கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு

கடந்த 12.03சனிக்கிழமை அற்புதமான சிறப்புரை ஒன்றைக் கேட்கும் வாய்ப்பு.  

வழங்கியவர் ஒரு கால வானொலிக் கலைஞரும் நாடக எழுத்தாளருமான கலாநிதி எம். சீ. றம்ஸீன்.  

வழங்கும் ஏற்பாடு 'லங்கா முஸ்லிம் ஊடகவியலாளர் அமைப்பு' (மீடியா போரம்) அவர்களது வெள்ளிவிழா, வெற்றிப்பயணத்தை ஒட்டிய பொதுக்கூட்டத்தில் அந்தச் சிறப்புச் சொற்பொழிவு.  

அச் சொட்டாக அரைமணி நேரத்தில் பூர்த்தி செய்த சிறப்புரை ஆகிய கருத்தோட்டத்தில் வழங்கப்பட்ட கசப்பு வில்லைகளை பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ஊடக அமைச்சர் டலஸ் அழகப் பெரும முதற்கொண்டு  என் மூத்த பேனை ஈறாக விழுங்கினோம்.  

ஒரு கால ஊடகவியலாளராக ஜொலித்த அமைச்சர் கசப்பை முகம் சுளிக்காமல் விழுங்கி வைத்ததோடு உரைஞருக்குக் கைகொடுத்தும் பாராட்டி மகிழ்ந்தார்.  

உரை முடித்து இருக்கையில் அமர்ந்த அவரை நோக்கிப் போனது பேனை!  

'கலாநிதி ரமிஸீன் உங்கள் கருத்துக்களின் ஆரம்பப் பகுதி எனக்கு முற்றிலும் புதிய செய்தி. ஆனால் பிற்பகுதியோ நான் சதா சர்வகாலமும் எழுத்திலும் பேச்சிலும் 'ஒரு கை ஓசையா' ஒலித்தவையே என்றாலும் ஒரு கை ஓசைக்கு சத்தம் கேட்கவில்லை! இப்பொழுது நீங்களும் ஓசை! இனி எல்லோருக்கும் கேட்கும்!' என்றது பேனை.  

அவ்வளவு தான்! உடனடியாக இருக்கையிலிருந்து எழும்பி நின்ற அநுராதபுரப்பகுதி அற்புத மண்ணின் மைந்தரான கலாநிதி அப்படியே நின்றவர் நின்றவரே!  

உரையாடலை மிகச் சுருக்கிக் கொண்டு சிறப்புரையின் பிரதி ஒன்றைப் பெற்று தன் இருக்கை திரும்பியது பேனை!  

அன்னவரது உரையின் ஆரம்பப் பகுதி (சுமார் 24நிமிடங்கள்) 'ஊடகமும் முஸ்லிம்களது எதிர்காலமும்' பற்றியதாக அமைந்திருந்தது. முழுவதையுமே அபிமானிகள் அலசி ஆராய்ந்து ஆயாசப்பட வேண்டிய ஒன்று. அதனை நமது மூத்த 90அகவை ஊடக ஆசாமியிடம் (வேறு யார்  தினகரனே!) சொல்லிப் பிரசுரிக்க வைக்கலாம். பிற்பகுதி (06நிமிட உரை) மட்டும் இங்கே சுருக்கி. -

அது, இந்த மூத்தது, வானொலி 'சிறுவர் மல'ரிலும், 'முஸ்லிம் நிகழ்ச்சிச் சேவையிலும் பத்து ஆண்டுகள் ஓடியாடிய இலங்கை வானொலி ஒலிபரப்பைப் பற்றியது.  

கலாநிதி றம்ஸீன் கருத்துரைத்தார் இப்படி;  

* இன்றையப் பொழுதில் முஸ்லிம் கலா நெஞ்சங்களின் கவலைக்குரிய விடயமாக இருப்பது அரச ஒலிபரப்பில் இடம்பெறும் முஸ்லிம் சேவைகள் பற்றியதே.  

* அச்சேவை தனது பொறுப்பிலிருந்து வீரியம் குறைந்து திறனற்று ஒலிக்கிறது. அது ஒரு சமயப்பாடசாலையைப் போன்று இயங்குகிறது.  

* 'அன்றாடத் தொழுகைக்கடமைக்கான அழைப்பை (அஸான்) அரச ஒலிபரப்புச் சேவை செய்ய வேண்டுமென்று, எந்த முஸ்லிம் விரும்பியதில்லை. அரசியல் நோக்கத்திற்காக எப்போதோ ஏற்பாடானது. இலங்கை வானொலியில் தான் முதன் முதல் தொழுகை அழைப்பு ஒலிக்க ஆரம்பித்தது என்றதொரு விசித்திரத்தை உருவாக்கினார்கள். அத்தோடு, பிற சமூகத்தினர் தங்கள் மத நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் பொழுது அது இடைநடுவில் நிறுத்தப்பட்டு 'தொழுகைக்கு வாருங்கள்' என்ற அழைப்பும் ('அஸான்') ஒலிபரப்பானது.  

