும் விடயங்கள், பற்றியும் நாதியா ஆராய்ந்துள்ளார்.
ஊடகவியலாளர்களுக்கு விசேட காட்சியொன்று அண்மையில் காண்பிக்கப்பட்டது. இந்த நிலையில் மினாரத் ஆவணப்படம் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் பி.வி.ஆர். சினிமா அரங்கில் மாலை 5.45 மணிக்குக் காண்பிக்கப்பட இருக்கிறது. விவரணப் படங்களை திரையிட பொதுவாக திரையரங்குகளில் இடம் வழங்கப்படுவதில்லை. ஆனால் இந்த சந்தர்ப்பத்தை முஸ்லிம்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதோடு நாதியா பெரேராவின் முயற்சிக்கு நமது தரப்பாலும் பங்களிக்க வேண்டும். ஏனென்றால் முஸ்லிம்களின் தரப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிக்கு நாதியா ஆரம்பப் புள்ளியை வைத்துள்ளார். இந்த முயற்சி மேலும் மேம்படுத்தப்பட்டு முஸ்லிம்களின் ஒலிக் கலைகள் மற்றும் பாடல் மரபுகளை பேணி எதிர்கால சந்ததியைக் காக்க வேண்டியது எமது பொறுப்பாகும்.
– பாஹிம்