ஐ.நா. மனித உரிமை பேரவையின் இந்த வருட அறிக்கையில் மலையகம் தொடர்பாக குறிப்பிடாமை ஒரு குறைபாடென்பதை ஐ.நா.வின் இலங்கை பிரதிநிதி மார்க் அந்தரே ஏற்றுக்கொண்டதுடன், எதிர்காலத்தில் இது நிவர்த்தி செய்யப்படுமெனவும் தெரிவித்தார். அத்துடன், இலங்கைக்கான ஐ.நா. நிகழ்ச்சிநிரலுக்குள் மலையகத் தமிழர்களின் பிரச்சினைகள், தேசிய நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்படுமெனவும், ஐ.நா.வின் இலங்கை பிரதிநிதி உறுதியளித்தார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், வேலுகுமார் எம்.பி., கேகாலை மாவட்ட அமைப்பாளர் பரணீதரன் மற்றும் ஐ.நா. தரப்பில் இலங்கைக்கான ஐ.நா. பிரதிநிதி மார்க் அந்தரே, சமாதான சாளர ஒருங்கிணைப்பாளர் தாரக ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்துகொண்ட சந்திப்பு தொடர்பாக மனோ கணேசன் எம்.பி. கருத்துத் தெரிவித்த போதே, இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அலுவலகம், காணாமல் போனோர் அலுவலகம், உத்தேச உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (Truth and Reconciliation Commission) ஆகியவை இன்னமும் இழுபறியில் இருக்கின்றன. இரு தரப்பிலும் குற்றங்கள் நிகழ்ந்தனவென்பதை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் பிடிவாதமாக மறுக்கின்றமையே இதற்கு பிரதான காரணமென நான், தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் என்ற முறையில் சொன்னதை ஐ.நா.வின் இலங்கை பிரதிநிதி மார்க் அந்தரே அங்கீகரித்து ஏற்றுக்கொண்டார்.