மேற்குலகின் தந்திரங்களையும் மீறிய ரஷ்யாவின் வெற்றிகரமான நகர்வுகள் | தினகரன் வாரமஞ்சரி

மேற்குலகின் தந்திரங்களையும் மீறிய ரஷ்யாவின் வெற்றிகரமான நகர்வுகள்

உக்ரைன் -ரஷ்யப் போர் ஆறாவது மாதத்தை எட்டியுள்ளது. முடிந்த வாரத்தில் உக்ரைன் முன்னாள் சோவியத் யூனியனிடமிருந்து பிரிந்த நாளை சுதந்திர தினமாகக் கருதும் உக்ரைன் 31வது சுதந்திரதினத்தை 25.08.2022அன்று அனுஷ்டித்தது. அன்றைய நாளில் சுதந்திர தினத்திற்கான கொண்டாங்களை கைவிட்ட உக்ரைனியர்கள் ரஷ்யாவின் பாரிய தாக்கதல்களை எதிர்கொண்டனர். ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் எச்சரிக்கைகளையும் கடந்து ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன்அறிவித்துள்ளது. போலந்து நாட்டின்ஜனாதிபதி அண்ட்ரேஸ் டூடாவுடன்ஜெலன்ஸ்கி பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி அபாயமானதாக இருக்குமெனத் தெரிவித்துள்ளார். இக்கட்டுரையும் ரஷ்யாவுக்கு எதிரான ஐரோப்பிய நாடுகளின் நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ளன என்பதை தேடுவதாக அமைகிறது.

முதலாவது ரஷ்யா உக்ரைன் நிலப்பரப்பின் மீது தாக்குதல் மேற்கொண்டு கைப்பற்றிய பிரதேசங்களை நிர்வாக ரீதியில் ரஷ்யாவுடன் இணைக்கும் நகர்வுகளை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க புலனாய்வுத் தகவல்கள் உறுதிப்படுத்துவதாக வெள்ளைமாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் ஜோன் கிர்பிக் தெரிவித்துள்ளார். குறிப்பாக கெர்ச்ன்,டோனெட்ஸ்க், லுஹான்ஸ்க், சபோரிஜியா மற்றும் கார்கிவ் ஆகிய பிரதேசங்களில் வாக்கெடுப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். 2014இல் இவ்வாறே கிரிமியாவையும் ரஷ்யா கைப்பற்றிய சில வாரங்களில் வாக்கெடுப்பு நிகழ்த்தி தனது பிராந்தியமாக அறிவித்துள்ளது. அத்தகைய அணுகுமுறையொன்றை தொடக்கியுள்ள ரஷ்யா இலகுவில் வெற்றியடையும் என்று கருத வாய்ப்புள்ளது. அத்தகைய பிரதேசங்களில் ரஷ்யாவுக்கு ஆதரவுள்ளதாகவும் இது உக்ரைனிலுள்ள மக்களது தீர்மானமெனவும் ரஷ்யத் தரப்பு குறிப்பிட்டுள்ளது. இது படிப்படியாக உக்ரைனை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான நகர்வாகவே தெரிகிறது. இது ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசுகளின் திட்டமிடப்பட்ட இலக்கு மீதான தோல்வியாகவே தெரிகிறது. உக்ரைனை நேட்டோவுடன் இணைப்பதன் வாயிலாக ரஷ்யாவுக்கு நெருக்கடியை புவிசார் அரசியல் ரீதியாக மேற்கொள்ள முடியுமென கணக்குப் போட்ட மேற்குலகத்திற்கு பாரிய பதிலாக அமைந்துள்ளது. ரஷ்யாவின் புவிசார் அரசியலை வெற்றி கொள்ள முடியாத சூழலை ரஷ்யாவின் அரசியல் தலைமைகள் ஏற்படுத்தியுள்ளன.  

