இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிரதிநிதிகளுக்குமிடையில் சிநேகபூர்வ சந்திப்பொன்று ஜம்இய்யத்துல்லாவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்குமிடையிலான சந்திப்பின் போது ஜம்இய்யத்துல்லாவின் கொள்கைகள், குறிக்கோள்கள், சமூகம் தொடர்பான பணிகள், தேசியம் மற்றும் சர்வதேசம் சார்ந்த முன்னெடுப்புகள், நல்லுறவுகள் தொடர்பான அறிமுகங்கள் தொடர்பாக அமெரிக்கத் தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டன.
இதன்போது ஜம்இய்யத்துல்லாவின் தலைவர் அஷ்ஷைக் முஃப்தி எம்.ஐ.எம்.ரிஸ்வி, கடந்த காலங்களில் சமூகம் மற்றும் தேசியம் சார்ந்து ஜம்இய்யத்துல்லா எவ்வாறான பணிகளை, செயற்பாடுகளை செய்திருக்கிறதென்பது தொடர்பாக தெளிவுபடுத்தினார்.
இந்த சந்திப்பின் போது கருத்துத் தெரிவித்த அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், அகில ஜம்இய்யத்துல் உலமா, சமூகம் தொடர்பாக மேற்கொள்ளும் முன்னெடுப்புகள், பணிகளை தான் மதிப்பதாக தெரிவித்ததுடன், மனிதநேயப் பணி, நல்லிணக்கம் ஆகியவற்றுக்காக ஒன்றாக செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.