ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது கூட்டத் தொடருடன் இணைந்தாக கடல்சார் நாடுகளுக்கான 03ஆவது இந்து – பசுபிக் தீவு நாடுகள் உரையாடல் நியூயோர்க்கில் நடைபெற்றது. சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட்டில் கொள்கை ஆராய்ச்சிக்கான சிரேஷ்ட தலைவர் டான் பியரினால் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது. டான் பியர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இடையேயான உரையாடலில் பகிரப்பட்ட விடயங்கள்.
கே: தற்போது நீங்கள் பொருளாதாரத்துக்காக கடின உழைப்பை மேற்கொள்கிறீர்கள். அதனால் உங்களது இலங்கை நாடும், நீங்களும் உலகைப் பற்றி என்ன சிந்திக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
எமது அமைவிடம் கொண்டுள்ள முக்கியத்துவத்தின் அடிப்படையில் நாம் சுமார் 2500 ஆண்டுகளாக உலகத்துடன் இணைந்துள்ளோம். சில காலத்திற்கு முன்பு ஒருவர் என்னிடம், நீங்கள் இந்தியாவுக்கு ஆதரவானவர்களா அல்லது சீனாவுக்கு ஆதரவானவர்களா என்று கேட்டார், அந்த இரு நாடுகளுக்கும் நான் ஆதரவானவன் அல்லன் எனக் கூறினேன். அப்படியென்றால் நீங்கள் நடுநிலையாக இருக்கிறீர்களா என்று கேட்டார். இல்லை நான் நடுநிலையானவர் அல்ல. இலங்கையின் ஆதரவாளன் என்று கூறினேன். அதுவே இன்று பலருக்கும் புரிதல் இல்லாத விடயமாக காணப்படுகின்றது. பெரும் வல்லரசுகள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகள், இந்து சமுத்திரத்தில் அல்லது தென் பசுபிக் தீவுகளாக இருந்தாலும் சரி, பொருளாதாரம், சமூகம் அல்லது சுற்றுச்சூழலில் எமக்கான முக்கியத்துவம் தனித்துவமானது. இந்த இலக்குகளை அடைய எங்களுக்கு உதவும் எந்தவொரு தரப்புடனும், அரசாங்கங்கள் அல்லது அரச சார்பற்ற தரப்புக்களுடனும் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம். ஒருபுறம் மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறோம். மறுபுறம், நாங்கள் சீனாவுடன் இணைந்து செயல்படுகிறோம். எனவே அடிப்படையில் இலங்கையும் ஏனைய தென் பசுபிக் தீவுகளும் ஒரே படகிலேயே உள்ளன. இந்தோ, சீன, -அமெரிக்கப் போட்டி மேற்கு பசுபிக் பகுதியில், ஆசியா பசுபிக்கின் கட்டமைக்கப்பட்ட பகுதியில் இன்றும் நீடிக்கிறது என்று நாங்கள் உணர்கிறோம். இப்போது அது இந்தியப் பெருங்கடல் மற்றும் தென் பசுபிக் பெருங்கடலில் APEC என்ற பெயரில் பரவி வியாபிக்கிறது. நாம் எதனால் அதன் பக்கமாக ஈர்க்கப்படுகிறோம் என்பது கேள்விக்குறியாகும். மேற்கு பசுபிக் பிராந்தியமானது, தென் சீனக் கடலில் இருந்து கிழக்கு சீனா வரை சீனாவின் வழியாக செல்லும் விநியோகச் சங்கிலியாக விளங்குவதால், தெற்கு பசுபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகியவை மூலோபாய ரீதியாக முக்கியத்துவம் பெறுகின்றன. தெற்கு பசுபிக் பிராந்தியம் அமெரிக்க கடற்படை கட்டளையின் இதயமாக விளங்குகிறது. நாம் மூலோபாயமாக இருக்கிறோம், ஆனால் நாங்கள் மூலோபாயம் மிக்க நாடாக இருப்பதால், நாங்கள் சீனாவுடனோ அல்லது வேறு யாருடனும் இராணுவ கூட்டணியில் ஈடுபட்டுள்ளோம் என்று அர்த்தமல்ல. எனவே இந்தப் பின்னணியில்தான் நாம் புவிசார் அரசியலைப் பார்க்க வேண்டும்.
