மக்களின் எகிறும் எதிர்பார்ப்புகளும் ஈடு செய்யத் தவறும் எதிர்த்தரப்பும் | தினகரன் வாரமஞ்சரி

மக்களின் எகிறும் எதிர்பார்ப்புகளும் ஈடு செய்யத் தவறும் எதிர்த்தரப்பும்

அரசியலை அரசியல்வாதிகளில் பெரும்பாலானோர் வர்த்தகமாகக் கருதியதன் விளைவே இன்றைய பொருளாதார சிக்கல்களுக்கான பிரதான காரணம். உயர் மட்டம் முதல் சாதாரண மட்டம் வரையிலான தொழில் வாய்ப்புகள் அரசியல் அல்லது கட்சி ரீதியாக வழங்கப்பட்டு வந்தமை, நிர்வாகத்துறையில் கட்சி/ அரசியல் ரீதியான செல்வாக்கு அதிகரித்தமை என்பனவற்றின் விளைவாக வினைத்திறன் குறைவடைந்தது. சேவை மனப்பான்மை அருகி எதைச் சுருட்டலாம் என்ற மனப்பான்மை மிகுந்தது. இலங்கையில் தகுதியற்றோருக்கு உயர் மற்றும் நிர்வாகப் பதவிகளை வழங்குவது நீண்ட கால வழக்கமானது.கட்டுக்கடங்காதபடி கட்சி அரசியல் நாடெங்கும் வியாபித்தது.

எனவே அரசை மாற்றுவதாலோ, பிரதமரையும், ஜனாதிபதியையும், அமைச்சரவையையும் மாற்றுவதாலோ புதிய சிந்தனை ஊற்றெடுக்கப்போவதில்லை. கால் புரட்சி அரைப்புரட்சி அல்ல, முழுப் புரட்சியே நாட்டில் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் இந்த சிஸ்டத்தை மாற்றுவதற்கான தகைமை எதிர்க்கட்சிகளிடம் உள்ளதா? என்பது மிகப் பெரிய கேள்வி. நடைபெற்ற சமீபத்திய பாராளுமன்ற அமர்வுகளில் எதிர்த்தரப்பினர் வெட்டிப் பேச்சு பேசியதை நாம் கண்டோம். நாட்டின் அவசர நிலைக்கு ஏற்றமாதிரி அவை செயற்படாமல் கட்சி, தேர்தல், வெற்றி வாய்ப்பு பற்றிய சிந்தனையுடனேயே செயல்படுவதை அவதானித்தோம். மக்கள், குறிப்பாக இளையதலைமுறையினர் எதிர்பார்க்கும் மாற்றங்கள் குறித்து வெளியில் புத்திஜீவிகள் பேசுகிறார்களே தவிர அரசியல்வாதிகள் பேசுகிறார்கள் இல்லை.

இன்று ஒரு ஆரம்பம் தேவை. சமூக ரீதியான ஆரம்பத்தை காலிமுகத்திடலிலும் நாடெங்கிலும் பார்க்க முடிகிறது. இதற்கு ஒரு அரசியல் முகம் கொடுக்கப்படவேண்டும். அது மக்களின் எதிர்பார்ப்புக்கு ஈடாகவும் அமைய வேண்டும். அதைச் செய்வதற்கு கட்சிகளிடம் ஒன்றுமையும் புரிந்துணர்வும் மிக மிக அவசியம். அதுவே இன்றைய தேவையும் கூட. ஆனால் வீதிப் போராட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்துபவர்கள் எப்படி மாற்றங்களைக் கொண்டு வரப்போகிறார்கள் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். 21ஆவது திருத்தத்தைக் கொண்டு வருவது, குற்றப் பிரேரணையை சமர்ப்பிப்பது, அரசு மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை சமர்ப்பித்து, பிரதமரை நீக்கி புதிய பிரதமரை தெரிவு செய்வது மற்றும் இடைக்கால அரசை உருவாக்குவது எனப் பல ஏற்பாடுகள் பற்றி பேசப்படுகின்றன. எனினும், இவற்றின் மீது இக் கட்சிகளுக்கிடையே பொது உடன்பாடு உள்ளதா?, எவற்றை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதில் முடிவுக்கு வந்துள்ளனவா? என்று தெரியவில்லை. மக்கள் வெளியே காத்திருக்கிறார்கள். எதிர்க்கட்சிகளோ கேலியும் களியாட்டமுமாக பொழுதை வீணடிக்கின்றன.

Comments