மேற்குலக நாடுகளுக்கு எதிராக பலப்படும் பிறிக்ஸ் அமைப்பு | தினகரன் வாரமஞ்சரி

மேற்குலக நாடுகளுக்கு எதிராக பலப்படும் பிறிக்ஸ் அமைப்பு

உலக அரசியலில் நாடுகளின் ஒத்துழைப்பு பாதுகாப்பையும் பொருளாதார பலத்தையும் ஏற்படுத்திவருகிறது. முதலாம், இரண்டாம்

உலகப் போர்களும் அதற்கு பின்பான சிறிய போர்களும் அத்தகைய கூட்டுப் பாதுகாப்பிற்கான அடிப்படைகளாகவே அமைந்திருந்தன. நாடுகள் பொருளாதார தேவைகளை நிறைவு செய்யவும் பாதுகாப்பினைப் பலப்படுத்தவும் அத்தகைய உத்திகளை கையாண்டுவருகின்றன. குறிப்பாக வளங்கள் சார் போட்டித் தன்மை நிலவுவதனால் அதனை எதிர்கொள்ளவும் பிராந்திய அடிப்படையில் திரட்சியாக செயல்படவும் புவிசார் அரசியல் நெருக்கடியை சரிசெய்து கொள்ளவும் அத்தகைய செய்

முறையை பிரயோகித்து வருகின்றனர். இரண்டாம் உலகப் போருக்கு பிந்திய சூழலில் எழுந்த பிராந்திய அமைப்புக்களில் ஆசியான் வலுவானதாக காணப்படுகிறது. அவ்வாறே மிகப் பிந்திய சூழலில் எழுச்சி பெற்ற பிரிக்ஸ் ஆசிய, ஆபிரிக்க,

இலத்தீன் அமெரிக்க நாடுகளை மையப்படுத்திய ஒத்துழைப்பு அமைப்பாக விளங்குகிறது. இக்கட்டுரையும் சீனாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மகாநாட்டின் உரையாடல்களையும் அதன் முக்கியத்துவத்தையும் தேடுவதாக அமையவுள்ளது.

முதலாவது, 14வது பிறிக்ஸ் மகாநாடு சீனாவின் தலைநகரில் காணொளி மூலம் சீனாவின் ஜனாதிபதி ஜி.ஜின்பிங் தலைமையில் நடைபெற்றுவருகிறது. பிறேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் னாபிரிக்கா போன்ற நாடுகளைக் கொண்ட அமைப்பானது 2009யூலையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டு 2010இல் ஆரம்பிக்கப்பட்டு வளரும் நாடுகளின் அமைப்பாக விளங்குகிறது. இந்த ஆண்டுக்கான தலைமை சீனாவிடம் உள்ளதனால் இந்த ஆண்டு சீனாவின் பிறிக்ஸ் ஆண்டாக சீனா அறிவித்துள்ளது. எல்லா நாட்டின் தலைவர்களும் கலந்து கொண்டதுடன் அந்நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பும் பிரதான நிகழ்வாக அமைந்துள்ளது. இவ் உச்சி மகாநாட்டில் பெய்ஜிங் பிரகடனம் ஒன்றினை  சீனா முன்வைத்ததோடு சீனாவின் ஜனாதிபதி நீண்ட உரையென்றினை தலைமை என்ற அடிப்படையில் முன்வைத்திருந்தார்.

இரண்டாவது, பிறிக்ஸ் உச்சிமகாநாட்டில் உரையாற்றிய தலைவர்கள் அதிகம் பிறிக்ஸ் அமைப்பின் எதிர்காலம் பிரகாசமானதாக அ​ைமயும் எனவும் உலகத்தில் முன்னணி அமைப்பாக வளரும் எனவும் எதிர்வு கூறினர். குறிப்பாக தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா தென்னாபிரிக்காவின் வளர்ச்சிக்கும் பொருளாதார விருத்திக்கும் பிரிக்ஸ் பங்காற்றுகிறது எனத் தெரிவித்தார். அவ்வாறே ஆபிரிக்காவின் பொருளாதார நிபுணர்கள் ஆபிரிக்காவின் பொருளாதார ஒருங்கிணைப்புக்கு சிறப்பான வாய்ப்புக்களை பிறிக்ஸ் வழங்கியது எனத் தெரிவித்துள்ளனர். உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த பிறிக்ஸ் நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என சீனா தெரிவித்தது. வர்த்தக ரீதியான மாற்றங்களுக்கும் வளர்ச்சிக்கும் அடிப்படையான களத்தை பிறிக்ஸ் ஏற்படுத்தியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் வெளிப்படுத்தினார்கள்.

