தேசிய நெருக்கடிக்கான போராட்டம் களியாட்டமல்ல | தினகரன் வாரமஞ்சரி

தேசிய நெருக்கடிக்கான போராட்டம் களியாட்டமல்ல

எமது நாடு வரலாறு சந்தித்திராத மிக மோசமான நெருக்கடியை சந்தித்திருக்கிறது. கடுமையான பொருளாதார வீழ்ச்சியால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடும் வேகமான விலை அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலை இவ்வாறே தொடர விடப்படுமானால் மீண்டெழ முடியாத ஒரு நிலைக்கு நாடு சென்று விட முடியும்.  

எமது எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்க்கையையும் அது பெரிதும் பாதித்துவிடமுடியும். எனவே நாம் தற்போது கடந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு பொழுதும் மிக முக்கியமானது. இதை ஆக்கபூர்வமாக பயன்படுத்தி எவ்வாறு நாட்டை மீட்டெடுப்பது என்பதில் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும் பொறுப்புள்ளது என்பதை அழுத்தமாக சொல்ல விரும்புகிறோம்.  

இன்று நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலும் பொருட்கள் கிடைக்காததால் இப்போராட்டங்கள் நடைபெறும் அதே சமயம் அவை அரசுக்கு எதிரானவையாகவும் மாறி வருகின்றன. ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்கான வசதிகள், வாய்ப்புகள் குறைவடையும் போது மக்களின் ஆத்திரம் ஆளும் அரசாங்கத்தின் மீது திரும்புவது இயல்பு. இத்தருணத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முனைப்புடனும், துரிதமாகவும் புத்திபூர்வமாகவும் செயல்பட வேண்டியது அவசியம். பாராளுமன்றம் கூடிய இரண்டு தடவைகளிலும் அந்த அமர்வுகள் பொதுமக்களுக்கு திருப்தி அளிக்கக்கூடியதாக அமையவில்லை. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுவதைத் தவிர மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்ற மாதிரியாக அவை இல்லை. தாம் எவ்வாறு எவ்வளவு விரைவில் சிக்கல்களிலிருந்து மீண்டு வருவோம் என்பதும் சகஜநிலைக்கு நாடு என்று திரும்பும் என்பதுமே மக்கள் எதிர்பார்ப்பாக இருக்கையில், பாராளுமன்றத்தில் நாட்கள் இழுத்தடிக்கப்படும்போது போராட்டங்கள் வன்முறையாக வடிவெடுக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகரிக்க முடியும்.

ரம்புக்கனை போராட்டத்தைப் போல சம்பவங்கள் மேலும் நிகழாதிருப்பதை உறுதிப்படுத்துவது அரசின் கைகளில் மாத்திரமின்றி எதிர்க்கட்சிகளிடமும் இப்பொறுப்பு உள்ளது. கட்சிகள் தீயில் எண்ணெய் வார்க்கக்கூடாது. இத்தகைய சம்பவங்கள் மேலும் நிகழ்வதை ஊக்கப்படுத்துவதாகவும் இருக்கக்கூடாது. இப் பொருளாதார சரிவுக்கு இலங்கையை ஆண்ட அனைத்து கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு ஒரு பரந்த பார்வையை கட்சிகள் கொண்டால் மாத்திரமே எதிர்காலத்தில் உண்மையான நல்லாட்சியை உருவாக்கக் கூடியதாக இருக்கும். இவ்வளவு காலமும் பயணித்த பாதை எவ்வாறெல்லா தவறானதாக அமைந்திருந்தது என்பதை நுணுக்கமாகப் பார்த்துக் கொண்டிருக்காமல் இப் பூஜ்ஜியத்திலிருந்து, புதிய அரசியல் சிந்தனையுடனும், இனவாத, மதவாத சிந்தனைகளுக்கு அப்பாலும் ஒரு ஆழமானதும். ஸ்திரமானதுமான பொருளாதாரத்தை நாட்டில் எவ்வாறு கட்டி எழுப்புவது என்பது தொடர்பான விவாதங்கள் பரவலாக நடைபெற வேண்டியது அவசியம். ஏனெனில் தற்போதைய விவாதங்கள் இன்றைய நெருக்கடி சூழலை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் பார்ப்பதை மையமாகக் கொண்டிருக்கின்றனவே தவிர, எதிர்கால இலங்கையை முன்நிறுத்துவதாக இல்லை. நாட்டின் உடனடிப் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கலாம் என்பதையும் கூடவே புதிய பொருளாதாரக் கட்டமைப்புகளை எவ்வாறு அமைப்பதென்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டிய காலம் இது.

பாராளுமன்றம் பிரச்சினையில் அடுத்ததாக என்ன செய்யப் போகிறதென்பது ஒரு புறமிருக்க நாட்டின் பல பகுதிகளில் நடைபெறும் வீதிப் போராட்டங்களும் வன்முறை வடிவெடுக்கக் கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன. ஏற்கனவே துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். விஷமிகள் புகுந்து விளையாடினால் ஏனைய சமாதான எதிர்ப்புப் போராட்டங்களும் வன்முறை வடிவெடுக்கலாம். பலர் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் உணர்வு ரீதியாகப் பங்கெடுக்காமல் ஒரு பொழுது போக்கல்லது களியாட்ட மனநிலையில் கலந்து கொள்வதையும் காண முடிகிறது. காலி முகத்திடல் தொடர் போராட்டத்தில் இம் மனநிலையை காணலாம்.

ஆனால் நிச்சயமாக இது களியாட்டத்துக்கான அரசியல் களம் அல்ல. அரசியல் கட்சிகளும் மக்களும் சிந்திக்கவேண்டியது, இந்த நெருக்கடியிலிருந்து ஒன்றுபட்ட ரீதியாக நாம் மீண்டெழுவது எப்படி என்பதாகவே இருக்க வேண்டும். தேசிய பேரிடரின்போது வித்தியாசங்களை மறந்து ஒன்றிணைவதும் பின்னர் பழைய நிலைக்குத் திரும்பி அரசியல் செய்வதும் ஜனநாயக நாடுகளில் காணப்படும் ஒரு பொதுப்பண்பு. அதை இப்போது நாம் கைவிட்டு சுயலாபம் தேடுவதில் ஈடுபடலாகாது. ஒவ்வொருவரும் பிரச்சினையின் உண்மையான ஆழத்தை புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். அதற்கேற்றபடி ஒவ்வொருவரும் தம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். இரண்டாம் உலகப் போரின்போது இடுப்புப் பட்டியை இறுக்கிக் கொள்ளுங்கள் என்று ஹிட்லர் முசோலினியிடம் சொன்னதாகச் சொல்வார்கள். தவிர்க்க முடியாத தேசிய நெருக்கடியொன்றின்போது நெருக்கடி நிலைக்கு ஏற்ப தமது தேவைகளை குறைத்துக் கொள்வது அல்லது மாற்று வழிகளுக்குச் செல்வது வெட்கக் கேடான விஷயமல்ல. மிகவும் இயல்பானது. தேசிய கொடிக்கு எழுந்து நின்று மரியாதை செய்வதற்கு ஒப்பான ஒரு காரியமே, நெருக்கடி நிலையோடு பயணித்து அதில் இருந்து வெளிவரும் வரை தம்மை சூழ்நிலைகளுக்கு ஏற்றமாதிரி அதனுடன் பொருந்திப் போவதுமாகும்.

Comments