தொழிற்சங்கங்களின் எதிர்ப்புகளை விட மக்களே எனக்கு முக்கியமானவர்கள்! | தினகரன் வாரமஞ்சரி

தொழிற்சங்கங்களின் எதிர்ப்புகளை விட மக்களே எனக்கு முக்கியமானவர்கள்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க த எகொனொமிஸ்ட் (The Economist) சஞ்சிகைக்கு கடந்த ஆகஸ்ட் 14ம் திகதிநேர்காணல் வழங்கினார். உலகில் பிரபலமான த எகொனொமிஸ்ட் சஞ்சிகையில் பிரசுரமான இந்த நேர்காணலானது உள்நாட்டு வெளிநாட்டு மக்கள் அனேகமானோரின் கவனத்தை ஈர்த்தது. இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் எவ்வாறு கட்டியெழு ப்புவது என்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க இதன் போது தெளிவு படுத்தியுள்ளார். இது அந்த நேர்காணலிலிருந்து எடுக்கப்பட்ட சில பகுதிகளின் தொகுப்பாகும். 

கேள்வி: மூன்று வாரங்களுக்கு முன்னர் நாம் இங்கு வந்த போது இந்த நாடு நெருக்கடிக்குள் சிக்கியிருந்தது. எனினும் கடந்த இரவு நாம் இங்கு வந்து இறங்கும் போது நிலைமைகள் மிகவும் மாறியிருப்பதைக் காண முடிந்தது. விமான நிலையத்திலிருந்து வரும்போது நெடுஞ்சாலையிலும் இதனை எம்மால் அவதானிக்க முடிந்தது. ஜூலை 21ம் திகதியின் பின்னர் இடம்பெற்றுள்ள இந்த மாற்றங்களுக்கு காரணமாக இருந்த விடயங்கள் என்ன?

பதில்: முதலில் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என மக்கள் விரும்புவதாக நான் நினைத்தேன். மக்கள் ஏராளமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பணியாளர்கள் தங்கள் பணியிடங்களுக்குச் செல்ல முடியாத நிலை இருந்தது. அரசாங்கம் மீது அவர்களுக்கு புகார்கள் இருந்தது. எனினும் ஜனாதிபதி கோட்டாபயவின் பதவி விலகலின் பின்னர் அவர்கள் எமக்கு இன்னும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்குச் சிந்தித்தார்கள். அத்துடன் ஜனாதிபதி ஒருவரைத் தெரிவு செய்வதற்கு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பும் இடம்பெற்றது. அமைச்சரவையும் நியமிக்கப்பட்டது. நாம் மிகவும் கஷ்டமான காலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதை மக்கள் அறிவார்கள். அதிலிருந்து மிக விரைவாக வெளியேறுவதே மக்களின் தேவையாகும். மே மாதத்தின் இறுதியிலிருந்து போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களும் கூட அதனால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்களும் கூட 9ம் திகதி மற்றும் 13ம் திகதிகளில் இடம்பெற்ற வன்முறைகளை எதிர்பார்த்திருக்கவில்லை. 

கேள்வி: தற்போது நாட்டில் எரிபொருள் உள்ளது. QR நடைமுறை வெற்றியளித்துள்ளதைக் காண முடிகின்றது. எரிபொருளுக்கான வரிசைகள் இல்லாமல் போய்விட்டன. கார்களையும், முச்சக்கர வண்டிகளையும் அதிகளவில் வீதிகளில் காணக் கூடியதாக உள்ளது. நாட்டின் நிலைமையினை மாற்றுவதற்கு கடந்த மூன்று வாரங்களின் மேற்கொண்ட செயற்பாடுகள் என்ன?

பதில்: முதலில் எமக்கிருந்தது எரிபொருள் பிரச்சினையினைத் தீர்ப்பதேயாகும். இரண்டாவதாக அனைவருக்கும் பொருந்தக் கூடிய தீர்வினை வழங்குதே எமது தேவையாக இருந்தது. இதன் போது அமைதியான போராட்டக்காரர்களுக்கும் கூட நாம் சந்தர்ப்பத்தினைப் பெற்றுக் கொடுத்தோம். மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பில் கருத்துக்களைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் மக்கள் மன்றம் ஒன்றினை உருவாக்குவதற்கு எண்ணியிருக்கின்றோம். இளைஞர் பிரதிநிதிகள் நால்வரை நியமிப்பதற்கும் குறித்த குழுவினை உருவாக்குவது தொடர்பில் புதிய நிலையியற் கட்டளையினை கொண்டுவருவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. தலைவரின் அனுமதியுடன் அவர்களால் பிரச்சினைகளை முன்வைக்க முடியும். அவர்களால் அறிக்கைகளை உருவாக்க முடியாதுவிட்டாலும் அவர்களது கருத்துக்களை  உள்ளடக்க முடியும். அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதை பாராளுமன்றம் உறுதிப்படுத்தும். 

கேள்வி:- அவ்வாறான ஒரு அரசாங்கம் அமைவது மிகவும் முக்கியம் என நீங்கள் குறிப்பிட்டீர்கள். உண்மையில் அதன் முக்கியத்துவம் என்ன?

பதில்:- இங்கு கடும் நெருக்கடி காணப்படுகின்றது. நாம் எவ்வாறு கட்சிகளாக இணைந்து செயற்படுவது? அனைவராலும் விரும்பப்படும் 22வது அரசியலமைப்பை (ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்க முன்மொழியப்பட்ட) கொண்டு வருவதற்கு நான் தலைமை தாங்கி செயற்பட்டேன். நாங்கள் அதனைக் கொண்டு வருவோம். அதன்போது உங்களால் புதிய அரசியலமைப்பு பற்றி படிக்க முடியும். நான் அதனை தெரிவுக் குழு ஒன்றுடன் இணைந்து கொண்டு வந்தேன். அது புதிய குழு நடைமுறையுடனான புதிய தேசிய கவுன்சிலாகும். ஐரோப்பிய கவுன்சிலின் மாதிரியை ஒத்ததாக உருவாக்கப்பட்டதாகும். அதேபோன்று நாம் பொதுவான குறைந்தபட்ச வேலைத் திட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறோம். இதன் போது கட்சி ஒத்துழைப்பு எமக்கு கிடைக்கும் என்பது அரசாங்கத்திற்குத் தெரியும். ஏனைய முக்கியமான விடயங்கள் தொடர்பில் அடிக்கடி பேச வேண்டியுள்ளது. மாதத்திற்கு ஒரு தடவை கட்சித் தலைவர்களோடு பேச வேண்டும். அதேபோன்று தேவைகளுக்கு ஏற்ப குழுக்களின் ஒத்துழைப்புக்களையும் பெற்றுக் கொள்வோம். 

கேள்வி: சர்வ கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு தடையாக உள்ள விடயங்கள் யாவை?

பதில்: நாம் இன்னமும் பேச்சுவார்த்தை மட்டத்திலேயே இருக்கின்றோம். அனைத்துக் கட்சிகளும் வேறுபட்ட குழுக்களாகும். இது குழுக்கள் மற்றும் அவர்களது பார்வையின் பிரச்சினையே தவிர, கட்சிகளின் பிரச்சினை அல்ல. நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நாட்டின் பொறுப்பு பிணைந்திருப்பது பாராளுமன்றத்துடனாகும். IMF அமைப்பின் பரிந்துரைகளையும் கூட நான் பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளேன். எவருக்காவது இதனை விட சிறந்த யோசனைகள் இருக்குமாயின் நாம் உடனடியாகவே அவர்களின் பக்கம் கவனத்தைச் செலுத்துவோம். இல்லையெனில் எம்மிடமுள்ள விடயங்களுடன் நாம் முன்னோக்கிச் செல்ல வேண்டியுள்ளது. 

