முள்ளு முருங்கை மரம் | தினகரன் வாரமஞ்சரி

முள்ளு முருங்கை மரம்

படித்துக்கொண்டிருந்த கணேசன் யோசனை வந்தவனாக,”அம்மா இஞ்ச பாரேன். இந்த முள்ளு முருங்கை மரத்தை வெட்டாமல், இவ்வளவு மொத்தமாய் வரும்வரை விட்டிருக்கிறார் பக்கத்து வீட்டு கிரகன் அண்ணை. எங்களின்ரை குசினியோடை நிக்குது. காத்தடிச்சு முறிஞ்சுதெண்டா என்ன செய்யறது அம்மா.” என்று தாய் தெய்வியிடம் கேட்டான்.

தெய்வி என்று அழைக்கப்படுவது தெய்வானை ஆச்சியைத்தான்.

தெய்வி,”எடே மோனே கணேசா, அவன் கிரகன் பெரிய நஞ்சனடா. உவங்கள் முந்தி எங்கட தோட்டத்து காணிக்கையும் தங்கட கலப்பையால் உழுது எல்லைகளை கிளப்பி கொஞ்சம் கொஞ்சமாக அரக்கி அரக்கி தங்கட காணிய பெருப்பிச்சவங்கள்.

எங்களின்ரை தோட்ட காணியின்ரை பரப்பு தான் குறைஞ்சு குறைஞ்சு வந்தது. இப்பவும் என்ன நஞ்சு வேலைக்காக உந்த மரத்தை விட்டிருக்கிறானோ தெரியேல்லை.” என்று மகன் கணேசனிடம் கூறினார்.

கணேசன் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது வருடத்தில் படிக்கிறவன். சிறுவயதில் இருந்து பெற்றோர்களும் சகோதரர்களும் நேர்மையாக வாழ்ந்து வரும் நடைமுறைகளை அவதானித்து அவ்வாறு வாழ வேண்டும் என்று விரும்புபவன்.

ஆச்சி தெய்வி சின்னனிலை பிள்ளைகளுக்கு அடிச்சு பயப்படுத்தி வச்சிருந்தா. வளர்ந்தாப் போலை அவவுக்கு தன்ர ஆம்பள பிள்ளைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. அவவுக்கு ஆறு பெடியங்கள். பெடியங்களை பெற்றதாலை சொந்தக்காரரின் பொறாமைக்கு உட்பட்டதுதான் மிச்சம். 

பிள்ளைகளால் அவவுக்கு பெரிய சுகம் ஒண்டும் கிடைக்கவில்லை. அவை ஒவ்வொருத்தரும் வளர வளர தங்களின்ரை போக்கில போகத் தொடங்கிவிட்டினம்.

கணேசனும் வெளியாட்களுக்கு நல்ல பெடியன் தான். ஆனால் வீட்டிலை தாய் சொல்லுறது ஒண்டையும் கேட்க மாட்டான். பெரிய ஆளான பிறகு கணேசன் செய்யிற அட்டகாசங்களைப் பார்த்து மனிசி தெய்விக்கு பயமாக இருந்தது. அதனால் கணேசன் எது செய்தாலும் அவ ஒண்டும் பேச மாட்டா. கணேசனும் இளமைத் துடிப்பில் தான் நினைச்சதெல்லாம் செய்வான். தாயை கணக்கெடுக்க மாட்டான்.

சும்மா பேச்சுக்கு எதையாவது கதைப்பான். அப்படித்தான் அந்த முள்ளு முருங்கை மரத்தை பற்றியும் தாயிடம் கேட்டான். கிரகன் படிக்கேல்லை எண்டாலும் சின்னனிலை இருந்து தனது தாய் தகப்பன் மாதிரி வறுகி வறுகி காசு சேர்க்க வேண்டும் என்று பேராசை கொண்டிருந்தான். அதற்காக அவன் களவெடுப்பதில் ஈடுபடவில்லை. பக்கத்து காணிகளை அபகரிப்பது, காசை செலவழிக்காமல் இருக்கிறது, போன்ற விடயங்கள் மூலம் தங்களது செல்வத்தை பெருக்க முயன்றான். 

கிரகன் தனது முப்பத்தி ஐந்து வயதில்தான் திருமணம் செய்தான். கல்யாணம் செய்த பின்னர் தனது பெற்றோர்களின் சொத்தான கணேசனின் வீட்டுக்கு பக்கத்திலிருந்த வீட்டிலதான் மனைவியுடன் குடியேறினான். அது பெரிய காணியாய் இருந்ததால் அதில் மரவள்ளி, வாழை, பழமரங்கள் போன்றவற்றையும் நாட்டினான்.

