குருவிப் பேட்டை | தினகரன் வாரமஞ்சரி

குருவிப் பேட்டை

அந்த வீட்டின் யன்னலருகே ஒரு பூனைக்கூட்டமே நின்றது. எப்படியும் ஐந்து பூனைகள் இருக்கும். இது எந்நாளும் நடப்பதுதான்.

நானும் அதிகாலை எழுந்து காலைவேலைகளை முடித்ததன் பின்னர் எனது குசினி கதவைத் திறந்து பார்ப்பேன். தினமும் அவை எப்போது ஜன்னல் திறக்கப்படும் என அண்ணார்ந்து பார்த்த வண்ணம் இருக்கும். 

குறித்த சில நிமிடங்களில் அந்த ஜன்னல் திறபட ஒருமித்த குரலில் பூனைகள் "மியாவ்... மியாவ்..." ஒலி எழுப்பும். அதேநேரம் "அட ஏன் கத்துற இரு தாரேன்"

என்றொரு குரலும் உள்ளே இருந்து வரும். ஆனாலும் பூனைகள் தமது பாட்டை நிறுத்தாது. "மியாவ் மியாவ் என அந்த ஊரையை கூட்டுவது போல் கத்தும். சிறிது நேரத்தில் குரல் ஒலி அடங்கி வேறு ஒருவித ஒலி அவற்றிடம் இருந்து எழும்.

ஆம் இந்த ஒலிக்கு பொருள் பாண், சோறு, பிஸ்கட், பாற்சோறு, கேக்துண்டு, மீன், இறைச்சி சோறு, எலும்பு இப்படி பல தீனிகள் அவற்றின் வாய்க்கு ருசி சேர்க்கும்.

காலையில் பாடசாலைக்கு புறப்பட்டு விடுவேன். என் வீடு அந்த வீட்டுக்கு எதிர்வீடு, சுமார் 100யார் தான் தூரம் இருக்கும்.

உலகிலேயே அதிகாலையில் மாத்திரம் தான் காலம் மிக வேகமாக முள்ளை நகர்த்துகின்றது என்பது ஏன் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. இந்தக் கடிகாரம் வேறெந்த நேரத்திலும் அந்த அளவு வேகமாக நகரவே நகராது என்பது உலகறிந்த உண்மை.

பாடசாலை அசெம்பிளியில் வலய, மாகாண கூட்டங்களில் சில செயலமர்வுகளில் நேரம் போவதே தெரியாது. அவ்வளவு காதுக்கு இனிமையாக மூளைக்கு இலேசாக உரைகள் இடம்பெறும். ஆனால் இதற்கு மாறாக சில கூட்டங்கள் அல்லது அமர்வுகள் அறுவையாக அமைந்து அலுப்புக்குள்ளாக்கி தலைவலியை ஏற்படுத்து வதுமுண்டு.

அதிகாலையில் தான் குறைந்த நேரத்தில் அதிக வேலைகளை செல்கிறோம். இப்படியான பரபரப்பான காலை வேலைப்பளுவுக்கு மத்தியிலும் எதிர்வீட்டு முற்றத்தைப் பாராது விடுவதில்லை.

அங்கே காணப்படும் அவர் வீட்டு முற்றத்து மதிலில் காகங்கள், வீட்டுக்குருவிகள், ஏழு குண்டு குருவிகள், அணில்கள், கொண்டலத்தி, மைனா என்பன உட்கார்ந்திருக்கும். அவை அவ்வீட்டையும் என் வீட்டையும் சூழவுள்ள ஆணைக்கொய்யா, புளித்தோடை,மா, கொய்யா, ஜம்பு, புளிகொய்யா எனப்பல மரங்களிலும் அமர்ந்திருக்கும்.

"கா...கா" எனவும் "கீ...கீ" எனவும் அணில்கள் "கினி... கினீகினி..." எனவும் இசை எழுப்பிய வண்ணம் அந்த அதிகாலை இளம்வெயில் பொழுதை காதுக்கு இதம் சேர்க்கும் ஒரு சூழலை உருவாக்கும்.