கேள்வி: வரும் நாட்கள் எந்தளவுக்கு கஷ்டங்கள் நிறைந்ததாக இருக்கும் என்பது தொடர்பில் நீங்கள் கடந்த சில வாரங்களாக மிகவும் நேர்மையான முறையில் கருத்துக்களைத் தெரிவித்தீர்கள். அந்த கஷ்டங்களைக் குறைத்துக் கொண்டு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு என்ன செய்ய வேண்டும்? அதேபோன்று அரச கடன்களைக் குறைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்ன? சட்ட விதிகள் உருவாக்கம் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் இவை இரண்டில் முதலில் செய்ய வேண்டியது என்ன?

பதில்: எமக்கு புதிய வரிகளோடு, புதிய நிதிச் சட்டங்கள் தேவைப்படுகின்றன. வலுவான நீக்கங்களுடன் (வெட்டுக்களுடன்) ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும். அதேபோன்று 2024ம் ஆண்டில் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திறனைப் பெற்றுக் கொள்வதுமாகும். பாரிய மாற்றங்களுடன் நாம் மீண்டு வருவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 

கேள்வி: பாரிய மாற்றங்கள்  என நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்?

பதில்: அது நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள். அதனை ஆழமாகச் செய்ய வேண்டும். மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து மாற்றங்களையும் செய்து கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும். தாய்லாந்து அதனைச் செய்தது. எனினும் தாய்லாந்தில் இருந்தது வங்கி நெருக்கடி மாத்திரமேயாகும். அவர்களிடம் கடன் நெருக்கடிகள் இருக்கவில்லை. எமக்கு அவை இரண்டும் இருக்கின்றன. எனினும் இந்த நெருக்கடிகளிலிருந்து மீள முடியும் என எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. 

கேள்வி: போட்டிமிக்க பொருளாதாரத்திற்காக சட்டமியற்றும் அமைப்பு தேவை என்று நீங்கள் கருதுவது என்ன?

பதில்: முதலில் வரவு செலவுத் திட்டம் தொடர்பிலாகும். பொதுச் சொத்துக்கள் மற்றும் நிதிப் பற்றாக்குறையை நிரப்ப வேண்டும். அதே நேரத்தில், மிகவும் ஏற்றுமதியைச் சார்ந்துள்ள போட்டிப் பொருளாதாரக் கட்டமைப்பு தொடர்பில் சட்டமன்றில் கேட்க வேண்டும். 1977ம் ஆண்டில் நான் அமைச்சரவையில் இருக்கும் போது நாம் அதனைச் செய்து வெற்றி கண்டோம்.

கேள்வி: உங்களால் எமக்கு சில உதாரணங்களைத் தர முடியுமா? குறுகிய கால, வரவு செலவுத் திட்டம், வருமான வரி  அதிகரிப்பு என?

பதில்: வரிகளை அதிகரிக்க வேண்டி ஏற்படும். வரி மூலதனம், வரிகளை அறவிடுவதை மிகவும் துரிதப்படுத்த வேண்டும். அதன் மூலம் இழக்கப்பட்ட அரச வருமானங்களை அதிகரித்துக் கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். அவ்வாறு செய்தால் அடுத்த வருடத்தில் எமக்கு வரி தொடர்பில் நாம் 2018ம் ஆண்டில் இருந்த நிலைக்கு அல்லது அதற்கு அப்பால் வருவதற்கு வாய்ப்பு கிடைக்கும். 

கேள்வி: இலங்கையை நடுத்தர வருமானம் பெறும் நாடாக அல்லாமல் 25வருடத்தில் உயர் வருமானம் பெறும் நாடாக ஆக்க வேண்டும் என நீங்கள் குறிப்பிட்டீர்கள். இதனைச் செய்வதற்கு என்ன செய்ய வேண்டும்?

