பல ஜனநாயக நாடுகள் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருப்பது ஏன்? | தினகரன் வாரமஞ்சரி

பல ஜனநாயக நாடுகள் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருப்பது ஏன்?

சமூகத்தின் அடிமட்டத்தொழிலில் ஒருவரை வேலைக்கு அமர்த்தும் போது அதற்கு அடைப்படைக் கல்வித்தகைமையை எதிர்பார்க்கும் ஜனநாயகக் கட்டுமானங்கள் ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்கு எதுவித கல்வித்தகைமைகளையும் கருத்திற்கொள்ளாமல் விடுவது வெட்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். மறுபுறம் பணபலம் இல்லாத ஒரு நபரால் இலகுவில் அரசியலில் புகுந்துவிட முடியாது என்பது பிரபல ஜனநாயகத்தின் மற்றொரு அவலட்சணமாக முகமாகும்

ஒரு ஜனநாயக நாடு சிறப்பாகச் செயற்பட வேண்டுமென்றால் அந்நாட்டின் தாபன ரீதியான கட்டமைப்புகள் சுதந்திரமாகவும் சிறப்பாகவும் செயற்பட வேண்டும். நாட்டின் இயல்பான இயக்கத்திற்கு அவசியமான நிறுவனங்கள் தடைகளின்றிச் செயற்பட வேண்டும்.

நாட்டின் பொருளாதார முகவர்களாகிய வீட்டுத்துறையினர் நிறுவனத்துறையினர் மற்றும் நாட்டை நிர்வகிக்கும் அரசாங்கத்துறையினர் ஆகிய மூன்றும் ஒன்றுடனொன்று தொடர்புபட்டு நாளாந்த பொருளாதார செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும்.

பொதுவாக நோக்குமிடத்து நாடொன்றில் அரசியல்வாதிகளையும் நிருவாக அதிகாரிகளையும் உள்ளடக்கிய அரசாங்கம் தொழிலாளர்களை உள்ளடக்கிய பொதுமக்கள் வர்த்தக சம்மேளனங்கள் தொழிற் சங்கங்கள் பொதுக் கருத்துருவாக்கும் சிந்தனை நிறுவனங்கள் (think tanks) அரசு சாரா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் ஒரு நாட்டில் சர்வதேச பிரசன்னத்தை வெளிப்படுத்தும் தூதரகங்கள் உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் போன்ற உலக நிறுவனங்களின் கிளைக் காரியாலயங்கள் ஆகிய அங்கங்களைக்காண முடியும்.

அது தவிர சுதந்திரமாகச் செயற்படும் நீதித்துறை மற்றும் ஜனநாயகத்தின் காவல் நாய் (watch dog) என்று போற்றப்படும் ஊடகத்தறை என்பனவும் முக்கிய பங்காளர்களாக இருப்பதையும் நாம் காணமுடியும். முறையான கால இடைவெளிகளில் இடம் பெறும் ஜனநாயக ரீதியிலான தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் அடுத்துவருகின்ற தேர்தல் வட்டம் வரை நாட்டை ஆளும் பொறுப்பில் இருத்தப்படுகின்றனர்.

மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேசத்தை மாத்திரமின்றி முழு நாட்டின் பாதுகாப்பு பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்கருதி தமது பதவிகளையும் அதிகாரங்களையும் பயன்படுத்திச் சேவையாற்ற வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறார்கள்.

ஜனநாயக நாடுகள் பலவற்றில் மக்கள் பிரதிநிதிகளாக தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டிய கல்வித்தகுதி மற்றும் ஏனைய சிவில் தகைமைகள் தொடர்பில் கவனமாக இருக்கிறார்கள். ஆனால் பிரபல்ய ஜனநாயகத்தை (popular democracy) விரும்பும் கீழைத்தேய நாடுகள் பலவற்றில் அரசியல் வாதியாவதற்கான கல்வித்தகுதிகளோ சிவில் தகைமைகளோ பற்றி பெரிதாகக் கண்டு கொள்ளப்படுவதில்லை.