கணேசன் அடுத்த நாள் கிரகனுடைய வளவுக்குள் கால் வச்சதை அம்மா தெய்வி கண்டுவிட்டார். அவ மெல்லமாய் அடிக்குரலில் கணேசனுக்கு ,”மோனே சண்டைகிண்டைக்கு போகிடாதை” என்றார். கணேசன் தாயின் வார்த்தைகளை கேட்டும் கேட்காதது போல் கிரகனின் வீட்டுக்கு போனான். அங்க வெளியில கிரகனின் மனுஷி சரசி அக்கா தான் இருந்தார். சரசி என்று அவவை ஆக்கள் கூப்பிட்டாலும் அவவின்ரை உண்மையான பெயர் சரஸ்வதி என்பதாகும்.

கிரகனின் வீட்டு வாசலுக்கு கணேசன் போனபோது சரசி அக்கா,”வா தம்பி வாங்கோ” என்று வரவேற்றார். பின்னர், “என்ன தம்பி இந்தப் பக்கம் ஒருநாளும் வர மாட்டீங்களே” என்று கூறினார். கணேசன் அமைதியாக சரசி அக்காவிடம் முள்ளு முருங்கை மரத்தை தனது விரல்களால் சுட்டிக் காட்டி,

“அக்கா அங்க பாருங்கோ, எங்கட குசினிக்கு பக்கத்துல முள்ளு முருங்கை மரத்தை எவ்வளவு பெரிசா வளரவிட்டு இருக்கிறீங்கள். மரம் பாறி விழுந்துதெண்டால் குசினிக்கு எவ்வளவு பெரிய சேதம் வரும். அதை கிரகன் அண்ணாவிடம் சொல்லி ஒருக்கா வெட்டி விடுங்கோ” என்று கூறினான்.

இதை கேட்டுக்கொண்டு வீட்டுக்குள்ளே இருந்த கிரகன் வெளியே வந்து,”தம்பி இஞ்ச பாருங்கோ. எங்களின்ரை வளவுக்குள்ள மரவள்ளி நட்டு இறைக்கிறேன். உங்களின்ரை வேலியிலை இருக்கிற பெரிய பூவரசு மரத்தை பாருங்கோ. எவ்வளவு பெருசா வளர்ந்திருக்கு. அதால எங்களுக்கு எவ்வளவு பாடு. நீங்க அந்த பூவரசம் மரத்தை தறிச்சு விட்டால் நானும் முள்ளு முருங்கை மரத்தை தறிச்சு விடுகிறேன்” என்று கூறினான்.

 கணேசன் சரசி அக்காவிடம், “அப்ப நாங்களும் பூவரசு மரத்தை தறிக்கிறோம். நீங்களும் முள்ளு முருங்கை மரத்தை தறிச்சு விடுங்கோ “என்று கூறினான். அப்போது சரசி அக்கா நல்ல பிள்ளை தனமாக,”சரி தம்பி பிரச்சினைகளை சமாதானமாக பேசி தீர்க்கிறது நல்லதுதானே” என்றார். 

கணேசன் இளைஞனாக கள்ளங்கபடம் அற்றவனாக இருந்தான். அவனுக்கு பெரிய அளவில் அனுபவங்கள் கிடைக்கவில்லை. வெளுத்ததெல்லாம் பால் என்பதுபோல சரசி அக்கா நேர்மையாக பேசுகிறார் என அப்பாவித்தனமாக நம்பி விட்டான். கிரகனினதும் சரசியினதும் நயவஞ்சகத்தை அவன்உணரவில்லை.

கணேசன் வீட்டுக்கு வந்ததும் அனுபவ சாலியான தாய் தெய்வி உண்மையை புரிந்துகொண்டார். ஆனால் கணேசனின் முரட்டுத்தனமான குணத்திற்கு பயந்து பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளவில்லை. எனினும் கணேசனிடம்,”என்னடா அங்கால போனாய். என்ன கதைச்சனி.” என்று கேட்டார்.

கணேசன்,”அவை சொல்லுகினம் எங்களின்ரை வேலியில் உள்ள பெரிய பூவரசு மரம் அவையின்ரை பயிர்களுக்கு பாடாய் இருக்குதாம். எங்கட பூவரசை வெட்டினால் தாங்களும் முள்ளு முருங்கை மரத்தை வெட்டுறதெண்டு சொல்லுகினம்.” என்று கூறினான்.

தாய் தெய்வி “எடே பார்த்தியேடா நான் சொன்னேன் அவன் நஞ்சு வேலைக்காக தான் வெட்டாமல் இருக்கிறான் என்றேன்.” என்று கூறினர். மேலும் “அந்த பூவரசு எவ்வளவு காலமாய் நிக்குதடா. கோழியள் எல்லாம் இரவில அதுல தானேடா பறந்துபோய் தூங்குகிறது. எப்படியடா அதை நீ வெட்ட சம்மதிச்சாய். ஏதோ சொல்ல வேண்டியத சொல்லிப்போட்டேன். இனி நீ நினைச்ச மாதிரி செய்.” என்று கூறினார். 