*'மேலும், வானொலிச் செய்தி அறிக்கை என்பது நேயர்கள் அத்தனை பேருக்கும் பொதுவானது. இதுவும் தொழுகை அழைப்பை ஒலிபரப்புவதற்காகத் தாமதிக்கப்படுகிறது!  

'பல நேரங்களில் சினிமாப் பாடல்களை முன்னும் பின்னுமாக இசைத்துவிட்டு ஒலிபரப்புகிறார்கள்.  

* 'இவை அத்தனையும் நடப்பது' பண வருவாய்' ஒன்றுக்காகவே வர்ததக விளம்பரங்கள் கிடைக்காவிட்டால் தொழுகை அழைப்பு ஒலிபரப்பாகாது.  

' அமைச்சரே,  இன்னுமொரு விடயத்தையும் நான் ஆராய்ந்த பொழுது, காலை நேர முஸ்லிம் ஒலிபரப்புகளில் 95விழுக்காடு விளம்பரங்களும், மார்க்க உரைகள் இடை நடுவிலும், அவற்றின் ஒலிப்பதிவு தயாரிப்பு தரம் குறைந்து இருப்பதையும் உணர்ந்தேன்.  

பண வருவாய் ஒன்றுக்காக இஸ்லாமிய கீதங்கள் நாடகங்கள், வரலாற்றுச் சித்திரங்கள் போன்ற கலாசார நிகழ்ச்சிகளுக்குத் தடைபோடப்பட்டுள்ளன.  

'கடந்தாண்டு புனித றம்ழான் நோன்பு மாத காலங்களில் காலை ஒலிபரப்பில் 47நிமிடங்களுக்கு வர்த்தக விளம்பரங்களே ஒலிபரப்பாகின. அந்த நோன்பு நாட்களில் பல லட்சங்கள் சேர்க்கப்படுகிறது. ஆனால் அபூர்வமாக நாடகம் ஒன்று ஒலிக்க நாடகப் பிரதியாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் ஆயிரம் ரூபாய் சன்மானம் வழங்க நிர்வாகத்தினருக்கு மனம் இல்லை!  

இவ்வாறு கசப்புக் கருத்துகள் கலாநிதி றஸ்மினின் சிறப்புரையில் சிறகடித்தன. ஒரு கை ஓசை இட்டுக் கொண்டிருந்த என் மூத்த பேனைக்கு இன்னுமொருவரின் ஓசையும் சேர்ந்து கொண்டது. நன்றிகளும் பாராட்டுகளும்.  

இனிப்பு

கடந்த வாரம் கசப்பில்  'ஏரூர்' ஆகிய ஏறாவூர் இலக்கியத்துறையினர் 41பேரைப் பட்டியல் போட்டு மொத்தம் 35பேர் சிறுகதை, நவீனம், நாடகம், கட்டுரை எதிலும் கை வைக்காதவர்கள் என்று பேனையின் ஆதங்கத்தைப் பதித்திருந்தேன்.  

சென்ற வியாழனன்று கல்முனைப் பக்கமும் ஒரு கழுகுப்பார்வை. பட்டியல் போடும் நோக்கமின்றி சும்மா ஒரு சிறு பார்வை!  

அந்தக் கழுகுப் பார்வையில் ஒரு 'காகம்' சிறகடித்தது! அதுவும் 'சிறுகதை, சிறுகதை' என்று பாடிப்பறந்தது!  

சிறுகதை, நூல் பெயர் கூட விசித்திரம்!  

'காக்கை நிறச்சேலை' கதைத் தொகுதியின் பெயர்! 'கல்முனைக் கதீர்' தனது சுயப்படைபபுகள் எட்டை ஏட்டில் (நூல்) வழங்கியிருக்கிறார்.  

ஒரு பொழுது இந்தக் கதீரும் ஒரு கவிஞர் தானாம்! வரிக்குதிரைச் சவாரியரோ அறியேன்!  

எவ்வாறாயிலும், கதை என்றால் கட்டுத் தறி அறுத்து காத் தூரம் ஓடிப் போகிறவர்கள் மத்தியில் ஒரு கதீர் கதிர்பாய்ச்சுகிறார். பாராட்டு, பாராட்டு!  

நம்ம, மருதூர்க்காரர், தீரனார் ஆர்.எம். நௌஷாத், சாய்வு நாற்காலியில் சாயந்தாடியபடி இந்தக் 'காக்கை நிறச் சேலையைக் கண்டு விட்டு முகநூலில் இப்படிப் பதிவிட்டிருக்கிறார்!  

*'கதீரை ஒரு கவிஞனாகவே கருதி இருந்தேன். காக்கை நிறச் சேலையை வாசிக்கும் பொழுது, வாசிப்போர் மனத்தில் ஒரு கதிரியக்க வீச்சின் அதிர்வுகளைத் தவறாமல் தருகிறது!'  

என்ன அபிமானிகளே, இப்பவே ஒரு சிறுகதையைப் படிக்கும் பரபரப்பு ஏற்படுகிறதல்லவா! என் பேனைக்குந்தான்! கதைத் தொகுதியை அனுப்பி வைக்கட்டும் நீங்களும் பெறக்கூடிய வழிகளைத் தெரிவிக்கிறேன்.  

Comments