மூன்றாவது, மகாநாட்டின் தலைவரான சீன ஜனாதிபதி உரையாற்றும் போது உலகப் போக்குசார்ந்து பலவிடயங்களை கோடிகாட்டியிருந்தார். குறிப்பாக உலகம் பாரிய சவால்களை எதிர்நோக்குவதாகவும் பொருளாதாரம், பெருந்தொற்று, பாதுகாப்பு போன்ற சவால்களையும் கண்ணுக்கு புலப்படாத நெருக்கடியையும் உலகம் எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.   பூகோளத்தின் விருத்தியானது அதிக தடைகளுக்குள் அகப்பட்டுள்ளது. உலகத்தின் போக்கானது போர் அல்லது சமாதானம், திறந்துவிடப்படல் அல்லது தனிமைப்படுத்தப்படுதல், ஒத்துழைத்தல் அல்லது முரண்படுதல் என்ற தளத்தில் இயங்குகிறது என்றார் ஜின்பிங்.

நான்காவது, ஜின்பிங்ன் உரையில் அதிகம் முதன்மைப்படுத்தப்பட்டதாக அமைந்திருந்த விடயம் அமெரிக்கா அடங்கிய மேற்குலகத்தின் நகர்வுகள் மீதான குற்றச்சாட்டாக அமைந்திருந்தது. அதனை விரிவாக நோக்குவது அவசியமானது.

பொருளாதாரத் தடைகள் பூமராங் போன்றவை. இருபுறமும் கூர்மையான வாளுக்கு ஒப்பானவை. சர்வதேச நிதி அமைப்புக்கள் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் உலகப் பொருளாதாரத்தை அரசியலாக்குபவர்கள் மற்றும் வேண்டுமென்றே பொருளாதாரத் தடைகளை வதிப்பவர்கள் இறுதியில் மற்றவர்களுக்கும் தங்களுக்கும் தீங்கு விளைவிப்பார்கள். அத்துடன் உலக மக்களுக்கும் பேரழிவை ஏற்படுத்துவார்கள். சர்வதேச மேலாதிக்கம் குழு அரசியல் மற்றும் கூட்டு மோதல்கள் அனைத்தும் அமைதியையோ நிலைதிருக்கும் தன்மையையோ தரப்போவதில்லை மாறாக போரையும் வன்முறையையும் ஏற்படுத்துவதை உலக வரலாறு முழுவதும் காட்டுவதாகத் உள்ளது என பிங் தெரிவித்தார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உரையாற்றுகின்ற போது மூலோபாய ஒத்துழைப்புக்கான அமைப்பாக இந்த ஆண்டு பிறிக்ஸ் அமைப்பு விளங்குகிறது. பிராந்திய மட்டத்திலும் பூகோள மட்டத்திலும் ஒத்துழைப்பினை உருவாக்குவதை இலக்காகக் கொண்டுள்ளது. பிறிக்ஸ் படிப்படியாக அதன் அந்தஸ்தும் செல்வாக்கும் உலகளாவிய ரீதியில் வளர்ச்சியடைகிறது. உலகளாவிய பாதுகாப்பினை வலுப்படுத்தும் அதே நேரம் நிலைத்திருக்கும் வளர்ச்சியை ஏற்படுத்துவது அவசியமானது எனவும் காலநிலை மாற்றத்திற்கும் மற்றும் பயங்கரவாதத்துக்கும் எதிராகவும் ஒன்று சேர்வதுடன் சர்வதேச மட்டத்தில் நிகழும் எல்லை ஆக்கிரமிப்பினையும் தடுத்து நிறுத்த போராடுவதும் அவசியமானது என்றார் ரஷ்ய ஜனாதிபதி. மேலும் அவர் தெரிவிக்கும் போது உலகத்தின் அமைதியை குலைக்கும் விதத்தில் சில நாடுகள் தமது நலனுக்காக பொருளாதார ஆக்கிரமிப்பையும் நிதி நிறுவனங்களது ஆக்கிரமிப்பையும் மேற்கொண்டுவருகின்றன. இவற்றுக்கு எதிராக பிறிக்ஸ் நாடுகள் ஒத்துழைப்பை பலப்படுத்தியுள்ளன. ரஷ்யா உலகளாவிய தளத்தில் பிறிக்ஸ் அமைப்பின் உயர்வான பங்களிப்பை சர்வதேச விவகாரங்களில் ஈடுபடத் தயாராக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

