அரச வளங்களை பலாத்காரமாக கையகப்படுத்தும் உரிமை எவருக்கும் கிடையாது | தினகரன் வாரமஞ்சரி

அரச வளங்களை பலாத்காரமாக கையகப்படுத்தும் உரிமை எவருக்கும் கிடையாது

அரச கட்டிடங்கள் மற்றும் சொத்துக்களை கையகப்படுத்துவதற்கோ அல்லது அத்துமீறி அரச கட்டிடங்களு க்குள் பிரவேசிப்பதற்கோ எவருக்கும்அனுமதி கிடையாது. அவ்வாறுசெயற்டுவது சட்டவிரோதமாகும். சட்டவிரோத செயற்பாடுகளை அனுமதிக்கமுடியாது. அவ்வாறு செயல்படுபவர்களைபொலிசார் வெறுமனே கைகட்டி நின்று  பார்க்க மாட்டார்கள். அரச வளங்களையும்கட்டிடங்களையும் பாதுகாக்கும் பொறுப்பு பொலிசாருக்கு உரியது. பொலிசார் தமது பொறுப்பையே நிறைவேற்றி வருகின்றனர். சட்டவிரோதஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் சட்டத்தில் இடமுள்ளது. அதன் அடிப்படையிலேயே சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்தும்நடவடிக்கைகளை பொலிசாரும்  இராணுவத்தினரும் மேற்கொண்டு  வருகின்றனர். சட்டத்தைகையிலெடுக்கும் உரிமை எவருக்கும்கிடையாது. இக்காலங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னெடுக்கும் மோசமான செயற்பாடுகள் பொலிசார் மீது மக்களுக்கு உள்ள பயத்தை இல்லாதொழிக்கும். அவ்வாறான நிலை சிறந்த விளைவுகளைதரப்போவதில்லை. குற்றச் செயல்களையும் சமூக பிரச்சினைகளையும் சாதாரண மக்கள் முறைப்பாடுசெய்வதற்காக இருக்கும் ஒரே இடம் பொலிஸ் நிலையம் தான். அந்த முறைமை சீரழிக்கப்பட்டால் எதிர்காலம் மிக மோசமாகும். ஜனநாயக நாடு என்ற வகையில் அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்கிறார் பொலிஸ் ஊடகப் பணிப்பாளரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால்தல்துவ.

நாட்டில் நடைபெற்று வரும் அண்மைய சம்பவங்கள் தொடர்பிலும் அதுதொடர்பில் பொலிசார் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர் கருத்துக்களைக் கூறுகின்றார்.

கே: ஆர்ப்பாட்டக்காரர்களால் கையகப்படுத்தப்பட்ட ஜனாதிபதி செயலகத்தை மீட்கும் நடவடிக்கையின் போது பொலிசாரால் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மோசமான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் பொலிசார் முறையற்ற விதத்தில் செயற்பட்டதாகவும் வெளிவரும் தகவல்கள் தொடர்பில் உண்மைத் தன்மையை தெரிவிக்க முடியுமா? 

பதில்: போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவது என்பது சாதாரண விடயமல்ல. போராட்டங்களை கட்டுப்படுத்தும் போது சந்திக்க நேரும் நேரடி எதிர் விளைவுகளுக்கு முகம் கொடுத்து எந்த நிலையிலும் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை பொலிசாருடையது. இது எமது நாட்டில் மட்டுமல்ல உலகில் எங்கும் நடப்பதே. 

பொதுமக்கள் தமது உரிமையை பெற்றுக் கொள்வதற்காக ஆர்ப்பாட்டம் நடத்துவதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் அதன் போது சட்ட விரோத செயற்பாடுகள் இடம்பெறுமானால் அதனை சட்ட வரைவு மூலமாகவே கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. 

அதற்கமைய ஜனாதிபதி செயலகத்தை பலவந்தமாக ஆக்கிரமித்து அங்கு தங்கியிருப்பது சட்டவிரோதமான செயற்பாடாகும். அவ்வாறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பில் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அது தொடர்பில் பல்வேறு விதமான கருத்துக்கள் வெளியிடப்படலாம். எனினும் பொலிசார் தமது கடமையையே மேற்கொண்டனர். 

காலிமுகத்திடலில் 200க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்த போதும் கடந்த மே 9ஆம் திகதி அங்கு சுமார் ஐந்து கூடாரங்களே சேதப்படுத்தப்பட்டிருந்தன. 

