உருத்திராட்ச பூனை | தினகரன் வாரமஞ்சரி

உருத்திராட்ச பூனை

'ஹி.. ஹி.. ஹி.... எல்லாருக்கும் வணக்கம். நான் தான் சோமநாதன். எப்பிடியும் சம்பாதிக்கலாம். எப்பிடியும் வாழலாம். உந்தப் பேய்ச்சனங்கள் அறியாமல் பார்த்துக் கொண்டால் போதும். இது தான் என்ரை கொள்கை.

எனக்கு ஏற்றபடி விதானை வேலை கிடைச்சுது. எப்பிடிக் கிடைச்சுது எண்டு கேளாதையுங்கோ. அது பரம ரகசியம். ஊரை விழுங்கிறது எனக்கு கை வந்த கலை. சுடலை திருத்த வேண்டுமென்று வெளிநாட்டிலை இருக்கிறவங்களிட்டை காசு வாங்கினேன். அந்தக் காசிலை சீமெந்து வாங்கினேன். அந்த சீமெந்துப் பைக்கற்றுகளை தந்திரமாக என்ரை வீட்டிலை பறிக்கப்பண்ணினேன். பிறகு என்ன?

பக்கத்து ஊரிலையும் விதானை வேலை பார்த்தனான். உவன் சோட்டர் தான் போஸ்ற்மாஸ்ரர். இரண்டு பேரும் சேர்ந்து 'பிளான்' பண்ணினோம். பிறகு என்ன? உயிரோடை இல்லாத நாப்பது பேருக்கு பிச்சைச் சம்பளம்....!

ஏழை எளியதுகளுக்கு ஆடு வளர்க்கிற திட்டம்...! நான் எனக்கு ஒத்துழைக்கிறவையை மட்டும் தான் தெரிவு செய்வேன். குட்டி ஈண்டால் எனக்குத் தான் எண்டு சொல்லிப்போடுவேன்.

தெற்கிலை அந்தோணிப்பிள்ளையின்ரை வீட்டில தான் யுத்த காலத்திலை ஊர்ப் பள்ளிக்கூடம் இயங்கியது.

அதிபராக இருந்த வேலாயுதத்தார் கஷ்டப்பட்டுத் தான் பள்ளிக்கூடத்தை நடத்தியவர். நேர்மையான மனிசன் தான். ஆனால் என்ரை தாளத்துக்கு ஆட மறுத்திட்டார். விடுவேனோ? எவ்வளவு கரைச்சல் குடுத்து அவரை அனுப்பி வைச்சேன்!

அந்தோணிப்பிள்ளையின்ரை மச்சான் என்னைப்பற்றி நல்ல எண்ணம் வைச்சிருந்தவன். அதாலை ஐந்து பரப்பு தோட்டக்காணியை குறைஞ்ச விலைக்கு தந்தவன். நான் என்ன செய்தனான் தெரியுமோ? கொழுத்த லாபத்துக்கு அதை வித்துப்போட்டேன். அது என்ரை பிறவிக் குணம். அதாலை அவனுக்கு கடுங்கோவம்... என்னை வெட்டிறன் எண்டு கத்தியோடை திரிஞ்சவனாம். அதாலை கொஞ்ச நாள் நான் வெளிக்கிடையில்லை.

உந்தக்கதையை சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தராய் இருக்கிற வெறிக்குட்டி இப்பவும் சொல்லித் திரியுறானாம்...!

நான் கொஞ்சக் காலம் பிள்ளையார் கோயிலிலை தலைவராயும் இருந்தனான். வெளிநாட்டிலை கோயிலுக்கு காசு சேர்த்துவாறதாய் சொன்னேன். நாலு ரிக்கற் புத்தகங்களை பொருளாளரிட்டை வாங்கினேன். நாலு புத்தகத்திலும் மொத்தமாய் இருநூறு ரிக்கற். திரும்பி வந்தவுடனை நல்ல கதையொண்டு விட்டேன். அது என்ன தெரியுமோ?

ரிக்கற் புத்தகங்கள் துலைஞ்சு போச்சு எண்டு தான்...!

அவை என்ன செய்யிறது? என்னை கோயிலாலை வெளியேற்றிப் போட்டினம்! அதாலை என்ன? நான் தான் உழைச்சிட்டேனே...!

பிறகு நான் தெற்கிலை இருக்கிற அம்மன் கோயிலிலை ஒரு மாதிரி தலைவர் ஆகினேன்.