இரண்டாவது, மேற்குலகத்தின் இன்னோர் உத்தியாக ரஷ்ய -உக்ரைன் போரை நீடிப்பதன் வாயிலாக ரஷ்யாவை தோற்கடிக்க முடியுமெனக் கணிப்பிட்டு அமெரிக்கா பாரிய நிதி உதவியை உக்ரைனது இராணுவ செலவீனத்திற்கு வழங்கி வருகிறது. அத்துடன் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவின் அயல் நாடுகளும் உக்ரைனுக்கு தொடர்ச்சியாக இராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குகின்றன. இதன் மூலம் ரஷ்யாவுடனான போரை நீடிப்பதே நோக்கமாகவும் ரஷ்யாவினைதோற்கடிப்பதுமே இலக்காக அமைந்திருந்தது. ஆனால் ரஷ்யாவோ மறுபக்கத்தின் போரை நீடித்துள்ள மேற்குலகத்தின் உத்தியை பயன்படுத்திக் கொண்டு தான் கைப்பற்றிய பிரதேசங்களை தனது நிர்வாகத்துடன் அல்லது தனது நிலத்துடன் இணைப்பதில் அக்கறை கொண்டு செயல்படுகிறது. உக்ரைனது பகுதிகள் முழுமையாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் உட்படுவதுடன் அவற்றின் பகுதிகள் மீதான ரஷ்ய இராணுவத்தின் பலம் நிறுவப்படுகிறது. இத்தகைய பிரதேசங்கள் பின்தளமாகக் கொண்டு அடுத்த இலக்கினை நோக்கி ரஷ்யா நகர திட்டமிடுகிறது. அதாவது உக்ரைன் நிலப்பரப்பினை நோக்கி நகரும் தந்திரோபாயமாகவே தெரிகிறது. இதனால் படிப்'படியாக உக்ரையின் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் அகப்படும் நிலை சாத்தியமாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

மூன்றாவது, அமெரிக்கா உட்பட்ட மேற்குலகம் மிக நீண்ட காலமாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையை ஒரு ஆயுதமாகக் கொண்டு செயல்படுகிறது. அத்தகைய பொருளாதாத் தடையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தேசங்களாக மேற்குலகமே மாறியுள்ளது. குறிப்பாக பெற்றோலியத்திற்கும் எரிவாயுவுக்கும் மேற்குலகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி பாரிய பொருளாதார   சுமையை ஐரோப்பிய மக்களுக்கு உருவாக்கியுள்ளது. பொருளாதாரச்   சுமையால் ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் போராட ஆரம்பித்துள்ளனர். ரஷ்யாவுக்கு எதிராக தீவிரத்தை அதிகம் கொண்டிருந்த பிரிட்டன் பிரதமர் பொறிஸ் ஜோன்சனது தோல்வியை இலகுவில் கடந்து செல்ல முடியாது. அதற்கான மூலகாரணம் பொருளாதார சுமையென்பதை மறைக்க முடியாது. அதே பாதையில் இத்தாலியும் நகர்கிறது. ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய வங்கிகளுக்கு விதித்த தடையை விலக்க திட்டமிட்டுள்ளதை கடந்த வாரங்களில் இப்பகுதியில் குறிப்பிடப்பட்டது நினைவு கொள்ளத்தக்கது. அவ்வாறே ரஷ்யாவும் ஐரோப்பாவுக்கான பெற்றோலிய ஏற்றுமதியை 80வீதத்தால் குறைத்துள்ளது. இதற்கு பல காரணங்களை ரஷ்யா தெரிவித்தாலும் அடிப்படை ஐரோப்பாவை கையாளும் நோக்கமே அன்றி வேறு எதுவும் காரணமாக அமைய வாய்ப்பில்லை எனலாம்.  

நான்காவது, ரஷ்யா மீதான ஐரோப்பிய நாடுகளது பொருளாதாரத் தடையை ரஷ்யா முறியடிக்கும் விதத்தில் மத்திய ஆசியாவையும் இதர ஆசியப் பிராந்தியங்களையும் ஆபிரிக்காவையும் நோக்கிய பொருளாதார விரிவாக்கத்தை ஆரம்பித்துள்ளது. மத்திய ஆசியாவுக்குள்ளால் தரைவழியாகக் கட்டமைத்த வர்த்தகப் பாதை சீனா ஊடாக இந்தியா வரையும் நகர்ந்திருப்பதுடன் கடல்பாதையை விட இது மிகக் குறுகிய காலப்பகுதியில் அடைவை சாத்தியமாக்கியுள்ளது. மொஸ்கோவிலிருந்து மத்திய ஆசியக் குடியரசுகளுக்குள்ளால் பீக்கிங்கை அடைய 10நாட்களே போதுமானதாக அமையும் போது கடலால் ஏறக்குறைய 45நாட்கள் தேவைப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனுடன் ரஷ்யா நின்றுவிடவில்லை மேற்காசிய நிலப்பரப்பிலும் அத்தகைய வாணிப மார்க்கத்தை விரிவாக்கியுள்ளதுடன் துருக்கி, ஈரான், சிரியா ஊடாக ஆபிரிக்க நாடுகளை எட்டியுள்ளது. எனவே ரஷ்யாவுக்கு அதிக பொருளாதார வாய்ப்புக்களை ஐரோப்பியரது பொருளாதாரத் தடை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்ல, ஐரோப்பாவுக்குள் ரஷ்யா நுழையும் போது அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாதது. ஆனால் ஆசியாவுக்குள்ளும் ஆபிரிக்காவுக்குள்ளும் சுதந்திரமாகவும் போட்டியின்றியும் நகர வாய்ப்பு ரற்யாவுக்கு கிடைத்துள்ளது. அதனை ரஷ்யாவின் அரசியல் தலைமைகள் கண்டறிந்து வெற்றிகரமானதாக நகர்கின்றன. அதனையே கடந்த காலத்தில் அமெரிக்காவும் ஏனைய ஐரோப்பிய அரசுகளும் மேற்கொண்டு வந்தன.  

