திடீர் தேர்தலுக்கு செல்வதால் எந்தப் பயனுமே கிடையாது! | தினகரன் வாரமஞ்சரி

திடீர் தேர்தலுக்கு செல்வதால் எந்தப் பயனுமே கிடையாது!

'திடீர் தேர்தலுக்குச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை. ஒருவேளை, இது சில அரசியல் கட்சிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலாக இருக்கலாம். போராட்டங்கள் என்ற பெயரில் இரு குழுக்கள் செயற்பட்டிருந்தன. ஒரு குழு அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தது, மற்றைய குழு தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களை உணர விரும்பியது' என்று கூறுகின்றார் ஆளும் கட்சியின் முதற்கோலாசானும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன

ரணதுங்க. நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி ஓரளவுக்கு தீரும்வரை தேர்தலுக்குச் செல்ல முடியாது என்பதால், சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து எமது நிறுவனத்துக்கு வழங்கிய செவ்வியின் போதேஅவர் இவ்வாறு தெரிவித்தார்.

கே: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில், சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் வலியுறுத்தியிருந்தார். இவ்வாறு அமைக்கப்படக் கூடிய சர்வகட்சி அரசாங்கம் எவ்வளவு காலம் செயற்பட வேண்டும் என நீங்கள் கருதுகிறீர்கள்?

பதில்: உண்மையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எடுத்த மிகக் கடினமான முடிவு இதுவாகும். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் 6.9மில்லியன் வாக்குகளை நாம் இழந்துள்ளோம். எவ்வாறாயினும், கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுன 6.7மில்லியன் வாக்குகளைப் பெற்று 145பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை தக்கவைக்க 113எம்பிக்கள் இருக்க வேண்டும். ஆனால் பாராளுமன்றத்தில் 145எம்பிக்கள் உள்ளனர். எமது கட்சிக்குப் பெரும்பான்மை இருக்கின்றபோதும் பொதுஜன பெரமுனவைச் சேராத ஒருவரை நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு அழைப்பு விடுத்தோம்.

பின்னர் நாங்கள் முன்மொழிந்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பெரும்பான்மையுடன் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமும் அரசியல் நிகழ்ச்சி நிரலை நோக்கி இழுத்துச் செல்லப்பட்ட போராட்டங்களின் அழுத்தத்தின் விளைவாக பதவி விலக நேரிட்டது. எனவே, ஒரு கட்சியாக நாங்கள் பொதுவிருப்பத்திற்கு மதிப்பளிக்க முடிவு செய்தோம். இருப்பினும், தனிப்பட்ட முறையில் நான் அதை பொதுவிருப்பமாக ஏற்கவில்லை. ஒரு குறிப்பிட்ட குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்க, எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மக்கள் திரண்டனர். அது இறுதியில் அந்த அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த வழிவகுத்தது. எனவே, பொதுஜன பெரமுன மிகப்பெரிய தியாகத்தை செய்து வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இடைக்கால அரசாங்கத்தை அமைக்க கைகோர்க்க வேண்டுமென அவர்களின் முன்னாள் தலைவராக இருந்த இன்றைய ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜே.வி.பி.யினால் இந்த வாய்ப்பை நிராகரிக்க முடியாது. ஏனெனில் அவர்கள் முன்னாள் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நெருக்கமாகப் பணியாற்றினர். தமிழ் தேசிய கூட்டமைப்பும் அந்த அரசுக்கு ஆதரவு வழங்கியிருந்தது.

எனவே, அவர்கள் கைகோர்த்து இடைக்கால அரசை அமைப்பது மிகவும் எளிதாக இருக்கும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கைகோர்த்துள்ள எமது பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினரும் தமது ஆதரவை வழங்க முடியும். எவ்வாறாயினும், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் மிகப்பெரிய தியாகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடி ஓரளவுக்கு தீரும்வரை எங்களால் தேர்தலுக்குச் செல்ல முடியாது. தற்போது மக்கள் தேர்தலை கேட்கவில்லை. தற்போது எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உரப் பிரச்சினைகளுக்கு சில தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மக்களின் செலவினங்களைக் குறைப்பதற்கும் அவர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்குவதற்கும் நாம் ஒரு பொறிமுறைக்கு செல்ல வேண்டும். அதைத்தான் எதிர்வரும் இடைக்கால வரவுசெலவுத்திட்டத்தில் அறிமுகப்படுத்தவுள்ளோம்.

எவ்வாறாயினும், பாராளுமன்றத்திற்கு வெளியே ஒன்றையும், உள்ளே வேறு ஒன்றையும் கூற முடியாது. சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக செயற்படும் போது, அவரது பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று வந்து ஏன் அமைச்சர் பதவிகளை ஏற்கக் கூடாது? அவர்கள் அனைவரும் அனைத்துக் கட்சி அரசாங்கத்தின் பங்குதாரர்களாக அல்லது அமைக்கப்படவுள்ள இடைக்கால அரசாங்கத்தின் பங்குதாரர்களாக மாற வேண்டும்.

ஜே.வி.பியும் அதன் பங்குதாரர்களாக மாற வேண்டும். இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதன் ஒரே நோக்கம் அது அனைத்து அரசியல் கட்சிகளாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட வேண்டும் என்பதே. யார் வேண்டுமானாலும் அமைச்சர் பதவிகளைப் பெறலாம். இதற்குப் போதியளவு அமைச்சுப் பதவிகள் இல்லையென்றால் எமது பதவிகளை வழங்கிவிட்டு வெளியேறவும் தயாராக இருக்கின்றோம். எரியும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதிக்கு உதவ வேண்டும் என்றே நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.

அமைச்சர்கள் தங்களின் சம்பளத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடாது மற்றும் அவர்களின்  சலுகைகளை குறைந்தபட்சம் 50சதவீதம் குறைக்கக் கூடாது என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். எவ்வாறாயினும், அனைத்துத் தரப்பினரையும் இலாகாக்களை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம், இதனால் குறைந்தது ஒன்றரை வருடமாவது தியாகங்களைச் செய்ய முடியும்.

கே: விரைவில் மக்களிடம் புதிய ஆணையைப் பெற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

பதில்: பாராளுமன்றதில் 145உறுப்பினர்களின் தெளிவான ஆணையைக் கொண்ட அரசு இது. அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் பற்றி நான் பேசவில்லை. இந்தப் போராட்டங்களின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்று அவர்களே இப்போது கவலைப்படுகிறார்கள்?இறுதியில் போதைக்கு அடிமையானவர்களும், பாதாள உலகக் கதாபாத்திரங்களும், தவறு செய்பவர்களும் இருந்துள்ளனர் என்பது தெளிவாகியுள்ளது.

உண்மையில், இதனை நாட்டின் பெரும்பான்மையான மக்கள் எதிர்பார்க்கவில்லை. அமைதியான எதிர்ப்பாளர்கள் அமைப்பு மாற்றத்தைக் கோரினர். அதைத்தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் செய்வதற்கு முயற்சித்தார். இருப்பினும், மக்கள் சிலர் அந்த அமைப்பு மாற்றத்திற்கு ஆதரவாக இல்லை. ஜே.வி.பி போன்று தமது அரசியல் நிகழ்ச்சி நிரலில் செயற்படும் குழுக்கள் ராஜபக்ஷ ஆட்சியை அகற்ற விரும்பின.

பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமானால், குறைந்தது ஓரிரு வருடங்களுக்கு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும். அதன் பின்னர் தேர்தலுக்கு செல்வதே உசிதமானது என ஜனாதிபதி கருதினால் அவரின் முடிவின்படி செயற்பட வேண்டும்.

கே: ஜே.வி.பி மற்றும் சில பிரிவினர், இந்த நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால், அரசியல் கலாசாரத்தை மாற்ற வேண்டும் என்கின்றனர். உங்கள் கருத்து என்ன?

பதில்: நான் ஒப்புக் கொள்கிறேன். எனவே தற்போதுள்ள தேர்தல் முறையை மாற்றி புதிய தேர்தல் முறையின் கீழ் தேர்தலை சந்திக்க வேண்டும். 225பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரே மாதிரியானவர்கள் என்று சிலர் கூறினால், தேர்தலுக்குப் போன பிறகு இன்னும் 225எம்.பி.க்களை தேர்ந்தெடுக்கக் கூடாது. இல்லையெனில் தேர்தல் முறையை மாற்றி புதிய சட்டங்களைக் கொண்டு வர வேண்டும். அதன் பின்னரே தேர்தலுக்குச் செல்ல வேண்டும்.

படிக்காத சிலர் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெறுகிறார்கள் என்று சில பிரிவுகள் கூற முயல்கின்றன. எவ்வாறாயினும், பாராளுமன்றம் வெவ்வேறு பிரிவினரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுபவர்கள் அறிவார்ந்த மக்கள் மற்றும் தொழில் வல்லுனர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணி அவர்களின் கருத்துக்களைப் பெற்று அதன்படி செயற்பட வேண்டும். அவ்வாறான பொறிமுறையை உருவாக்குவதுடன், தேர்தல் முறைமையும் மாற்றப்பட வேண்டும்.

அதுவரை, திடீர் தேர்தலுக்குச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை. ஒருவேளை, இது சில அரசியல் கட்சிகளின் அரசியல் நிகழ்ச்சி நிரலாக இருக்கலாம். போராட்டங்கள் என்ற பெயரில் இரு குழுக்கள் செயற்பட்டிருந்தன. ஒரு குழு அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்தது, மற்றைய குழு தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களை உணர விரும்பியது.

கே: நாட்டில் தடை செய்யப்பட்டிருந்த ஆறு சர்வதேச தமிழ் அமைப்புக்கள் மற்றும் 317நபர்களின் மீதான தடையை நீக்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு எடுத்த தீர்மானத்தின் பின்னணியில் உள்ள நியாயம் குறித்த உங்கள் கருத்து என்ன?

பதில்: போராட்டங்களின் போது காலிமுகத்திடலில் விடுதலைப் புலிகளை நினைவுகூர நடவடிக்கை எடுக்கப்பட்டதை நாம் பார்த்தோம். யாரும் அதை விமர்சிக்கவில்லை அல்லது ஊடகங்கள் கூட அதைப் பற்றி பேசவில்லை. அந்த சர்வதேச தமிழ் அமைப்புகளின் மீதான தடையை நீக்க பாதுகாப்புப் படையினர் சில வழிமுறைகளை பின்பற்றுவார்களா என்று எனக்குத் தெரியவில்லை. பாதுகாப்புப் படையினர் எப்போதும் சர்வதேச புலனாய்வு அமைப்புகளிடம் இருந்து தகவல்களைப் பெற்று அதன்படி செயல்படுகின்றனர். உண்மையில், அரசாங்கத்தின் மீது சேறு பூசுவதற்காக சில பிரிவுகள் இந்தப் பிரச்சினையை முன்னிலைப்படுத்துகின்றன. எவ்வாறாயினும், காலிமுகத்திடலில் விடுதலைப் புலிகளை நினைவுகூரும் போது அவர்கள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. இந்தச் செயல்களுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும்.

கே: இந்த நிலையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதை விட அல்லது 22ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதை விட மக்களின் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே முக்கியமானது என்று கூறுபவர்கள் உள்ளனர். இந்தக் கருத்துடன் உடன்படுகின்றீர்களா?

பதில்: உண்மையில், நானும் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றேன். அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்துக்கு வந்து சர்கட்சி அரசாங்கத்துடன் கைகோர்க்கும் என்ற நம்பிக்கையில் 22ஆவது திருத்தம் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்கள் அத்தகைய ஒருமித்த கருத்தை எட்டவில்லை என்றால், 22ஆவது திருத்தத்தை கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளதா என்பதை நாம் இருமுறை யோசிக்க வேண்டும். இன்று நாட்டுக்கு தேவைப்படுவது 21ஆவது அல்லது 22ஆவது திருத்தம் அல்ல.

1978அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இது 20முறை திருத்தப்பட்டுள்ளது. எனவே இன்றைய தேவைக்கு ஏற்ற புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழு ஏற்கனவே தனது அறிக்கையை கையளித்துள்ளது. அந்த அறிக்கை உடனடியாக அரசியலமைப்பு சபைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என நான் கருதுகிறேன். அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டால், அந்த பரிந்துரைகளை செயல்படுத்தலாம். இல்லாவிட்டால், அது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, பின்னர் புதிய அரசியலமைப்பை நாட்டுக்கு அறிமுகப்படுத்தலாம். இத்தருணத்தில், இந்த பொருளாதார நெருக்கடியில் இருந்து எப்படி விடுபடுவது என்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்.

அர்ஜூன்

Comments