போட்டியின்றி பெற்றுக் கொள்ளும் விருதுகள் பெறுமதியானவையா? | தினகரன் வாரமஞ்சரி

போட்டியின்றி பெற்றுக் கொள்ளும் விருதுகள் பெறுமதியானவையா?

கௌரவங்கள், விருதுகள், பாராட்டுகள், பொன்னாடைகள், பொற்கிழிகள் என்பவை எம்மைத் தேடி வர  வேண்டுமே தவிர, நாமாக நாடிச் சென்று அவற்றைக் கையேந்தி கேட்டுப் பெறுதல் நாகரிகமல்ல. கௌரவங்களை  நமக்கு நாமே சூடிக் கொள்ளுதல் அல்லது அவற்றை வேறு எவரும் பெற்றுக் கொள்ளவிடாமல் தட்டிப்பறித்தல் போன்ற காரியங்கள் உண்மையான கௌரவமாக அமைந்து விடாது. அவ்வாறான செயற்பாடு அருவருக்கத்தக்கதும், பிறர் நகைப்புக்குரியதுமாகும். 

 தலைநகரில் நடைபெறுகின்ற விருது வழங்கல் விழாக்கள் சிலவற்றை நோக்கும் போது, ஒழுங்குமுறையான போட்டிகள் எதுவுமின்றி தகுதியற்ற குறிப்பிட்ட சிலருக்கும், அவர்கள் சார்ந்த நிறுவனத்துக்கும் மகுடம் சூட்டுவது போன்ற அபத்தமான காரியங்கள் இடம்பெற்று வருவது தெளிவாகத் தெரிகின்றது. திறமைகளுக்கு இடமின்றி, கௌரவங்களை குறிப்பிட்ட சாரார் கபளீகரம் செய்யும் செயல்கள் வேதனை தருகின்றன.

ஒரு அமைப்பானது போட்டி எதுவுமேயின்றி எழுந்தமானமான முறையில் பரிசுக்குரியவர்களாக குறிப்பிட்ட சிலரை அறிவித்து, அவர்களுக்கு விருதுகளை வழங்கும் தன்னிச்சையான முறையற்ற கலாசாரம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

ஒரு நிறுவனமானது பெயருக்கு போட்டிகளை நடத்தி, போட்டியாளர்களின் திறமை, அனுபவம், ஆற்றல் போன்ற தகுதிகளை துளியளவும் கவனத்தில் கொள்ளாது தமக்குத் தாமே பரிசுகளையும், விருதுகளையும் பகிரங்கமாக அறிவித்து நடத்துகின்ற விழா உண்மையான விருது வழங்கும் விழாவாக அமைந்து விடப் போவதில்லை.அவ்வாறான விருதுகளைப் பெற்று வீண்பெருமை கொண்டு, அதனைப் பறைசாற்றுவதற்காக விளம்பரம் தேடி ஆர்ப்பரிப்பது போன்றவையெல்லாம் விடயம் தெரிந்தவர்களுக்கு வெறும் நகைச்சுவையாகவே அமைகிறது.

உண்மையான திறமையாளர்கள் நாட்டில் பலர் இருந்தும், அவர்களுக்கு உரிய இடமளிக்காமல் வருடா வருடம் ஒரே நிறுவனத்துக்கும், ஒரே பேர்வழிகளுக்கும் தொடர்ச்சியாக விருதுகளை வழங்கி வருவதை உண்மையிலேயே தம்மைத்தாமே தாழ்த்திக் கொள்ளும் ஒரு செயலாகவே கருத வேண்டியுள்ளது.

அதிலும் அருவருக்கத்தக்க விடயம் என்னவென்றால், விருதுகளை வழங்குகின்ற அமைப்பில் முக்கிய பதவிகளை வகிக்கின்றவர்கள் தங்களது நிறுவனத்தின் பிரதிநிதிகளை மாத்திரமே விருதுகளுக்காகத் தெரிவு செய்து அவற்றை வழங்குவதாகும்.

போட்டி நடுவர்களாக நியமிக்கப்படுபவர்கள் விண்ணப்பங்களை கேட்டுப்  பெறாமல், உண்மையான ஆற்றல் உள்ள வெற்றியாளர்களை விருதுக்காகத் தெரிவு செய்யும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பதே நியாயம் ஆகும்.

நடுவர்களுக்கு பரந்துபட்ட ஆற்றல் இருக்குமாயின் மட்டுமே சரியான வெற்றியாளர்களை தெரிவு செய்ய முடியும். கடந்த பல வருடங்களாக இவ்வாறாக தொடருகின்ற நியாயமற்ற செயற்பாடு காரணமாக சுயாதீன செயற்பாட்டாளர்கள் பலர் இந்தப் போட்டிகளில் நம்பிக்கை இழந்துள்ளதுடன், விருதுக்கான போட்டிகளில் பங்குபற்றாது விலகி வருவதைக் காண முடிகின்றது. இவ்வாறு போட்டிகளை பலர் தவிர்த்துக் கொள்வதால், அது போட்டிகளை நடத்துவோருக்கு மேலும் வசதியாக அமைந்து விடுகிறது.

உண்மையில் விருதுகளை வழங்கும் போது, அதில் நம்பகத்தன்மை முதலாவதாக இருக்க வேண்டும். தெரிவுக்குழுவில் இருப்போருக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கக் கூடாது. இவ்விடயத்தில் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். எதிர்வரும் காலத்திலாவது விருது வழங்கும் விழாக்கள் சுதந்திரமாக, சுயாதீனமாக, நம்பிக்கையாக அமைய வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

விருது கிடைக்காத சிலரது கருத்தாக அல்லது ஆதங்கமாக இந்தக் கருத்துகள் அமையவில்லை. மிக நீண்ட காலமாக அவதானித்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு, பலரது கருத்துகளையும் உள்வாங்கி ‘எங்கள் கருத்தாக’ இது எழுத்து வடிவம் பெற்றுள்ளது. விருதுகள் பெற்ற எவரையும் புண்படுத்துவது எமது நோக்கமல்ல. விருது பெற்றவர்களுக்கு எமது பாராட்டுக்கள். ஆனால் அவர்களை விடவும் தகுதியானவர்கள், ஒரு சிலரது அநீதியான செயற்பாட்டினால்  தட்டிக்கழிக்கப்படுகிறார்கள், ஓரங்கட்டப்படுகிறார்கள் என்பதே எமது வருத்தமாகும். இந்த உண்மை சமூகத்தில் அனைவருக்கும் புரிந்த விடயம் என்பது எமக்கு ஆத்ம திருப்தி தருகிறது.

Comments