பலவேளைகளில் மக்கள் மத்தியில் வில்லனாகவே கருதப்படும் ஒருவர் கூட எதிர்மறைப் பிரபலத்தன்மையின் (negative popularity) காரணமாக இலகுவில் அரசியலில் புகுந்து விடுவதை நாம் அவதானிக்கலாம். அடிப்படைக் கல்வித்தகைமை என்பதை எதிர்பாராத ஒரு தொழிலாக இது பார்க்கப்படுகிறது.

சமூகத்தின் அடிமட்டத்தொழிலில் ஒருவரை வேலைக்கு அமர்த்தும் போது அதற்கு அடைப்படைக் கல்வித்தகைமையை எதிர்பார்க்கும் ஜனநாயகக் கட்டுமானங்கள் ஒரு நாட்டை ஆட்சி செய்வதற்கு எதுவித கல்வித்தகைமைகளையும் கருத்திற்கொள்ளாமல் விடுவது வெட்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். மறுபுறம் பணபலம் இல்லாத ஒரு நபரால் இலகுவில் அரசியலில் புகுந்துவிட முடியாது என்பது பிரபல ஜனநாயகத்தின் மற்றொரு அவலட்சணமானமுகமாகும். திறமையான மற்றும் துடிப்பான அரசியல்வாதிகள் பலர் பணபலமின்மை காரணமாக ஓரங்கட்டப்பட்டு விடுவதையும் நாம் காணலாம்.

எனவே பணபலம் படைத்த சண்டித்தனம் காட்டக்கூடிய நாகரிகமற்று மற்றவரை மோசமாக விமர்சிக்க வல்ல பலர் பதவிக்கு வந்து விடுவதை கீழைத்தேய ஜனநாய நாடுகளிலே நாம் பார்க்க முடியும். தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் கோரப்படும் போது குதிரைப்பந்தயத்தில் ஓடக்கூடிய குதிரை மீது பந்தயப்பணம் கட்டப்படுவதைப்போல கட்சிகள் மேலே சொல்லப்பட்ட தகுதிகளைக் கொண்டோருக்கே போட்டியிடச் சந்தர்ப்பம் கொடுக்கின்றன. அங்கு கல்வித்தகுதியோ அரசியல் ஒழுக்க விழுமியங்களோ கருத்திற்கொள்ளப்படுவதில்லை. எனவே கட்சிகள் தெரிவுசெய்து அறிவிக்கும் வேட்பாளர்கள் மத்தியில் இருந்தே பொதுமக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்ய வேண்டியதாகி விடுகிறது.

இவ்வாறான ஒரு புறச்சூழலில் ஆட்சியமைக்கும் ஒரு அரசாங்கம் முழுமையாக மக்களினதும் நாட்டினது எதிர்பார்க்கைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் செயற்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. தாம் தேர்தலில் செலவழித்த பணத்தை எவ்வாறு மீளப்பெறுவது அடுத்துவரும் தேர்தலுக்கு முன் எவ்வாறு சொத்துக் குவிப்பது என்பதே அவர்களின் தொழிற்பாட்டுக் குறிக்கோளாக (objective function) இருக்கும். அவர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களின் குறிக்கோள் தமது தனிப்பட்ட நன்மைகளை அடைவதற்கு எவ்வாறு அரசியல்வாதிகளின் தயவை நாடலாம் என்பதாக இருக்கும் அதேவேளை அரசுதுறை அதிகாரிகளின் செயற்பாட்டுக்குறிக்கோள் ஓய்வு பெறுமுன்பு எவ்வாறு உயர்பதவியில் அமரலாம் என்பதாக இருக்கும்.

எனவே தான் பிரபல ஜனநாயகம் நிலவும் நாடுகளில் பல இன்னமும் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளாகவே உள்ளன. அது மட்டுமன்றி இத்தகைய நாடுகளில் உருவாக்கப்படும் பொருளாதாரக் கொள்கைகள் சிறப்புத் தேர்ச்சி பெற்ற நிபுணர்களால் நாட்டின் தேவை கருதி உருவாக்கப்பட்டவையாக இல்லாமல் அந்த நாட்டின் அரசியல் தலைமைத்துவத்தின் கனவுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையாக இருக்கும். இவற்றின் இலக்குகளை அடையமுடியுமா இல்லையா என்பது பற்றியெல்லாம் எவரும் கேள்வி எழுப்பமாட்டார்கள். இன்னாரது விருப்பம் இது அதற்கான திட்டவரைவை குறிப்பிட்ட பேராசியர்களையும் நிபுணர்களையும் கொண்ட குழுவின் மூலம் பூர்த்தி செய்யுங்கள் என்றே கட்டளை பறக்கும். அவர்களும் எப்படியாவது முயற்சித்து செய்து முடிப்பார்கள். 