பள்ளிக்கூடத்திற்காக காலை நேரத்தில் பதைபதைப்புடன் செயற்படும் அந்த அம்மா கதவைத்திறந்து பார்த்து எப்படியும் ஒரு குரல் கொடுக்கத் தவறுவதில்லை

"ஏன் கத்துறீங்க இருங்க வாறன் என்றவாறு உள்ளே நுழையும் அவர், பல்வகை உணவுகளுடன் வெளியே வருவார். வாசலின் முன்னும், மதிலின் மீதும், வெளியில் உள்ள ஒரு சிமெண்ட் தரையின் மீதும் வைப்பார். எல்லாப்பக்கமும் அவை பிரிந்தும் அடிபட்டும் கத்திய வண்ணம் உணவுகளை உண்ணும் மிகப்பாசத்துடன் அவற்றுக்கு தினமும் வைத்திடும் அந்த அம்மாவும் ஓர் ஆசிரியை தான். இந்த பாசப்பறவைகளை கவனியாது அவர் உதாசீனப்படுத்தியதை நான் பார்த்ததேயில்லை.

பல பூனைகள் அங்கே கூடுவதும் நடமாடுவதும் மாத்திரமல்ல, அவற்றின் பரம்பரையே அந்தச்சூழலிலேயே தொடர்ந்து சுற்றிச் சுற்றி வாழ்ந்து வருவது எனக்குத் தெரியும். அண்மையில் ஒரு பூனைக் குட்டி போட்டது அது நான் அறிந்தவரையில் மூன்றாவது பரம்பரை. முதலாவது பரம்பரையில் போட்ட இரண்டு குட்டிகள் வளர்த்தன. அவை சாம்பல் நிறமும், மஞ்சள் கறுப்பு  வெள்ளை நிறமும் கலந்தவை. இவை குறிப்பிட்ட இரண்டாம் நிலையிலுள்ள பூனை போட்ட குட்டிகளே. ஒரு கறுப்புநிற குட்டியும், ஒரு விதமான செம்மஞ்சள், கபில நிறம், சாம்பல் கலந்த அந்த மற்றொரு குட்டியும் அங்கே இருந்தன.

எல்லாம் அந்த அம்மா வைத்த பாலை குடித்து வளர்ந்தவை. சின்னக்குட்டிகளாக அந்த வீட்டு வளவை அண்மிக்கும் போது மெதுவாக அந்த வீட்டுக்குள் அழைப்பதும், பெரிய பெண் தாய்ப்பூனை மட்டும் மியாவ்... என அருகில் வருவதும் , சின்னக்குட்டிகள் பயத்தால் ஓடி ஒளிப்பதும் நான் அவ்வப்போது பார்க்கும் காட்சிகள். பாலை சிரட்டையில் அல்லது கோப்பையில் ஊற்றி வைத்தவுடன் பெரியபூனை குடிக்க ஆரம்பிக்கும். அதைக்கண்ட குட்டிகள் பயத்துடன் தயங்கித் தயங்கி சென்று தாயுடன் பாலை அருந்த தாய்பூனை சற்றே விலகி இடம் கொடுக்கும். இப்படியே பூனைக்குட்டிகள் அவ்வீட்டுடன் பழகி பின்னர் நேரடியாகவே சாப்பாடு கேட்டு "மியாவ்... மியாவ்" எனக் கத்தி தமது வரவினை அந்த அம்மாவுக்கு உணர்த்தும்.

இதேவேளை இனப்பெருக்க சீசனில் பெரிய பூனை ஒன்று அப்பிரதேசத்தில் உலாவும். மேலும் பல வண்ணங்களில் என்றுமே நாம் கண்டிராத ஆண் பூனைகள் அங்கே நடமாடும். ஒரு பெரிய பூனையை பெரியதுரை பங்களா பூனை என்பார்கள். இது இங்கு வந்து வேலை பார்க்கும் ராமூர்த்தி ஒரு நாள் சொன்ன தகவல்.

அழகான அடர்த்தியான முடியை கொண்டிருக்கும் அப்பூனை. மிகப்பயங்கரமாக அந்த இனப்பெருக்க சீசனில் குரலெழுப்பும்.  அது ஏனை பூனைகளை முறைத்து தனது கால் நகங்களை வெளித்தள்ளி பிறாண்ட முயலும். அந்தப் பூனையின் நடமாட்டமும் அதன் செயற்பாடும் அதன் பின்னணியும், செருக்கையும், திமிரையும் வெளிக்காட்டும். பூனைகளின் இனப்பெருக்க காலத்தில் மாத்திரம் வந்து உலாவும் இப்பூனை ஏனைய காலங்களில் தென்படுவதில்லை. இது அந்தக்கால நிலவுடைமையாளர்களின் பெண் லீலைகளையோ அல்லது ஓர் உயர் குழாத்தினரின் மனப்பாங்கையோ பிரதிபலிப்பதாக இருந்தது எனலாம்.

