தலித் இலக்கியத்தின் பிதாமகர் கே. டானியல் | Page 3 | தினகரன் வாரமஞ்சரி

தலித் இலக்கியத்தின் பிதாமகர் கே. டானியல்

தமிழக எழுத்தாளர்களில் ஒருவரும், இயற்பியல் பேராசிரியருமான அ.மார்க்ஸ் கே. டானியல் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

'டானியல் அதிகம் படித்தவரல்ல. புதிய புதிய இலக்கிய உத்திகள் நவீன சிந்தனைகள் முதலியவைகளையெல்லாம் அறிமுகப்படுத்திக் கொண்டவருமல்ல... எதார்த்தவாத இலக்கிய வடிவத்தை அவர் தாண்டியதில்லை. தலித்துகளுக்கான போராட்ட இலக்கியத்தின் வடிவம் மைய நீரோட்ட வடிவத்திலிருந்து மாறுபட்டிருக்க வேண்டாமா? என்ற கேள்விகளையெல்லாம் அவரிடம் யாரும் கேட்பதுமில்லை. எனினும்கூட, இன்றளவும் தமிழின் தலித் இலக்கிய முன்னோடி என்று சொன்னால் டானியலைத்தவிர வேறு யாரும் நம் நினைவுக்கு வருவது மில்லை' (மனுசங்க- செப்டம்பர் -அக்டோபர் 1990இதழ்)

'தலித்' என்ற மராத்திச் சொல்லுக்கு 'உடைந்து போனவர்கள்' என்று பொருள். எழுபதுகளில் மராட்டியத்தில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களும், இந்திய வரலாற்றில் சாதி முறையில் ஒடுக்கப்பட்ட இனங்களைச் சேர்ந்த மக்களில் சிலரும், தங்களைத் தலித் என்று அழைத்துக் கொள்ளத் தொடங்கினர். பின்னர், இந்தப் பெயர் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நிலைத்துவிட்டது என்று பிரிட்டானிக்கா கலைக் களஞ்சியம் கூறுகிறது.

இந்தியாவில் தலித் இலக்கியம் என்ற இலக்கிய வகைமை தோன்றுவதற்கு முன்னரே தமிழில் தலித் இலக்கியம் படைத்தவர் கே.டானியல். இவர் ஈழத்துத் தீண்டாமைக் கொடுமைகளைத் தமது எதார்த்த எழுத்துகள் அனைத்திற்கும் கருப்பொருளாய் எடுத்துக்கொண்டவர்.

'சுதந்திரன்' இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் 'அமரகாவியம் 'என்னும் சிறுகதை  பரிசு பெற்றதன் மூலம் கே. டானியல் எழுத்துலகிற்கு அறிமுகமானார்.

இவர், தனது முதலாவது நாவலான பஞ்சமர் பிறந்த கதையை பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

மாக்ஸிம் கார்க்கியின் 'தாய்' நாவலை நான் படித்தேன். நீண்டகாலமாக அது என் மனதில் கிடந்தது. ரஷ்ய நாட்டின் விடுதலைக்கான நடைமுறைச் செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அந்தத் தாயைப் போன்று நமது நாட்டினதும் சமூகத்தினதும் விடுதலைக்காக அன்றாட வாழ்க்கையோடு சேர்ந்து வழிநடத்தக்கூடிய ஒரு பாத்திரம் ஏன் பிறக்கக்கூடாது என எண்ணினேன், தேடினேன், சம்பவங்களைச் சேகரித்தேன். அதே தாய்போன்று என் கண்ணுக்கு முன்னால் நடமாடித் திரிந்த ஒரு மனிதரையும் பிடித்துவிட்டேன். அவரின் நடைமுறை வாழ்க்கை முறைகளை அவதானிக்க, அவர் பேசும் சொல் முறைகளைச் சேகரிக்க, அவரின் உடைநடை பாவனைகளை அறிந்துகொள்ள, மொத்தத்தில் அவரைச் சரியானபடி நான் படித்துக்கொள்ள சுமார் மூன்று ஆண்டு காலத்தைக் கழித்தேன். அவருடைய யாழ்ப்பாண நடைமுறை வாழ்க்கையோடு மார்க்ஸிம் கார்க்கியின் தாயையும் சேர்த்துக் கணக்கிட்டு சமப்படுத்தி நான் கற்றுக்கொண்ட அனுபவங்களையும் சேர்த்து இராசண்ணர் என்ற அவரை ஐயாண்ணர் ஆக்கினேன். பஞ்சமர் என்ற நாவல் பிறந்து விட்டது.

