போரிஸ் ஜோன்சனின் பதவி விலகல்! ஐரோப்பிய அரசியலில் ஏற்படுத்தவுள்ள தாக்கம் | தினகரன் வாரமஞ்சரி

போரிஸ் ஜோன்சனின் பதவி விலகல்! ஐரோப்பிய அரசியலில் ஏற்படுத்தவுள்ள தாக்கம்

பிரித்தானியாவின் அரசியல் இருப்பு தொடர்ச்சியாக நெருக்கடியாக காணப்படுவதோடு ஜனநாயகத்தின் மீது அரசியல் தலைவர் கொண்டிருக்கின்ற இயல்பையும் அவ்வப்போது அடையாளம் காண முடிகிறது. ஒருபக்கம் அரசியல் அதிகாரம் குழப்பம் அடைகின்ற போது மறுபக்கத்தில் ஐனநாயகம் உறுதிப்படுத்தப்படுகிறது. மக்களின் விருப்புக்களை அனுசரிக்கும் அரசியல் தலைவர்கள் பிரித்தானியாவின் ஆங்கில மாதிரியை பாதுகாப்பதில் வெற்றி கொள்வதை அவதானிக்க முடியும். கடந்த பல ஆண்டுகளாக பிரதமர்கள் பதவி விலகுவதும் புதிய பிரதமர்கள் நியமிக்கப்படுவதும் பிரித்தானிய அரசின் மரபாக விளங்குகின்றது. டேவிட் கமருன், திரேசா மே அம்மையார் வரிசையில் போரிஸ் ஜோன்சன் உள்ளடக்கப்பட்டுள்ளார். இக்கட்டுரையும் போரிஸ் ஜோன்சனின் பதவி விலகல் அறிவிப்பும் அதன் பின்னாலுள்ள அரசியல் பொருளாதார சமூக காரணங்களையும்  தேடுவதாக உள்ளது.

நீண்ட பாரம்பரியத்தை கொண்ட பழமைபேண் கட்சியின் இருப்பு பிரித்தானிய அரசியலோடும் அதன் வளர்ச்சியோடும் பின்னிப்பிணைந்ததொன்றாகும். கட்சியின் வரலாறு தோன்றிய காலப்பகுதியிலிருந்து பிரித்தானியாவின் வளர்ச்சியை முதன்மைப்படுத்தியதும் பழமைபேண் தாராண்மைவாத கட்சியுமான பழமைபேண் கட்சிக்கு உரியதானது. உலக வரலாற்றில் மார்க்கேட் தட்சர் ஏற்படுத்திய பொருளாதார கொள்கைகள் பிரித்தானியாவை மீளவும் ஐரோப்பாவிற்குள்ளும் உலகளாவிய தளத்திலும் முதன்மைப்படுத்த வழிவகுத்தது. இத்தகைய பாரம்பரியங்களுக்குள்ளால் அரசியல் உறுதிப்பாட்டை நெருக்கடிமிக்க காலங்களில் வென்றெடுத்த தலைவர்களில் ஒருவராக போரிஸ் ஜோன்சனும் கருதப்பட்டார். குறிப்பாக கொவிட் தொற்றின் காலத்தில்  இங்கிலாந்து மக்களின் இருப்பை நிலைப்படுத்துவதிலும் மீட்டெடுப்பதிலும் வெற்றிகரமான தலைவராக அடையாளப்படுத்தியது. பழமைபேண் கட்சியின் துணைக்கொறொடாவாக இருந்த கிறிஸ் பின்சர் கேளிக்கை விடுதியொன்றில் இரு ஆண்களுடன் பாலியல் ரீதியில் அநாகரீகமாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு சார்ந்து பிரதமரான போரிஸ் ஜோன்சன் சரியான முறையில் நடந்துகொள்ள தவறினார் என்ற காரணத்தினால் ஆளும் கட்சி அமைச்சர்களுக்குள்ளும் பழமைபேண் கட்சிக்குள்ளும் பிரதமருக்கு எதிராக பலமான எதிர்ப்பு ஏற்பட்டது. ஆரம்பத்தில் அத்தகைய விடயத்துக்கு சரியான நடவடிக்கை பிரதமர் எடுக்க தவறினார் எனக்குறிப்பிட்டு நிதி மற்றும் சுகாதார அமைச்சர்கள் தமது பதவியை இராஜினாமா செய்தார்கள். இதற்கு தீர்வுகாணும் விதத்தில் இரு அமைச்சுக்கும் பிரதமர் புதியவர்களை நியமித்தார். பிரதமர் நியமித்த சிலமணி நேரங்களில் உயர் கல்வி அமைச்சும், கல்வி அமைச்சும் இராஜினாமா செய்ததோடு ஏனைய அமைச்சர்களும் இராஜினாமா செய்ய ஆரம்பித்தார்கள். இதனால் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு பழமை பேண் கட்சி உறுப்பினர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தனர். இதன் பின்னர் போரிஸ் ஜோன்சன் கட்சி தலைமையிலிருந்து விலகுவதாகவும் புதிய பிரதமரை கட்சி தேர்ந்தெடுக்கும் வரை இடைக்கால பிரதமராக தான் பணி புரிவதாக அறிவித்துள்ளார். இவ்விடயத்தை அவதானிக்கின்ற போது போரிஸ் ஜோன்சனின் பதவி விலகலானது அதிகமான குழப்பங்களையும் சந்தேகங்களையும் ஏற்படுத்த முனைகின்றது. அத்தகைய விடயங்களை முழுமையாக விளங்கி கொள்வது அவசியமாகும்.