நாட்டின் தலைமைத்துவத்தின் தூரநோக்குடைய திட்டமிடலின் படி வெற்றிபெற்ற நாடுகளான சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை எடுத்துக்கொண்டால் லீக் குவான் யூவும் மஹ திர் முகம்மதுவும் பாமரர்களல்ல. நன்கு கற்றறிந்த அறிஞர்கள். எனவேதான் அவர்களால் தத்தமது நாட்டை விவேகபூர்வமாக தாம் அடைய எத்தனித்த இலக்குகளை நோக்கி நகர்த்த முடிந்தது. எய்த முடியாத திட்டங்களை அவர்கள் வகுக்கவில்லை. தான்தோன்றித் தனமாக அவற்றில் தலையிடவுமில்லை.

மேற்குலக ஜனநாயகங்களில் ஆளுங்கட்சி தான்தோன்றித் தனமாகச் செயற்பட முடியாதவாறு ஜனநாயக நிறுவனக் கட்டமைப்பு வலுவாக உள்ளது. எதிர்க்கட்சிகள், அரசாங்கம் கொண்டுவரும் நல்ல திட்டங்களுக்கு பூரண ஆதரவு வழங்கும் அதேவேளை அரசாங்கம் மோசமாக நடந்து கொண்டால் கடுமையாக எதிர்க்கவும் செய்கின்றன.

ஊடகங்கள் உள்ளிட்ட ஜனநாயகத்தின் தூண்கள் அத்தகைய நடவடிக்கைகளை சமூக வெளியில் பகிரங்கமாக விமர்சித்து எதிர்ப்புத் தெரிவிப்பார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக பொதுமக்கள் தேர்தலில் வாக்களித்ததோடு தமது ஜனநாயகக் கடமை முடிந்துவிட்டதாகவும் அடுத்த தேர்தல் வரை தமக்கு வேலையில்லை என்று நினைப்பதில்லை.

அரசாங்கத்தின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனித்து தமது எதிர்பார்ப்புக்கு மாறாக செயற்படுமிடத்து ஜனநாயக வழிகள் மூலம் அவற்றைத் தடுத்து நிறுத்தவும் தவறுவதில்லை. ஆனால் பிரபல ஜனநாயகம் நிலவும் கீழைத்தேய நாடுகளில் மக்களின் குரல்கள் நசுக்கப்பட்டிருக்கும். மீறி ஒலித்தால் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும். ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் இத்தகைய நிலை தான் தொடர்கிறது.

தற்போது இணைய வசதிகளுடன் கூடிய இலத்திரனியல் தொடர்புகள் மூலம் சமூக இணைய வெளியில் மக்களின் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருந்தாலும் ஆட்சியில் இருப்பவர்கள் அக்குரல்களின் நியாயமான கோரிக்கைகளை கண்டுகொள்வதில்லை. தொழிற்சங்கங்கள் வர்த்தக சம்மேளனங்கள் உள்ளிட்ட உள்நாட்டு நிறுவனங்களின் அழுத்தங்களும் பெரிதாக எடுபடுவதில்லை. சர்வதேச நிறுவனங்கள் ஊடான அழுத்தங்கள் வெளிப்பட்டாலும் தாய் நாட்டுக்கு எதிரான சர்வதேச சதி என்ற பிரபல கருத்துருவாக்கத்தின் மூலம் அதனை சமநிலைப்படுத்தி விடுகின்றனர்.

அரசியலில் கல்வி கற்றவர்களின் பிரவேசமும் தமது நாட்டைத்தாண்டிய உலகம் பற்றி பரந்த பார்வையும் இத்தகைய நாடுகளுக்கு இப்போதைய அவசியத்தேவையாக உள்ளது. ஆனால் இத்தேவைப்பாட்டை அடைய இந்நாடுகளுக்கு பல தசாப்தங்கள் தேவைப்படலாம்.

Comments