"இந்த தடிப்பூனை ஏன் இங்கே வருது"? என அந்த அம்மா ஒரு நாள் கேள்வி எழுப்பிய பொழுது எமது வீட்டு வேலிக்கருகில் வேலை செய்து கொண்டிருந்த ராமமூர்த்தி சிரித்துவிட்டு அந்த அம்மாவை பார்த்து,

"இங்கே உள்ள பெண் பூனையைத் தேடித்தான் அந்த ஆண் பூனை வருது" என்றார். நான் அங்கே நின்றிருந்த படியால் சம்பாஷணை எனது காதுகளிலும் விழுந்தது.

"அந்த தடிப்பூனை இந்தப்பூனையை சக்களத்தியாக வச்சிருக்கோ?" எனது எனது மனதுக்கள் எண்ணிக் கொண்டேன். ஆனால் அதனை வெளியே சொல்லவில்லை. இது அந்தத் தோட்டத்து சொந்தக்காரரின் பங்களா பூனை தானே?, அது அப்படியும் இருக்க நியாயம் உள்ளது தானே? என எனதுள்ளம் கூறியது.

இந்தப் பக்கத்து பூனைகளை பிற பூனைகள் வந்து குழப்புவதை அந்த அம்மா விரும்பாதது போல் "போ... போ... நீ எல்லாம் ஓடிப் போ" என செல்லமாக விரட்டுவதை நான் கண்டிருக்கின்றேன். மறுபுறம் இப்பூனைகளுக்கு இக்காலத்தில் என்ன நிகழ்கின்றது. என்பதை அறியாதரல்ல அவர்.  குருவிகளும், காகங்களும் போலவே நாய்களும் அங்கே கூடும்.  

மேல் வீட்டு கபில நிற நாய் அடிக்கடி அங்கே காணப்படும். சற்று தூரத்தில் உள்ள ரோஜா விட்டு வெள்ளை நாய் அந்த ஏரியாவை ஆட்சி செய்யும். இந்த அம்மா வீட்டில் எந்த நாயும் உணவு உண்ண விடாது தடுக்கும் பெரிய குரலில் உரத்து குரல் எழுப்பி "நீயெல்லாம் இங்கே வராதே இது என் ராஜ்யம்" என்பது போல வாலை முறுக்கி பல்லைக் காட்டி ஏனைய நாய்களை ஓட ஓட விரட்டும்.

அந்த வீட்டு கேட் கதவு திறக்கும் கலி அதுக்கு நன்கு பரிச்சியம். ஓடி வரும் அவ்வௌ்ளை நாய் அந்த அம்மா மடி மேல் காலை ஊற்றி வாலை ஆட்சி தனது விசுவாசத்தைக் காட்டும். எந்நேரமும் அவதானத்துடன் இருக்கும் அது, வீட்டுக்காரர்கள் தற்செயலாக உணவுக்காக ஏதும் ஒழுங்கு செய்யாமல் சென்றுவிட்டால் இரவில் அந்த அம்மா வீடு வந்து கதவுகளை பிராண்டி சாப்பாடு கேட்குமாம். இதனை அந்த அம்மா கூறுவார். இவ்வாறான நேரங்களில் அந்த றோவர் நாய் எதை போட்டாலும் சாப்பிடுமாம். மற்ற நேரங்களில் இறைச்சி மீன், முட்டை, மாசி, கருவாடு போன்ற ஏதோ ஒன்று உணவில் இல்லாவிட்டால் உண்ணாதாம்.

