யுபுன் அபேகோன் தொடர்ந்து ஏமாற்றம் தந்து வருகிறார். ஆரம்பத்தில் ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப், பின்னர் சர்வதேச மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டிகளில் பங்கேற்க தவறிய யுபுன் இப்போது பிராந்தியத்தில் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்ச்சியான ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கவில்லை என்று அறிவித்திருக்கிறார்.
இத்தனைக்கும் தெற்காசியாவின் அதிவேக ஓட்ட வீரர், இப்போதைக்கு ஆசியாவின் நான்காவது அதிவேக வீரர் யுபுன்தான். என்றாலும் அவர் கடந்த ஆறு மாதங்களாக உபாதையால் அவதிப்பட்டு வருகிறார்.
“இந்த ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க முடியாதது உண்மையிலேயே எனக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது” என்று யுபுன் அபேகோன் கூறுகிறார்.
இவர் மாத்திரமல்ல ஒட்டுமொத்த இலங்கையும் அவரது அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்திருக்கிறது. தடகள போட்டிகளில் அவர் இலங்கைக்கு நிச்சயம் பதக்கம் வென்று தருவார் என்று பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது.
உண்மையில் ஆசிய விளையாட்டுப் போட்டியை எதிர்பார்த்தே கடந்த சில மாதங்களால் பல விளையாட்டு போட்டிகளை தவிர்த்து உடல் தகுதி பெற முயற்சித்தார். என்றாலும் அவருக்கு ஏற்பட்டிருக்கும் தொடை எலும்புக் காயம் இன்னும் முழுமையாக குணமடையவில்லை.
வேறு எந்த விளையாட்டை விடவும் குறுந்தூர ஓட்ட வீரர்களுக்கு இந்தக் காயம் பெரும் இடையூறானது. மிகக் குறுகிய காலத்திற்குள் ஓடி முடிக்க போட்டியிருப்பதால் சிறு வலி கூட சில நொடிகளை தாமதிக்கச் செய்து போட்டியில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.
கடந்த மே மாதம் இத்தாலியில் நடைபெற்ற சவோன சர்வதேச போட்டியில் ஆரம்ப சுற்றில் சிறப்பாக செயற்பட்ட அபேகோன் 100 மீற்றரை 10.04 விநாடிகளில் பூர்த்தி செய்தார். என்றாலும் இறுதிப் போட்டியில் காயம் காரணமாக கடைசி சில மீற்றர்கள் தாமதித்தது அவருக்கு இரண்டாவது இடத்தையே பெற்றுத் தந்தது.
இதனை அடுத்தே அவர் ஆசிய கிண்ண போட்டியில் தயாராகும் இலக்குடன் கடந்த ஜூலையில் தாய்லாந்தில் நடந்த ஆசிய மெய்வல்லுனர் சம்பியன்சிப் மற்றும் கடந்த ஓகஸ்டில் ஹங்கேரியில் நடந்த சர்வதேச மெய்வல்லுனர் சம்பியன்சிப் போட்டிகளை தவிர்த்திருந்தார்.
19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி எதிர்வரும் செப்டெம்பர் 23 ஆம் திகதி ஆரம்பமாகி ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. சரியாக ஓர் ஆண்டுக்கு முன்னர் நடைபெற வேண்டிய இந்தப் போட்டி கொவிட் தொற்றுக்கு மத்தியில் தாமதித்தே நடைபெறுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்வது என்பது இலகுவானதல்ல. அதிலும் தடகளப் போட்டியில் இலங்கை பதக்கம் வென்று இப்போது 17 ஆண்டுகள் கடந்துவிட்டது.
2006 ஆம் ஆண்டு டோஹாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் சுசந்திகா ஜயசிங்க 100 மீற்றரில் வெள்ளி மற்றும் 200 மீற்றரில் வெண்கலப் பதக்கங்களை வென்றதோடு ரொஹான் பிரதீப் குமார, ரோஹித புஷ்பகுமார, பிரசன்ன அமரசேக மற்றும் அசோக ஜயவர்தன ஆகியோரைக் கொண்ட 400 மீற்றர் ஆடவர் அஞ்சலோட்ட அணி வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தது.
