தேர்தலை இவ்வேளையில் நடத்துவது எந்தப் பலனையும் தரப் போவதில்லை! | தினகரன் வாரமஞ்சரி

தேர்தலை இவ்வேளையில் நடத்துவது எந்தப் பலனையும் தரப் போவதில்லை!

‘இன்றைய வேளையில் தேர்தலை நடத்துவது எந்தப் பயனையும் தரப் போவதில்லை. அவ்வாறு கோருபவர்களின் நோக்கம் நாட்டை மேலும் சீர்குலைப்பதா கும்’ என்று கமநல, வனஜீவராசிகள் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இன்றைய நெருக்கடி நிலைமை தொடர்பாக அமைச்சர் எமக்கு வழங்கிய பேட்டியிலேயே இதனைத் தெரிவித்தார். ‘நாட்டில் தற்பொழுது நிலவும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அனைவரும் அரசியல் இலாபங்களை மறந்தவாறுஒன்றிணைய வேண்டும்’ எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கே: பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் இணைந்து இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் கருதுகின்றனர். இது தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வாக அமையுமா?

பதில்: உண்மையில் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதே எங்களின் நோக்கமாக இருந்தது. அதற்கு எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்தோம். எனினும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அந்த வாய்ப்பைத் தவிர்த்து விட்டார். ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் அந்தச் சவாலை ஏற்கவில்லை. யாரும் ஆட்சியை ஏற்கத் தயாராக இல்லாத காரணத்தால் பிரதமர் இல்லாத நாடு இருந்தது. அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

அமைச்சரவையை நியமிக்க ஒரு வாரத்துக்கு மேல் சென்றது. அதனால்தான் நாங்கள் அமைச்சர் பதவிகளை ஏற்க முடிவு செய்தோம். இதுதான் நாட்டின் இன்றைய நிலை. இது எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து விடும் என அர்த்தப்படாது. இத்தருணத்தில் அரசாங்கத்துக்கு அனைவரும் தமது ஆதரவை வழங்க வேண்டும்.

கே: அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டுள்ள நிலையில், அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு இது பொருத்தமான தருணம் அல்ல என சிலர் விமர்சிக்கின்றனர். இது பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: இந்த அரசியலமைப்புத் திருத்தம் மக்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையாது. நாட்டில் உள்ள புத்திஜீவிகள் மற்றும் தொழில்துறையினர் 21ஆவது திருத்தத்தை கூடிய விரைவில் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தனர். இந்தப் பிரச்சினைகளை ஒவ்வொன்றாகத் தீர்த்து வைக்க வேண்டும். இறுதியில் சர்வதேச உதவியைப் பெறுவதற்கு இது வழிவகுக்கும் என்பதுடன், எம் மீது சர்வதேச நம்பிக்கையை வளர்க்கவும் இது உதவும். அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவது அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் சமூக குழுக்கள் மற்றும் புத்திஜீவிகளின் கோரிக்கையாகும்.

கே: நாட்டில் தற்போது நிலவும் அரசியல் ஸ்திரமின்மையை ஓரளவுக்கு நீக்குவதற்கு 21ஆவது திருத்தம் உதவும் என நீங்கள் நம்புகிறீர்களா?

பதில்: தற்போது நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை தொடர்பில் பாரிய பிரச்சினை எதுவும் இல்லை. அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் தற்பொழுது 113பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு காணப்படுவதால், அங்கு பெரும்பான்மை குறித்த பிரச்சினை இல்லை. எவ்வாறாயினும் பாராளுமன்றத்திற்கு வெளியில் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அதைத்தான் நாம் உடனடியாக நிவர்த்தி செய்து சரி செய்ய வேண்டும்.

மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதும் அவர்களின் எரியும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதும் அரசின் பொறுப்பு என்று நான் நினைக்கிறேன். விவசாயத்துறை அமைச்சர் என்ற முறையில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளை எப்படியாவது தீர்த்து வைப்பேன். விவசாயிகளுக்கு உரம் வழங்குவதே விவசாயத் துறையில் பெரும் பிரச்சினையாக இருந்தது. அதேபோன்று நெல் சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க வேண்டும். இந்த இரண்டு தேவைகளும் பூர்த்தி செய்யப்படும்.

பெரும்போகத்துக்குத் தேவையான உரத் தேவை நிவர்த்தி செய்யப்படும் அதேவேளை, சிறுபோகத்துக்குத் தேவையான உரமும் விரைவில் வழங்கப்படும். இதன் ஊடாக விவசாயிகள் சந்திக்கும் பிரச்சினைகளை ஓரளவுக்கு தீர்த்து வைக்க முடியும். எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவை மக்கள் எதிர்கொள்ளும் மற்றைய முக்கிய பிரச்சினைகளாகும். இப்பிரச்சினைகளுக்கும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் பொதுமக்களின் எதிர்ப்புகளை நம்மால் குறைக்க முடியும்.