பெருமளவு ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு இருந்துள்ள நிலையில் மூன்று அல்லது நான்கு பேருக்கே காயங்கள் ஏற்பட்டுள்ளன.  

எவ்வாறெனினும் அத்தகைய செயல்களை நாம் அனுமதிக்கப் போவதில்லை. இறுதி சந்தர்ப்பத்திலாவது பொலிசார் தலையிட்டதனால்தான் மோதல்களைக் கட்டுப்படுத்த முடிந்தது. 

எனினும் பெருமளவானோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் பெருமளவு கூடாரங்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டன. உண்மையில் நடந்ததும் அவை பிரசாரப்படுத்தப்பட்டமைக்குமிடையில் உள்ள வித்தியாசத்தை இதன் மூலம் காணமுடிகிறது. 

காயமடைந்தவர்கள் மருத்துவரிடம் கொண்டு செல்லப்படுவர். மருத்துவர் அவரை பரிசோதனை செய்த அறிக்கையை வழங்கியதன் பின்பு அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கக் கூடிய சந்தர்ப்பமும் உள்ளது. 

பிரசாரப்படுத்தப் படுவது போல் ஜனாதிபதி செயலகத்தை மீட்கும் போது பாரதூரமான தாக்குதல்கள் இடம் பெற்றிருந்தால் பெரும்பாலானோர் காயமடைந்திருக்க வேண்டும். 

மற்றும் அந்த சம்பவங்கள் தொடர்பில் ஆறு முறைப்பாடுகள் மாத்திரமே செய்யப்பட்டுள்ளன. சிறு காயங்களே தவிர பாரிய காயங்கள் தொடர்பில் அதில் தெரிவிக்கப்படவில்லை.  

இவ்வாறுதான் சிறு சம்பவமொன்று பூதாகரமாக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

கே: ஆர்ப்பாட்டக்காரர்களை வெளி யேற்றும் நடவடிக்கைகளின் போது பாதுகாப்பு படையினர் தவிர்ந்த வேறு தரப்பினரும் அதில் சம்பந்தப்பட்டிருந்ததாக கூறப்படும் செய்தியின் உண்மைத் தன்மை என்ன?  

பதில்: உண்மையில் அந்த நடவடிக்கைகளில் பொலிசாரும் இராணுவத்தினரும் மட்டுமே செயற்பட்டனர். வேறு எவரும் அதில் ஈடுபடவில்லை என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இராணுவத்தினரின் இரவு நேர கடமைகளின் போது அவர்கள் அணியும் சீருடைகளில் வித்தியாசங்கள் உள்ளன. இந்த சம்பவத்தின் போதும் அவ்வாறு உடை அணிந்திருந்ததால் தவறான சந்தேகங்கள் வரலாம். 

அதேவேளை அவ்வாறான குழுக்கள் ஈடுபட்டிருந்தால், அவர்கள் மனிதாபிமானமற்ற ரீதியில் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தால் குற்றஞ்சுமத்துபவர்கள் நீதிமன்றத்தை நாட முடியும். அத்தகைய உரிமை நிராகரிக்கப் படுவதில்லை.

கே: ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு இராணுவம் அழைக்கப்பட்டது பொலிசாரின் வேண்டுகோளின் பேரிலா? 

பதில்: ஜூலை 9ஆம் திகதி முதல் அனைத்து நடவடிக்கைகளும் பொலிசும் இராணுவமும் இணைந்ததாகவே மேற்கொள்ளப்பட்டது. 

அப்படி இல்லாவிட்டாலும் பொலிசாருக்கு தமது கடமையின் போது இராணுவத்தினரை அழைப்பதற்கான உரிமை உள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் பன்னிரண்டாவது சரத்தின்படி வர்த்தமானி மூலம் இராணுவத்தினரை அழைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அத்தகைய நிலையில் அவசர காலச்சட்டம் நடைமுறையில் இல்லாத சந்தர்ப்பங்களிலும் மாதாந்தம் இராணுவம் இவ்வாறு கடமைக்கு அழைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அழைக்கப்படும் போது இராணுவத்தினருக்கு மேலதிக அதிகாரங்கள் எதுவும் வழங்கப்படுவதில்லை. எனினும், அவசர காலச் சட்டத்திற்கு அமைய அவர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படுகின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் நீதிமன்றத்தினதோ அல்லது பொலிசாரினதோ உத்தரவு இல்லாமலே சட்டவிரோத ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் அதன் மூலம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

கே: ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த ஜூலை 22ஆம் திகதி தாம் வெளியேறப் போவதாக தெரிவித்திருந்த நிலையிலும் பலவந்தமாக அவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன்? 

