கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு -1

நீண்ட நெடுநாட்களாக "VIDEO GAMES" எனப்படுகிற இணையக் கேளிக்கை விளையாட்டுகள் பற்றிய ஒரு கசப்பு, ஒரு நெருடல் என் மூத்த பேனைக்குண்டு!

என்றாலும், இதை வழங்கப்போனால் மூத்த ஆளுக்கு இதன் இனிப்புப் பிடிக்காதே என இளசுகள் இளக்காரமாக எள்ளி நகைப்பார்களே என 'கள்ள மௌனம்' சாதித்து வந்தேன்.

இப்போது மௌனம் கலைய ஒரு மூத்தத் தமிழ் நாளேடே உதவி!

இது, சீர்மிகு சிங்கப்பூரின் நாளேடு. தினமும் 'தமிழ்முரசு' கோட்டுகிறது அங்கே! நமது 89 அகவை மூத்த 'தினகர'னாரின் அன்புத் தம்பியார் 87! முழுக்க முழுக்க தமிழ் மூச்சுவிட்டு

வாழ்ந்த கோ. சாரங்கபாணி என்ற பெரியார் நிறுவிய ஏடு. அவருக்கு 'தமிழவேள்' அதியுயர் பட்டம் சூட்டி இன்றும் போற்றிப் புகழும் சிங்கப்பூர் வாழ் தமிழ் பேசும் மக்கள் காலைத் தேநீருடன் 'தமிழ் முரசு' வின் 'தூயதமிழ்' செய்திகளையும் சுவைக்கத் தவறுவதில்லை!

இந்த முதுமை இதழ் கடந்த 07.02.2022இல் இளையோர் பற்றிய சிந்தனையில் மூழ்கி, அவர்கள் முழுமூச்சாக ஈடுபாடு காட்டும் இணையக் கேளிக்கை பற்றிய ஒரு கருத்துச் செய்திக்குறிப்பை வழங்கியுள்ளது.

அதன் தீவிர வாசகரும், என் பேனையின் அபிமானியுமாகிய தொழில் அதிபர் 99அ. முஹம்மது பிலால், நம் இலங்கை இளையோர் பற்றிச் சிந்தித்து அனுப்பியுள்ள கசப்பு!

கசப்பு -2

அலைகடலுக்கு அப்பால் வாழும் இந்தியத் தாயின் தவப்புதல்வர்களான தமிழ்நாட்டவர் நாளும் பொழுதும் 'ஆங்கில மேனியாக்களாக (அதாவது மோகிகள்) அலைக்கழிவது ஒரு பெரிய கசப்பான உண்மை!

இப்பொழுது ஒன்றை வழங்குகிறேன், விழுங்குங்கள்.

"திற" என்றொரு அழகான தமிழ். அவர்கள் அதைச் சொல்லவே மாட்டார்கள்.

"OPEN பண்ணு" என்பார்கள்!

"நட" என்று நடந்து காட்ட மாட்டார்கள்!

"WALK பண்ணு" என்றே கட்டளை இடுவார்கள்.

எங்கே இருந்து இந்த "பண்ணு" வந்தது? பனீஸ் பன் (பான்) சாப்பிடுவது போல் சப்பித் தொலைக்கிறார்களே, ஆங்கிலத்தோடு...?

Open பண்ணு -திற

Cross பண்ணு - கட

Walk பண்ணு - நட

Start பண்ணு - ஆரம்பி

Call பண்ணு - அழை

Close பண்ணு - மூடு

Lift பண்ணு - தூக்கு

Meet பண்ணு - சந்தி

Drive பண்ணு - செலுத்து

Prees பண்ணு - அழுத்து

Up lock பண்ணு - பதிவேற்று

Stop பண்ணு - நிறுத்து

கண்ராவியே... கண்ராவியே...

எளியே இனிய தமிழ் இருக்க "பண்ணு தமிழ்" தேவையா?

இனிப்பு -1

ஒரு வடபுலத்துக்கலை இலக்கிய ஆர்வலர். வருடம் தப்பாமல் விருது வழங்கல் வைப்பவங்களை செய்து கொண்டிருப்பவர். ஓரிரு ஆண்டுகளுக்கு முன் தமிழக சினிமா வட்டத்திற்குள்ளேயே வளைய வந்து கயிறு திரிக்காமல் 'கயிறு' என்றே படம் எடுத்தவர். இப்பொழுது முழு மூச்சாக மன்னார் - அடம்பனில் குடும்பப் பாரம்பரிய் சொத்தாக இருந்ததும் இயங்காதிருப்பதுமாப ஒரு பட அரங்கைப் புதுப்பிக்கிறவர். வருகிற சித்திரையில் மீள் திறப்புச் செய்து படம் காட்டப்போகிற ஒரு முனைப்பாளர்.

இவர் - 'சங்கவி' பிலிம்ஸ் துரைராசா சுரேஷ்!

நேற்று 12ல், 'தினகரன்', வாரமஞ்சரி- வண்ண வானவில் அனுசரணையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு அரங்கில் நிகழ்த்திய ஒரு கலைத் தொண்டு காலம் காலத்திற்குப் பேசப்படக்கூடிய ஒன்றாகிப் போனது.

இந்த துரைராசா சுரேஷ் இரண்டாம் கொரோனா ஊடாக முன்பே வலைத்தளத்தில் கலை- இலக்கிய -சமூக ஆர்வலர்கள், சேவையாளர்களிடம் விவரங்கள் கோரியவர், 300 -400 பேர் என தகவல்கள் பெற்று திக்கு முக்காடு!

எவ்வாறாயினும் நூற்றுக்கு மேற்பட்டோரை வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலுமென தேர்வு செய்து வரவழைத்து கௌரவங்களை வழங்கி விட்டார் வழங்கி!

நிகழ்வு விவரங்களை நிழற்படங்களுடன் அடுத்தடுத்த நாட்களில் தினகரனும், சக வெளியீடுகளும் வழங்கும். இங்கே, வைபவத்தில் வழங்கப்பட்ட இன்னொரு தித்திப்பான இனிப்பை மட்டும் தர விருப்பம்.

அது ஒரு நூல் வெளியீடு, விருது விழாவுடன் வெளியீட்டு நிகழ்வையும் இணைத்து ஒரு நல்ல கலை, இலக்கியப்பாலமாக அமைந்து போனது!

இலங்கைத் தமிழ் சினிமாத்துறை கண்ட கதைகளை ஒரு விவரணமாகத் தொகுத்து ஆய்வு நூலாக கலை - இலக்கியத் துறையினர் குழுமியிருந்த பிரபல மாநாட்டு அரங்கில் ஒரு சிறப்பு நிகழ்வாக்கி வெளியீடு காண, வைத்தது ஒரு புதுமை, ஒரு புரட்சி!

அந்தக் கட்டுரைகளை ஆர்வத்துடன் தொடராகப் பிரசுரித்தது நமது 'வாரமஞ்சரி'யே ஆம்! வாரமஞ்சரி!

அதுவே நூல் வடிவமாகி, "இலங்கையில் தயாரிக்கப்பட்ட தேசிய தமி் சினிமாவின் வரலாறு" என்றதொரு நீண்ட தலைப்புடன் பட்டொளி வீசிப்பளிச்சிட்டது.

நமது தேசிய தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடம் சம்பாதித்துள்ள கலாபூஷணம் பேராதனை ஏ.ஏ. ஜூனைதீன் என்ற முதுசத்தின அப்பழுக்கற்ற ஆவணமே அந்நூல்.

முதல் நூலைப் பெற ஒரு மூத்த எழுத்தாளருக்குச் சந்தர்ப்பம் வழங்கியதும் புதுமையாக புரட்சியாக அமைந்தது. அவர் ஒரு காலத்தில் 'தினகரன்' சினிமா எழுத்தாளராகவும் குப்பை கொட்டியவர்!

இப்படி வர்ணிக்க அவருக்கு மட்டுமே உரிமை உண்டு.

வேறு யார், இந்த மூத்த பேனையின் உரிமையாளரே! முக்கியமான நூலொன்றை தனது வாழ்நாளில் முதல் பிரதியாகப் பெறக் காத்திருந்தது கனியானது!

அனைத்தும் அவன் ஒருவன் எண்ணப்படியும் திட்டப்படியும்!

மேலும் ஒரு முக்கிய தகவல்!

முதல் பிரதியைத் தொடர்ந்து சிறப்புப் பிரதியை அதிவிருப்பத்துடன் ஆனந்தமாகப் பெற்றுக் கொண்டவர் அப்துல் லத்தீஃப் என்ற கவிஞர், வானொலி முஸ்லிம், நிகழ்ச்சிக் கலைஞர்! பாராட்டுகள்

Comments