கே: பொதுத் தேர்தலுக்குச் செல்வதற்குப் பதிலாக தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண வழியில்லை என்று ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கருதுகின்றன. தேர்தலுக்குச் செல்வது மக்களுக்குப் பாரிய சுமையாக அமையும் என பிறிதொரு தரப்பினர் கூறுகின்றனர். நீங்கள் இதனை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: நாங்கள் தேர்தலுக்குச் செல்லும் போது இந்தப் பிரச்சினை எப்படித் தீர்க்கப்படும் என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்களின் ஒரே நோக்கம் எப்படி அதிகாரத்தை உறுதிப்படுத்துவது என்பதுதான். நாட்டை மேலும் சீர்குலைப்பதே அவர்களின் முயற்சி. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சியும் 100எம்.பி.க்களைப் பெறும் நிலையில் இல்லை. எனவே, தேர்தலுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையைக் கூடப் பெற முடியாத நிலையற்ற அரசாங்கம் உருவாகி, அது நாட்டில் மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும். தற்போதைய அரசாங்கத்தில் குறைந்தபட்சம் 113பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

கே: இத்தருணத்தில் மக்கள் தேர்தலை கோருகிறார்களா?

பதில்: தற்போது நிலவும் சூழ்நிலையால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே, எரிபொருள், எரிவாயு மற்றும் பிற பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை. தேர்தலில் போட்டியிடப் போவது யார்? சில அரசியல் கட்சிகளின் அரசியல்வாதிகள் தேர்தலை நடத்த நினைக்கின்றனர். ஆனால் இந்த நேரத்தில் தேர்தலை நடத்த மக்கள் குரல் எழுப்பினார்களா? அது அப்படியல்ல. தேர்தலை நடத்த 7,000மில்லியன் ரூபா முதல் 8,000மில்லியன் ரூபா வரை செலவிட வேண்டியுள்ளது. மேலும், அரசு திட்டமிட்டுள்ள அனைத்து வேலைகளையும் ஒத்திவைத்து தேர்தலை நடத்துவதற்கு அதிக நேரம் செலவிட வேண்டியுள்ளது. எனவே, இந்தத் தருணத்தில் தேர்தலை நடத்துவதது எந்தப் பலன்களையும் தரப் போவதில்லை. ஒருவேளை, சில அரசியல் கட்சிகள் பாராளுமன்றத்தில் தங்கள் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டு மேற்கொள்ளும் முயற்சியாக அது இருக்கலாம்.

கே: நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு அரசாங்கமும் அமைச்சரவையும் தீர்வு காண வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தைக் கூட்டுவதால் எந்தப் பயனும் இல்லை. நீங்களும் அதே கருத்தைக் கடைப்பிடிக்கிறீர்களா?

பதில்: அந்தப் பொறுப்பு அரசுக்கு உள்ளது. அந்த பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. ஆனால், அரசு பொறுப்பை ஏற்றுக் கொண்டது. ஒரு புதிய பிரதமரும் அரசாங்கமும் இந்த நீண்டகால பிரச்சினைகளை சில வாரங்கள் அல்லது மாதங்களில் தீர்க்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. உண்மையில், நாம் ஒரு திவாலான நாட்டைப் பொறுப்பேற்க வேண்டியிருந்தது. உதாரணமாக, திவாலான நபரை இயல்பு நிலைக்கு மாற்ற எவ்வளவு காலம் எடுக்கும்? அதேபோன்று, நாடு இயல்பு நிலைக்குத் திரும்ப சிறிது காலம் எடுக்கும். எனவே, நாட்டை திவால் நிலையிலிருந்து விடுவிப்பதே புதிய அரசாங்கத்தின் முன் உள்ள சவாலாகும்.

கே: நாட்டில் ஒரு உடனடி உணவு நெருக்கடி குறித்து ஊகங்கள் நிறைந்துள்ளன. விவசாய அமைச்சர் என்ற முறையில் பதில் சொல்ல விரும்புகிறீர்களா?

பதில்: தற்போது உலகில் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் பாதிப்பை நாமும் சந்திக்க வேண்டும், அதை என்னால் மறுக்க முடியாது. அதனால்தான் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. தொடக்கத்தில், நெல் நிலங்கள் விவசாயிகளால் பயிரிடப்படாததால், நெல் பிரச்சினையை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. நான் விவசாய அமைச்சராக பதவியேற்ற போது, விவசாயிகள் 248ஹெக்டெயர் நெற்பயிர்களை மட்டுமே பயிரிட்டிருந்தனர். அரிசித் தட்டுப்பாடு வந்து விடுமோ என்ற அச்சமும் இருந்தது.

இதனால், உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இதன் விளைவாக, பயிரிடப்பட்ட மொத்த நெற்பயிர்க் காணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, இந்த ஆண்டு நவம்பர் இறுதியிலோ அல்லது டிசம்பர் மாதத்தின் நடுவிலோ அரிசி தட்டுப்பாடு ஏற்படாது. அரிசிப் பிரச்சினை இருந்தால், அது டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் இருக்கும். இதுவே நமது கணிப்பு.

அர்ஜூன்

Comments