பதில்: ஜனாதிபதி செயலகம் என்பது அரசாங்கத்தின் சொத்து. அதற்குள் எவரும் பலவந்தமாக பிரவேசிக்க முடியாது. சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுக்கு அங்கிருந்து வெளியேறுவது தொடர்பில் கால அவகாசம் கோர முடியாது. 

அவர்கள் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்ததிலிருந்து அவர்கள் சட்ட விரோத நடவடிக்கையிலேயே ஈடுபட்டனர். அவர்களை எந்த சந்தர்ப்பத்திலும் வெளியேற்றக் கூடிய அதிகாரம் சட்டத்தை நிலைநாட்டும் அதிகாரிகளுக்கு உள்ளது. 

வெளியேறுமாறு பொலிசார் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டிய அவசியமும் கிடையாது. ஜனாதிபதி செயலக வாயிலை தடை செய்யும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டிருந்தவர்களிடம் கொழும்பு கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அங்கிருந்து விலகிக் கொள்ளுமாறு 9தடவைகள் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதே வேளை கொழும்பு மத்திய பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரும் பல தடவைகள் ஜனாதிபதி செயலகத்திலிருந்து அவர்களை வெளியேறுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த வகையில் பொலிசார் மனிதாபிமான ரீதியிலேயே நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 

அவர்கள் சட்டத்தை மதிப்பவர்களாக இருந்தால் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்திருக்க முடியும். அவர்களால் கால அவகாசத்தை கோர முடியாது. 

அரசியலமைப்புக்கு இணங்க ஜனாதிபதி ஒருவர் பதவியேற்ற நிலையில் அவர் ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தந்து தமது கடமைகளை மேற்கொள்வதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது பொலிசாரினதும் பாதுகாப்பு படையினரதும் பொறுப்பாகும். 

கே: கைது செய்யப்பட்டவர்கள் சாதாரண சட்டத்திற்கு இணங்க நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டதேன்? 

பதில்: சட்டத்தின் நோக்கம் நாட்டில் சாதாரண நிலைமையை முன்னெடுத்துச் செல்வதே. அத்தியாவசிய பொருட்களுக்கான நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இது முன்னொரு போதும் நாட்டில் காணப்படாத நிலைமையாகும். இத்தகைய தருணத்தில் சட்டத்தை புத்தகத்தில் உள்ளவாறு நடைமுறைப்படுத்த முற்பட்டால் மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர் நோக்க நேரும். 

அதற்காக நாம் சட்டத்தை நடைமுறைப்படுத்தவில்லை என்றும் கூற முடியாது. 

அண்மைக்காலமாக நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் சட்ட விரோத கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. ஆரம்பத்தில் தமக்குள்ள அதிகாரங்களைக் கொண்டு பொலிசாரினால் அவற்றைக் கலைக்க முடிந்தது. பின்னர் நவீன ரீதியாக மோதல்களை கட்டுப்படுத்துவதற்கான முறைமையை நாம் தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அதை குறையாக எவரும் கருத முடியாது. 

கே: பொலிஸ் தலைமையகத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது ஏன்? 

பதில்: குற்றங்களை நாம் நீதிமன்றத்தில் ஒப்புவிப்போம். ஆனால் அவர்களுக்கு பிணை வழங்குவதா இல்லையா? என்ற தீர்மானத்தை நீதிமன்றமே மேற்கொள்ளும். நாம் நீதிமன்றத்தின் தீர்மானங்களை சவாலுக்கு உட்படுத்துவதில்லை. நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவானாலும் நாம் அதனை மதிக்கின்றோம். 

கே: மிரிஹான சம்பவம் முதல் ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்கின்றன. அவர்கள் கடமையின் போது ஜெக்கட்டுகளை அணிய வேண்டும் என நீங்கள் தெரிவித்த கருத்து தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது. ஊடகவியலாளர்கள் என்பதற்கான அடையாளத்தை நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் உள்ள போதும் ஊடகவியலாளர்கள் மீதான தொடர் தாக்குதல்கள் என்பது பாரதூரமானதல்லவா? அது தொடர்பில் உங்கள் கருத்து என்ன? 

