ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்குபற்றியிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 78 ஆவது பொதுச்சபை அமர்வில் உரையாற்றியிருந்ததுடன், ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரஸ், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் மலேசிய மன்னர், பொதுநலவாய செயலாளர் நாயகம், சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.
இன்றைய இக்கட்டான சூழலில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்குத் தனது தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதன் போது உலகத் தலைவர்களுக்கு விளக்கமளித்திருந்தார். எதிர்காலத்தில் அனைத்து சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
“தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததிக்கு சமாதானம், சுபீட்சம் மற்றும் நல்லிணக்கத்தின் எதிர்காலத்தை உறுதிசெய்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இலங்கைச் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளுக்கும் பயனளிக்கும் நிலைபேறான மற்றும் நிலையான மீட்சி மற்றும் வளர்ச்சியை நோக்கி நாட்டை வழிநடத்துவதே எனது நோக்கமாகும். இந்த இலக்கை அடைவதில், எங்களுடைய சொந்த மக்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் ஆதரவு, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பு கிடைக்குமென்பது எனது நம்பிக்கையாகும்” என்று ஐ.நா பொதுச்சபையின் 78 ஆவது அமர்வில் உரையாற்றியிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் இந்த வருடத்துக்கான தொனிப்பொருள் ‘நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒற்றுமையை மீண்டும் உருவாக்குதல்’ என்பதாகும்.
“எல்லை தாண்டிய நிதி அழுத்தங்கள், காலநிலை மாற்றம் மற்றும் தொற்றுநோய் போன்ற நெருக்கடிகள் மூலம், எமது நாட்டைப் போன்ற சிறிய கடன்நெருக்கடிக்கு ஆளாகியுள்ள நாடுகள் முன்னேறுவதில் தடைகள் காணப்படுகின்றன. உலக வல்லரசுகளுக்கிடையிலான மோதல்கள் மற்றும் பதற்றங்கள், பொருளாதார மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தல், விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து பணவீக்கம் மற்றும் உணவு, வலுசக்தி பாதுகாப்பின்மையை ஏற்படுத்தல் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கொள்கைகளை தயாரிக்கக் கூடிய சூழ்நிலைகளை மேலும் சிக்கலாக்குகின்றன” என்பதையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியிருந்தார்.
நிலைபேறான இலக்குகளை அடைவதில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்துச் சுட்டிக்காட்டியிருந்த ஜனாதிபதி, காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.
‘துரதிர்ஷ்டவசமாக, காலநிலை மாற்றம், கடன் நிவாரணம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகிய இந்த இணைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்க பாதுகாப்புச் சபையும் தவறிவிட்டது. இது மனிதகுலத்தின் எதிர்காலத்தைப் பாதிக்கிறது. பூமியைப் பாதுகாப்பதே எமது முன்னுரிமையாக இருக்க வேண்டும், பிளவுகளுடன் போருக்கு நாம் செல்ல முடியாது. இந்த நெருக்கடிகளை நிறைவு செய்துகொள்ளும் வரை ஒவ்வொருவருக்கும் இடையில் நிலவுகின்ற போட்டிகளை ஒதுக்கி வைக்கும் இயலுமையிலேயே உலகின் அனைத்து உயிரினங்களின் எதிர்காலமும் தங்கியுள்ளது.
கடந்த நூற்றாண்டின் உலகத்தைப் பிரதிபலிக்கும் பலதரப்பு பொறிமுறைகள், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தின் சவால்களைச் சந்திக்க சீர்திருத்தப்பட வேண்டும், இது நீண்டகால பலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணத் தவறிய பொறிமுறையாகும். தற்போதைய உலகளாவிய பன்முகத்தன்மை மற்றும் முடிவெடுக்கும் பிரதிநிதிகளாக பாதுகாப்புச் சபையின் கட்டமைப்பு விரிவாக்கப்பட வேண்டும். இதற்கு இணையாக, ஐ.நா பொதுச்சபையின் வகிபாகம் பலமாக இருக்க வேண்டும்.
பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்கள் என்ற வகையில் நம்பகமான உரையாடலில் ஈடுபட வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இது அடுத்த அமர்வுகளுக்கு முன்னதாக இந்த அச்சுறுத்தல்களை எதிர்த்து ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறைக்கு வழிவகுக்கும்’ என்றும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இதேவேளை, ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸை சந்தித்த ஜனாதிபதி இலங்கையின் நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடியிருந்ததுடன், இலங்கையின் அனைத்துவிதமான முன்னேற்ற செயற்பாடுகளுக்கும் ஐ.நா ஒத்துழைப்பு வழங்கும் என்ற உறுதிமொழி இங்கு வழங்கப்பட்டுள்ளது.
இது இவ்விதமிருக்க, இலங்கை கடுமையான நடுநிலை வெளிவிவகாரக் கொள்கையைப் பேணுகிறது என்பதையும், ஆர்வமுள்ள தரப்பினரால் இந்தக் கொள்கை கேள்விக்கு கேள்விக்குள்ளாக்கப்படும் போதெல்லாம், இலங்கை மண் வேறொரு நாட்டின் மீது விரோதச் செயல்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என்பதை இலங்கை உறுதியளித்துள்ளது.
ஒவ்வொரு சர்வதேச அரங்குகளிலும் உரிய தெளிவுபடுத்தல்கள் மற்றும் விளக்கங்கள் வழங்கப்படுகின்றபோதிலும், சில பிராந்திய அல்லது உலகளாவிய சக்திகள் மற்றும் சுயநலன்களைக் கொண்ட குழுக்களும் இலங்கையின் நடுநிலைமையை அடிக்கடி கேள்விக்குள்ளாக்குகின்றன, மேலும் வெளியுறவுக் கொள்கை ஒரு வழி அல்லது மற்றொன்றை நோக்கிச் செல்கிறது என்ற அர்த்தப்படுத்தல்களையும் வழங்க முயற்சிக்கின்றனர்.
இருந்தபோதும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் இலங்கையின் நடுநிலையான வெளிவிவகாரக் கொள்கையை ஜனாதிபதி சர்வதேச நாடுகளுக்கு விளக்கிக் கூறியுள்ளார். சர்வதேச சமாதானத்திற்கான கார்னகி எண்டோவ்மென்ட் ஏற்பாடு செய்திருந்த உலகத் தலைவர்களின் கலந்துரையாடலை நடுநிலைக் கொள்கையை தெளிவுபடுத்த பயன்படுத்தினார்.
மேற்கு பசிபிக் பகுதியில் உருவான சீன-அமெரிக்க போட்டி தற்போது இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு பசிபிக் ஆகிய இரு பகுதிகளுக்கும் பரவியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ‘நாம் ஏன் அதற்குள் இழுக்கப்படுகிறோம்? எங்களுக்குப் புரிந்துகொள்வது கடினம்’ என்பதைக் கூறியுள்ளார்.
தனது பல தசாப்த கால அரசியல் வாழ்க்கையில் பல புவிசார் அரசியல் தொகுதிகள் மாறி வருவதைக் கண்டதாகக் கூறிய அவர், ‘அடுத்த சுற்றுப் போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அதுவும் ஆசியாவில் நடைபெறுகிறது. ஆசியாவில் தங்கள் செல்வாக்கு மண்டலத்தை அவர்கள் எப்படிப் பிரிக்கப் போகிறார்கள் என்பது சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுக்கு எதிரான கேள்வி எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
இலங்கை பொருளாதார ரீதியிலிருந்து படிப்படியாக மீண்டு எழுந்து வரும் நிலையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் நாட்டுக்கு முக்கியமாக அமைந்துள்ளது. உலகத் தலைவர்கள் பலருடன் நடத்தப்படும் சந்திப்புக்கள் எதிர்காலத்தில் இலங்கையின் முன்னேற்றத்துக்கு நிச்சயமாக உதவிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அது மாத்திரமன்றி நாட்டின் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை சர்வதேச நாடுகளுக்கு எடுத்துக் கூறுவதற்கான சந்தர்ப்பமாகவும் இது அமைந்துள்ளது.