தொலைந்த தோழமை... | தினகரன் வாரமஞ்சரி

தொலைந்த தோழமை...

காலை எட்டு மணிக்கு வழமை போன்ற எழுந்து கொண்டான் ராபி. வீட்டில் யாருமே அவனைப் பற்றி அலட்டிக்கொள்வதில்லை. ஏழு ஆண்டுகளாக அவன் சித்த சுவாதீனமற்றுப் போயிருந்தான். யாருடனும் பேசுவதில்லை. அழகாகப் பேசக்கூடியவன்தான். ஆனால் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தையடுத்து ஊமையாகிப்போனான். அவளது தாய் மைமூனா மட்டும் தன் பிள்ளையின் நிலைகண்டு பெரும் கவலையில் மூழ்கிப் போயிருந்தாள்.  

மேசையில் இருந்த ஆறிப்போன தேநீரை ஒரே மூச்சில் குடித்து விட்டு ஒரு வாரமாகக் கழுவப்படாத சேர்ட்டைப் போட்டுக்கொண்டு வெளியே கிளம்பினார் ராபி. அவன் வெளியே போகும் போது யாரும் எங்கே போகிறாய் என்று கேட்பதில்லை. அவன் போவது ஆற்றங்கரைக்குத்தான் என்பதை ஊரே அறிந்துவைத்துள்ளது வீட்டுக்குப் பின்புறவேலியை கடந்து வயலில் இறங்கி கல்பொத்த கல்லுக்கு வந்து சிறிது நேரம் இருந்து விட்டு நேரே ஆற்றங்கரையை அடைந்து அங்கிருக்கும் ஆலமரத்தடியில் உட்கார்ந்து ஆற்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.  

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்தச் சம்பவம் அவனது மனக்கண்களில் நிழலாடும். தனது உற்ற தோழன் ஷபீக்குடன் ஆற்றில் நீச்சலடித்து குளித்து விளையாடும் போது நடந்த அந்தச் சம்பவத்தின் பின்னரே ராபி இந்த நிலைக்கு ஆளானான். நல்ல மழைக்காலம் அது. ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடிக்கொண்டிருந்தது. கரையிலிருந்து ஆற்றின் மையம் வரை நீந்திச்சென்ற ராபி சுழியொன்றில் சிக்கி அள்ளுப்பட்டுப்போனான். ஆற்றில் வெள்ளம் கூடியிருந்ததால் யாரும் ஆற்றின் மையைத்துக்குப்போக மாட்டார்கள். மூழ்கிப்போன ஷாபி நீண்ட நேரமாக வெளியே வராததால் ராபி கலவரமடைந்து அங்கு நீராடிக் கொண்டிருந்தவர்களிடம் விஷயத்தை சொல்லி கூச்சலிட்டான். நீந்தத் தெரிந்த சில இளைஞர்கள் தேடிப்பார்த்துவிட்டு வெறுங்கையுடன் கரைக்கு வந்தனர். 

பகலானது நீராடவந்தவர்கள் வீடுகளுக்குத் திரும்பிய வண்ணமிருந்தனர். ராபி மட்டும் அங்கிருந்து விலகாமல் ஆற்றையே பார்த்துக் கொண்டிருந்தான் நண்பன் ஷாபிக்காக. மாலையானபோது ஏதோ கரையொங்குவதைக்கண்டு பாய்ந்தோடிச் சென்று பார்த்தான். அது தனது தோழனின் உயிரற்ற உடல்தான். உடலை கட்டிப்பிடித்து .... கதறி அழுதான் ராபி. ஆற்றங்கரையில் புரண்டு புரண்டு அழுதான் கரையில் நின்றவர்கள் உடலைக்கொண்டுவந்து விசாரணைகளுக்குப் பினனர் அதனை அடக்கம் செய்தனர். மையவாடியிலும் இரவு நீண்ட நேரம் தோழனின் கபுரடியில் நின்று அழுதான். பலரதும் வேண்டுகோளுக்குப்பின்னர் வீட்டுக்குவந்து படுக்கையில் விழுந்தவன் அன்று முதல் பேச்சை மறந்தான். யாருடனும் பேச அவன் விரும்பவில்லை. அதன் பின்னர் ராபி நடைப்பிணமானான். 

அன்று முதல் ஆற்றுக்கு நீராடச் செல்வதை அவன் மறந்து போனான். ஆனால் தினந்தோறும் ஆற்றங்கரைக்குச் சென்று தன் தோழனின் வருகைக்காக காத்து நின்றான். ராபிக்கு இப்போது உலகமே வெறுத்தது உறறைார் உறவினர்களுடனும் பேசுவதில்லை. சில நாட்களாக படுக்கை அறையிலிருந்து வெளியேவராமல் வேதனையில் உழன்றான். நீர்ச்சுழி என்ற பெயரில் வந்த காலனை வெறுத்தான். இப்போது அவன் ஊமையாகிப்போனான். சித்த சுவாதீனமற்று கண்கண்டபோக்கில் திரியத் தொடங்கினான். இப்படியே காலம் கடந்து போனது வாரம் ஒரு நாள் பள்ளிவாசல் மையவாடிக்குச் சென்று நண்பனுக்காக பிரார்த்தித்தான். மையவாடிக்கு அருகில் உள்ள அந்த மரத்தில் சாய்ந்த வண்ணம் நீண்ட நேரம் வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பின்னர் தர்ஹாவுக்கு வந்து கையிலுள்ள சில்லறைகளை எடுத்து காணிக்ைகயாக உண்டியலில் போட்டுவிட்டு வீட்டுக்கு வருவான். 

