ராஜபக்‌ஷ அரசின் முதலாண்டு நிறைவு | தினகரன் வாரமஞ்சரி

ராஜபக்‌ஷ அரசின் முதலாண்டு நிறைவு

அரசியல் அறிந்து, பயின்று, அனுபவம் கொண்டவர்கள் தலைமைத் தகமை குறித்து பேசும் போது அது அவர்களுக்குள் நித்தமும் கனன்று கொண்டிருக்கும் என்று குறிப்பிடுவார்கள். அத்தகையோர் உலக அரசியலில் மாறா இடத்தை வகித்து வருகிறார்கள். மகாத்மா காந்தி, நேருஜி, சுபாஷ் சந்திரபோஸ், ஆபிரகாம் லிங்கன், கமால் அப்துல் நாஸர், வின்ஸ்டன் சர்ச்சில், ஜோன் கென்னடி, பிடல் காஸ்ட்ரோ, மாவோ சே துங், நெல்சன் மண்டேலா என சமீபகாலத் தலைவர்களாக சிலரைக் குறிப்பிடலாம்.

தலைவர்கள் பிறக்கிறார்களா உருவாக்கப்படுகிறார்களா என்றொரு விவாதப் பொருள் உண்டு. அவர்கள் பிறக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் தலைமைத்துவத்தின் ஆதாரக் கூறுகள் அத்தகையோரின் மரபணுக்களில் பொதிந்திருந்தால்தான் அவர்கள் தமது வாழ்வில் வாய்க்கும் சந்தர்ப்பங்களைப் பற்றிப் பிடித்து பெருந் தலைமைக்கான தமது தகைமையை வளர்த்துக் கொள்ள முடியும்.

மகாத்மா காந்தி தென்னாபிரிக்க ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட போதும், நெல்சன் மண்டேலா நீண்ட சிறைவாசத்துள் தள்ளப்பட்டபோதும், நிறத்தால் மட்டும் மனிதர்கள் நிர்ணயிக்கப்படுவதில்லை என்பதை ஆபிரகாம் லிங்கன் உணர்ந்து கொண்ட போதும் தலைவர்கள் தோற்றம் பெற்றார்கள். அடிப்படை படிப்பறிவற்ற கர்மவீரர் காமராஜர்தான் பரந்த அளவிலான தொழில்துறை வளர்ச்சியை தமிழகத்தில் ஏற்படுத்தினார். திராவிட பாரம்பரியத்தை அது பகுத்தறிவுக்கானது என நிறுவி தமிழர்களின் செழுமை காக்க ஒரு போர்ப்படையை உருவாக்கிய தந்தை பெரியாரும் அடிப்படையில் படிப்பறிவற்றவர். ஆனால் சிந்தனையாளராக பெயரெடுத்தவர். எனவே, தலைமைத்துவம் என்பது அடிப்படையில் பிறப்பிலானதே.

இலங்கையில் துணிச்சல் மிக்க தலைவராக ஜே.ஆர்.ஜயவர்தனவைக் குறிப்பிடுவார்கள். அவருக்குப் பின், தலைமைத்துவமும் அத்துணிச்சலும் மிக்கத் தலைவராக மஹிந்த ராஜபக்ஷவைக் குறிப்பிட முடியும். சுனாமியின் தாக்கம் நாட்டில் நிலவிக் கொண்டிருந்த ஒரு சூழலில் அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றபோது தலைவலியாக நீடித்துக் கொண்டிருந்த விடுதலைப் புலிகள் விடயத்தில் அரசியல் தீர்வோ அல்லது வேறு வகைத் தீர்வோ இரண்டில் ஒன்றை அவர் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதை அவர் நேர்த்தியாக செய்து முடித்தார். விடுதலைப் புலிகள் வேரறுக்கப்பட்ட போது தமிழர்கள் மத்தியில் அடுத்தென்ன நடக்கப் போகிறதோ என்ற பயப்பிராந்தி 83 ஜூலை நினைவுகள் கலந்ததாக மேலெழுந்தது உண்மை.

அச்சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியாகவிருந்த மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவப் பண்பு வெளிப்பட்டது. அவர் அன்று பாராளுமன்ற வளாகத்தில் நிகழ்த்திய உரை. அனைவரும் பேதங்களுக்கு அப்பாற்பட்டு இலங்கை குடிமக்களே என்று சொன்னது தமிழ்ச் சமூகத்துக்கு நிம்மதி அளிப்பதாக இருந்தது. தமிழர்களுக்கு எதிரான மனநிலையுடன் கொம்பு சீவி வளர்க்கப்பட்டோரின் தருணங்களை அன்றைய ஜனாதிபதியின் உரை, அவரது நிலைப்பாட்டை தெள்ளத் தெளிவாக்கி, மழுங்கடித்தது என்பதால் இனமோதல்களுக்கான வாய்ப்புகள் அற்றுப் போயின. மஹிந்த ராஜபக்ஷ அத்துடன் நின்றுவிடவில்லை. யுத்தம் நிறைவடைந்து ஒரு வருட காலத்தில் யாழ்ப்பாணத்துக்கான விரைவு பாதையை அமைத்தார். தெரு நாய்களை மட்டும் பார்க்கக் கூடிய தகர்ந்துபோன ஒரு கிளிநொச்சி நகரம், குறுகிய காலத்தில் சிறப்பான நகரமாக கட்டியெழுப்பப்பட்டது. புனர் நிர்மாணம், மீள் குடியேற்றம் என்பன விரைவாக நடைபெற்றன. புதிய பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டன. யாழ். மருத்துவமனை அபிவிருத்தி அடைந்தது. மலையகத்தை எடுத்துக் கொண்டால் மூவாயிரம் ஆசிரியர் நியமனத்துடன் வளத் தேவைகளும் பாடசாலைகளில் நிறைவேற்றி வைக்கப்பட்டன. பாடசாலைகளில் நிறுவப்பட்ட விஞ்ஞான, கணனி கூடங்கள் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய கல்வி வள அபிவிருத்தியாகும்.

