கசப்பும் இனிப்பும் | தினகரன் வாரமஞ்சரி

கசப்பும் இனிப்பும்

கசப்பு

ஒவ்வொரு ஆண்டும் "வானொலி ஆளுமை விருதுகள்" நிகழ்ந்து முடிந்து மறுகணம் கசமுகாக்களும் கசப்பு வில்லைகளும் தாராளம், தாராளம்!

கடந்த 21/03திங்கள் கிழமை நடந்து முடிந்த வைபவத்திற்கு மறுநாளே முகநூலில் எதிர்வினைகள்.

ஒரு முக்கியப்பதவியிலிருப்பவர், 'ரூபவாஹினி' நேத்ரா தொலைக்காட்சியின் தமிழ்ச் செய்தி, கலாசாரப் பிரிவுப் பிரதி பணிப்பாளர் யாகூப் உமர் லெப்பையின் பதிவால் என் மூத்த பேனைக்கு வேலை மிகக் குறைந்து போனது. அவர் தன் முகநூல் பக்கத்தில் பதிந்திருப்பதில் ஒரு சில பகுதிகளை வழங்குகிறேன்.

* கடந்த சிலகாலமாக கலாசார அலுவல்கள் திணைக்களத்தாரால் நடத்தப்பட்டு வரும் வானொலி மற்றும் தொலைக்காட்சி விருது விழாத் தேர்வுகளில் மிகக் கடுமையாகப் பாரபட்சங்கள் காட்டப்படுகின்றன.

"யாருக்கு விருது வழங்கப்படுகிறது என்பதில் தான் அந்த விருதின் கௌரவம்,, மேன்மை, பெருமை உள்ளது. அவ்விருதைப் பெறுபவர் உயர்ந்தபட்ச திறமைகளை தன்னகத்தே கொண்டிருக்க வேண்டும்.

* உதாரணமாக, குறித்த ஒலி, ஒளிபரப்புப் பங்களிப்புக்கு விருது ஒருவருக்கு வழங்கப்படுமாயின் அதற்கு அவர் பொருத்தமா, இல்லையா என்பதை நேயர்களே தீர்மானித்து விட இயலும்.

ஏனெனில் விருதாளரின் பங்களிப்புகளைப் பல தடவை பார்த்தும் கேட்டும் பழக்கப்பட்டவர்கள் பாரபட்சமான முறையில் தனிப்பட்ட செல்வாக்கு அல்லது வேறு ஏதோ ஒரு வகையில் நடுவர்களைத் திருப்திப்படுத்திப் பெறலாம் என்ற முடிவுக்கு நேயர்கள் மிக இலகுவாக வந்து விடலாம்.

ஆகவே நடுவர்கள் என்போர், குறிப்பிட்ட துறைப்போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் அல்லது விண்ணப்பிப்போர் பணியாற்றும் துறை சார் நிறுவனத்தில் பணிபுரியாதவர்களாக அல்லது அவர்களுடன் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். அத்தோடு, தனக்குத் தெரிந்த அல்லது வேறு சிபாரிசுகளின் மூலம் ஒருவரைத் தேர்வு செய்து விருது வழங்குவது என்பது இறை நீதிக்கு சவால் விடும் ஒரு சங்கதியாகும்.

இவ்வாறு தர்க்கரீதியாக நியாயங்களை தனது முகநூல் அன்பர்களுக்கு எடுத்துரைக்கும், 'ரூபவாஹினி' பிரதிப் பணிப்பாளர் யாக்கூப் தன் பதவி நிலையை ஒரு புறத்தில் கொஞ்சம் ஓய்வெடுக்க வைத்து விட்டு, அந்த நான்கு நடுவர்களும் யார், எவர் எனத் துணிவையே துணைகொண்டு அடையாளப்படுத்தி உள்ளார்.

என் பேனை பெயர்களைக் குறிக்க வெட்கப்பட்டு "வேறொரு விதத்தில் அபிமானிகளுக்கு வெளிச்சமிடுகிறது.

ஒருவர்​ தலைமை நடுவர்.

இவர், இ.ஒ. கூட்டுத்தாபன வானொலித் தமிழ் சேவையில் கடமையாற்றி ஓய்வில் இருப்பவர். இருந்தும், கிழமை தோறும் 'சிறுவர் மலர்' மாமா!

இன்னொருவர், இ.ஒ. கூட்டுத்தாபனத்தில் பிரதான செய்தி அறிக்கை வாசிப்பாளர். இவரும் ஓய்வு நிலை. ஆனாலும் புனரமைக்கப்பட்டுள்ள வெளிநாட்டுத் தமிழ் ஒலிபரப்பு அறிவிப்பாளர்.

மற்றொருவர், கொட்டாஞ்சேனை பாடசாலை ஒன்றின் அதிபராக இருந்தவாறே பகுதி நேர அறிவிப்பாளராகவும், பரீட்சைத் திணைக்கள அதிகாரியாகவும் கடமையாற்றி ஓய்ந்தவர்.

கடைசியான நாலாவது பேர்வழியோ, நில அளவை திணைக்களத்தில் நிலப்பரப்பு வரைபடங்களை உற்றுப் பார்த்தவாறே வானொலி நிலையத் தாழ்வாரத்தில் சஞ்சரித்த கலைஞர், (இப்போதும் முஸ்லிம் சேவை 'சஞ்சாரம்' நடைச் சித்திரத்தில் நடையோ நடை!)

