உலகின் முதலாவது அணுக்கரு உலையை உருவாக்கியவர் என்ரிக்கோ பெர்மி (Enrico Fermi) ஆவார். இவர் 1901 ஆம் அண்டு பிறந்தது 1954 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். ஒரு புகழ்பெற்ற இத்தாலிய இயற்பியல் அறிஞராவார். குவாண்டம் கொள்கை, அணுக்கரு இயற்பியல், துகள் இயற்பியல், புள்ளியியல் பொறிமுறை போன்றவற்றில் இவரது பங்களிப்புகளுக்காகவும் பெரிதும் போற்றப்படுகிறார். பெர்மி தூண்டல் கதிரியக்கத்தில் இவரது பங்களிப்புகளுக்காக 1938-ஆம் ஆண்டில் இவருக்கு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1952 இல் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை தனிமம் ஒன்றுக்கு இவரது நினைவாக பெர்மியம் எனப் பெயரிடப்பட்டது.
இத்தாலியில் ரோம் நகரில், தன் தந்தைக்கு மூன்றாம் மகனாக பிறந்தார். இவரின் தந்தை அல்பெட்ரோ பெர்மி, இரயில்வே துறையில் பணியாற்றியவர். இவர்கள் கிறிஸ்தவக் கத்தோலிக்கப் பிரிவை சார்ந்தவர்கள். இவருக்கு ஒரு சகோதரனும் (கியோலியோ) ஒரு சகோதரியும் (மரியா) இருந்தனர். சிறு வயதிலேயே இயற்பியலில் மிகுந்த ஆர்வம் காட்டினார். பைசா நகரப் பல்கலைக்கழகத்திலும், ஐரோப்பாவின் வேறு இடங்களிலும் படித்து இயற்பியலில் பட்டம் பெற்று, ரோம் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர். அவரது கதிரியக்க ஆய்வுக்காக 21 ஆம் அகவையில் முனைவர் பட்டம் பெற்றார். 1934 முதல் கதிரியக்க ஆய்வில் பீட்டா சிதைவுக் கொள்கையைத் தோற்றுவித்தார்.
இளமைப் பருவத்தில் தனது அண்ணனுடன் சேரந்து கையில் கிடைக்கும் இயந்திரங்களை எல்லாம் உடைத்து பிரித்து பார்ப்பார் என்ரிக்கோ. அவரின் அண்ணன் 1915 இல் நோய்வாய்ப்பட்டு இறந்தபோது அதிர்ச்சி தாங்க முடியாமல் பித்துப் பிடித்தவர் போல் ஆனார். தன் அண்ணன் இறந்த மருத்துவமனையின் முன்பே சுற்றி திரிந்தார். அப்போது தான் இயற்பியல் புத்தகங்களை அவர் படித்தார். பின் தன் பதினேழாம் வயதில் என்ரிக்கோ எழுதிய பல்கலைகழக நுழைவுத் தேர்வின் கட்டுரையை படித்த ஆசிரியர் ‘அந்தக் கட்டுரைக்கு முனைவர் பட்டமே தரலாம்’ என்று வியந்து பாராட்டினாராம்.
இலத்திரன் அணுக்களின் ஓட்டம் குறித்த ஆய்வுகள் மற்றும் அவை நிறமாலையாய்ப் பிரிவது பற்றியும் பெர்மி ஆரம்ப ஆய்வினை மேற்கொண்டார். ஓர் அணுவின் வெளி வட்டப் பாதையில் சுழலும் இலத்திரனில் ஆரம்பித்த பெர்மி தனது ஆய்வினை முன்னேற்றி மையக் கருவான அணுக்கருவுக்கே சென்றார்.
அதுவே அவரின் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது. மேலும் அணுக்கருவைப் பிளக்க முடியும் என்பதை அந்தச் சமயத்தில் வாழ்ந்த இயற்பியலார் ச்ட்ரஷ்மேன் கூறினார்.
இதைப் படித்த பெர்மி தூண்டல் கதிரியக்கம் (Chain Reaction) நடைபெறுவதைப் பற்றிச் சிந்திக்க தொடங்கினார். இதுவே அவர் நோபல் பரிசு பெறக் காரணமான துறை ஆகும். தனது 22 ஆவது வயதில் ஐன்ஸ்டைனின் சமன்பாட்டில் அணுசக்தியின் ரகசியம் இருப்பதைச் சொன்னார். அணு உலைகளில் பயன்படுத்தப்படும் வேகமற்ற நியூத்திரன் பற்றியும் ஆய்வு மேற்கொண்டார்.
தனது தூண்டல் கதிரியக்கத்திற்காக எக்சலென்சா என்ரிக்கோ பெர்மி சுவீடனில் மிக உயரிய விருதான நோபல் பரிசை பெற்றார்.
ஹிட்லர் போல முசோலினியும் இனவெறிக் கொள்கையைப் பின்பற்ற, தனது மனைவியான யூத பெண்மணிக்கு ஆபத்து நேருமோ என்று எண்ணி சுவீடனில் நோபல் பரிசு பெற்ற கையோடு அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார் .
பின் தனது தாய் நாடான இத்தாலிக்கு அவர் செல்லவே இல்லை. மேலும் தனது இறுதிக் காலத்தை தனிமையிலேயே கழித்தார்.