யாழ்ப்பாணத்து வாழ்க்கை முறை, யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கு, யாழ்ப்பாணத்துச் சம்பிரதாயங்கள், யாழ்ப்பாணத்து உடைநடை பாவனை, யாழ்ப்பாணத்து வீடு வாசல் அமைப்பு யாழ்ப்பாணத்து விவசாய வாழ்க்கை வளர்ச்சி, யாழ்ப்பாணத்து அரசியல் நடைமுறைகள், யாழ்ப்பாணத்து மண்ணின் அவலங்கள், வீழ்ச்சிகள் எழுச்சிகள் ஆகியவற்றில் எதையுமே பிற நீங்கலாகி நிற்கவிடாமல் பஞ்சமரில் உள்ளடக்கியதில் நான் கார்க்கியையே வழிநடத்தல் காரனாக ஏற்றுக்கொண்டுள்ளேன்.'

டானியல் படைப்புகள் ஒரு திறனாய்வு நோக்கு என்ற கட்டுரையில் கலாநிதி நா. சுப்பிரமணியன்  பின்வருமாறு குறிப்பிடுகிறார்: டானியலின் பஞ்சமர் வரிசை நாவல்கள் அனைத்தினதும் பொதுவான கதையம்சத்தை பின்வரும் இரு கூறுகளுள் அடக்கிவிடலாம்  (1) உயர்சாதியினர் எனப்படுவோர் தாழ்த்தப்பட்டோர் மீது நிகழ்த்தி வந்துள்ள பல்வேறு நிலைக் கொடுமைகளின் விவரணம் (2) அவற்றிற் கெதிராகத் தாழ்த்தப்பட்டோரும் மனிதநேயம் கொண்ட உயர்சாதியினர் எனப்படுவோரும் இணைந்து மேற்கொள்ளும் எழுச்சி சார்ந்த நடவடிக்கைகளின் விவரணம்.

முதல் நாவலான பஞ்சமரில் இந்த இரு கூறுகளும் நேரடியாகவே கதையம்சமாக விரிகின்றன. உயர்சாதியினர் எனப்படுவோரின் சாதித்திமிர், அதனால் அவர்கள் புரியும் அட்டூழியங்கள் என்பன தொடர்பான பல கதைகள், செய்திகள் என்பனவற்றையும் தாழ்த்தப்பட்டோரின் வர்க்க ரீதியான எழுச்சியையும் இந்நாவல் கட்டம் கட்டமாக விபரித்துச் செல்கிறது.

கோவிந்தன் நாவலிலே சாதித்திமிர் பிடித்த ஒரு குடும்பத்தின் வீழ்ச்சி சித்தரிக்கப்படுகிறது. பஞ்சமரின் எழுச்சிக்குமுன் சாதித்திமிர் நிலை தளர்ந்து போவதாகக் காட்டுவது இந்நாவலின் அகநிலையான கதையம்சம். ஆனால் புறநிலையிலே சாதி மீறிய காதல்- பாலியல் உறவு என்ற அம்சத்தை முதன்மைப்படுத்தியதாக இந்நாவல் அமைந்துள்ளது.

அடிமைகள் நாவலும் கோவிந்தனைப் போலவே வேளாளகுலக் குடும்பமொன்றின் வீழ்ச்சியைப் பேசுவது. நிலம் புலம் சொத்து அதிகாரம் அடிமை – குடிமை என்பவற்றுடன் ராசவாழ்வு நடத்திய அக்குடும்பம் கேளிக்கைகள் ஆடம்பரங்கள் சண்டித்தனங்கள் முதலியவற்றால் சீரழிந்து போவதை நான்கு தலைமுறை வரலாற்றினூடாக இந்நாவல் காட்டியமைகின்றது.

கானல் நாவலின் கதையம்சம் மேற்கூறியவற்றினின்று சற்று வேறுபட்டது. தமிழர் மத்தியிற் பரவிய கிறிஸ்தவ மதம் சாதிப் பிரச்சினைக்குத் தீர்வு காட்டும் ஒன்றாக அமைந்ததா? என்ற வினா எழுப்பி விடை காணும் நோக்கில், விமர்சிக்கும் நோக்கில் இது அமைகிறது.

சாதி ஏற்றத் தாழ்வுப் பிரச்சினையில் குடிதண்ணீர பெறுவதில் தாழ்த்தப்பட்டோர் எய்தும் அவலங்களை மையப்படுத்தி கதைப் பொருள் கொண்டமைந்தது தண்ணீர் நாவல்.

தாழ்த்தப்பட்டோரின் சமத்துவம் நோக்கிய எழுச்சி வரலாற்றடன் தமிழரின் இன விடுதலைக்கான இயக்கங்களின் உருவாக்கச் சூழலை இணைத்துப் புனையப்பட்ட நாவல் பஞ்சகோணங்கள். தாழ்த்தப்பட்டோரின் எழுச்சி மேற்படி சூழலில் எத்தகு பாதிப்புகளை எய்திற்று என்பதை இந்நாவல் மூலம் டானியல் உணர்த்த விழைகின்றமை புரிகின்றது. மேற்குறித்தவாறான பஞ்சமர் வரிசை நாவல்களின் கதைகள் நிகழ்களங்கள் என்ற வகையில் யாழ்ப்பாணப் பிரதேசத்தின் பல்வேறு கிராமப்புறங்களும் டானியலின் பார்வைப் பரப்புக்குள் வந்துள்ளன.

இந்நாவல்களில் கதைநிகழ் களங்களைப்போலவே கதை நிகழ்கால எல்லைகளும் விரிவானவையாகும்.

இவை எல்லாவற்றையும் தொகுத்து நோக்கும்போது சாதிப்பிரச்சினையை உள்ளடக்கமாகக் கொண்ட படைப்புகளின் வரலாற்றில் கதையம்சப் பரப்பு,  பிரதேசப்பரப்பு, காலப்பரப்பு ஆகியவற்றில் பஞ்சமர் தரப்பு நாவல்கள் மிக விரிவானவையாக தனிக் கவனத்துக்குரிய கனபரிமாணங்கள் கொண்டவையாகத் திகழ்கின்றமை தெளிவாகும். (இலக்கு சஞ்சிகை, மலர் -4)

டானியலின் ஏனைய படைப்புகளாக 'டானியல் சிறுகதைகள்', 'உலகங்கள் வெல்லப்படுகின்றன' ஆகிய சிறுகதைத் தொகுப்புகள், 'போராளிகள் காத்திருக்கிறார்கள்',  'நெடுந்தூரம்', முதலிய நாவல்கள், பூமரங்கள், மனங்கள் தானாக மாறுவதில்லை, முருங்கை இலைக்கஞ்சி,   பிஞ்சுப்பழம், மையக்குறி, இருளின் கதிர்கள் சொக்கட்டான், சாநிழல் ஆகிய  குறுநாவல்கள், என்பனவும் கே. டானியலின் கடிதங்கள்  என்ற தொகுப்பும் என்கதை என்ற சுயசரிதை நூலும் வெளிவந்துள்ளன.

டானியலின் பஞ்சமர் நாவலும் உலகங்கள் வெல்லப்படுகின்றன சிறுகதைத் தொகுதியும் இலங்கை சாகித்திய விருதினைப் பெற்றவை.

கே.டானியல் 15.04.1927அன்று ஆனைக்கோட்டை என்னும் கிராமத்தில், கிறகொரி - மரியாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.

குடும்பத்தின் வறுமைநிலை காரணமாக பள்ளிப் படிப்பை ஆறாம் வகுப்புக்குமேல் தொடர முடியவில்லை.

கே.டானியல் தமக்கு விவரம் தெரிந்த காலம் முதல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம், புரட்சிகர எழுத்தாளர் அமைப்பு, சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம், மக்கள் கலை இலக்கியப் பெருமன்றம் முதலிய அமைப்புகளில் இணைந்து முக்கிய பங்காற்றினார்.

இவர், சிறுவனாக இருந்த காலத்திலேயே யாழ்ப்பாணத்தில் சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டார். மாவிட்டபுரம் ஆலயம் பிரவேசப் போராட்டத்தில் கலந்துகொண்டு, பஞ்சமருக்காக குரலெழுப்பியதற்காக கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். டானியல் தமது வாழ்நாளில் 11மாதங்கள் சிறையில் கழித்தார்.  இவர், சலவைத் தொழிலாளி, கள்ளுக் கொட்டில், கடல் தொழில், கூலித் தொழில், கால்நடை வளர்ப்பு, தீந்தை பூசுதல், குளிர்பான வியாபாரம், பழைய இரும்பு வியாபாரம், வெல்டிங் கடைசல், இயந்திரங்கள் பழுது பார்த்தல் முதலிய பல்வேறு தொழில்கள் செய்து தமது வாழ்க்கையை நடத்தியுள்ளார்.

பிற்பட்ட காலத்தில் நீரிழிவு நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட இவர், தமிழகம் சென்று நீரிழிவு நோய்க்கான சிகிச்சை பெற்ற வேளையில் தஞ்சாவூர் மருத்துவமனையில் 23-.03-.1986இல் காலமானார். அவரது பூதவுடல் அவரது நண்பரான அ.மார்க்ஸ் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி அஞ்சலியின் பின்னர் அடக்கம் செய்யப்பட்டது. புரட்சி பண்பாட்டு இயக்கத்தினர் 1987இல் டானியலுக்கு கல்லறை அமைத்தனர்.

Comments