பதில்: இது நீங்கள் எந்தளவு திறந்த நிலையில் இருக்கின்றீர்கள் என்பது தொடர்பான கேள்வியாகும். அதற்கு முன் இந்த முழுப் பிரச்சினையையும் வங்கிகளுடன் பேசித் தீர்க்க வேண்டும். அதற்கு முன், சில அரசு சொத்துக்களை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளோம். இதன் மூலம் எம்மால் 2-3டொலர் பில்லியனைப் பெற்றுக் கொள்ள முடியும். இது கீழ் மட்டச் செயற்பாடாகும். அதன் பின்னர் 2018, - 2019காலத்தில் நாம் பயன்படுத்திய சில அறிக்கைகளைச் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இதேவேளை பிராந்தியங்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். தெற்காசிய பிராந்தியத்துடன் அந்தளவு ஒருங்கிணைப்பை நான் காணவில்லை. இதனால் நாம் ASEAN மற்றும் RCEP போன்ற அமைப்புக்களுடன் மிகவும் நெருக்கமாகச் செயற்பட வேண்டும். 

கேள்வி: ஸ்ரீலங்கன் விமான சேவை தவிற தனியார் மயப்படுத்த வேண்டிய வேறு நிறுவனங்கள் யாவை?

பதில்: ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் விற்க முடியும். ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனம் உள்ளது. பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்ற வினா எமக்குள்ளது.

கேள்வி: ஏனைய போட்டியாளர்களுக்காக பெற்றோலிய சந்தை திறக்கப்படுமா?

பதில்: ஆம். நாம் முதலீட்டாளர்களுக்கு திறந்துள்ளோம். எனினும் இங்கு நாம் சில முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்த வேண்டியுள்ளது. சிலர் இத்துறையில் 40வருடங்களுக்கு மேலாக இருக்கின்றார்கள். வெளிநாட்டு பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பான தற்போதைய சட்டத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அந்த வகையில் அயர்லாந்தை முன்மாதிரியாக பார்க்கிறோம்.

கேள்வி: இது தொடர்பில் அடுத்ததாக கொண்டு வர எதிர்பார்க்கும் புதிய சட்டங்கள் என்ன?

பதில்: அது தொடர்பில், அமெரிக்காவில் உள்ள திவாலான நிறுவனங்கள் தொடர்பான 'அத்தியாயம் 11' சட்டத்தைப் போன்ற சட்டங்களை விரைவில் தயாரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஏனைய சட்டங்கள் பொருளாதார ஸ்திரத்தன்மையை நிறுவுவது தொடர்பானவையாகும். அடுத்த வருடத்திற்காக எமக்கு சில மேலதிக அதிகாரங்கள் தேவைப்படுகின்றது. இந்த நிலைமைகளைக் கட்டுப்படுத்துவதற்காகும். 

கேள்வி: சில சில சட்டங்களைப் பாராளுமன்றத்திற்கு கொண்டு வர எதிர்பார்ப்பதாக நீங்கள் குறிப்பிட்டீர்கள். நான் வினவுவது அது தொடர்பிலாகும்?

பதில்: இந்த வேலைத்திட்டம் 2024ம் ஆண்டு வரைக்கும் செல்லும். கம்பனிச் சட்டத்தை திருத்த வேண்டும். வர்த்தக சட்டங்கள் அனைத்தும் நாம் வர்த்தகம் செய்வதை இலகுவாக்க வேண்டும். அதாவது அனேக விதிகளை நீக்குவதாகும். நான் தற்போது முதலீட்டுச் சபையுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளேன். எமது நாட்டினுள் முதலீட்டை வளர்க்கும் ஒட்டுமொத்த செயற்பாட்டையும் ஆராய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போதுள்ள நிலை தொடர்பில் என்னால் திருப்தியடைய முடியாதுள்ளது. ஒருபுறம், இது ஒரு பேரழிவு என்று நான் நம்புகிறேன். மறுபுறம், 1977இல் செய்ததைப் போல புதிதாக ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பாக இதை நான் பார்க்கிறேன்.

கேள்வி: முன்னர் குறிப்பிட்டதைப் போன்று பொருளாதாரத்தை மிகவும் போட்டித் தன்மையாக்கும் போது கடன்களை தள்ளுபடி செய்தல் போன்ற விடயங்களை நடைமுறைப்படுத்துவது மிகவும் வேதனைக்குரியதாக அமையும். நீங்கள் எவ்வாறு இந்த இக்கட்டான காலத்தில் இலங்கையர்களை உங்களோடு அரசியல் பயணத்தில் அழைத்துச் செல்லப் போகிறீர்கள்?

பதில்: என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பது தொடர்பில் நீங்கள் நேர்மையாக இருக்க வேண்டும். ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்காக நீங்கள் எவ்வளவு பணத்தைச் செலவு செய்ய வேண்டும்? அது முக்கியமில்லாதது என்பதை மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் அந்த முறையிலிருந்து படிப்படியாக வெளியேற விரும்புகிறார்கள். அவர்கள் இந்த முறையிலிருந்து விரைவாக வெளியேற முடியும் என்றும், காலம் கடினமானது என்பதையும் விளக்கப்படுத்த வேண்டும். இந்த நிலையிலிருந்து விரைவாக வெளியேற்றுவதே நாம் செய்ய வேண்டியுள்ளது. இது தொடர்பில் எம்மிடம் எதிர்பார்ப்புக்கள் உள்ளன. 

கேள்வி: நிலைமை மிகவும் பயங்கரமானது என்பதைப் புரிந்து கொண்ட மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். மீண்டும் அவ்வாறான போராட்டங்கள் இடம்பெற்றால் நீங்கள் அவர்களுடன் எவ்வாறு நடந்து கொள்வீர்கள்?

பதில்: நான் முக்கியமாக கவலையடைவது உணவு தொடர்பிலாகும். மக்களுக்கு உணவு அவசியமாகும். அவர்கள் பட்டினியில் வாடுவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மத்திய தர வர்க்கத்தினர் செலவு செய்து கொண்டு வாழ்கின்றார்கள். அவர்களின் செலவுகளைக் குறைக்க வேண்டும். வறுமைக் கோட்டின் எல்லையில் இருந்த மக்கள் அதிலிருந்து கீழே வீழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். மிகவும் குறுகிய காலத்தினுள் அவர்களுக்கு நாம் வசதிகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. 

கேள்வி: எனினும் அது கடினமான ஒரு செய்தி. அப்படித்தானே? வரும் காலத்தில் நீங்கள் மிகவும் கஷ்டமான காலத்தை அனுபவிக்க நேரிடும் என்ற செய்தி?

பதில்: மக்கள் அதனை அறிவார்கள். நான் செய்வது நாம் கஷ்டமான காலத்தை கடக்க வேண்டியுள்ளது என்ற உண்மையைக் கூறியதாகும். 

கேள்வி: இவ்வாறு கூறுவதற்கு உங்களுக்கு உள்ள அனுபவம் என்ன?

பதில்: பல தேர்தல்களில் தோல்வி அடைந்ததேயாகும். 

கேள்வி: அரச உடமைகளை மறுசீரமைக்கும் போது தொழிற்சங்களினால் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பலாமே...?

பதில்: நான் தொழிற்சங்கங்கள் தொடர்பில் கவலைப்படப் போவதில்லை. நான் கவலைப் படுவது மக்களைப் பற்றியேயாகும். நிலைமைகள் மிகவும் நல்ல நிலையை நோக்கிச் செல்வதாக மக்கள் உணர்ந்து கொண்டால் அவர்கள் இந்த தீர்மானத்திற்கு இணங்குவார்கள்.

கேள்வி: நிலைமை மோசமானதாக இல்லை என வேடம் போட்டதுதான் முன்னைய அரசாங்கம் செய்த வேலை. எனினும் மக்கள் முட்டாள்கள் அல்ல. நிலைமை மோசமானது என்பதை மக்கள் அறிவார்கள். அவர்கள் வீதியில் இறங்கினார்கள். மக்களுக்கு உண்மையை எடுத்துக் கூறி, இதுதான் நடக்கப் போகிறது. நான் நிலைமைகளை சீராக்குவதற்கு முயற்சிக்கின்றேன் எனக் கூறுவதால், நெருக்கடி குறையும் என நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில் - அவ்வாறே நடக்கும் என்றே நான் எதிர்பார்க்கின்றேன். அதேபோன்று நாம் ஏனைய அரசியல் நிகழ்வுகள் தொடர்பிலும் கவனத்தைச் செலுத்துகின்றோம். இந்த முறையினை மாற்ற வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தால் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தி மிகவும் திறந்த அரசியல் முறைமையினை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பேன்.

கேள்வி: நீங்கள் பாதுகாப்பு தரப்புக்களுடன் நெருக்கமான தொடர்புகளை பேண ஆரம்பித்திருக்கின்றீர்கள். இதற்கு முன்னர் மக்கள் உங்களிடமிருந்து இவ்வாறான ஒன்றை பார்க்கவில்லை. இது தொடர்பில் உங்களால் ஏதாவது கூற முடியுமா?

பதில்: எனக்கு பாதுகாப்பு தரப்புக்களுடன் நெருக்கமான உறவுகள் இல்லை. ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் நான் சில நிகழ்வுகளில் கலந்து கொண்டேன் அவ்வாறுதான். கட்டமைப்பிற்கு அப்பால் நான் செய்த ஒரே விடயம் என்னவெனில், பாராளுமன்றத்தின் பாதுகாப்பை உறுதி செய்த பாதுகாப்பு தரப்பினரை கௌரவித்தது மாத்திரமே.

கேள்வி: பாதுகாப்பு அமைச்சினை உங்களின் கீழ் வைத்துக் கொள்வதற்கு ஏன் தீர்மானித்தீர்கள்?

பதில்: பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் கீழேயே இருந்தது. நானும் அதனை அவ்வாறே வைத்துக் கொண்டேன். அதன் ஊடாக சட்டத்தையும், ஒழுங்கையும் பேணுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டேன். என்றாலும் பாதுகாப்புத் துறைகளில் அனேக மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். நாம் பேச வேண்டியிருப்பது 2030ம் ஆண்டின் பாதுகாப்புத் துறை பற்றியேயாகும். இது நாம் மேற்கொள்ளவிருக்கும் மறுசீரமைப்பு மற்றும் நவீனமயமாக்கல் வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

கேள்வி: பாதுகாப்புத் துறைகளில் எதற்கு முதலிடம் வழங்கப்பட வேண்டும்?

பதில்: சிவில் சட்டத்தை ஏற்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக முதலில் பொலிஸ் துறைக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இரண்டாவதாக நாம் இந்தியாவுடனும், அவுஸ்திரேலியாவுடனும் இணைந்து சமுத்திரப் பாதுகாப்புத் தொடர்பில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எனினும் நாம் தொடர்ந்தும் முன்னோக்கிப் பார்க்கின்றோம். மாலியில் தற்போது எமது இராணுவ வீரர்கள் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதனை வளர்க்க வேண்டும். அத்துடன் எமது பாதுகாப்புத் தரப்பின் செலவுகள் தொடர்பிலும் கவனத்தைச் செலுத்த வேண்டும்.

கேள்வி: 2019ம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக பிரித்தானியாவின் புலனாய்வுப் பிரிவின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளப் போவதாக நீங்கள் பிரதமராகச் செயற்பட்ட நேரம் குறிப்பிட்டீர்களே...?

பதில்: ஆம். பிரித்தானியாவின் புலனாய்வுப் பிரிவு ஈஸ்டர் தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்குப் பங்களிப்பை வழங்கியது. அதன் இறுதி முடிவுக்காக நாம் பிரித்தானிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்திக் கொண்டிருக்கின்றோம்.

டிரோனி வேவலகே
தமிழில்: எம்.எஸ்.முஸப்பிர்
(புத்தளம் விசேட நிருபர்)

Comments