ஆர்ப்பாட்டங்கள் மூலமாக சாதிக்கப்போவது என்ன? | தினகரன் வாரமஞ்சரி

ஆர்ப்பாட்டங்கள் மூலமாக சாதிக்கப்போவது என்ன?

அமெரிக்க டொலர் ஏற்றம் காரணமாக சமையல் எரிவாயு, எரிபொருட்கள் என்பவற்றுக்கு உலக அரங்கிலேயே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலைமையில் இன்று இலங்கையும் அதற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. 

இந்த இக்கட்டான நிலைமையை உணர்ந்து கொள்ளாத அரசியல் கட்சிகள் சில செய்துவரும் ஆர்ப்பாட்டங்களும், வீதிகளை மறித்து நடத்தும் போராட்டங்களும் எந்தவித அர்த்தமும் இல்லாத வெறுமனே அரசியல் விளம்பரம் தேடுகின்ற ஒரு செயலாகவே கருத முடிகிறது. 

உண்மையில் அரசாங்கம் இத்தகைய ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அதனை மக்கள் மீது முழுச் சுமையையும் செலுத்தாது அதனை தானும் தாங்கியவாறு நாட்டை வழி நடத்தி வருகின்றது. இந்த நிலை புரியாது அரசியல் கட்சிகள் சில ஆட்சியை கைப்பற்றவும், மக்களை தம் பக்கம் திருப்பவும் படாதபாடுபட்டு வருகின்றன. 

இவ்வாறு பணமும், உணவும் கொடுத்து பாமர மக்களை கொழும்புக்கு அழைத்து ஆர்ப்பாட்டங்களை நடத்தும் கைங்கரியத்தை செய்வதன் மூலமாக அவர்களால் எதனையும் சாதித்து விட முடியாது. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அதளபாதாளத்தில் வீழ்ச்சி அடைந்திருந்த உலகமே தற்போதுதான் அதிலிருந்து சிறிது சிறிதாக மீண்டு எழுந்து வருகின்றது. இதனை விடவும் ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கிடையிலான யுத்தம் மீண்டும் ஒரு பொருளாதார அச்சுறுத்தலை உலகுக்கு எச்சரிக்கையாக விட்டுள்ளது.   ஏற்கனவே வளர்ந்த நாடுகள் கூட எரிபொருள் தேவைகளுக்கு ஈடு கொடுக்க முடியாது தடுமாறுகின்றன. மசகு எண்ணெய்யின் விலை உச்சத்தை அடைந்துள்ளது.  இந்நிலையில் இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகள் இவற்றுக்கு முகம் கொடுப்பதென்பது உண்மையிலேயே ஒரு சவாலாகவே அமையும். அவ்வாறு இருந்தும் இன்றைய அரசாங்கம் தன்னாலான முயற்சிகளை மக்களுக்காக எடுத்து வருகின்றது. இதுவே இன்று பத்து பிரிவுகளாக இயங்கி வருகின்ற எதிர்க்கட்சி ஆட்சியில் இருந்திருந்தால் மக்கள் சொல்லொணாத் துயரத்தை அடைந்திருப்பார்கள். அது தெரிந்தும் நாட்டு மக்களை திசைதிருப்பி அவர்கள் அரசாங்கத்துக்கு எதிராக செயல்படும் விதம் அருவருக்கத்தக்கது. 

இதனை நன்கு புரிந்து கொண்டிருந்தும் மக்கள் அவர்களது ஏவலுக்கு செவி சாய்ப்பது உண்மையில் வருத்தம் தருகின்ற செயற்பாடாகும். 

எனவே நாட்டு மக்கள் இன்றைய உண்மையான உலக நடப்பு நிலை உணர்ந்து அரசாங்கம் செய்து வருகின்ற மக்கள் நலன்சார் பணிகளுக்கு தமது ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும். இன்று எதிரணியில் இருந்து கூச்சல் போடும் அரசியல் தலைமைகள் பலரும் கடந்த ஐந்து வருடகால நல்லாட்சி அரசாங்கத்தில் எதனையுமே செய்யாது தோல்வியடைந்த அரசாங்கமாக வெளியேறி சென்றவர்களே என்பதை அவர்களும், அவர்களுக்காக தமது நேரத்தையும், பணத்தையும் வீணாக விரயம் செய்து செலவிட்டு ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வோர் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எமது கருத்தாகும்.

Comments