கணேசன் என்ன செய்வதென்று தெரியாமல் கொஞ்ச நாட்களாய் யோசித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் தீர்மானத்துக்கு வந்தவனாக கோடாலியை எடுத்துக்கொண்டு பூவரசு மரத்தை தறிப்பதற்காக சென்றான். அப்போது தாய் தெய்வி வீட்டில் இருக்கவில்லை. கணேசன் பல மணித்தியாலங்களை செலவழித்து பூவரசு மரத்தை அடியோடு வெட்டி விழுத்தினான். இதைக்கண்ட சரசியும் கிரகனும் தங்களுக்குள் நையாண்டி சிரிப்பொன்றை பகிர்ந்து கொண்டனர்.

கணேசன் அவர்களது சிரிப்பை கண்டும் விளங்கிக்கொள்ள முடியாதவனாக இருந்தான். அன்று தோட்டத்தில் கணேசனின் தந்தை பயிர்ச் செய்கைக்காக நிலத்தை பண்படுத்திக்கொண்டு இருந்தார்.

அப்போது கணேசனின் தாய் தெய்வி அவருக்கு உதவி செய்வதற்காக உணவு சமைத்துக் கொண்டு தோட்டத்துக்கு போயிருந்தார். மாலையில் வீட்டுக்கு வந்தபோது பூவரசு மரத்தை காணவில்லை.

தெய்வியின் உயிரே நின்றுவிடும் போல இருந்தது.தெய்விக்கு மயக்கம் வந்தது. தெய்வி சிறுவயது முதல் அந்த பூவரசு மரத்தின் நிழலின் விளையாடுவாள். அதன் சருகுகளை கூட்டி குப்பையில் போடுவாள். அவை தோட்டத்தில் பசளையாக பயன்படும் போது மகிழ்ச்சி அடைவாள். இப்போது

பூவரசு மரம் இல்லாமல் போனதால் மிகுந்த துயரம் அடைந்தார். அப்போது சிறிது தூரத்தில் கணேசன் பூவரசு மரத்தை துண்டுதுண்டாக வெட்டுவதை கண்டார்.

தாய் தெய்வி கணேசனை நோக்கி வேகமாக நடந்து வந்து, “பாழ்படுவானே என்னடா செய்தனீ.” என்று கத்தினார்.

அதற்குமேல் அவரால் பேச முடியவில்லை. தோட்டத்திலிருந்து கொண்டுவந்த சாமான்களை அப்படியே போட்டுவிட்டு திண்ணையில் போய் இருந்து தலையில் கை வைத்துக்கொண்டு அழுதார்.

தெய்வியின் உரத்த சத்தத்தையும், அழுகையையும் கண்ட கிரகனும் சரசியும் தங்களுக்குள் குதூகலம் அடைந்தனர். சரசி கிரகனிடம்,”தெய்வி மோட்டு பெடியங்களை பெத்து சீரளியிறா” என்று கூறினாள். இது சாடைமாடையாக தெய்வியின் காதிலும் விழுந்தது. தெய்வி தன் விதியை எண்ணி துயரமடைந்தாள்.

இதன்பின் கணேசன் முள்ளு முருங்கை மரத்தை கிரகன் எப்ப வெட்டுவான் என்று பார்த்துக்கொண்டிருந்தான். பல மாதங்களாகியும் அது வெட்டப்படவில்லை. ஆனால் தனது நேர்மையான குணத்தினால் கணேசன் கிரகனுடன் அதற்காக சண்டைக்கு போகவும் இல்லை.

ஒரு நாள் பகல் சூறாவளிக் காற்று பலத்த வேகத்துடன்  திடீரென்று அடித்தது. அப்போது கிரகனின் ஆறு வயது மகன் கணேசனின் வீட்டு வேலிக்கு அண்மையில் முள்ளு முருங்கை மரத்தின் கீழ் நின்று விளையாடிக்கொண்டு இருந்தான்.

திடீரென்று வேகமாக வீசிய காற்றை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அப்போது சடபுடவென்ற சத்தத்துடன் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. சில வினாடிகளில் திடீரென்று சிறுவன் ஒருவன் பயங்கரமாக அலறும் சத்தமும் கேட்டது.

கணேசன் சத்தம் வந்து திசையில் வேலியால் எட்டிப்பார்த்தான். கணேசனின் வீட்டு குசினிக்கு அண்மையில் கிரகனால் வெட்டப்படாத முள்ளு முருங்கை மரம் கிரகனின் வளவுக்குள் முறிந்து விழுந்து கிடந்தது. கிரகனின் ஆறு வயது

மகன் இரத்த வெள்ளத்தில் முனகிக்கொண்டு இருந்தான்.

இது யாருடைய தீர்ப்பு யாதுமறியாத அப்பாவிச் சிறுவன் பெற்றோரின் கொடுஞ்செயல்களால் துன்புறுவது என்ன நீதி? அதேநேரம் கணேசனின் விட்டில் பூவரசு விறகு உணவு சமைப்பதற்காக முழுமையாக எரிந்து முடிந்திருந்தது. (யாவும் கற்பனையே)

குப்பிளான்  ஆ.மோகனசுந்தரம்

Comments