முகநூல் பக்கத்தில் நெருடல் பட்டல் 'ரூபவாஹினி' பிரதிப் பணிப்பாளர் யாகூப் ஆதங்கப்படுவது, இந்த நால்வரும் ஓய்வு பெற்ற பிறகும் வானொலித் தாழ்வார நடைபாதையில் தள்ளாட்டம் போடுவதுடன் "விருது நடுவர்" பதவியைக் குத்தகைக்கு எடுத்து (99வருடங்கள்) அங்கிருப்பவர்களுடன் வெளியில் தனியார் ஒலிபரப்பு நிலைய ஊழியர்களையும் எவ்வாறு மனச்சாட்சிக்கு மாறுபடாது தேர்வு செய்வார்கள் என்பதே.

நியாயம் நியாயம் நால்வரில் இருவராவது இ.ஒ. கூட்டுத்தாபனத்துடன் முற்றாக சம்பந்தமில்லா நடுவராக இருந்தால் யார் மனமும் ஏற்கும்  ஒரு வேளை, தமிழ் வானொலித் தேர்வுக்கு நம் நாட்டில் நடுவர் பஞ்சமும் ஏற்பட்டிருக்கிறதோ? வடக்கு, கிழக்கு, தெற்கு மூன்று திசைகளும் விவரம் சொல்லட்டுமே! 

இனிப்பு

தமிழ்நாட்டில் இம்மாதத்தின் முதலிரு கிழமைகளிலும் சென்னையில் பெரிய அளவில் ஒரு புத்தகத் திருவிழா நடந்து முடிய, திருநெல்வேலி மாநகரிலும் சென்ற வாரம் ஒன்று.

இவற்றுக்கு மத்தியில் மூன்று பெரு நகரங்களில் நடந்திருக்கிற ஒரு சங்கதி இனிப்புச் சுவையை அள்ளி வழங்குகிறது.

என்ன இது, தமிழ்நாட்டவர் போக்கு இப்படியும் திசை திரும்பி விட்டதா எனப் பல ஆச்சரியக் குறிகளையும் பதிய வைக்கிறது.

புதுக்கோட்டை, விருதுநகர், தஞ்சாவூர் மூன்று முக்கிய நகரங்களில் இந்த விசித்திரம் நடந்திருக்கிறது.

அங்கே திருமண வைபவங்களில் மணமக்களுக்கு சீர்வரிசையாக புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன!

"மொய்ப்பணம்" என்கிற பணப்பரிவர்த்தனை மெய்யாகவே ஒதுக்கி விட்டுக் காரியம் பார்த்திருக்கிறார்கள் இன்னொன்றை அறிமுகப்படுத்தி.

மதுரை மாநகரைத் தாண்டி சில பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால் நாம் சந்திக்கக்கூடிய நகரம் "விருது நகர்" இங்கே நடந்ததை மட்டும் விலாவாரியாக விவரிக்க விரும்புகிறது பேனை!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள எதிர்க்கோட்டை கிராமத்தை சேர்ந்த சுப்புராஜ் முத்துலட்சுமி தம்பதியின் மகன் நவநீதன். இவர் ஆட்டோமொபைல் துறையில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் விருது நகர் மாவட்டம் இனாம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் விஜயலட்சுமி தம்பதியின் மகள் அனிதாவிற்கும் எதிர்க்கோட்டை கிராமத்தில் உள்ள கோவிலில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்துக்கு மணமக்களின் நண்பர்கள் புத்தகங்களை பரிசளிக்க முடிவு செய்தனர். இதையடுத்து. அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு. வாழ்க்கையில் எவ்வாறு வெற்றி பெறலாம். காமராஜரின் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட புத்தகங்களை மேளம், தாளம் முழங்க சீதனமாக ஊர்வலமாக எடுத்துச் சென்று மணமக்களுக்கு வழங்கினர்.

மணமக்களின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் இணைந்து புத்தகங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று மணமக்களுக்கு பரிசு அளித்தனர். திருமணத்தின் போது மற்ற பரிசுகள் வழங்குவதை தவிர்த்து 500க்கும் மேற்பட்ட புத்தங்களை ஊர்வலமாக எடுத்துச் சென்று வழங்கிய நிகழ்வுக்குப் பெரும் வரவேற்பு வாழ்த்து திருமணத்துக்கு வந்த அனைவருக்கும் தாம்பூல பையில் புத்தகங்களை வைத்து மணமக்கள் வீட்டார் நினைவு பரிசுகளாக வழங்கிய சம்பவமும் நடந்தது.

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மோகன்குமார் பொலிஸாக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சாமுண்டீஸ்வரி என்பவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது நண்பர்கள் புத்தகங்களை வரசையாக வழங்கினர்.

வாசிப்பை நேசிக்க வைக்கும் ஒரு பழக்கத்தைத் திருமண வைபவங்களில் கொண்டு வந்துள்ள தமிழகத்தவரை, "நீங்கள் இந்த இனிப்பை எல்லாம் செய்வது இந்த கனவிலா நனவிலா என வினவ வைக்கிறது.

நல்லது, நல்லது, அவர்கள் தொய்வில்லாமல் தொடரட்டும், அதே நேரத்தில் நாமும் ஈயடிச்சான் கொப்பியாக இதை நடைமுறைக்குக் கொண்டு வரலாமே?

முந்தப் போவது, வடபுலமா? தென்புலமா? அல்லது தேனகமா தகவலைத் தெரிவித்து இந்த மூத்த பேனைக்கும் ஓர் அழைப்பு புத்தங்களுடன் வரத்தயார்! தயார் நன்றி.

Comments