மஹிந்த ராஜபக்ஷ 1970 முதல் அரசியலில் இருந்து அனுபவம் பெற்ற தலைவர். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, சந்திரிகா குமாரணதுங்க, ஜே.ஆர்.ஜயவர்தன, என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர் டீ சில்வா, ஆர் பிரேமதாச, லெஸ்லி குணவர்தன எனப் பல தலைவர்களுடன் பழகும், நெருங்கி நின்று அவதானிக்கும் வாய்ப்பு பெற்றவர். எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ஜி.ஜி.பொன்னம்பலம், அமிர்தலிங்கம், நவரத்தினம் எனத் தமிழ்த் தலைவர்களுடன் பழகவும் அவர்களின் அரசியலை அறியவும் அவற்றில் காணப்படும் நியாயத் தன்மைகளை புரிந்து கொள்ளவும் அவருக்கு வாய்ப்பு கிட்டியது.

இதற்கு உதாரணமாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களை நடத்தியதைச் சொல்லலாம். வட மாகாண சபை எதிர்பார்க்கப்பட்டதைப் போல இயங்க முடியாமை வேறு விடயம். அவர் ஜனாதிபதியாக இருந்தபோதுதான் வடக்கு வசந்தம் சிறப்பாக செயற்பட்டதோடு யாழ்.தேவி மீண்டும் காங்கேசன்துறைவரை பயணிக்கவும் முடிந்தது. இத்தகைய சிறப்புகளைக் கொண்ட ஒரு தலைவரே கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் கொவிட் தொற்றுக்கும் மத்தியில் சுகாதார கட்டுப்பாடுகளுடன் மிக அமைதியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியை அடைந்தார். ஓகஸ்ட் ஐந்தாம் திகதி நடைபெற்ற தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ மீதான தமது நம்பிக்கையை வாக்காளர்கள் வெளிப்படையாகவே தெளிவுபடுத்தி இருந்தார்கள்.

கடந்த வருடம் ஓகஸ்ட் ஒன்பதாம் திகதி பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றுக் கொண்டார். எனினும் தொடர்ச்சியான முடக்கம் ஏற்படுத்தியிருந்த வருவாய்க் குறைவு, பொருளாதார வீழ்ச்சி, உலக நாடுகளும் முடக்கத்துக்கு உள்ளாகியிருப்பதால் உலக பொருளாதார நெருக்கடியின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் எனப் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய இக்கட்டான நிலையிலேயே நாட்டை முன்நகர்த்த வேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

கொவிட் முதலாம் அலை வெகு நேர்த்தியாகக் கையாளப்பட்டிருப்பினும் இப்பெருந்தொற்று மிகத் தீவிரமான பிரச்சினை என்பதை இன்னமும் மக்களால் புரிந்து கொள்ள முடியாமை காரணமாக கடந்த ஏப்ரலின் பின்னர் மற்றொரு முடக்கத்துக்கு செல்ல வேண்டியதாயிற்று. எனினும், பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியிலும் தடுப்பூசி ஏற்றம் நாடெங்கும் நேர்த்தியாக நடத்தப்படுவதை கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் மக்கள் பாராட்டவே செய்கிறார்கள். அதிக சனத்தொகை கொண்ட மேல் மாகாணமே தொற்றின் பரப்பு நிலையமாக அமையும் என்பதால் இம்மாவட்டத்தில், தொற்று அதிகரிப்பு, மரண எண்ணிக்கை அதிகரிப்புக்கு மத்தியிலும் தொடர்ச்சியாக தடுப்பூசி ஏற்றப்பட்டு வருவதை, அரசின் சாதனையாகவே கருதப்பட வேண்டும். உலக சுகாதார ஸ்தாபனமும் இதைக் குறிப்பிட்டுள்ளது.

திரும்பத் திரும்ப நாம் முடக்கத்துக்கு செல்ல முடியாது. அனைவரும் முனைப்புடன் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதன் மூலமே பெருந்தொற்றின் பிடியில் இருந்து நாம் விடுபட முடியும். பொருளாதார மீள் எழுச்சிக்கான தளங்களை நாம் அமைத்துக் கொண்டால் மட்டுமே எழுப்பி நிற்கக் கூடும். வருமானக் குறைவு, சம்பளப் பிரச்சினை, வசதி வாய்ப்புகளில் குறைபாடுகள் எனச் சமூகத்தில் பல சிக்கல்கள் இருப்பினும், மீண்டெழ வேண்டியதே முக்கியம். விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்வது, இந்த அரசின் செயற்பாடுகளுக்கு நாம் கைகொடுத்ததாகவே இருக்கும். ஆர்ப்பாட்டங்களை இச் சந்தர்ப்பத்தில் தள்ளி வைத்து தடுப்பூசியுடன் சகஜ நிலையை உருவாக்குவோம். அடுத்த ஆண்டு இன்னும் ஆச்சரியங்களைத் தரும்.

Comments