ஐந்தாவது, ரஷ்யாவின் பொருளாதார ஒருங்கிணைப்பானது சீனாவையும் இந்தியாவையும் அரவணைத்துப் போவதாகவே தெரிகிறது. அது சீன -இந்திய முரண்பாட்டை சுமூகப்படுத்த உதவுவதாகவே காணப்படுகிறது. இந்தியாவின் உள்நாட்டு அரசியல் பொருளாதார  இராணுவ வலுவை அவதானிக்கும் போது முரண்பாட்டை தவிர்ப்பது அவசியமானதாகவே தெரிகிறது. சீனாவுடன் ஒப்பிடும்போது பல மடங்கு இந்தியா பிந்தியே உள்ளது. அதனை சமவலுவுள்ளதாக மாற்ற வேண்டுமாயின் எல்லைப் போரையோ அல்லது இந்திய-சீன  போரையோ இந்தியா எதிர்பார்ப்பது அபாயமானது. இந்தியாவுக்கு அவசியமானது அமைதியான வளர்ச்சியாகும். அது இராணுவத்திலும் உள்நாட்டு சமூகக் கட்டமைப்பிலும் நிகழவேண்டும். இத்தகைய சூழலில் ஒரு போருக்குள் இந்தியா  இழுக்கப்படுமாயின் அதன் உடனடி விளைவுகள் அனைத்தும் இந்தியாவுக்கே ஆபத்தானதாக அமையும். அதனால் சீனா -ரஷ்யா -இந்தியாவின் கூட்டின் பலத்தினால் கீழைத்தேச இருப்பு மட்டுமல்ல, மேற்குலகத்தின் வலுவை மட்டுப்படுத்தி இந்தியாவின் எழுச்சியை சாத்தியப்படுத்த முடியும். ஆசியாவின் பலத்திலேயே மேற்குலகத்தின் இருப்பு நிலவுகிறது. அதனால் இந்தியா சீனாவுடன் மோதல் போக்கினை கைவிட்டுவிட்டு இந்தியாவின் வளர்ச்சியை இலக்கு வைப்பது அவசியமானது. விமானம் தாங்கிக் கப்பலை இந்தியா தற்போதே சுய தொழில் நுட்பத்தில் கட்டியுள்ளது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். 

ஆறாவது, ரஷ்யாவின் ரூபிளின் எழுச்சி எற்றுமில்லாதவாயு நிகழ்ந்துள்ளது. அதற்கு அடிப்படையில் மேற்குலகத்தின் பொருளாதாரத் தடையே பிரதான காரணம் என்பது இதே பகுதியில் பல தடவை குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் வளர்ச்சி மேலும் அதிகரித்துவருகிறது.  

எனவே ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையும் உக்ரையின் மூலமான ரஷ்யாவின் வீழ்ச்சியையும் திட்டமிட்ட மேற்குலகம் அதிக நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. அவர்கள் திட்டமிட்ட உபாயத்திற்குள்ளேயே அவர்கள் வீழும் துயரத்தைக் காணமுடிகிறது. ரஷ்யாவின் எழுச்சியும் சீனா, -இந்திய அணிவகுப்பும் ஆரோக்கியமாக அமையும் வரை ரஷ்யாவுக்கும் கீழைத் தேசத்திற்கும் பாதுகாப்பானதாகவே அமைய வாய்ப்புள்ளது. ஆனால் மேற்குலகத்தின் தந்திரங்களையும் திட்டமிடலையும் ரஷ்யா வெற்றிகரமானதாக மாற்றிவருகிறது. அது விளாடிமிர் புடினது தலைமைத்துவத்தினாலேயே சாத்தியமாகிறது. இவை அனைத்தும் புடின் மீதான குறிவைப்பினை அதிகப்படுத்த வாய்ப்புள்ளது. எதுவாயினும் ரஷ்யா எனும் இருதய நிலத்தின் இருப்பு மைக்கிண்டர் குறிப்பிட்டது போல் இன்னுமே காலவதியாகாதுள்ளது.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments