'ரஷ்ய உலகம்' எனும் வெளியுறவுக் கொள்கை ஏற்படுத்தப் போகும் அரசியல் விளைவுகள் | தினகரன் வாரமஞ்சரி

'ரஷ்ய உலகம்' எனும் வெளியுறவுக் கொள்கை ஏற்படுத்தப் போகும் அரசியல் விளைவுகள்

உலகளாவிய  அரசியலின் நாடுகளின் இருப்பும் எழுச்சியும் வலுக்கோட்பாட்டில் தங்கியுள்ளதாக யதார்த்தவாதிகள் விவாதிக்கின்றனர். அதிலிருந்து வளர்ச்சியடைந்த நவ-யதார்த்தவாதிகள் சர்வதேச உறவுகளில் உள்ள மோதலையும், அராஜக நிலையையும் நவ-யதார்த்தவாத அணுகுமுறைக்கூடாக தீர்க்க முடியுமென்று கருதுகின்றனர். நவயதார்த்தவாதிகள் அரசியல் என்பது தனித்தொரு ஆதிக்கத்திற்கு உரித்துடைய வடிவம் இல்லை என்றும் இராணுவ கட்டமைப்பினை பார்ப்பது போல் பொருளாதாரம் மற்றும் நிதி நிறுவனங்களையும் நவ-யதார்த்தவாதம் அல்லது கட்டமைப்பு யதார்ததவாதம் முதன்மையான அதிகாரத்தின் அடிப்படை என அவர்கள் விவாதிக்கின்றனர். அதற்கமைவாக ரஷ்யாவும் ஐரோப்பாவும் மோதிக் கொள்ளும் சமகால  நிகழ்வுகள் நவ-யதார்த்தவாதத்தின் வடிவமாக அமைகிறதைக் காணமுடிகிறது.  இத்தகைய உலகப் போக்கில் ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்ய உலகம்  என்ற தொனிப் பொருளில் ரஷ்யாவுக்கான புதிய வெளியுறவுக் கொள்கையை  வடிவமைத்துள்ளார். இக்கட்டுரையும் ரஷ்யாவின் உலகம் பற்றிய உரையாடலையும் அதன் விளைவுகளையும் தேடுவதாக அமையவுள்ளது.

முதலில் ரஷ்யாவின் ஜனாதிபதி முன்வைத்துள்ள ரஷ்ய உலகம் என்பதை  அவதானித்தல் பொருத்தமானதாக அமையும். அதாவது ரஷ்யா உலகத்தின்  பாரம்பரியத்தையும் கொள்கைகளையும் பாதுகாக்க வேண்டும். வெளிநாடுகளில்  வசிக்கும் ரஷ்யர்களின் உரிமை மற்றும் நலன்கள் ரஷ்ய கலாசார அடையாளங்களை  ரஷ்யக் கூட்டமைப்பு ஆதரவளிக்கிறது. கடந்த 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன்  உடைந்தது பூகோள அரசியலுக்கு பேரழிவாகும். முன்னாள் சோவியத் யூனியனது சமாதான  வழிமுறையை ரஷ்யா தொடர்ந்து மதிக்கிறது. ஆனால் இதனை மேற்குலக நாடுகள்  எதிர்க்கின்றன. சீனா, இந்தியா, மேற்கு ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும்  ஆபிரிக்க நாடுகளுடனான ஒத்துழைப்பினை ரஷ்யா அதிகரிக்க வேண்டும் என  தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு புடின் ஒப்புதலளித்துள்ளார்.  

மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் அதிருப்தியடைந்துள்ள  ரஷ்யா தனது வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது.  அதிலும் ஆசியாவின் முதன்மை சந்தை வலுவுடைய நாடுகளை நோக்கி உறவினை  பலப்படுத்த ரஷ்யா ஆரம்பித்துள்ளது. சீனாவும் இந்தியாவும் ரஷ்யாவின்  விளிம்பு நில நாடுகள் என இருதய நிலக் கோட்பாட்டை கட்டமைத்த மைக்கிண்டர்  குறிப்பிட்டது போல் புடினின் நகர்வுகள் அமைந்துள்ளன. இதற்கு  வலுக்கொடுக்கும் விதத்தில் பலவிடயங்களை ரஷ்ய ஜனாதிபதி  மேற்கொண்டுவருகின்றார்.  

ரஷ்யா, சீனா, இந்தியா இணைந்து பாரிய இராணுவப் பயிற்சி ஒன்றினை  நிகழ்த்தியுள்ளன. கடந்த (2020,செப்டெம்பார்) முதலாம் திகதி  ரஷ்யாவின்       கிழக்கு இராணுவ வலயத்திலுள்ள செர்ஜியேவ்ஸ்கி பயிற்சி  மைதானத்தில் வோஸ்டாக் -2022என அழைக்கப்படும் பல்முனை இராணுவ உத்தி மற்றும்  செயல்திறன் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏழு நாட்களுக்கு நீடிக்கும்  இப்பயிற்சி கூட்டுக்  களப்பயிற்சி போர்ப் பயிற்சி இராணுவங்களுக்கிடையிலான  தொடர்பு மற்றும் இராணுவ ஒருங்கிணைப்பினை நோக்கமாகக் கொண்டு  மேற்கொள்ளப்படுகிறது. அது மட்டுமன்றி இராணுவ செயல்முறைகளை  நடைமுறைப்படுத்துதல் புதிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பது போன்ற  நடைமுறைகளை ஒட்டி பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனை ரஷ்ய ஜனாதிபதி  நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் இராணுவத்தினருடன் பயிற்சியின்  முக்கியத்துவம் பற்றி உரையாடியிருந்தார்.  

ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெற்ற கிழக்கு பொருளாதார  வலய நாடுகளது ஏழாவது மகாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ரஷ்ய  ஜனாதிபதி புடின் அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் ரஷ்யாவின்  இறையாண்மையை குலைத்து தங்களது எதேச்சதிகாரத்தை உலகம் முழுவதும்  நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிரோக ரஷ்யா  தொடர்ந்து போராடும் எனத் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத்  தெரிவிக்கும் போது ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய்யை கொள்வனவு செய்வதற்கு  ஆசியாவில் போதிய நாடுகள் உள்ளன. சர்வதேச சந்தையில் ரஷ்யாவின் மசகு  எண்ணெய்க்கு அபரிமிதமான தேவையுள்ளது. மேற்குலக நாடுகள் எவ்வளவு முயன்றாலும்  ரஷ்ய மசகு எண்ணெய் விற்பனைக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியாது நோர்ட்  ஸ்ட்ரீம் குழாய் வழித்தடம் மூலமான மேற்கத்தேச நாடுகளுக்கான எரிவாயு  விநியோகம் தடைப்பட்டதற்கு அந்த நாடுகள் ரஷ்யாவுக்கு விதித்த பொருளாதாரத்  தடையினால் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யமுடியாது  போயுள்ளது என்றார். ஏறக்குறைய மேற்குலகமே ரஷ்யாவின் எண்ணெய் மற்றும்  எரிவாயு விநியோகத்தை தடுத்துள்ளதாகவும் ரஷ்யா மீது விதித்த பொருளாதாரத்  தடையே காரணம் எனவும் புடின் விவாதித்துள்ளார் எதுவாயினும் புடினின் ரஷ்ய  உலகம் எனும் வெளியுறவுக் கொள்கை அதிக மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவே  தெரிகிறது. அதனை சற்று விரிவாக நோக்குவது அவசியமானது.  

முதலாவது, ஏற்கனவே அமெரிக்க டொடரின்  வீழ்ச்சி ஆரம்பித்து  விட்டதுடன் ரூபிளின் சந்தைப் பெறுமானம் என்றுமில்லாதவாறு உயர்ந்துள்ளது.  கடந்த காலங்களில் டொலருக்கான சந்தைப்பெறுமானம் 80சதவீதத்திலஜிருந்து 54  சதவீதமாக குறைவடைந்துள்ளது. 2002இல் நிதி நெருக்கடியின் போது கூட டொலரது  வீழ்ச்சி இவ்வாறு அமையவில்லை என்றே பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.  எனவே உக்ரைன் போர் ரஷ்யாவின் பொருளாதாரத்தையும் அதன் நாணயத்தையும்  நிமிர்த்தியுள்ளதாகவே தெரிகிறது. இதற்கான அடிப்படை சீனா, இந்தியா போன்ற  நாடுகள் ரஷ்ய நாணயமான    ரூபிளிலேயே எரிவாயு மற்றும் மசகு எண்ணெய்யை  கொள்வனவு செய்துவருகின்றன. அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளின்  எச்சரிக்கையையும் மீறி ரூபிளில் சக்திவளத்தை கொள்வனவு செய்ய இந்தியா, சீனா  முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

இரண்டாவது, ரஷ்யப் பொருளாதார எழுச்சியிலேயே ஆசிய, ஆபிரிக்க.  மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் விதத்தில்  ரஷ்யா செயல்பட ஆரம்பித்துள்ளது. அடிப்படையில் மேற்குலகம் கடந்த காலத்தில்  பின்பற்றிய வெளியுறவுக் கொள்கையை நோக்கி ஆனால் சற்று தனித்துவத்தோடு ரஷ்யா  செயல்பட முனைகிறதைக் காணமுடிகிறது. அதாவது அமெரிக்காவும், ஐரோப்பிய  நாடுகளும் கீழைத்தேச நாடுகள் மீதான ஆக்கிரமிப்பினாலும் சுரண்டலினாலுமே தமது  பொருளாதாரத்தை பலப்படுதியுள்ளன. மேற்குலகத்தின் குப்பைத் தொட்டியாகவே  கீழைத்தேசம் விளங்கியது. அதாவது மேற்கின் உற்பத்திக் கழிவுகளை கொட்டும்  இடமாகவே கீழைத்தேச நாடுகள் காணப்பட்டன. அதனாலேயே மேற்கின் பொருளாதாரம்  வளர்ச்சியடைந்தது. அதனை ரஷ்யா சீனா, இந்தியா என்பன தமது பிடிக்குள்  கொண்டுவரும் பேராட்டத்திலேயே தற்போது ஈடுபட்டுள்ளன. அதில் ரஷ்ய உலகம் எனும்  கொள்கை அதிக உத்வேகம் கொண்டதாக அமைந்துள்ளது. கீழைத்தேச நாடுகளுடனான  ரஷ்யாவின் நெருக்கம் ரஷ்யப் பொருளாதாரத்தை பலமடையச் செய்யும் என்பதில் அதிக  குழப்பம் கொள்ளத் தேவையில்லை. மாறாக ஐரோப்பாவுடனான உறவு பாதிப்படையுமாயின்  ரஷ்யாவின் உலகளாவிய அதிகாரம் பாதிப்படையும் என்ற விவாதமும் குறைந்த  அர்த்தம் கொண்டதல்ல. கடந்த பல நூற்றாண்டுகளாக ஐரோப்பாவே உலக அதிகாரத்தின்  மையமாக விளங்கியுள்ளது.  

மூன்றாவது, ஐரோப்பாவை நோக்கியே அமெரிக்க வல்லரசின் இருப்பு  வலுவானதாக காணப்படுகிறது. அதனாலேயே ஐரோப்பாவை சுயமாக இயங்க விடாது  அமெரிக்கா செயல்படுகிறது. தற்போது புதிய பிரதமராக ஆட்சிக்கு வந்துள்ள  பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் அமெரிக்க ஜனாதிபதியுடனேயே தனது முதல்  வெளிநாட்டு உரையாடலை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து உக்ரையின்  ஜனாதிபதியுடனான உரையாடலை மேற்கொண்டார். அப்படியாயின் பிரிட்டனில் எத்தனை  பிரதமர்கள் மாறினாலும் அமெரிக்காவின் அடிமையாகவே பிரிட்டனை வைத்துக்  கொள்ளப் போகின்றனர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ரஷ்ய-ஐரோப்பிய உறவை  அமெரிக்கா முற்றாகவே நிராகாரித்ததன் விளைவே இன்றைய ஐரோப்பிய நெருக்கடிக்கு  காரணமாகும். அவ்வாறு ஐரோப்பா -ரஷ்ய நட்புறவு வலுவடையுமாயின் அமெரிக்காவின்  இருப்பு கேள்விக்குரியதாகிவிடும் என்பதை புரிந்துள்ள அமெரிக்கா அதற்கு  அமைவாக செயல்படுகிறது.  

எனவே ரஷ்யா வகுத்துள்ள புதிய வெளியுறவுக் கொள்கை ரஷ்யாவின்  பொருளாதார எழுச்சியை சாத்தியப்படுத்தக் கூடியது. ஏற்கனவே கீழைத்தேச  நாடுகளுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ள ரஷ்யாவுக்கு இலாபகரமானதாக  அமைவதுடன் கீழைத்தேசங்களது மேற்குலகம் மீதான அதிருப்தியும் ரஷ்ய-கீழைத்தேச  உறரைவ வலுப்படுத்தக் கூடியதாக அமையும்.  உலக வல்லரசான முன்னாள் சோவியத்  யூனியனது இறுதித் தலைவர் மிகையில் கொர்பச்சேவின் மறைவுடன்  மீண்டும் ஒரு  வல்லரசுவாதத்தை அதே இருதய நிலத்திலிருந்து கட்டமைக்க விளாடிமிர் புடின்  முனைகிறார்.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments