நடிகர் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. காந்த கண்கள், இளைஞர்கள் மட்டுமல்ல எல்லோரையும் மயக்கும் பார்வை, சொக்க வைக்கும் நளினமான நடனம், 90-களில் திரை உலகை கலக்கிய பிரபலம், அவர் ஒரு பாட்டுக்கு ஆடினாலே அதுபாட்டுக்கு படம் ஓடும் என்றால் அவர்தான் சில்க் சுமிதா. இவர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றைய இளைஞர்கள் மனதிலும் இடம்பிடித்தவர். சில்க் சுமிதா இப்போது இல்லையே என்று எண்ணிய அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக விஷால் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தில் அவர் தோன்றிய காட்சி அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது எனலாம். விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், ரிதுவர்மா நாயகியாகவும் நடித்துள்ளனர்.
முதலில் டிரைலரை பார்த்த பலரும் ஏதோ கிராபிக்சில் சில்க் சுமிதாவின் உருவத்தை கொண்டுவந்துள்ளனர் என்றுதான் எண்ணினர். ஆனால் அதன்பிறகுதான் தெரிந்தது அவர் அச்சு அசலாக சில்க்கின் தோற்றத்தில் உள்ள இன்ஸ்டாகிராம் மாடல் என்பது. இவர் இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள பதிவுகளுக்கு பலரும் “நீ சில்க் சுமிதா போலவே இருக்கிறாய்” என கருத்துக்களை கூறியிருந்தனர். இதை பார்த்தே திரைப்பட இவரை மார்க் ஆண்டனி படத்தில் நடிக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்தான் விஷ்ணுபிரியா காந்தி. இன்ஸ்டாகிராமில் கலக்கிய அவர் முதன்முறையாக மார்க் ஆண்டனி படத்தில் நடித்துள்ளதோடு சில்க்கின் முக பாவனைகள் அனைத்தையும் கண்முன் கொண்டுவந்திருப்பது சற்று ஆச்சரியமானதுதான்.
நடிகர் தியாகராஜன் நடித்து 1984-ல் வெளியான நீங்கள் கேட்டவை படத்தில் சில்க் சுமிதாவின் ஆட்டம் இன்றும் பலருக்கு நீங்கா நினைவாக உள்ளது. அதே பாடலின் ரீமிக்சில் ‘மார்க் ஆண்டனி’ படத்தில் சில்க் சுமிதா தோற்றத்தில் விஷ்ணுபிரியா காந்தி கலக்கியுள்ளார். அதே கண்கள், அதே பார்வை, அதே நளினம் என நிஜத்தில் சில்க் சுமிதாவாகவே மாறியுள்ளார். இதுகுறித்து, மார்க் ஆண்டனி படத்தின் மேக்கப் மேன் கிருஷ்ண வேணி பாபு தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிடும் போது, “சில்க் சுமிதாவை மீண்டும் திரையில், எனது கைவண்ணத்தில் காண ஆவலோடு உள்ளேன்” எனக்குறிப்பிட்டு இருந்தார். அந்த பதிவிற்கு விஷால், மற்றும் விஷ்ணுபிரியா காந்தி இருவரையும் டேக் செய்து, அவர்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்திருந்தார். சில்க் வேடத்தில் நடித்தது விஷ்ணுபிரியா காந்தி என்பது மேக்கப் மேன் கிருஷ்ணவேணி பாபு பதிவிட்டபிறகே திரை உலகினருக்கே தெரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.