இவற்றைவிட இந்தியா, பிறேசில், மற்றும் தென் ஆபிரிக்கத் தலைவர்கள் பிறிக்ஸ் அமைப்பின் ஒத்துழைப்பினையும் வளர்ச்சிக்கான வாய்ப்புக்களையும் முதன்மைப்படுத்தியிருந்தனர். பொருளாதார ஒத்துழைப்புக்களை பலப்படுத்துவதுடன் பரஸ்பரம் நாடுகளுக்கிடையிலான புரிந்துணர்வை ஏற்படுத்துவது தொடர்பிலும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.

உக்ரையின் -ரஷ்ய போருக்கு பின்னரான பிறிக்ஸ் நாடுகளின் சந்திப்பு என்ற வகையில் முக்கியத்துவம் பெற்றதாக காணப்பட்டது. குறிப்பாக ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைக்கு எதிரான உரையாடல்கள் சீனாவாலும் ஏனைய நாடுகளாலும் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தன. அமெரிக்காவும் ஏனைய மேற்கு நாடுகளும் பொருளாதார மற்றும்  நிதி நிறுவனங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு மேற்கொள்ளும் ஆக்கிரமிப்பு நகர்வுகளை மநாடு அதீதமாக கண்டித்ததுடன் இந்தியா ரஷ்யா என்பன பிறிக்ஸ் வங்கிக் கட்டமைப்பின் வலிமையை அதிகரிப்பது தொடர்பிலும் கருத்துத் தெரிவித்திருந்தன.

மேற்குலகத்தின் பொருளாதாரத் தடை தொடர்பில் அதிக கண்டனங்களை வெளிப்படுத்திய மகாநாடு எதிர்கால சபீட்சத்திற்கான பொருளாதார வாய்ப்புக்களை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது. இது ஒரு பொருளாதார வர்த்தக கட்டமைப்பாக அமைந்திருந்தாலும் உலகளாவிய பாதுகாப்பைப்  பொறுத்து அதிக கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சட்டங்களையும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விதிகளையும் மீறுகின்ற செய்முறைகள் தொடர்பிலும் அதிக உரையாடல்களை பிறிக்ஸ் அமைப்பு ஏற்படுத்தியுள்ளது.

எனவே பிறிக்ஸ் மகாநாடும் அதன் உரையாடல்களும் மேற்குலக நாடுகளுக்கு எதிரானதாகவே அமைந்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. அதே நேரம் ரஷ்யாவுக்கான ஆதரவையும் உலகளாவிய பாதுகாப்பினையும் வலியுறுத்தியதுடன் உலக மக்களது நிலைத்திருப்பையும் அவர்களது உணவுப் பாதுகாப்பினையும் முதன்மைப்படுத்தும் உரையாடலாகவும் அமைந்திருந்தது. எதுவானாலும் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளும் மேற்கு நாடுகளுக்கு எதிரான நகர்வையுமே பிறிக்ஸ் அமைப்பு கொண்டுள்ளது என்ற எண்ணத்தை மீள ஒருதடவை உறுதிப்படுத்தியுள்ளது. பாரியளவான சந்தையையும் பொருளாதார வளங்களையும் நிதி வலுவையும் கொண்ட நாடுகளான பிறிக்ஸ் அமைப்பு மேற்குலகத்திற்கு சவாலானதாக மாறிவருவதைக் காணமுடிகிறது.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments