ஊடகங்கள் முன்பாக இன்றுள்ள பாரிய தார்மீகப் பொறுப்பு | தினகரன் வாரமஞ்சரி

ஊடகங்கள் முன்பாக இன்றுள்ள பாரிய தார்மீகப் பொறுப்பு

நாட்டில் அமைதியற்றதொரு சூழ்நிலை நிலவுகின்ற இன்றைய சந்தர்ப்பத்தில்,  ஊடகங்கள் தமக்குரிய தார்மீகப் பொறுப்பை உணர்ந்து செயற்படுகின்றனவா எனும் கேள்வி எழுந்துள்ளது.

‘ஒரு நாட்டின் மூன்றாவது கண்’ அல்லது ‘காவலன்’ என அழைக்கப்படுகின்ற ஊடகங்கள், தமது நாட்டின் அமைதியான சூழலுக்கும் மக்களது நிம்மதியான வாழ்வுக்கும்            வழியமைத்துக் கொடுக்க வேண்டிய பாரிய சமூகப் பொறுப்பைக் கொண்டுள்ளன.

ஆனால் இலங்கையில் இன்று தோற்றுவிக்கப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையானது மேலும் தீவிரமடைவதற்கு தூபம் இடும் வகையில் பல ஊடகங்கள் செயற்பட்டு வருகின்றமை வேதனைக்குரிய விடயமாக உள்ளது. தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், வானொலிகள் மற்றும் இணையத்தளங்கள் போன்றவற்றில் கணிசமானவை மாத்திரமே தார்மீகப் பொறுப்புடன் செயற்படுகையில், ஏனைய ஊடகங்கள் நிலைமையை மோசமாக்கும் விதத்தில் செயற்பட்டு வருகின்றன. அவை உண்மை நிலையை மறைத்து, பொய்களை உரக்கக் கூறுகின்றன. பல ஊடகங்கள் முற்றுமுழுதாக எதிர்க்கட்சி தரப்பின் அரசியல் ஆதாயத்துக்கு வாய்ப்பாகவே செயற்படுகின்றன. இவ்வாறான பக்கச்சார்பான போக்கு ஊடக தர்மத்திற்கு எதிரானதாகும். உண்மையை உண்மையாகக் கூறுவதே ஊடகங்களின் பணியும், தர்மமும் ஆகும். அதனை விடுத்து கட்சி சார்பாக ஒரு வெகுஜன ஊடகம் செயற்படுமேயானால் அந்த ஊடகத்தை நடுநிலை ஊடகமாக ஒருபோதும் கருத முடியாது.

நாட்டில் மக்களுக்கு இன்று பலவிதமான சிக்கல்கள் உள்ளமை வெளிப்படையான உண்மையாகும். மின்சாரம் பல மணி நேரம் துண்டிக்கப்படுகிறது, சமையல் எரிவாயு தேவைக்கேற்றவாறு கிடைப்பதில்லை, பொருட்களின் விலைகள் அதிகரிக்கின்றன, எரிபொருட்கள் குறிப்பாக டீசல், மண்ணெண்ணெய் போன்றவை இன்றுவரை சாதாரண தேவைக்குக் கூட கிடைப்பதே அறுதியாக உள்ளது.

எனவே மக்கள் தமது அன்றாட வாழ்க்கையை கொண்டு செல்ல சிரமப்படுகையில், தமது வெறுப்பை அரசாங்கம் மீது வெளிப்படுத்தவே செய்வர். அதனை தவறு என்று கூற முடியாது. ஆனால் மக்களின் ஆதங்கத்தை சில அரசியல் கட்சிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட முனைவதும், அதற்கு சில ஊடகங்கள் துணைபோவதும் கண்டிக்கத்தக்கதாகும்.

உண்மையில் அரசாங்கம் அத்தியாவசிய பொருட்களை வேண்டுமென்றே மக்களுக்குக் கிடைக்க விடாது செய்து, மக்களை துன்புறுத்தலுக்கு ஆளாக்கியிருப்பின் அதனை எதிர்த்து எவரும் குரல் கொடுப்பதில் தவறில்லை. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

ஆனால் முழு உலகையுமே ஆட்டிப்படைத்து விட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் தாக்கமானது எமது நாட்டுக்கும் பொருளாதார ரீதியாக பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பெருந்தொற்றான கொவிட் தாக்கத்திலிருந்து உலகம் மீண்டெழுந்து வருகையில், ரஷ்யா- உக்ரைன் யுத்தம் மீண்டும் உலகப் பொருளாதாரத்தை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.

உலக நாடுகள் அத்தனையுமே  ஏதோ  ஒருவகையில் பாதிப்புக்கு முகங்கொடுத்து வருகையில், இலங்கை போன்ற வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளின் நிலைமை பற்றி நாம் இங்கு கூறத் தேவையில்லை. இந்த உண்மை நிலையை சாதாரண பாமர மக்களுக்கு எடுத்துக் கூறி தெளிவுபடுத்துவது அனைவரதும் கடமையாகும்.

ஆனால் எமது நாட்டில்  அதனை விடுத்து அரசியல் புரிவதிலேயே கவனம் செலுத்தப்படுகின்றது. ஊடக வியாபாரம் நடத்தப்படுகின்றது, அதன் மூலமாக இளைஞர், யுவதிகள் தூண்டப்படுகின்றனர். இந்த ஒழுக்கநெறியற்ற செயலை விடுத்து ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு வித்திடும் வகையில் இனிமேலாவது ஊடகங்கள் தமது பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

Comments