நெருக்கமடைந்து வருகின்ற சர்வதேசத்துடனான நல்லுறவு! | தினகரன் வாரமஞ்சரி

நெருக்கமடைந்து வருகின்ற சர்வதேசத்துடனான நல்லுறவு!

இவ்வருட ஆரம்பத்தில் உருவெடுத்த தீவிரமான பொருளாதார நெருக்கடியிலிருந்து எமது நாடு படிப்படியாக மீண்டெழுவதற்கான முன்னேற்றகரமான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. பாவனைப் பொருட்களுக்கான விலைகள் இன்னும் குறிப்பிடத்தக்கவாறு குறைவடையாத போதிலும், எரிபொருட்களுக்கான நெருக்கடி தணிந்துள்ளதையும், அத்தியாவசிய  பொருட்களுக்கான பற்றாக்குறை குறைந்துள்ளதையும் முதலாவது அறிகுறியாகக் கொள்ளலாம்.

இலங்கை மீது சர்வதேசத்தின் உதவிகள் தற்போது பெருகி வருவதை இரண்டாவது சாதகமான அறிகுறியாகக் கொள்ள முடியும். எமது நாட்டின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான கடனுதவி புரிவதற்கு சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதேசமயம் இலங்கைக்கு கைகொடுத்து உதவுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை, ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட சர்வதேச நிறுவனங்கள் தயாராகவுள்ளதாக அண்மைய தினங்களாக நிம்மதியான செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன.

கடன் மறுசீரமைப்புக்கு கைகொடுக்க ஜப்பானும், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சிங்கப்பூரும் புலம்பெயர் சமூகமும் இணக்கமான மனோநிலையில் உள்ளன. பிலிப்பைன்ஸ் நாடும் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே உள்ளது.

இவ்வாறான தகவல்களையெல்லாம் ஒன்றுசேர்த்து வைத்து நோக்குகின்ற போது எமக்கு தெளிவான உண்மையொன்று புரிகின்றது.

புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவானதையடுத்து, சர்வதேசத்துடனான இலங்கையின் நல்லுறவு தற்போது நெருக்கமடைந்து வருகின்றதென்பது தெளிவாகத் தெரிகின்றது. அதேசமயம் சர்வதேசத்தின் ஆதரவின்றி எமது நாடு ஒருபோதுமே முன்னைய நிலைமைக்கு மீண்டெழ முடியாதென்ற யதார்த்தமும் புரிகின்றது.

இலங்கையில் கொவிட் நெருக்கடி தீவிரமடைந்த வேளையிலும், அதன் பின்னர் பொருளாதார நெருக்கடி தலைதூக்கிய சமயத்திலும் வெளிநாடுகளின் உதவிகளுக்காக எமது நாடு ஏங்க வேண்டியிருந்தது. எமது அயல்தேசமான இந்தியா விரைந்து வந்து கைகொடுத்து உதவியமை ஒருபுறமிருந்தாலும், பொருளாதார வீழ்ச்சிக்குக் கைகொடுக்க தூரநாடுகளின் பொருளாதார உதவிகள் போதுமானளவு கிடைக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைப்பதிலும் நிச்சயமற்ற தன்மையே நிலவியது.

ஆனால் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னரே இலங்கைக்கு சர்வதேச உதவிகள் சாத்தியமாவதற்கான வாய்ப்பு உருவாகியது. வெளிநாடுகளுடனான இராஜதந்திர உறவைக் கையாளுவதிலும், நட்புறவை வளர்ப்பதிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடைப்பிடிக்கின்ற திறமையான அணுகுமுறைகளே தற்போது உதவிகள் பெருகுவதற்கான காரணமென்பதில் ஐயமில்லை.

எமக்கு நாமே கடினமான எல்லைவேலிகளை வகுத்துக் கொண்டபடி உலகில் தனியாக வாழ்ந்து விட முடியாது. சர்வதேசத்துடன் நல்லிணக்கத்தைப் பேணியவாறு சென்றால் மாத்திரமே நாட்டை முன்கொண்டு செல்ல இயலும். அதற்கு சர்வதேசத்துடனான இராஜதந்திர அணுகுமுறைகளே முதலில் அவசியம். தற்கால நடைமுறைகளுக்கு ஒவ்வாத வெற்றுப்பேச்சுகளால் விளையப் போகின்ற நன்மைகள் எதுவுமேயில்லை.

கடந்தகால விரிசல்களை நீக்கி, சர்வதேசத்துடன் இசைந்து செல்லும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அணுகுமுறைகள் அமைந்திருப்பதாக அவதானிகள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர். வீழ்ச்சியடைந்து போன தேசத்தை மீளக்கட்டியெழுப்புவதாயின் அவ்வாறான அணுகுமுறைகளே அவசியமாகின்றன.

Comments