இந்நாய் மட்டுமல்ல, ஏனைய சில நாய்களும் அங்கே வரும். அதில் ஒன்றுதான் மேலே சுமமா கிடந்த வீட்டின் முன் முற்றத்தில் திடீரென வந்து குடியேறிய ஒரு கரிய நாய். இந்த நாய் எப்படி வந்தது என ஆராய்ந்த போது அந்த நாயின் ரத்த உறவுகொண்ட ஒரு நாய் செந்தில்வேல் வீட்டில் உள்ளதாய் கூறினார்கள். மேலும் முன்னால் உள்ள ராஜா வீட்டில் உள்ள கரிய நாயும் ஒரே குடும்பமாம். அது மட்டுமல்ல, இவைகளுக்கான தாய் பஸாரிலுள்ள மரக்கடை பக்கத்தில் உள்ள வீட்டில் உள்ளது. என்று தகவல் சொன்னவர் ராமமூர்த்தி.

கறுப்பு நாய் அங்கே வந்து வந்தேறியபோதும் அடுத்த வீட்டில் செவலை நாய் உள்ளதால் அங்கே சாப்பாடு கிடைக்காது. இதனால் அக்கறுப்பு நாய் அம்மா வீட்டையே உணவுக்காக எதிர்பார்க்குமாம். ஆரம்பத்தில் அந்த கறுப்பு நாய் அம்மாவை கண்டால் ஓடிவிடுமாம். பின்னர் படிப்படியாக பழகி உணவு கேட்டு உண்டு செல்கிறதாம். இந்த வீட்டுக்கு நாங்கள் வந்து வருடங்கள் இருபதை கடந்து விட்டன. அந்த அம்மா குடும்பம் வீடு கட்டி வந்து குடியேறி எப்படியும் பதினைந்து வருடங்களாவது சென்றிருக்கும். அந்த அம்மா அந்த காலத்திலிருந்து இன்றுவரை அதே பாசப் பிணைப்புடன் தான் பழகி வருகிறார்.

இதற்கிடையில் சில நாய்கள் இறந்து போயின. மேலே காணப்பட்ட ராஜா வீட்டு செவலை இறந்து விட்டது. ரோஜா வீட்டு ரோவர் காலமாகிவிட்டது. அந்த கறுப்பு நாய்.

எங்கோ போய்விட்டது. அத்துடன் சற்றுத்தூரத்திலுள்ள ரிச்சர்ட் வீட்டு நாய்கள் இல்லாமல் போயுள்ளன. அவை இறந்தோ காணாமலோ போயிருக்கலாம். மற்றொரு கறுப்பு நாய்க்கும் இப்போது கிழடு தட்டி விட்டது.

இப்படியே மாற்றங்கள் வந்து போனாலம் அந்த அம்மாவின் வரவேற்புகளும் உபசரிப்புகளும் கொஞ்சமும் குறைய வில்லை.

அண்மையில் புதிதாக ஒரு ஜோடி குருவி உலவத்தொடங்கியது. அதன் ஒலி புதியதாக இருந்தது. வித்தியாசமான அந்த குரல் ஒலி ஓர் இசையைபோல இருக்கும். ஆனால் அவை அம்மா வீட்டு உணவை உண்ணும் காக்காக் கூட்டங்களை துரத்தி துரத்தி தலையில் கொத்தும்.

இதைப் பார்த்த பக்கத்து வீட்டு ஆண்டியின் மருமகள் ஒரு காரணத்தை சொன்னாள். அவர்கள் வீட்டுக்குப் பின்னால் உள்ள மரத்தில் அப்புதிய குருவிகள் கூடுகட்டியதாகவும் காகங்கள் கூட்டைக் கலைத்து விட்டதாகவும், இதனால் கோபம் கொண்ட அந்த ஜோடிகள் காகங்களின் தலையில் பறந்து பறந்து கொத்துவதாகவும் சொன்னாள் . எங்கள் வீட்டு மரத்திலேயே அவை பெரும்பாலும் அமர்ந்திருக்கும். அந்த அம்மா ஏதாவது போட காகக் கூட்டம் அங்கே வர, இவை பறந்து போய் கொத்துவதை நானும் கண்டேன். அந்தப் புதிய குருவி அசப்பில்  வெள்ளை கறுப்பு நிற கரிச்சானை போலத் தோன்றும். ஆனால் வெள்ளைக் கலப்பு இல்லை. நான் அறிந்திராத ஒரு வகை நிறம். சில காலம் இங்கே காணப்பட்ட அவை பின்னர் எங்கேயோ போய்விட்டன.