அது எனக்கு நல்ல வாய்ப்பு. ஆரம்பத்திலை பொருளாளராய் இருந்த நல்லநாதன் என்னர திருவிளையாடல்களுக்கு சம்மதிக்​கேல்லை. அதாலை அவரை அனுப்பி வைச்சிட்டன். திருகுதாளங்களிற்கு ஒத்து வரக்கூடிய  பூசகர். அல்லது அவரையும் எப்பவோ அனுப்பியிருப்பேன்.

பிறகு என்ன?

கோயிலைத் திருத்தவெண்டு  சீமெந்துப் பைக்கட்டுகள் வாங்கினோம். கோயிலடியிலை ஒரு வீட்டிலைதான் வைக்க வேணுமெண்டு சொல்லிப் போட்டாங்கள்.

என்ன செய்யலாம்?

அருமையான ஐடியா!

அதே மேசன்மாரைக் கொண்டு அதே நேரத்திலையே என்ரை வீட்டு வேலைகளையும் ஆரம்பிச்சேன். அவங்கள் மூலமே சீமெந்துகள் ஒவ்வொண்டாய் வீட்டை வரத்தொடங்கியது.

உந்த விசயமும் கொஞ்சப் பேருக்குத் தெரிஞ்சிட்டுது. இது தான் எனக்குக் கவலை..!

ஊரிலை ஒற்றுமையாய் இயங்கிய ஒரு ரியூட்டறியை என்ரை நரிப்புத்தியாலை இரண்டாக்கினேன். ஒற்றுமையாக இளைஞர்கள் இயக்கிய விளையாட்டுக் கழகத்தை என்ரை நரிப்புத்தியாலை இரண்டாக்கினேன்.

இன்னொரு சம்பவம்... இருபது வருசமாகுது. அந்த நேரம் சைவர்களை மதம் மாத்திற வெளிநாட்டு நிறுவனம் ஒண்டுக்கு அதுக்கான கட்டிடம் கட்ட காணி தேவையாம் எண்டு அறிஞ்சேன். நல்ல சந்தர்ப்பம்...

கணிவாங்கித் தாறதிற்கு புறோக்கர் காசு எவ்வளவு எண்டு விசாரிச்சேன். எங்கே வாங்கலாம்? அப்போது ஊரிலை அதிபராயிருந்த தவக்குமார் அதிபரின் ஞாபகம் வந்துது. அவர் வெறும் புத்தக படிப்புத்தான்.

அப்பாவி. என்ரை நரிப்புத்திக்கு ஈடு குடுக்க முடியுமோ?  தந்திரமாகக் கதைச்சேன். மிந்திரை வீதியிலை இருந்த அவற்றை அஞ்சு பரப்பு காணியை வாங்கிக் குடுத்தேன். எனக்கு அந்த நேரம் சுளையாய் பதினையாயிரம் கிடைச்சுது.

பிறகு அவங்கள் கட்டிடம் கட்டினாங்கள். விசயம் ஊர்முழுக்க பரவிவிட்டுது. மதம் மாத்திறவைக்கு காணி கொடுத்ததற்காக சனமெல்லாம் அதிபரைத்தானே திட்டித் தீர்த்துது. அவரும் பிறகு விசயம் அறிஞ்சு அழுதவராம். நான் தானே புத்திசாலித்தனமாய் காணி விற்பனையிலை சாட்சிக்கு ஒப்பமிடவும் மறுத்திட்டேனே! பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு கல் எறிந்ததுக்காக       ஊர்ப்பெடியள் கொஞ்சப்பேர் உள்ளுக்கையும் இருந்தவங்கள்.

எனக்கென்ன? சுளையாய் பதினையாயிரம்! இன்னொரு சம்பவம்....

ஊரிலை ஒரு துண்டு நிலமில்லாத ஒருதர்  உரும்பிராயிலை இருக்கிறார். என்ரை ஊர்... என்ரை பள்ளிக்கூடம் எண்டு வந்தார்.

விடலாமோ? பள்ளிக்கூடத்திலை  என்ன நடந்தாலும் நான் தான் மாலை மரியாதையுடன் அழைக்கப் படுவேன். இதுக்காக வெளிநாட்டவர் ஒரு தருட்டை இருந்து முப்பதாயிரம் ரூபா பரிசளிப்பு விழாவுக்கென்று வாங்கிக் குடுக்கிறனான்.