முதலாவது, பிரித்தானிய சமூகம் ஒரு திறந்த சமுகமாகவே அடையாளப்படுத்தப்படுகிறது. ஐரோப்பிய சமூகங்களிலும் அதீத சுதந்திரமும் அதற்கான இயல்புகளும் பிரித்தானிய சமூகத்திடம் காணப்பட்டது. அத்தகைய சமூகத்தில் கேளிக்கை விடுதிகளிலும் வாழ்வியல் முறைகளிலும் கீழைத்தேசத்தோடு ஒப்பிடுகின்ற போது சுதந்திரமான தேசமாக தன்னை காட்டிக்கொண்டது. ஆனால் அரசியல் என்பது நெறிமுறைக்கும் ஒழுக்கத்துக்கும் உட்பட்டது என்பதை அத்தேசங்கள் தற்போதும் கொண்டிருக்கின்றன என்பதையே இச்செயல் காட்டுகின்றது. அநேக அமெரிக்க ஜனாதிபதரி வேட்பாளர்களின் தோல்விகளுக்கு பின்னால் ஊழல்களும் பாலியல் குற்றச்சாட்டுகளும் காணப்படுகிறது. எனவே ஐரோப்பியர்கள் திறந்த மற்றும் சுதந்திரமான சமுதாயமாக தம்மை அறிமுகப்படுத்தி கொண்டாலும் அரசியல் நடைமுறையில் நெறிமுறைக்கு உட்பட்டே செயற்படுகின்றனர் என்பதை பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சனின் பதவி விலகல் வெளிப்படுத்தி நிற்கிறது.

இரண்டாவது, கிரிஸ் பின்சரின் பாலியல் நடத்தையின் விளைவுகள் தான் பிரதமரது பதவி விலகலுக்கு காரணம் என்று கூறிவிட முடியாது. அத்தகைய செயல் பழமைபேண் கட்சியினருக்கும் ஒரு வாய்ப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளதென்றே கூற வேண்டும். குறிப்பாக ஐரோப்பிய பிரித்தானிய வெளியேற்ற விவகாரத்தில் இரு பிரதமர்கள் பதவி விலகிய போது போரிஸ் ஜோன்சன் அவ்வெளியேற்றத்தை உறுதிப்படுத்திக் கொண்டார். டேவிட் கேமரூனும், திரேசா மேயும் வெளியேறியதன் மூலம் பிரித்தானியாவிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை நன்கு உணர்ந்திருந்தார்கள் என்பதை காட்டியது. ஆனால் போரிஸ் ஜோன்சனோ அவை அனைத்தையும் கைவிட்டு வெளியேற்றத்துக்கான உரையாடலை வெற்றிகரமாக முடித்து, நெருக்கடி ஏற்பட்ட போதெல்லாம் உலக தலைவர்களோடும் பிரித்தானிய இராணியோடும் உரையாடி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியாவை தனிமைப்படுத்தினார். உலகப்பொருளாதாரம் என்பது சந்தையாலும் வர்த்தகத்தாலும் கட்டமைக்கப்படுகின்றது. அத்தகைய சூழலில் அமெரிக்காவின் நலன்களையும் விருப்பங்களையும் நிலைப்படுத்தும் விதத்தில் பிரதமர் போரிஸ் ஜோன்சன் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டு பழமைபேண் கட்சியினரிடம் காணப்பட்டது.

மூன்றாவது, போரிஸ் ஜோன்சனின் பதவி விலகலுக்கு பின்னால் ரஷ்ய- உக்ரைன் போர் வலுவான காரணியாக இனங்காணப்படுகிறது. நேட்டோவிலும், ஐரோப்பிய கண்டத்திலும், ஜி-07இலும் பிரதான பங்காளரான பிரிட்டன் அமெரிக்காவுடன் இணைந்து அமெரிக்காவின் நலனுக்கு ஏற்ற வகையில் ஐரோப்பாவை வழிநடத்துவதாக அவர்மீதான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக உக்ரைன்- ரஷ்யாவுக்கு எதிரான போரை முனைப்பாக நடத்துவதற்கான இராணுவ, பொருளாதார ரீதியான உதவிகளை வழங்குவதில் மேற்குறித்த அமைப்புக்களை போரிஸ் ஜோன்சன் பயன்படுத்தினார் என்றும், ரஷ்ய- அமெரிக்க முரண்பாட்டை தீவிரப்படுத்துகிறார் என்றும் அவர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றது. அதற்கு ஆதாரமாக பிரிட்டன் உளவுத்துறையின் போலியான தகவல்களும் உக்ரைன் மீது  தடவை நிகழ்ந்த போரிஸ் ஜோன்சனின் விஜயத்தையும் குறிப்பிட முடியும். அதுமட்டுமல்லாது, ரஷ்யாவிற்கு எதிரான ஊடகப்போரின் பிரதான பங்கை பிரிட்டன் முன்னெடுத்து வருகின்றது.

நான்காவது, ரஷ்ய- உக்ரைன் போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பிரித்தானிய மக்களின் வாழ்க்கைச்சுமையை அதிகப்படுத்தி உள்ளது. எரிவாயு மற்றும் பெற்றோலியம் ரஷ்யாவிடமிருந்து பெறுகின்ற ஐரோப்பா ரஷ்யா மீதான பொருளாதார தடையினால் இழந்துள்ளது. ஜேர்மனி மற்றும் பிரான்சும் ரஷ்யாவோடு சுமூகமான நட்புறவை கட்டியமைக்க முயலுகின்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் போரிஸ் ஜோன்சன் தலைமையிலான பிரிட்டன் ரஷ்யாவிற்கு எதிராகவே செயற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட விளைவுகள் ஐரோப்பிய பொருளாதாரத்தை பாரிய நெருக்கடிக்குள் தள்ள ஆரம்பித்துள்ளது. அதில் பிரிட்னும் அதிக சுமையை மக்கள் மீது ஏற்படுத்தியுள்ளது.

ஐந்தாவது, பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜோன்சன் அமெரிக்காவோடு கொண்டிருக்கின்ற உறவானது ஐரோப்பாவை தவறான திசையில் நகர்த்துவதாகவும், அமெரிக்காவின் விருப்புக்கு மேற்கு ஐரோப்பா செயற்படுவதை உறுதிப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறன. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் காலத்திலிருந்தே போரிஸ் ஜோன்சன் மேற்று ஐரோப்பாவை பிழையான  திசையில் நகர்த்துகிறார் என்ற எண்ணப்பாங்கு நிலவுகிறது. ஆனால் அமெரிக்காவோ ஐரோப்பாவை தனது நலனுக்கு உட்படுத்திவிட்டு கைவிடும் போக்கினை அவதானிக்க முடிகிறது. அண்மைக்காலத்தில் நிகழ்ந்த நேட்டோ மற்றும் ஜி-07மாநாடுகளில் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் எதிரான தீர்மானங்களை எடுத்து விட்டு தனது உள்நாட்டு பொருளாதார நெருக்கடியின் நிமித்தம் உள்நாட்டில் சினாவில் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியை தளர்த்த போவதாக ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது. அவ்வாறே கிழக்கு ஐரோப்பிய நாட்டின் பெற்றோலிய கம்பெனி மூலம் ரஷ்யாவிடமிருந்து எரிவாயுவையும் பெற்றோலியத்தையும் அமெரிக்கா பெற முயல்வதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. எனவேதான் போரிஸ் ஜோன்சன் மீதான குற்றச்சாட்டும் அவரது அணுகுமுறைகளும் அவரது பதவி விலகலை பழமைபேண் கட்சியினர் முன்னிறுத்துவதற்கு அடிப்படையாக அமைந்தது. இத்தகைய நெருக்கடியிலிருந்து ஐரோப்பாவை குறிப்பாக பிரிட்டனை உள்ளாக்கியதில் போரிஸ் ஜோன்சனுக்கும் பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது.

எனவே, டொனால்ட் ட்ரம்பின் பதவி விலகல் எவ்வாறு அமைந்ததோ அவ்வாறே போரிஸ் ஜோன்சனின் பதவி விலகலும் அவதானிக்கப்படுகிறது. ஐரோப்பாவுக்குள் அரசியல், பொருளாதார நெருக்கடிகளை உருவாக்கியதோடு கிழக்கு ஐரோப்பாவை நோக்கிய நேட்டோவின் விஸ்தரிப்பு ஐரோப்பாவிற்குள் போரையும் உலகளாவிய பொருளாதார நெருக்கடியையும் உலகளாவிய போருக்கான சூழலையும் போரிஸ் ஜோன்சனது கொள்கை ஏற்படுத்தியுள்ளது. ஏறக்குறைய உலகத்தை அபாயமான நிலைக்குள் விட்டுச்செல்லும் தலைவராகவே போரிஸ் ஜோன்சனது பதவி விலகல் அமைய உள்ளது.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments