அருளினிது அன்பினிது
அல்லாஹ்வின் திருப்பெயரால்
பொருளினிது ஸலவாத்தைப்
பொழிகின்றேன் நபிபேரில்
இருளகற்றும் மறையதனை
இதயத்தில் ஏற்றிங்கு
அருளாக வந்தவரின்
அழகியலைப் பாடுகின்றேன்.
மனிதரை மதிக்கின்ற
மகத்துவத்தைப் பேணியவர்
அநியாயம் செய்பவர்களின்
அகங்களை மாற்றியவர்
தனிமனித உரிமைகளை
தன்னாட்சியில் வழங்கியவர்
இனிதாக பேசுவதை
இயல்பாக கொண்டவர்.
விதவைகளுக்கு வாழ்வளிக்கும்
விடியலைத் திறந்தவர்
உதவுகிற நெஞ்சமதை
உறுதியாகக் கொண்டவர்
நீதமுடன் நடப்பதிலே
நீதியாக நின்றவர்
ஏதமிலா வாழ்வுக்கு
ஏற்றவழி தந்தவர்.
பெற்றவரை மதித்தவர்
பிள்ளைகளை அரவணைத்தவர்
உற்றவரைப் பிரியாமல்
உள்ளவரை வாழ்ந்தவர்
கற்றலிலே சமவுரிமை
கருத்துடனே வகுத்தவர்
மற்றவரை நேசிக்கின்ற
மாண்புவழி தந்தவர்.
உஹதுப்போரில் பல்லுடைந்தும்
உடற்காயம் கொண்டிருந்தும்
அஹமது எங்கள் நபி
அமைதி காத்திட்டார்
ஸஹாபாக்கள் கேட்டிருந்தும்
சபித்தலை மறுத்திட்டார்
சகவாழ்வின் சின்னமாய்
சாந்திநபி திகழ்ந்திட்டார்.