கடந்த சில நாட்களாக மகன் ராபியின் போக்கினைப் பார்த்து தாய் மைமூனாவுக்கு ஒரு அச்சம் உருவானது. அதனை அவள் வீட்டில் யாரிடமும் கூறவில்லை. பெற்ற தாயல்லவா? ஒவ்வொரு இரவிலும் மகனுக்காக இறைவனிடம் பிரார்த்திக்கத் தவறவில்லை. யா அல்லாஹ் என் மகனின் நிலையை மாற்று வாயாக! அவனை நல்லதொரு நிலைக்கு மீட்டுத் தருவாயாக' என்று பிரார்த்தித்த வண்ணமே இருந்தாள். ஒரு நாள் பிரார்த்தித்த நிலையிலே அந்தத்தாய் சற்றே கண்ணயர்ந்து விட்டாள். அதன்போது அவள் கண்ட கனவு அவளுக்குப் பெரும் கிலியை ஏற்படுத்திவிட்டது. விடிகாலைப் பொழுதில் தொழுத கையோடு யாருக்கும் தெரியாமல் தர்ஹாவுக்கு விரைந்து வந்து அங்கு அடங்கப்பட்டிருக்கும் நாதாக்களிடம் மன்றாடி அழுது பிரார்த்தித்தாள். 

மைமூனா கண்ட கனவு வீட்டில் கல்யாண நிகழ்வு இடம்பெறுவதாகவும் தனது மகன் ராபிக்கே திருமணம் நடப்பதாகவும் கண்டாள். இது கெட்ட சகுமாகவே அவள் நினைத்து அச்சமடைந்தாள்.  

அன்று காலையில் வீட்டை விட்டு வெளியேறிய ராபி மாலையானபோதும் வீட்டுக்குத் திரும்பவில்லை, இதனால் கலவரமடைந்த தாய் மைமூனாவுக்கு பெரும் கலக்கம் ஏற்பட்டது. யாரிடமும் சொல்லவும் முடியாது. சொன்னாலும் அலட்டிக் கொள்ளப் போவதில்லை என்பதை அவள் நன்கறிவாள். அதனால் அவள் மனதளவில் அழுது வெம்பினாள். 

மாலையில் மஃரிப் தொழுத பின்னர் தர்ஹாபக்கம் வந்த பள்ளி மோதினார் காசிம்லெப்பை கோங்காய் மரத்தடியில் யாரோ சாய்ந்து படுத்திருப்பதைக் கண்டார். அங்கு போய்ப்பார்த்தபோது அந்த மரத்தின்  வேரடியில் ராபி சாய்ந்திருப்பதைக் கண்டு சப்தமிட்டு தொழுகைக்காக வந்திருந்தவர்களை அழைத்தார். சப்தம் கேட்டுஓடி வந்தவர்கள் ராபியை பிடித்துத் தூக்கினர். அங்கு ராபி உணர்விழந்த நிலையிலேயே காணப்பட்டான். முதியவர் ஒருவர் அவனை நாடி பிடித்துப் பார்த்தபோது ராபியின் ரூஹ் (உயிர்) பிரிந்து விட்டதாக செய்கையால் காட்டினார்.  

உடனடியாக ராபியின் வீட்டுக்குத் தகவல் பறந்தது வீட்டார் ஓடோடிவந்து பார்த்து செய்வதறியாது நின்றனர். தாய் மைமூனாவுக்கு தான் கண்ட கனவு பலித்து விட்டதை உணர்ந்து. தனது மகனின் உயிரற்ற உடலை அனைத்து முத்தமிட்டுப் புலம்பினாள். தர்ஹாவின் பக்கம் கைநீட்டி மகனுக்காக இறைவனிடம் பிழைபொறுக்க வேண்டி பிரார்த்திதாள். 

தன் தோழமை பிரிந்த துயரில் ஏழாண்டுகளாக மௌனித்து வாழ்ந்த ராபி என்ற அந்த ஆத்மா தனது தொலைந்த தோழமையை காண புறப்பட்டுச் சென்றிருந்தது. மையத்தின் முகம் புன்முறுவல் பூத்திருந்தது. தன் தோழமையை கண்ட மகிழ்ச்சியையே அது உணர்த்தியது.

கலாபூஷணம்  ஈழத்து நூன்

Comments