கே:இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் கூறுவதாயின், ஒரு காலத்தில் சீனாவுடனும் பின்னர் அமெரிக்காவுடனும் பணியாற்றுவதில் விருப்பம் காண்பிக்கிறது?
இலங்கை ஒருவரிடமிருந்து எதையாவது பெறுவதற்கு அவ்வப்போது யாரையும் பின்தொடர்வது இல்லை. வெளியில் இருந்து வரும் எந்த சக்தியையும் ஒரு தீவாக நாம் சமாளிக்க வேண்டும். கடந்த காலத்தில் நாம் ஒருவருக்கொருவர் எதிராக வேலை செய்திருக்கலாம். அது எமது இருப்புக்கான போராட்டமாகும். நாங்கள் இப்போது அதை செய்ய மாட்டோம். இந்து சமுத்திரம் மற்றும் தென் பசுபிக் பகுதியின் தன்மையைப் புரிந்துகொள்ள இயலாமையே இந்த நிலைக்கு காரணம். தமது புவிசார் அரசியல் என்ன? நாம் என்ன செய்கிறோம் என்பதை எந்த நாடும் புரிந்துகொண்டுள்ளதாகத் தெரியவில்லை.
கே:இந்தோ – பசுபிக் என்னும் சொல் கடந்த 5 – 10 வருடங்களில் பொதுச் சொல்லாக மாறியுள்ளது. இந்தோ – பசுபிக் பிராந்தியத்தை அவ்வாறு பெயரிட்டிருக்காவிட்டால் அது மூலோபாயமானதாக அமைந்திருக்குமா?
இந்தோ -பசுபிக் இன்னும் ஒரு செயற்கை கட்டமைப்பாகவே அது உள்ளது. ஏனெனில் இங்கு பொருந்தும் IORA இனை பார்த்தால் இந்தியப் பெருங்கடல் எல்லையில் இருந்து வருகிறது. இந்து-பசுபிக் பற்றி யாருக்கும் தெரியாது. உதாரணமாக, சிலரின் கருத்துப்படி, இந்தோ -பசுபிக் பகுதி இந்தியாவின் மேற்கு எல்லையில் முடிவடைகிறது. ஏனையவர்கள் அதை ஆபிரிக்காவுக்கு எடுத்துச் செல்கிறார்கள். சிலர் மேற்கு பசுபிக் பகுதிக்கு எடுத்துச் செல்கிறார்கள். மற்றவர்கள் தென் பசுபிக் பகுதிக்கு எடுத்துச் செல்கிறார்கள். நான் அங்கு வசிக்கிறேன். இந்தோ -பசுபிக் என்றால் என்ன? நான் 1977இல் பிரதி வெளிவிவகார அமைச்சரானேன். இவை அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் எதிராக சீனாவையும் அமெரிக்காவையும் பார்த்தேன். இப்போது அமெரிக்காவும் இந்தியாவும் ரஷ்யாவையும் சீனாவையும் எதிர்ப்பதை நான் காண்கிறேன். அவ்வளவுதான் நடந்திருக்கிறது. இப்போது நம்மையும் இதற்குள் இழுக்க காரணம் தேடுகிறார்கள். நான் இவற்றைப் பற்றிப் பேசியிருக்கிறேன்.
கே: பசுபிக் என்ற சொல் வொஷிங்டன் அல்லது பீஜிங் அல்லது வேறு இடங்களில் உள்ளவர்களிடமிருந்து சில மூலோபாய இடைவெளிகளை உருவாக்கியுள்ளது. நீங்கள் IORA (Indian Ocean Rim Association) ஐ குறிப்பிட்டுள்ளீர்கள், அடுத்த ஆண்டு இலங்கை அதன் தலைமைப் பதவியை ஏற்கப்போகிறது. அதற்கான உங்களின் மூலோபாய நோக்கு யாது?
