வீண்பழி சுமத்தும் வியாபார தந்திரம்! | தினகரன் வாரமஞ்சரி

வீண்பழி சுமத்தும் வியாபார தந்திரம்!

நாட்டில் சமையல் எரிவாயு மற்றும் பெற்றோல் ஆகியவற்றுக்கு தற்போது மீண்டும் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. சமையல் எரிவாயு நிலையங்கள் பலவற்றில் எரிவாயுவை தற்போது பெற்றுக் கொள்ள முடியாதிருக்கின்றது. ‘எரிவாயுக் கப்பல் இன்றும் வந்துசேரவில்லை’ என்று பதிலளிக்கின்றார்கள்.

‘கையிருப்பில் இருந்த எரிவாயு விற்றுத் தீர்ந்து விட்டது’ என்று மற்றொரு எரிவாயு நிலையத்தில் பதிலளிக்கப்படுகின்றது. ‘எரிவாயுவின் விலை குறைக்கப்படப் போகின்றது. அதனால் நாங்கள் புதிதாக எரிவாயு சிலிண்டர்களைக் கொள்வனவு செய்யவில்லை’ என்று மேலும் சில விற்பனை நிலையங்களில் பதிலளிக்கப்படுகின்றது.
இவ்வாறு வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. மொத்தத்தில் கூறுவதானால், எரிவாயுவைப் பெற்றுக் கொள்வதென்பது இயலாத காரியமாகியிருக்கின்றது. கொழும்பு நகரில் மாத்திரமன்றி, நாட்டின் ஏனைய இடங்களிலும் எரிவாயுவுக்குப் பற்றாக்குறையே நிலவுகின்றது.

எரிவாயுவின் நிலைமை இவ்வாறிருக்க, பெற்றோலுக்கும் இதுபோன்ற பற்றாக்குறையொன்றே சமீப நாட்களாக நிலவுவதைக் காண முடிகின்றது. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களின் வரிசை நீண்ட நாட்களுக்குப் பின்னர் மீண்டும் தென்படுகின்றது. பல இடங்களில் எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுக் கிடக்கின்றன. முன்னைய நெருக்கடி நிலைமை மீண்டும் உருவாகி விடுமோ என்ற அச்சம் எமக்கு ஏற்படுகின்றது.

எரிவாயு மற்றும் திரவஎரிபொருள் கப்பல்களின் வருகை குறைந்து விட்டதாக அரச தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகவில்லை. அவ்வாறிருக்கையில், சமையல் எரிவாயுவுக்கும் பெற்றோலுக்கும் திடீரென்று பற்றாக்குறை தோன்றியமைக்கான காரணங்கள் குறித்து ஆராயப்பட்டு அந்த உண்மை மக்களுக்கு வெளிப்படுத்தப்படுவது அவசியம். இல்லையேல் நாட்டு மக்கள் அரசை நோக்கியே சுட்டுவிரல் நீட்டுவார்கள் என்பது நிட்சயம்.

எரிவாயுவுக்கும் பெற்றோலுக்கும் அரசாங்கம் விரைவில் மேலும் விலையைக் குறைக்கப் போகின்றதென்ற செய்திகள் சமீப தினங்களாக மக்கள் மத்தியில் உலவி வருகின்றன. எரிபொருட்களின் விலைகள் திடீரெனக் குறைக்கப்படுமாக இருந்தால், பொதுமக்களுக்கு அது நன்மையளிக்குமென்தில் ஐயமில்லை. ஆனால் அவற்றை கையிருப்பில் வைத்திருக்கும் வியாபாரிகள் நஷ்மடைவார்கள் என்பது தெரிந்த விடயம்.
இவ்வாறான நஷ்டத்தை தவிர்ப்பதற்காகவே பெற்றோலையும் எரிவாயுவையும் விற்பனையாளர்கள் புதிதாக கொள்வனவு செய்வதைத் தவிர்த்தார்கள் என்றொரு தகவல் உலவுகின்றது. எனவேதான் எரிபொருட்களுக்கு திடீரென்று பற்றாக்குறையொன்று உருவெடுத்தது என்று வெளியாகியுள்ள அத்தகவலின் உண்மைத்தன்மை அறியப்பட வேண்டும்.

விலைகள் உயரப் போகின்றன என்று தெரியவந்ததும் வியாபாரிகள் பொருட்களைப் பதுக்குவது என்பது எமது நாட்டில் காலம்காலமாக இருந்து வருகின்ற கலாசாரம். அது வியாபாரிகள் சமூகத்தில் பழகிப் போன இயல்பாகும். ஆனால் விலைகள் குறையப் போகின்றன என்பதற்காக கையிருப்பையே காலியாக வைத்திருப்பதென்பது மற்றொரு புதிய வியாபார கலாசாரமாகவே தெரிகின்றது.

எது எவ்வாறாக இருந்த போதிலும், அத்தியாவசியப் பொருட்களுக்கு செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு முடிவு காணப்பட வேண்டியது அவசியம். இல்லையேல் அரசாங்கம் வீண்பழியையே சுமக்க வேண்டியிருக்கும்.

 

Comments