பதில்: மோதல்களுக்கு முகம் கொடுக்க நேரும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் அவசியமாகும். ஆர்ப்பாட்ட பூமியில் அந்த அதிகாரத்தின் படி அவர்கள் செயற்படுவதை தடுக்கமுடியாது. அவ்வாறென்றால் அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலுக்கு இலக்காகுவார்கள். இரவு நேர ஆர்ப்பாட்டங்களின் போது அடையாள அட்டைகளை பரிசீலிப்பது என்பது முடியாத காரியமாகும். ஆர்ப்பாட்டங்களின் போது தகவல்களை சேகரிக்க வரும் ஊடகவியலாளர்கள் தாம் எந்த சூழ்நிலையில் இருக்கின்றோம் என்ற புரிதல் அவசியம். 

அவ்வாறான சந்தர்ப்பங்களில் தாம் ஊடகவியலாளர்கள் என்பதை காட்சிப்படுத்துவதற்காக ஜெக்கட்டுகளை அணிந்திருப்பது அவசியமாகும். வெளிநாடுகளிலும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் போது இதுபோன்ற நடைமுறையே ஊடகவியலாளர்கள் கடைப்பிடிக்கின்றனர். 

மோதல்களின் போது தகவல்களை சேகரிக்க வரும் ஊடகவியலாளர்கள் அவர்களின் பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். ஆர்ப்பாட்டக்காரர்களின் கல்வீச்சுக்கு இலக்காகுவதை தடுப்பதற்காக தலைக்கவசத்தை அணிவதும் சிறந்தது. அதனையே நான் தெரிவித்துள்ளேன். 

அதேபோன்று பொலிசாருக்கும் ஊடகவியலாளர்களுக்குமிடையில் நிலவுகின்ற இடைவெளியை நிவர்த்தி செய்வது முக்கியம். இதனை நான் பல சந்தர்ப்பங்களில் பகிரங்கமாக தெரிவித்துள்ளேன். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவே நான் அதனை தெரிவித்தேன். 

ஆர்ப்பாட்டங்கள், மோதல்களின் போது ஏனையவர்கள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை ஊடகவியலாளர்களும் எதிர்நோக்க நேரிடும். அதற்கு தேவையான உபகரணங்களை பெற்றுக் கொடுப்பது ஊடக அமைப்புகளினதும் அவர்கள் தொழில் புரியும் நிறுவனங்களினதும் பொறுப்பாகும். 

ஊடகவியலாளர்களுக்கு பாரிய பொறுப்புகள் உள்ளன. பொலிஸார் அமைதியை நிலை நாட்டுவதற்கு செயற்படுவது போல தகவல்களை வெளியிடும் பொறுப்பு ஊடகவியலாளர்களுக்கு உரியது. அது அவர்களின் கடமையாகும். கடமையை நிறைவேற்றுவதற்கு தேவையான உபகரணங்களை அவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பது அவசியமாகும். 

கே: ஜூலை 4ஆம் திகதி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தியமை சட்டத்தின் முன் சவாலுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த நிலைமை தொடர்பில் உங்கள் கருத்து என்ன? 

பதில்: குற்றவியல் நியதிக் கோவைக்கிணங்க நிலைமைகளை தடுப்பதற்கான உச்சளவு அதிகாரம் பொலிசாருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

அதற்கிணங்க உச்சளவு அதிகாரங்கள் அடிப்படையில் பொதுமக்களின் போக்குவரத்துக்களை மட்டுப்படுத்துவது எல்லாக் காலத்திலும் இடம்பெற்றுள்ளது. 

பொலிஸ் ஊரடங்குச் சட்டமும் அதற்கானதே. 

கே: காலிமுகத்திடல் சம்பவத்திற்குப் பிறகு பாதுகாப்பு படையினரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றனவே அது தொடர்பில் நீங்கள் கூற விரும்புவது என்ன? 

பதில்: சமூக வலைத்தளங்களில் செய்திகளை வெளியிடுபவர்கள் திட்டமிட்ட வகையில் அதை மேற்கொள்ளா விட்டாலும் தெரிந்தே தன்னிச்சையாக தகவல்களை வெளியிடுவோரும் உள்ளனர். 

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் திட்டமிட்டு செயற்படுபவர்களும் அதிகம். அவசரகால சட்டத்தின் பதினைந்தாவது சரத்திற்கி ணங்க சமூக வலைத்தளங்கள் மக்களை திசைதிருப்பும் வகையில் தகவல்களை வெளியிடுவது தடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செயற்பட்ட ஒருவர் அண்மையில் கைது செய்யப்பட்டதையும் இங்கு குறிப்பிட முடியும்.

நேர்காணல்:
லோரன்ஸ் செல்வநாயகம்

Comments