ஏற்படும் வளர்ச்சிகளைப் பார்த்தால், ஆசியாவில் அடுத்த சுற்றுப் போட்டி நடக்கும். இது சீனா – அமெரிக்காவின் பிரச்சினையாகும். அவர்களின் அதிகார வலயம் ஆசியாவிற்குள் எவ்வாறு பிரியப்போகிறது. ஆசியாவில் தங்கள் செல்வாக்கை எப்படிப் பிரிக்கப் போகிறார்கள்? இது நிச்சயமாக, முதலில், தாய்வான் தென் சீனக் கடலைக் கொண்டுள்ளது. பின்னர் கிழக்கு சீனக் கடலாகும். மேற்படி பிராந்தியங்களுக்குள்ளேயே அதை உருவாக்க முயற்சிக்கிறார்கள். முன்னதாகவே, கிழக்காசியாவில் அமெரிக்கா தனது அடித்தளம் தொடர்பில் உறுதியாகவிருந்தது. 1997ஆம் ஆண்டில் ஜப்பான் ஆசிய IMF தொடர்பிலான யோசனையை முன்மொழிந்த வேளையில் அமெரிக்கா சீனாவுக்குத் தடை ஏற்படுத்தியது. இராணுவ பலத்தால் ஜப்பானால் ஒருபோதும் அதற்குள் நுழைய முடியாத நிலைமை காணப்படுகின்றது. அதன் அடிப்படையாக உலக அரசியலும் அதிகார அரசியலுமே காணப்படுகின்றன. எம்மை எதற்காக இதற்குள் இழுக்க முற்படுகிறார்கள் என்பதே எம்முன்பாக இருக்கின்ற கேள்வியாகும்.
கே: ஐக்கிய அமெரிக்கா மற்றும் சீனாவின் கொள்கை ரீதியான விமர்சனங்களை நான் அறிவேன். இலங்கையின் நிலையான நிகழ்ச்சிநிரல் யாது? கொழும்பில் இருந்துகொண்டு நீங்கள் பிராந்தியத்திற்குள் மற்றும் இலங்கைக்குள் எதனை சாதிக்க முற்படுகிறீர்கள்?
நாம் இலங்கையை அபிவிருத்தி செய்ய முயற்சிக்கிறோம். இந்து சமுத்திரத்தில் இலங்கை மூலோபாய அமைவிடத்தை கொண்டிருக்கிறது. எமக்கு கிழக்கில் சிங்கப்பூர் கடல்வழிப்பாதை காணப்படுகிறது. மேற்கில் சுயெஸ் வரையில் கடல்வழிப்பாதை காணப்படுகிறது. மொசாம்பிக் அருகிலிருக்கும் மொரீசியஸ் தீவுகளை தவிர அனைத்து தீவுகளும் அந்த தடத்திற்குள் உள்ளடங்கும். எமது தேவை அபிவிருத்தியாகும். அதற்கு பல மாற்று வழிகள் உள்ளன. அந்த வகையில் சீனா தனது கடல்வழிப் பட்டுப்பாதையை முன்நிறுத்தி அனைத்து பகுதிகளுக்கும் உதவிகளை வழங்கியுள்ளது. இந்தியாவும் வேலைத்திட்டத்துடன் முன்னேறிச் செல்கிறது. இதற்கு மத்தியில் வெளிட்டு உதவிகளை வழங்குவதற்கான இயலுமை ஜப்பானிடத்தில் தற்போதும் இருப்பதால் இவை அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டு அபிவிருத்தியை நோக்கி பயணிப்பதே எமது இலக்காகும்.
கே: பொருளாதார முன்னேற்றத்திற்கு IMF உடனான அடுத்த மூன்று அல்லது ஐந்து வருடங்களுக்குள் உங்களுடைய நோக்கு என்னவாக இருக்கிறது.?
சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய தரப்புக்களுடன் இணைந்து, நீண்ட கால பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொண்டு வருகிறோம். அது மக்களை ஈர்க்க வேண்டும். சர்வதேச நாணய நிதியம் எங்களுக்கு ஆதரவளிக்கிறது. உண்மையில் அவர்கள் 3.5% வளர்ச்சி விகிதத்தை இலக்காகக் கொடுத்துள்ளனர், ஆனால் நாங்கள் முன்னேற விரும்புகிறோம், எனவே அது 5.5% முதல் 6% வரையான வளர்ச்சியை உறுதிசெய்ய எதிர்பார்க்கிறோம். அது எம்முடைய சொந்த முயற்சி. ஆனால் எங்களுக்கு தொடர்பில்லாத வேறு பிரச்சினைகள் உள்ளன. உலகளாவிய கடன் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் முழுப் பிரச்சினையும் அடுத்த சில ஆண்டுகளில் தீர்க்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது இலங்கையைக் கூட மோசமாக பாதிக்கலாம். இல்லையெனில், இந்தியாவுடன் ஒரு விரிவான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டிணைவை ஏற்படுத்திக்கொள்வது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம். நாங்கள் இப்போது எங்கள் சந்தைகளை விரிவுபடுத்த RCEP இல் இணைய விண்ணப்பித்துள்ளோம். எமக்கு ஒருபோதும் இராணுவ நோக்கங்கள் இல்லை.
கே: பொருளாதாரத்தில் நீங்கள் முன்னுரிமை அளிக்கும் மூன்று விடயங்கள் யாவை?
பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் நமது வங்குரோத்து நிலையிலிருந்து விடுபடுதல் என்பவற்றினூடாக சுற்றுலா மற்றும் உணவுப் பாதுகாப்பு, விவசாயத்தின் நவீனமயமாக்கல் உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன.
கே: இலங்கை ஒரு தீவு என்ற வகையிலும் ஓரளவு பெரிய பரப்பளவை கொண்டுள்ளமையும் அதன் சிறப்பம்சம் என்று கூறினீர்கள். இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றும் பல தீவுகளின் சனத்தொகை மிகக்குறைந்த அளவில் காணப்படுகின்றது. தீவுகளின் விசேட தேவைகளை அறிவிப்பதற்கு இலங்கை குழுக்களின் பேச்சாளார் என்ற வகிபாகத்தை கொண்டுள்ளதா?
தீவுகள் மட்டுமன்றி, இந்து சமுத்திரத்தின் தேவைகள் தொடர்பிலும் பேசுவோம். இலங்கை தற்போது IORA வில் அங்கத்துவம் வகிக்கிறது. அதனை மேலும் பலப்படுத்த வேண்டும் என நாம் உணர்கிறோம். அதனால் நாம் அது தொடர்பில் செயலாற்றுவோம். இரண்டாவதாக முழு இந்து சமுத்திரமும் அதிகார திட்டமொன்றை வகுத்துக்கொண்டிருக்கிறது.
இந்து சமுத்திரத்திற்குள் எமக்கு இராணுவ செயற்பாடுகள் அவசியமில்லை. மேலும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள பெரும்பாலான நாடுகள் நேட்டோவில் சேர விரும்புவதாக நான் நினைக்கவில்லை. பிரான்ஸைப் பொறுத்தவரை, பிரான்ஸ் இந்தியப் பெருங்கடல் மற்றும் பசுபிக் பகுதிகளைக் கொண்டுள்ளது. எனவே, அவற்றில் ஏதேனும் ஒன்றை ஐரோப்பிய வல்லரசுகள் இந்தியப் பெருங்கடலுக்குள் கொண்டு வருமா என்பது நாம் மிகவும் கவலையடையக்கூடிய ஒரு கேள்வி. இரண்டாவதாக, உக்ரைனில் நடந்த போர் நிலைமையை மாற்றியதால், பல நாடுகள் உக்ரைனில் நடந்த போரைக் கண்டிக்கவில்லை. இந்தப் போரினால் மேற்கு ஆசியப் பகுதி பலனடைகிறது.