புதிய குருவியைப் பார்த்த அந்த அம்மா அது பற்றி சிலாகித்து மேல் வீட்டுக்கு டேனியல் அங்கிளிடம் கூறினார். நான் பின் தோட்டப் புறத்தில் நின்றிருந்த போது அவர்கள் உரையாடலை கேட்டேன். அவரும் தான் அதைக்கண்டதாகவும் அவை இடம்பெயர்ந்து வரும் குருவி இனங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று கூறியதைக் கேட்டேன். பக்கத்து தோட்டம் ஒன்றில் பெரிய ஒரு மரம் இருப்பதாகவும் அந்த மரத்துக்கு குறிப்பிட்ட காலத்தில் புதிய பறவைகள் வருவதாகவும் பின்னர் அவை திரும்பிச் சென்று விடுவதாகவும் கூறினார். அத்துடன் தனது அம்மா அந்தக் காலத்தில் தனக்கு பத்து வயதானபோது நவம்பர் மாதம் தீபாவளி காலங்களில் வரும் ஒரு பறவையை அம்மா தன்னிடம் காட்டியதாகவும் அதனை அவர் 'காச்சில்' என்று கூறியதாகவும் என்னிடம் கூறினார்.

அது அழகான ஒரு பறவையாகவும், சிவப்பும் வேறு சில நிறங்களும் கலந்த ஒன்றாக காணப்பட்டதாகவும் கூறினார்.

இது மட்டுமல்லாது 'புடிக்.... புடிக்... புடிக்...' என்று கத்து குருவி மிகச்சிறய ஒன்றென்றும் ஆனால் அதன் சத்தம் பெரியதென்றும் விளங்கினார்.

காலம் எமக்காக காத்திருப்பதில்லை. இயற்கை மனிதனைவிட  தனது பணியை மிகச்சரியாக செய்யும். பணத்தால் பதவியால் உயர உயர குணங்களும் உறவுகளும் புதியதாய் முளைக்கும். இந்தச் சுழற்சியில் சிக்காத நல்ல உள்ளங்களும் வாழவே செய்கின்றன. எங்கோ எப்படியோ யாரிடமோ இந்த அன்பு, பாசம், கருணை, பரிவு இல்லாமல் இராது. அந்த சிலருக்காகவே மனிதம் வாழ்கின்றது. மற்றொரு வகையில் கூறுவதனால் இந்த சிலரினாலேயே மனிதம் உயிர் பெறுகின்றது.

"மற்றதுகளுக்கும் குடு.. நீ என்ன தனியே காலிடுக்கே திணிச்சிகிட்டு வாயிலையும் திணிச்சிகிட்டு இருக்கிற?"

எதிர் வீட்டு இந்த அம்மா போட்ட முறுக்கை ஒரு காகம் இப்படி தின்ன முற்படவே அதற்கு அன்பாக விடுக்கும் ஓர் அறைகூவலே இது.

"அந்தக் குண்டு குருவிகள் ஆறு, ஏழு வரும். வீட்டுக்குருவியும் வரும்... அதுக்கெல்லாம் இல்லாம நீ மட்டும் திங்குற... சரி சரி சாப்பிடு. நா பொறாகு அதுகளுக்கு குடுக்குறேன்" அந்த அம்மா பேசுகின்றார்.

காகங்களின் கா... கா... குரல்களும் குருவிகளின் ஒலிகளும் பூனைகளின் மியாவ் மியாவ் சத்தமும் அந்த வீட்டிலும் வீட்டைச் சுற்றியும் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறது.

அது மனிதனுக்கும் இயற்கைக்கும், ஏனைய உயிர்களுக்கும் இடையிலான பிரிக்க முடியாத ஒரு உறவைச் சொல்கிறது. அது மனிதம்.

கதவைத் தட்டுகிறவர்களுக்கு கொடுப்பது மனிதனின் கடமை. அதை அந்த அம்மா செய்கிறது. பசி பட்டினியோடு வரும் உயிர்களுக்கு உணவளிக்க வேண்டும். பசித்தும் போஷாக்கின்றியும் வரும் மனிதர்களுக்கும் தான்...

நான் அடிக்கடி நினைத்துக் கொள்வேன்.

மொழிவரதன்

Comments