சீனாவின் பட்டுப்பாதைக்கு நிகராக, இந்தியாவுடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் வகையில் புதிய பொருளாதார வழித்தடத்துக்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சீனா தனது கனவுத்திட்டமான பட்டுப்பாதைத் திட்டத்தை செயற்படுத்துவதற்கான ஆயத்தங்களை செயற்படுத்தி வருகின்றது.
ஆரம்ப காலம் தொடக்கம் பட்டு உற்பத்தியில் புகழ்பெற்றிருந்த சீனா, ஆசியாவில் வணிகத்தில் முன்னிலை வகித்தது. இந்தப் பட்டுப் பாதை, அமெரிக்கா உலக வல்லரசாகிய பின்னர் 1500ஆம் ஆண்டளவில் பலவீனமடைந்து போனது. இந்த நிலையில் அதேபோன்று ஒரு நவீன தடத்தை உருவாக்க தற்போது சீனா முயன்று வருகிறது. சீனா இந்த திட்டத்தை 2008 இல் தொடங்கியது.
சீனாவின் பட்டுப் பாதை ஒப்பந்தங்களில் பல நாடுகள் ஆர்வத்துடன் முன்வரவில்லை. ஆனால் இதில் சீனாவின் மிகப்பெரிய அரசியலும், சுயநலமும் இருப்பதாக உலக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
சீனாவின் பட்டுப் பாதை திட்டத்தில் இருந்து விலகியிருக்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள், சீனாவின் இந்தத் திட்டத்தை பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. மாறாக, ஆசியப் பிராந்தியத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அதிலும் குறிப்பாக, இந்தியப் பெருங்கடலைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகக் கருதுகின்றன.
இந்தச் சூழலில்தான் தற்போது டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின்போது, இந்தியாவுடன் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் வகையில் புதிய பொருளாதார வழித்தடத்துக்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது முன்னெப்போதும் இல்லாத மிகப்பெரிய அடிப்படை கட்டமைப்புத் திட்டமாகும்.
இதன் மூலம் வர்த்தகம், எரிசக்தி மற்றும் டிஜிட்டல் தகவல் தொடர்புகள் வளர்ச்சி பெறும். இதை இந்தியா, அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய யூனியன், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் தொடங்கவுள்ளன. குறிப்பாக, இந்தத் திட்டம் சீனாவின் பட்டுப்பாதை முயற்சிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருக்கும் எனக் கருதப்படுகிறது. அதேநேரத்தில், இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பிறகு, இந்தியாவின் வர்த்தகத்தில் பெரிய ஏற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, “இனிவரும் காலங்களில், இந்தியா, மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா இடையே பொருளாதார ஒருங்கிணைப்பின் முக்கிய வழித்தடமாக இத்திட்டம் இருக்கும். இந்த புதிய வர்த்தகப் பாதை சர்வதேச இணைப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கு புதிய வேகத்தை வழங்கும். இத்திட்டம் மூலம் இந்தியாவை மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பா உடன் நெருங்கி இணைத்துள்ளது” என அறிவித்தார்.
இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், “இது மத்திய கிழக்கில் செழிப்பை ஏற்படுத்தும் ஒப்பந்தம். இது, இரண்டு கண்டங்களின் துறைமுகங்களை இணைப்பதன் மூலம் மத்திய கிழக்கில் அதிக செழிப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் மிகப்பெரிய ஒப்பந்தம்” எனத் தெரிவித்துள்ளார்.
உலகின் பல்வேறு தலைவர்களும் இதை வரவேற்றுள்ள நிலையில், சீனா இத்திட்டத்தை விமர்சித்துள்ளது. எனினும், இந்த விஷயத்தில் சீனா அடுத்து என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.
அமெரிக்கா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் இணைந்து ‘இந்தியா_ – மத்திய கிழக்கு_ – ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை’ பிரதமர் நரேந்திர மோடி புதுடில்லியில் ஆரம்பித்து வைத்ததையடுத்து சீனாவின் சந்தேகம் அதிகரித்துள்ளது.
இந்தியா முதல் அமெரிக்கா, ஐரோப்பா முதல் மத்திய கிழக்கு வரையிலான நாடுகளின் தலைவர்கள் இதை ஒரு வரலாற்று ஒப்பந்தம் என்று அழைக்கின்றனர்.
‘வர்த்தகத்தை துரிதப்படுத்தும் நேரடிப் பாதையாக இது இருக்கும்’ என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்ஸுலா வோன் டேர் லேயன் கூறியுள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் மத்தியகிழக்கில் அமைந்துள்ள நாடுகள் ரயில் வலையமைப்பின் மூலம் இணைக்கப்பட்டு, பின்னர் அவை கப்பல் பாதை மூலம் இந்தியாவுடன் இணைக்கப்படும். இதன் பிறகு இந்த வலைப்பின்னல் ஐரோப்பாவுடன் இணைக்கப்படும்.
செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ேஜான் ஃபைனர், இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கியிருந்தார்.
“இது வெறும் ஒரு ரயில் திட்டம் மட்டுமல்ல. இது கப்பல் மற்றும் ரயில் திட்டம். இந்தத் திட்டம் எவ்வளவு மதிப்புமிக்கது, இலட்சியபூர்வமானது, முன்னோடியானது என்பதை மக்கள் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்” என்றார் அவர்.
“இந்த ஒப்பந்தம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுக்குப் பயனளிக்கும். உலக வர்த்தகத்தில் மத்திய கிழக்கு நாடுகள் முக்கிய பங்கு வகிப்பதற்கு இது உதவும்” என்று அவர் கூறினார்.
இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான இந்த ஒப்பந்தம் அடிப்படையில் ஓர் உட்கட்டமைப்பு திட்டமாகும்.
இதன் கீழ் துறைமுகங்கள் முதல் ரயில் பாதை இணைப்புகள் வரை எல்லாமே கட்டப்பட உள்ளன. இந்தியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் ரயில் பாதைத் தொடர்பு மிகவும் விரிவானது. ஆனால் மத்திய கிழக்கைப் பார்த்தால் அங்குள்ள ரயில் பாதைகள் ஒப்பீட்டளவில் விரிவாக இல்லை. இதன் காரணமாக சரக்குப் போக்குவரத்து பெருமளவில் வீதி அல்லது கடல் வழியாகவே செய்யப்படுகிறது.
ரயில்வே பாதைகள் இணைக்கப்பட்டால், மத்திய கிழக்கின் ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு சரக்குகளைக் கொண்டு செல்வது எளிதாகும்.
இதனுடன் கூடவே இந்தத் திட்டத்தால் உலகளாவிய வர்த்தகத்திற்கான புதிய கப்பல் போக்குவரத்து வழியையும் வழங்க முடியும். ஏனெனில் தற்போது இந்தியா அல்லது அதைச் சுற்றியுள்ள நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சுயஸ் கால்வாய் வழியாக மத்திய தரைக்கடலை அடைகின்றன. இதன் பிறகு அவை ஐரோப்பிய நாடுகளை சென்றடைகின்றன.
இதனுடன், அமெரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடுகளுக்குச் செல்லும் பொருட்கள் மத்தியதரைக் கடல் வழியாக அட்லான்டிக் பெருங்கடலில் நுழைந்து, பின்னர் அது அமெரிக்கா, கனடா அல்லது லத்தீன் அமெரிக்க நாடுகளை அடைகின்றன.
தற்போது மும்பையில் இருந்து ஐரோப்பாவுக்கு புறப்படும் கொள்கலன்கள் சுயஸ் கால்வாய் வழியாக ஐரோப்பாவை அடைகின்றன. எதிர்காலத்தில் இவை துபாயில் இருந்து இஸ்ரேலில் உள்ள ஹைஃபா துறைமுகத்திற்கு ரயிலில் செல்ல முடியும். இதற்குப் பிறகு அவை ஐரோப்பாவை சென்றடையும். இதனால் நிறைய நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த முடியும் என்று யூரேசியா குழுமத்தின் தெற்காசிய நிபுணர் பிரமீத் பால் செளத்ரி கூறினார்.
தற்போது சர்வதேச வர்த்தகத்தின் 10 சதவீதம் சுயஸ் கால்வாயை நம்பியுள்ளது. இங்கு ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும்கூட சர்வதேச வர்த்தகத்திற்கு அது பெரும் சவாலாக உள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் கடலுக்கு அடியில் கேபிள் போடப்படும். அது இந்தப் பகுதிகளை இணைத்து, தொலைத்தொடர்பு மற்றும் தரவு பரிமாற்றத்தை விரைவுபடுத்தும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் போக்குவரத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்படும். உலகிற்கு ஒரு புதிய வர்த்தகப் பாதையை இது கொடுக்கும் என்பதால் இந்த ஒப்பந்தம் ஆக்கபூர்வமானதாக இருக்கும்.
மத்திய கிழக்கு நாடுகளில் ரயில்வே வலைப்பின்னல் நிறுவப்படுவதன் மூலம், இந்த நாடுகளில் நிலைமை மேம்படும். ஒருபுறம், உள்ளூர் மக்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
மறுபுறம், இது மத்திய கிழக்கு நாடுகளை ஒன்றுக்கொன்று நெருக்கமாகக் கொண்டு வரும். ஏனெனில் ரயில்பாதை இணைப்புகள் வணிகரீதியாக நாடுகளை நெருக்கமாக்குகின்றன.
எஸ்.சாரங்கன்