இன்று பல நாடுகள் ரஷ்ய மற்றும் ஈரானிய எண்ணெயையும் பயன்படுத்துகின்றன. எனவே, அடிப்படையில் ரஷ்யப் பொருளாதாரமே மேற்கு ஆசியா வழியாகச் சென்று தொடர்ந்து இயங்கி வருகிறது. மூன்றாவதாக, BRICS வேலைத்திட்டத்துடன், இந்து சமுத்திரத்திற்குள் புதிய அதிகார ஒன்றுகூடல் நிகழ்கிறது. BRICS இன் வசமாக இந்தியாவும் தென்னாபிரிக்காவும் இருக்கின்றன. தற்போது ஈரான் அவர்களின் கடற்படை பலமான ஐக்கிய அரபு ராச்சியம், சவுதி அரேபியா மற்றும் எகிப்து என்பன ஒன்றுபட்டுள்ளன. இத்தகைய இக்கட்டான நேரத்தில்தான் இலங்கை IORA தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது.
கே: சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் மற்றும் உளவுக் கப்பல்கள் இலங்கைக்கு வந்துள்ளன, இலங்கையில் சீனா கணிசமான புவிசார்- பொருளாதார இருப்பைக் கொண்டுள்ள நிலையில் இது எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கும்?
இலங்கையில் உளவு கப்பல்கள் இல்லை. சீன அறிவியல் கழகம், இலங்கையின் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் சில பல்கலைகழகங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாலும், கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு ஆராய்ச்சிக் கப்பல்கள் வருகின்றன. அதனால் அங்கு பிரச்சினை இல்லை. ஆனால் கப்பல்களைப் பற்றி பேசினால், நாட்டை உளவு பார்க்க முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இதன்படி, இதற்கான நிலையான செயற்பாட்டு நடைமுறையை தயாரிக்க இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விடயம் தொடர்பில் அண்மையில் இந்தியாவுடன் கலந்துரையாடினோம். இந்தியா முன்வைத்த அனைத்து திருத்தங்களையும் ஏற்க முடிவு செய்துள்ளோம். எனவே இப்போது வரும் எந்த கப்பலும் நமது செயற்பாட்டு முறைப்படிதான் வரும். நாங்கள் இந்தியாவுடன் இணைந்து அதைச் செய்திருப்பதால், அந்த செயல்பாட்டின் மூலம் எந்தக் கப்பலும் வருவது அச்சுறுத்தலாக இருக்காது.
கே:காலநிலை மாற்றம் பற்றி, இலங்கையில் காலநிலை தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான மிக முக்கியமான வழிகள் யாவை?
நாங்கள் குறிப்பாக ஐரோப்பா, கொரியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடன் கலந்துரையாடுகிறோம். காலநிலை மாற்றத் திட்டத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். அதற்கான வேலைகளை செய்து வருகிறோம். இதற்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை நாங்கள் காண்கிறோம். 2040ல் எங்களின் இலக்குகளை அடைவதற்கு எதிர்பார்க்கிறோம்.
கே:சுற்றுலா பொருளாதார வளர்ச்சியின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதற்கு முக்கியமானதாக நீங்கள் நினைக்கும் சீர்திருத்தங்கள் ஏதேனும் உள்ளதா? மறுசீரமைப்பு மூலம் நாம் முன்னேறி வருகிறோம். கடன் மறுசீரமைப்பு பற்றி பேசுவீர்களா?