இந்த அதிபர் வந்த பிறகு எனக்குப் பிடிக்காத விசயங்களை செய்யத்தொடங்கி விட்டார். வீடு வீடாய் திரிஞ்சு பிள்ளையளை சேர்த்தார். எல்லாரும் பள்ளிக்கூடத்திற்கு காசுகளை அள்ளியிறைக்கத் தொடங்கியிட்டினம்.

அப்ப என்ரை முப்பதாயிரம்ரூபா வெளி நாட்டுக் காசுக்கு என்ன மதிப்பு? அதோடை விழாக்களுக்கு ஊரிலை இருக்கிற வேறை ஆக்களையும் கூப்பிட தொடங்கிவிட்டார். எளிய சாதியளின்ரை பிள்ளையளை படிப்பிச்சு முன்னேற்றப் போறாராம்.

பள்ளிக்கூடம் முன்னேறும் போலை தெரிஞ்சுது. நான் விதானையாய் இருக்கேக்கை எளியசாதியளை அதிகாரத்தோடை நிக்க வைச்சுத்தான் கதைக்கிறனான். இப்ப கூட கோயிலுக்கை விடுறயில்லை. ஆனால் பிள்ளையொண்டைத் தத்தெடுக்க மட்டும் நான் சாதி பாக்கயில்லை!

அந்தப் பிள்ளையையே உடுவில்லை வேறை மதப்பள்ளிக்கூடம் ஒண்டிலை எவ்வளவு காசை குடுத்து படிப்பிக்கிறேன். ஊரிலை இருக்கிற எளிய சாதிப்பிள்ளையள் படிச்சு வர விடலாமோ? சந்தர்ப்பத்தைப் பாத்துக் கொண்டு இருந்தேன்.

வெறிக்குட்டி நவதாசன்ரை மோன் சுதனும் ஊர்ப் பள்ளிக்குடத்திலை தான். அவன் நல்ல நடிகன்! அதிபருக்கு  எதிராக அவன்மூலம் வாத்திமார் பலரையும்,படிப்பறிவில்லாத பெற்றோர் சிலரையும் தூண்டிவிட்டேன்.

என்ரை அடியாளாய் தைலங்கடவையிலை இருக்கிறவன் சுத்தன்ரை மோன் கிறிஸ்குமார். அவன்ரை வீட்டில தான் மதமாற்ற வேலையளுக்கும் ஒழுங்கு செய்து குடுத்திருக்கிறேன். அவன்ரை பிள்ளையளும் ஊர்ப் பள்ளிக்குடத்திலை தான் படிக்கினம்.

அவனையும் அதிபருக்கு எதிராய் அனுப்பிவிட்டேன். அதிபரோடை நண்பன் மாதிரி நடிச்ச சிறுவர் உத்தியோகத்தரான வெறிக்குட்டி மூலம் தந்திரமாய் தகவல்களை அறிஞ்சேன்.

ஊர் வாத்தி சுதன் மூலம் அதிபர் வராத நாள் பார்த்து பாடசாலைக் கேற்றுக்கு வேறை ஆமைப்பூட்டு போட்டு பூட்டுவித்தோம். படிக்கிற பிள்ளையளை பள்ளிக்கூட கேற்றுக்கு வெளியிலை றோட்டிலை நிப்பாட்டினோம். மீடியாக்காரர் சிலரையும் காசு குடுத்து அனுப்பினேன்.

மாகாண கல்விச் செயலாளரை வரப்பண்ணி அதிபரை மாட்டிவிட்டேன். எல்லாம் வெறிக்குட்டியின் மோன் சுதன்ரை உதவியாலைதான். இனி ஊரவர் ஆரெண்டாலும் ஊர்ப்பள்ளிக் கூடத்தை நிமிர்த்த நினைப்பினமோ?     ஏலுமெண்டால் வரட்டும்.

உந்தப் பேய்ச்சனங்களை எப்பிடி ஏமாத்திறதெண்டு எனக்குத் தெரியும்! இருந்தாலும்.... இந்தக் கோயிலாலும் துரத்துதுகளோ எண்டு ஒரு பயம் ... ஹி... ஹி... ஹி... திருவிழா ஆரம்பிச்சுட்டுதல்லோ! நான் பசுத்தோல் போர்த்தும் நேரம்...! அப்ப நான் வாறன்...!

(யாவும் கற்பனையே)

இரா. ஜெயக்குமார்

Comments