ஜூனியர் மார்க்கோஸின் புதிய ஆட்சி மீண்டும் சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்குமா? | தினகரன் வாரமஞ்சரி

ஜூனியர் மார்க்கோஸின் புதிய ஆட்சி மீண்டும் சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்குமா?

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதி உப ஜனாதிபதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. முன்னாள் சர்வாதிகாரி பேடினன் மார்க்கோஸின் மகனான போங்பாங் மாக்கோஸ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிலிப்பைன்ஸ் தென்கிழக்காசியாவில் அமைந்துள்ள ஒரு தீவு. ஏறக்குறைய ஏழாயிரம் தீவுகளைக் கொண்ட நாடு. மேற்கு பசுபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள பிலிப்பைன்ஸ் தென்சீனக் கடலாலும் பிலிப்பைன்ஸ் கடலாலும் அரணமைக்கப்பட்டுள்ள நாடாகும். சீனா, லாவோஸ், தாய்லாந்து, வியட்னாம், கம்போடியா, மலேசியா, இந்தோனேசியா, போன்ற நாடுகளை அயல்நாடாகக் கொண்ட தீவாகும். பிலிப்பைன்ஸ்ன் இரண்டாவது மிகப் பெரிய (லுசான்) தீவான மின்டானே தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து நீண்டகாலமாக போராடியது. இக்கட்டுரையும் 36ஆண்டுகளுக்குப் பின்னர் மார்க்கோஸின் மகனது தெரிவு பிலிப்பைன்ஸின் குடும்ப அரசியலையும் சர்வாதிகார அரசியலையும் கடந்து பயணிக்குமா என்பதை தேடுவதாக அமையவுள்ளது.

மே 09 (2022) அன்று நடைபெற்ற தேர்தலின் முடிபுகள் மே11இல் வெளியாகின அதன்பிரகாரம் பாங்பாங் மார்க்கோஸ் ஏறக்குறைய 31மில்லியன் வாக்குகள் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தனது வெற்றியின் பின்னரான உரையாடலில் ஊடகங்களுக்கு வெளியிட்ட செய்தியில் தனது குடும்பத்தின் கடந்த காலத்தை வைத்து தன்னை மதிப்பிட வேண்டாம் என உலகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். 1965முதல் 1986ஆம் ஆண்டுவரை ஆட்சியில் இருந்த மார்க்கோஸ் மக்களது புரட்சியினூடாக ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார். மார்க்கோஸ் குடும்பம் மீது பாரிய ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்ததுடன் ஏறக்குறைய 10பில்லியன் அமெரிக்க டொலர் அரசாங்கத்தின் நிதியை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இக்காலத்தில் பிலிப்பைன்ஸின் பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்திருந்தது. ஏறக்குறைய இலங்கையின் இன்றைய நிலை போன்று காணப்பட்டது. அத்தகைய குடும்பத்திலிருந்து மீளவும் ஒருவர் ஆட்சியை பிலிப்பைன்ஸில் அமைத்துள்ளமை கவனத்திற்குரியதாகும். உலக வரலாற்றிலேயே அதிக மோசடி செய்த குடும்ப அரசியலாக அன்றைய காலப்பகுதியில் மார்க்கோஸ் குடும்பம் விமர்சிக்கப்பட்டது. இத்தகைய குற்றச்சாட்டை போங்பாங் மீட்பரா என்பதே இன்றைய கேள்வியாகும். அது மட்டுமல்ல சர்வாதிகார குடும்பங்களுக்கு மக்கள் ஆதரவு சாத்தியமாவது எவ்வாறு என்பதும் முக்கியமான கேள்வியாகும். இதனை சற்று விரிவாக நோக்குவது அவசியமானது.  

முதலாவது ஜீனியர் மார்க்கோஸ் தந்தையார் விட்ட தவறை நிரப்பீடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை அவ்வப்போது வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக தனது ஜனாதிபதி பிரச்சாரத்தின் போதும் வெற்றியின் பின்பும் அத்தகைய எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளார். சமூக வலைத்தளங்களில் அதிக பிரச்சாரங்களை நிகழ்த்தியுள்ளார். ஏறக்குறைய அவரது வெற்றிக்கு அடிப்படை சமூக வலைத்தளங்களாகவே விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். தனது குடும்பத்தை வைத்துக் கொண்டு தன்னை மதிப்பீடு செய்ய வேண்டாம் என்பதில் அதிக கவனம் கொள்ள முயன்றதனால் மாற்றங்களை பிலிப்பைன்ஸில் ஏற்படுத்தக் கூடியவராக ஆட்சி செய்யலாம் என்ற எதிர்பார்க்கை காணப்படுகிறது.  

