விருப்பம் இன்றி உடலுறவு கொள்வது அவுஸ்திரேலியாவில் பாரதூரமான குற்றம். அதற்கு அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும். எனினும் சுமத்தப்படும் குற்றச்சாட்டின் உண்மை, பொய் ஆதாரங்கள் எல்லாம் அலச வேண்டி இருக்கிறது.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் குற்றச்சாட்டும் கிட்டத்தட்ட இந்த வகையைச் சேர்ந்தது. அதாவது, பெண் ஒருவருடன் அவரது விருப்பத்திற்கு முரணாக ஆணுறையை அகற்றிவிட்டு உடலுறவில் ஈடுபட்டதே அவர் மீதான குற்றச்சாட்டு.
கடந்த செப்டெம்பர் 18 தொடக்கம் 21 ஆம் திகதி வரை சிட்னி, டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் குணதிலக்க மீதான குற்றச்சாட்டின் பின்னணியில் இருந்த முடிச்சுகள் அனைத்தும் அவிழ்க்கப்பட்டன.
இரு தரப்பு வாதங்கள், குற்றச்சாட்டுகள், குறுக்கு விசாரணைகள் என்று நீடித்த இந்த வழக்கின் தீர்ப்பு வரும் செப்டெம்பர் 28 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. குணதிலக்கவின் எதிர்காலம் அன்றைய தினமே தீர்மானிக்கப்படவிருக்கிறது.
ஒரு கிரிக்கெட் வீரராக தனுஷ்க குணதிலக்க இலங்கை அணியில் நிரந்தர இடம் பிடிக்காதபோதும் 2015 தொடக்கம் கடந்த ஆண்டு ஒக்டோபர் நவம்பர் மாதங்களில் அவுஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கிண்ணம் வரை இலங்கை அணியில் தொடர்ச்சியாக இடம்பிடித்த வீரராக குறிப்பிடலாம்.
இன்று தனது கிரிக்கெட் திறமையை விடவும் நடத்தையால் அவர் உலகப் புகழ்பெற்றுவிட்டார்.
தனுஷ்க குணதிலக்கவின் ஒழுக்கம், நடத்தை பற்றிய சராசரி விமர்சனங்களுக்கு அப்பால் சட்டரீதியில் அவரது செயல் சரியா, தப்பா என்பதே வழங்கப்போகும் தீர்ப்பில் முக்கியமானது.
குணதிலக்க மீது குற்றம்சாட்டிய பெண்ணின் அடையாளத்தை வெளியிட சட்டரீதியில் தடை இருப்பதால் அந்தப் பெண்ணின் வாக்குமூலங்களை தவிர்த்து அவர் பற்றி எந்த கணிப்பையும் வெளியுலகுக்கு கூறிவிட முடியாது.
நீதிமன்றத்தில் வாக்குமூலம் அழித்த அந்தப் பெண் தனுஷ்க தன்னுடன் உடலுறவில் ஈடுபட்டபோது தான் உயிராபத்தை உணர்ந்ததாகவும், அவர் தன்னை மூச்சுத் திணற வைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
என்றாலும் அவர் தனது விருப்பத்திற்கு முரணாக ஆணுறையை அணியாது உடலுறவில் ஈடுபட்டதே பிரதான குற்றச்சாட்டு. என்றாலும் அந்தப் பெண்ணின் வாக்குமூலம் தெளிவானதாக இல்லை. அதாவது தனுஷ்க பாலுறவில் ஈடுபடும்போது அவர் ஆணுறையை அகற்றியதாக அவர் உறுதியாகக் குறிப்பிடவில்லை. ஆணுறை கீழே கிடந்ததை பார்த்ததாக கூறுகிறார்.
மற்றபடி, டேடிங் செயலி ஒன்றின் மூலம் தொடர்புகொண்ட இருவரும் செப்டெம்பர் 2 ஆம் திகதி சிட்னியில் சந்தித்து ஒன்றாக மதுபானம் அருந்திவிட்டு அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். அது பற்றி வெளியான சிசிடிவி வீடியோக்களில் இருவரும் ஒட்டுறவாடுவது நன்றாகத் தெரிகிறது.