யுபுன் இம்முறை ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப்போட்டிகளில் பங்கேற்க இருந்தார். குறிப்பாக 2022 ஜூலையில் யுபுன் 100 மீற்றர் தூரத்தை 9.96 விநாடிகளில் ஓடி முடித்தது அந்த ஆண்டில் ஆசியாவின் அதிவே ஓட்டமாக இருந்தது. அத்தோடு 100 மீற்றர் ஓட்டப்போட்டியை 10 விநாடிகளுக்கு குறைவான காலத்தில் முடித்த முதல் தெற்காசிய வீரராகவும் அவர் சாதனை படைத்திருந்தார்.
கடந்த ஆண்டு ஜூலையில் பெர்மிங்ஹாமில் நடந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் யுபுன் வெண்கலப் பதக்கம் வென்றார். இது அந்த விளையாட்டு வரலாற்றில் 24 ஆண்டுகளில் இலங்கை தடகளப் போட்டியில் பெற்ற முதல் பதக்கமாக இருந்தது. அதேபோன்று அவர் டயமன்ட் லீக் இறுதிப் போட்டியில் பங்கேற்ற முதல் இலங்கை வீரராகவும் சாதனை படைத்திருந்தார்.
எனவே அவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்வதென்பது ஓரளவுக்கு நிச்சயமான ஒன்றாகவே இருந்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டியை இழந்திருக்கும் யுபுன் தற்போது அடுத்த ஆண்டு பிரான்ஸில் நடைபெறப்போகும் ஒலிம்பிக் போட்டியை இலக்கு வைத்திருக்கிறார்.
“சர்வதேச மட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த நான் எதிர்பார்த்திருந்தேன், ஆனால் காயம் நான் எதிர்பார்த்த வேகத்தில் குணமடையவில்லை. காயத்தில் இருந்து மீண்டு எதிர்காலத்தில் வலுவாக போட்டிகளுக்கு திரும்புவதிலேயே நான் அவதானம் செலுத்தி இருக்கிறேன்” என்கிறார் யுபுன்.
இலங்கையில் கிரிக்கெட் வீரர்களுக்குத்தான் மெளசு அதிகம் என்றபோதும் சிறு வயதில் இருந்தே யுபுன் தடகள போட்டிகளிலேயே அதிக அவதானம் செலுத்தினார். ஆரம்பத்தில் நீளம் பாய்தல், உயரம் பாய்தல் மற்றும் முப்பாய்ச்சல் என முயற்சி செய்த யுபுன் பின்னர் குறுகிய தூர ஓட்டம் தானக்கு சரிப்பட்டு வரும் என்று புரிந்துகொண்டார்.
பாடசாலை மட்டத்தில் 10.78 விநாடிகளில் 100 மீற்றர் ஓட்டத்தை பூர்த்தி செய்த அவர் 2015 இராணுவ சம்பியன்சிப் போட்டியின் 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 10.58 விநாடிகளில் பூர்த்தி செய்தார். அது வெண்கலப் பதக்கம் வெல்லவே போதுமாக இருந்தபோதும் அவரது திறமை நாளுக்கு நாள் அதிகரித்தது.
தனது தந்தை அமெரிக்காவில் வேலை பார்க்கும் நிலையில் அவரின் உதவியோடு 20 வயதில் இத்தாலி பறந்த யுபுன் அங்கு பயிற்சி பெற ஆரம்பித்தார். தற்போது 28 வயதாகும் யுபுன் இத்தாலியை தளமாகக் கொண்டே தனது தடகள வாழ்வை தொடர்கிறார்.
யுபுனின் தடகள வாழ்வு என்பது ஏற்ற இறக்கங்களை கொண்டது, என்றாலும் ஒருநாள் உச்சத்தை தொடுவேன் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.
எஸ்.பிர்தெளஸ்