இரண்டாவது, அவரது ஆதரவாளர்கள் மார்க்கோஸின் ஆட்சிக்காலம் பெற்காலம் எனும் பிரச்சாரம் ஒன்றினை முன்னெடுத்தார்கள். அதனையும் சமூக வலைத்தளங்களிலேயே அதிகம் முதன்மைப்படுத்தினர். அதற்கான ஆதராங்களை காட்சிப்படுத்தினார்கள். குறிப்பாக மார்க்கோஸின் முதல் ஆட்சிக்காலப்பகுதி வீதி அபிவிருத்தி உட்கட்டமைப்பு விருத்தி நெடுஞ்சாலைகள் விருத்தி என்பவற்றுடன் தொழில் துறையிலும் பொருளாதார அடிக்கட்டுமானத்திலும் அதிக கவனம் செலுத்தினார். வடக்கு லுசான் விரைவுப்பாதைத் திட்டம் மஹர்லிகா நெடுஞ்சாலைத் திட்டம் நாடுமுழுவதையும் ஒரு தேசிய கட்டமைப்பாக மாற்றியது. தீவுகளை இணைப்பதிலும் மனிலா நகரத்துடன் பிராந்தியங்களை கட்டமைப்பதிலும் அதிக அக்கறை செலுத்தினார். வெளிநாட்டுக் கடனைக் கொண்டு உட்கட்டமைப்புத் திட்டங்களை வெற்றிகரமாக உருவாக்கிய போதும் அதனால் பணவீக்கம் அதிகரித்ததுடன் உள்நாட்டு உற்பத்திக்கான எந்தவித முகாந்திரமும் இல்லாத நிலை ஏற்பட்டது. இது அவரது இரண்டாவது காலத்தை அமைதியற்றதாக்கியது. இரண்டாவது ஆட்சிக்காலம் முடிவடைவதற்குள் 1972(9/23) இல் முறையற்ற விதத்தில் இராணுவச் சட்டத்தை கொண்டுவந்து ஆட்சியை நீடித்துக் கொண்டார். இதில் ஜீனியரின் ஆதரவாளர்கள் சீனியரின் பொருளாதாரத் திட்டங்களையும் அவர் ஏற்படுத்திய உட்கட்டமைப்பு வசதிகளையும் முதன்மைப்படுத்தினார்களே அன்றி அவரது தவறான ஆட்சி முறைகளையோ குடும்பத்தின் மோசடியையோ முதன்மைப்படுத்தவில்லை. அதனால் பிலிப்பைன்ஸ் மக்கள் வழித்துக் கொள்ள வேண்டியது அவசியமானது.  

மூன்றாவது, மார்க்கோஸ் குடும்பம் நாடுகடத்தப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் பிலிப்பைன்ஸுக்கு திரும்பியதுடன் அரசியலில் தமது ஈடுபாட்டைக் வெளிப்படுத்த ஆரம்பித்தனர். 1992இல் மார்க்கோஸின் மனைவி இமெல்டா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். போங்பாங் தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபட்டதுடன் ஏதோ ஒரு பதவியில் தொடர்ந்து காணப்பட்டார். ஏறக்குறைய 23வது வயதிலிருந்து அவர் அரசியலில் ஈடுபாடு காட்டியதைக் காணக் கூடியதாக உள்ளது. குறிப்பாக, ஆளுனர் துணை ஆளுனர் பதவிகளை பெற்றதோடு கிலூங் பாகோங் லிபூனான் கட்சியின் உறுப்பினராகவும் முக்கிய பதவிகளிலும் காணப்பட்டார். ஜனாதிபதி கொரசான் அகினோஸ் காலத்தில் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்ட ஜீனியர் மார்க்கோஸ் 1992முதல் 1995வரை மீளவும் இலோகோஸ் நோர்ட்டின் மாவட்டப் பிரதிநிதியாக இரண்டாவது காங்கிரஸில் தெரிவானார். இதே பிராந்தியத்தில் 1998இல் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டார் 2010முதல் 2016வரை தேசியவாதக் கட்சியிலிருந்து செனட்டராக தெரிவானார். 2016இல் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். அத்தேர்தலில் 0.64சதவீத வாக்குகளால் தோல்வியடைந்ததனால் தேர்தல் தொடர்பில் தீர்ப்பாயத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். அதனால் மீள எண்ணப்பட்ட போது எதிர்த்து போட்டியிட்ட துணை ஜனாதிபதி ராப்ரெட்டோ அதிக வாக்குகளால் முன்னிலை பெற்றார். . (15.93) 2021இலேயே ஜுனியர் மார்க்கோஸ் ஜனாதிபதி தோர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.  