சிட்னி புறநகர் பகுதியில் இருக்கும் அந்தப் பெண்ணின் வீட்டிலேயே பாலியல் தாக்குதல் இடம்பெற்றதாக குற்றம்சாட்டப்படுகிறது.
“அவர் எனக்கு மேல் இருந்தார். அவர் என்னை முத்தமிட்டதாக ஞாபகமிருக்கிறது. ‘மெதுவாக’ என்று நான் அவரை கேட்டுக்கொண்டது ஞாபகம் இருக்கிறது” என்று நீதிமன்றத்தில் கூற ஆரம்பித்த அந்தப் பெண், “டானி என்னை மூச்சுத்திணற வைத்தார். ஒரு கை எனது கழுத்திலும் மற்றக் கை படுக்கையிலும் இருந்தது. 20–30 விநாடிகள் அவர் என்னை மூச்சுத் திணற வைத்தார்” என்கிறார்.
என்றாலும் குணதிலக்க சார்பில் தோன்றிய வழக்கறிஞர் முருகன் தங்கராஜின் குறுக்கு விசாரணை கடுமையாக இருந்தது, அவர் கேட்ட கேள்விகளால் அந்தப் பெண் திக்குமுக்காடிப்போனார். அந்த ஆபாசமான கேள்விகளால் அழுதுவிட்டார்.
குணதிலக்க தன்னை ஆணுறை பயன்படுத்த வேண்டாம் என்று வற்புறுத்த முயன்றதாக அந்த பெண் நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
என்றாலும் அது அவ்வாறு இல்லை என்று தங்கராஜ் வாதிட்டார். “அன்றிரவு ஆணுறை அணிய விரும்பவில்லை என்று அவர் (குணதிலக்க) ஒருபோதும் கூறவில்லை” என்று தங்கராஜ் தெரிவித்தார். “பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுவதற்கு அவர் உங்களை ஒருபோதும் வலியுறுத்தவில்லை” என்றார்.
அதற்கு அந்தப் பெண், “அது உண்மையில்லை” என்று மறுத்தார்.
கிரிக்கெட் வீரரை ஏன் தனது படுக்கை அறைக்குள் அனுமதித்தீர்கள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றினீர்கள் என்று குணத்திலக்க சார்பில் வாதாடும் வழக்கறிஞர் மேலும் கேள்வி எழுப்பினார். “அவரை படுக்கையறைக்கு அழைத்துச் செல்ல நீங்கள் எடுத்த முடிவு, அந்த இரவில் இயல்பான ஒன்று இல்லையா?” என்று கேட்டார்.
இந்தக் கூற்றை அந்தப் பெண் மறுத்தார்.
தொடர்ந்து குணதிலக்க கைதானபோது நடத்தப்பட்ட பொலிஸ் விசாரணையின் வீடியோக்கள் நீதிமன்றத்தில் காண்பிக்கப்பட்டது. அதிலே அவர் பயத்தில் அழுவது நன்றாகத் தெரிந்தது. அதாவது இந்த சம்பவத்தில் சித்தரிக்கப்பட்டc அளவுக்கு அவர் மோசமாக நடந்து கொண்டார் என்று அனுமானிக்க முடியாத அளவுக்கு அந்த வீடியோ இருந்தது.
அதில் அந்தப் பெண்ணின் நடத்தை பற்றி குணதிலக்க கூறியது குறிப்பிடத்தக்கது. பலியல் உறவில் ஈடுபட்ட பின் தமக்கு கடந்த காலத்தை காணும் சக்தி இருப்பதாக அந்தப் பெண் கூறியதாக குறிப்பட்டார்.
கண்ணை மூடிய அந்தப் பெண் முன் ஜென்மத்தில் தாம் இருவரும் தாய்லாந்தில் அயலவர்களாக இருந்ததாக தெரிவித்ததாக குணதிலக்க அந்த விசாரணையில் குறிப்பிட்டிருக்கிறார். “அதற்கு பின், நான் சற்று பயந்தேன். அந்த உணர்வு எப்படி வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவர் சற்று விந்தையாக காணப்பட்டார்” என்று குணதிலக்க பொலிஸாரிடம் கூறினார்.
இந்த வழக்கு விசாரணையில் நிறைவு நாளாக இருந்த கடந்த செப்டெம்பர் 21 ஆம் திகதி இரு தரப்பினரும் தமது இறுதி வாதத்தை முன்வைத்தனர்.
இறுதியாக நீதிபதியிடம் பேசிய வழக்குத்தொடுநர் கப்ரில்லே ஸ்டீட்மன், இந்த பாலியல் நிகழ்வு, “அவர் (பெண்) எதிர்பார்த்தது அல்லது விரும்பியதற்கு முற்றிலும் மாற்றமாக இருந்தது” என்றார்.
இதன்போது கிரிக்கெட் வீரரை குற்றவாளியாக அறிவிக்கும்படி ஸ்டீட்மன் நீதிபதியிடம் கேட்டுக்கொண்டார். வாதியின் சாட்சியத்தை “சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளும்படி” நீதிமன்றத்திடம் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆனால் குணதிலக்க சார்பில் தனது இறுதி வாதத்தை முன்வைத்த வழக்கறிஞர் தங்கராஜ், அந்தப் பெண் பொய்யான மற்றும் சுயநலமான ஆதாரங்களை முன்வைக்கிறார் என்றார்.
குணதிலக்க தன்னை மூச்சுத்திணற வைத்ததாக அந்தப் பெண் கூறியிருந்த நிலையில், தனது கட்சிக்காரர் சர்வதேச புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக இருக்கும் நிலையில் வெளிப்படையான காயங்களை ஏற்படுத்தும் செயலில் அவர் ஏன் ஈடுபட வேண்டும் என்று தங்கராஜ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அந்தப் பெண் அவளது வீட்டில் நடந்த நிகழ்வு தொடர்பில் ஆக்ரோஷமான கதை ஒன்றை உருவாக்கி இருப்பதாக தங்கராஜ் வாதிட்டார்.
அந்தப் பெண்ணின் கதை குற்றச்சாட்டு சுமத்துவதற்கு ஏற்ப மாற்றப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் கூறிய தங்கராஜ், “ஆணுறையை அகற்றியதாக அவர் பொலிஸாரிடம் கூறியபோதும் அவர் நண்பர்களிடம், “அதனை அகற்றினாரா என்பது எனக்குத் தெரியவில்லை” மற்றும் “எனக்கு உறுதியாக தெரியவில்லை, நான் நினைக்கிறேன்” என்று கூறியிருந்தார்” என்பதை சுட்டிக்காட்டினார்.
இதில் குணதிலக்கவின் பையில் இருந்து இரு ஆணுறைகளை பொலிஸார் கைப்பற்றியதையும் வழக்கறிஞர் தங்கராஜ் தனது இறுதி வாதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
“ஆணுறையை பயன்படுத்த விரும்பாத ஒருவர் ஏன் அதனை வைத்திருக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பிய தங்கராஜ், “நிச்சயமாக அதனை பயன்படுத்த அவர் திட்டமிட்டிருக்கிறார்” என வாதிட்டார்.
இந்த வாதங்களை வைத்து எந்த ஊகத்தையும் வெளியிட முடியாது. ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு, சில நாட்கள் சிறை இருந்து, பின்னர் பயணக் கட்டுப்பாடு, சமூக ஊடகங்களை பயன்படுத்துவதற்காக தடைகள் என பல நெருக்கடிகளை குணதிலக்க சந்தித்திருந்தார்.
அதேபோன்று உள்நாட்டிலும் அவருக்கு பல நெருக்குதல் ஏற்பட்டது எதிர்பார்த்ததுதான். ஆரம்பத்தில் அவர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோதும் அது கடைசியில் ஒன்றாக குறைக்கப்பட்டது.
இதற்கிடையே சர்வதேச அளவில் அன்றாடச் செய்தியாக மாறிய குணதிலக்க புதிதாக ஒரு பெண்ணையும் கரம்பிடித்தபடி, நீதிமன்றத்திற்கு வரும் காட்சிகள் பிரத்தியேகமானவை.
எப்படியிருந்தபோதும் இரு தரப்பு வாதங்களை கேட்டிருக்கும் நீதிபதியின் தீர்ப்பு எப்படி இருக்கப்போகிறது என்றுதான் தெரியவில்லை.
எஸ்.பிர்தெளஸ்