நான் சுற்றுலாத் துறையில் சீர்திருத்தங்களைப் பற்றி கூறினேன். சுற்றுலாத் துறையில் சந்தை முகாமைத்துவத்தை தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும். நான் தனியார் துறைக்கு ஒரு இலக்கைக் கொடுத்துள்ளேன். நாம் ஐந்து பில்லியன் வருவாய்க்கு செல்ல வேண்டும். ஒரு சுற்றுலாப் பயணியிடமிருந்து ஒரு இரவுக்கு குறைந்தபட்சம் $500 முதல் $700 வரை சம்பாதிக்க வேண்டும்.
கே: உங்கள் பிராந்தியம் தொடர்பில் உங்களுக்கு உலகளாவிய பார்வை இல்லையா?
இந்து சமுத்திரத்தில் மட்டுமே கப்பல் சுதந்திரம் தொடர்பான ஒப்பந்தத்திற்கு நான் ஆதரவாக இருக்கிறேன். ஆனால் இரண்டு நிபந்தனைகளுடன். அமெரிக்காவும் சீனாவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இரண்டு, அது நமது நீதித்துறை எல்லைக்குள் உட்பட்டதாக இருக்க வேண்டும்.
கே: அமெரிக்க, இந்திய உறவின் வளர்ச்சி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அடுத்த 10 ஆண்டுகளில் அந்த உறவிலிருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?
இந்தியா, -அமெரிக்கா இடையேயான நல்லுறவு மெல்ல மெல்ல ஏற்படுவதைக் காணலாம். பாகிஸ்தான், சீனாவுடன் இணைந்து செயல்பட விரும்புவது குறித்து முடிவெடுக்க வேண்டும். அவர்கள் நமது சுதந்திரத்தை அச்சுறுத்தவில்லை என்றால், அவர்கள் அனைவரையும் சமாளிக்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
கே: சீனாவும் மற்ற நாடுகளும் ஏதோ ஒரு விதமான ஒப்பந்தத்தை மேற்கொள்கின்றன என்று மேற்குலகுக்கு தவறான புரிதல் உள்ளதா?
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன இராணுவ துறைமுகமாக முத்திரை குத்த முயற்சிப்பது தவறானது. இது ஒரு வணிக துறைமுகம். இது சீன வர்த்தகர்களால் நடத்தப்படும் வணிக துறைமுகமாகும். சீனா வணிகர்களால் இயக்கப்படும் வணிகத் துறைமுகமாக அது இயக்குகிறது. தெற்கு துறைமுகத்தில் இந்தியா மற்றொரு முனையத்தை பராமரிக்கிறது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சைனா மெர்ச்சன்ட் நிறுவனம் செயற்படுகிறது. இலங்கை கடற்படை துறைமுகத்திற்கு முழு பாதுகாப்பை வழங்குகிறது. மேலும், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எங்களுடைய கடற்படைத் தளம் இருக்கிறது. எனவே யாராவது ஹம்பாந்தோட்டை வேண்டுமென்றால் தமது இராணுவத்தை அம்பாந்தோட்டையில் தரையிறக்க வேண்டும். இந்த விடயம் தொடர்பில் தினமும் விமர்சிக்கப்படுகிறோம். பொதுநலவாய மாநாட்டிற்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு சென்று இது சீன இராணுவத் தளமா அல்லது வணிகத் துறைமுகமா என்பதை முடிவு செய்யுமாறு கோர நினைத்தேன்.
நீங்கள் ஒரு சிறந்த செயல் வீரர். வெவ்வேறு விடயங்களில் நான் கேட்ட கடினமான கேள்விகளுக்குப் பதிலளித்தமைக்கு உங்களைப் பாராட்டுகிறேன். தீவுகள் பற்றிய கலந்துரையாடலுக்கு நீங்கள் வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் பிராந்தியத்திற்காக குரல் எழுப்புவதில் இலங்கை தொடர்ந்து முக்கிய பங்களிப்பை வழங்குவது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் தனியாக தீர்க்க முடியாத தனித்துவமான சவால்கள் உள்ளன. இப்பகுதியை வழிநடத்தவும், மற்றவர்களுடன் சேரவும் பிராந்தியத்தின் குரல் தேவை.