நான்காவது பிலிப்பைன்ஸின் இயல்பான அரசியல் கலாசாரம் அதிக வன்முறையைக் கொண்டது. குறிப்பாக மார்க்கோஸ் மட்டுமல்ல பிலிப்பைன்ஸ்ஸை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் அனைவரும் வன்முறையை அதிகமாக பிர​ேயாகித்தவர்கள். குறிப்பாக மின்டானே விடுதலைப் போராட்டத்தை இராணுவ அடக்குமுறை யினாலேயே முடிவுக்கு கொண்டுவந்தனர். அதன் பின்னர் மேற்கு கலாசாரத்தினால் ஏற்பட்ட போதைப் பொருள் பிரயோகத்தால் பிலிப்பைன்ஸின் இருப்பே காணாமல் போயுள்ளது. அதனை தடுக்க கடந்த கால ஆட்சியாளர்களில் ரெட்றிகோ இராணுவச் சட்டத்திற்கு நிகரான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார். அச்சத்தையும் கொலைக்கலாசாரத்தையும் சட்டரீதியாக அரங்கேற்றியதுடன் சர்வதேச நாடுகளின் ஒப்புதலையும் பெற்றிருந்தார். அதனால் பிலிப்பைன்ஸ் எப்போது வன்முறையை தொடர்ச்சியாக கொண்டிருக்கும் நாடாகவே தெரிகிறது.  

ஐந்தாவது, பிலிப்பைன்ஸின் அமைவிடம் தீவாகவும் அரசியல் கேந்திரமாகவும் சீனா இந்தோனேசியா வியட்நாம் போன்ற நாடுகளது அரசியலாலும் அதிகம் பாதிக்கப்படும் நாடாகவுள்ளது. அது மட்டுமன்றி மேற்கு நாடுகளுக்கும் சீனாவுக்கும் உள்ள போட்டித்தன்மையும் தென் சீனக்கடலைப் பொறுத்த பிராந்திய நாடுகளுக்கான இழுபறியும் அதிக அரசியல் நெருக்கடியை பிலிப்பைன்ஸூக்கு ஏற்படுத்திவருகிறது. அதனால் பிலிப்பைன்ஸின் சட்ட ஒழுங்கும் இராணுவவாதங்களும் பலமான ஆட்சியும் அவசியமானதாக அமைவதுடன் அதன் புவிசார் அரசியலை கையாளும் திறனும் உத்திகளும் தவறும் பட்சத்தில் மக்கள் மீதான ஆக்கிரமிப்பு ஆட்சியாளரால் இயல்பாகவே அரங்கேற்றப்படுகிறதைக் காணமுடிகிறது. மொத்தத்தில் இலங்கைத் தீவுக்குரிய அதேயளவான ஆனால் வேறுபட்ட புவிசார் அரசியல் நியமங்கள் பிலிப்பைன்ஸுக்கு உண்டு. மார்க்கோஸ் பாணியில் இலங்கை ஆட்சியாளர்கள் செயல்படுவதையும் நினைவு கொள்வது பொருத்தமானதாக அமையும்.  

எனவே பிலிப்பைன்ஸின் புதிய ஜனாதிபதி வோங்வாங் மார்க்கோஸ் மீளவும் மார்க்கோஸ் பாணியில் ஆட்சியை தொடருவரா அல்லது தனித்துவமாக மாற்றங்களை ஏற்படுத்துவரா என்தே முக்கியமானது. அவர் தந்தையின் செயல்களுக்கு மன்னிப்போ அரசாங்கத்திற்கு இழைத்த மோசடிக்கு பதிலீடோ செய்யாத வரை அவரது ஆட்சியின் எதிர்காலத்தை பற்றிய எச்சரிக்கைகளே மிச்சமாகவுள்ளது. மீண்டும் மார்க்கோஸ் பாணியில் பிலிப்பைன்ஸ் ஆளப்படும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை என்றே தோன்றுகிறது. இதற்கு வலுவான காரணம் ஒன்று காணப்படுகிறது. அதாவது சீனியர் மார்க்கோஸின் ஆட்சிக்காலம் பொற்காலம் என அடையாளப்படுத்திய வீடியோக்கள் அனைத்துமே திரிபுகளைக் கொண்டதென பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழக தகவல் தொடபாடல் துறையைச் சேர்ந்த பாத்திமா ஹான் எனும் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார் ஜுனியரது வெளியுறவுக் கொள்கையும் உள்நாட்டுக் கொள்கைகளையும் பொறுத்தே அதில் ஏற்படவுள்ள மாற்றத்தை காணமுடியும்.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments