வேற்றுமையை வளர்ப்பதனால் விளையும் நன்மை எதுவுமில்லை! | தினகரன் வாரமஞ்சரி

வேற்றுமையை வளர்ப்பதனால் விளையும் நன்மை எதுவுமில்லை!

பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து கடந்த 1948இல் சுதந்திரம் பெற்ற காலம் தொடக்கம் கடந்த கால்நூற்றாண்டு காலமாக எமது நாடு முரண்பாடுகளுக்குள்ளேயே சிக்கித்தவித்து வந்துள்ளது. ஒருபுறத்தில் அரசியல்ரீதியான முரண்பாடுகளும், மறுபுறத்தில் இனரீதியான முரண்பாடுகளுமாக சுமார் 75வருடகாலத்தை எமது நாடு வீண்விரயம் செய்து வந்திருக்கின்றது.

ஆனால் அரசியல்ரீதியான பிளவுகளுக்கோ அல்லது இனரீதியான விரிசல்களுக்கோ இதுகாலவரை தீர்வு ஏற்படவில்லை. அதற்கு மாறாக அரசியல் கட்சிகளிடையேயும், இனங்களுக்கிடையேயும் முரண்பாடுகள் வளர்ந்து கொண்டே செல்கின்றன. நல்லிணக்கமும், புரிந்துணர்வும், ஐக்கியமும் தோன்றுவதற்கான சமிக்ஞைகளே தென்படவில்லை.

நாட்டுமக்களிடமிருந்து ஐக்கியம் எட்டாத தூரத்துக்குச் சென்று விட்டதற்குக் காரணகர்த்தாக்கள் எமது அரசியல்வாதிகள் சிலரைத் தவிர வேறெவருமில்லை! அரசியல்வாதிகளில் சிலர் தங்களது அரசியல் ஆதாயத்துக்காக மக்கள் மத்தியில் கட்சிரீதியாகவும், இனரீதியாகவும் வேற்றுமைகளை விதைக்கின்றனர். அதனை நம்புகின்ற மக்கள் பலிக்கடாக்கள் ஆகின்றனர். அதன் பலனாக ஐக்கியமென்பது வெகுதொலைவுக்குச் சென்று விட்டது.

முரண்பாடுகளையும், பிளவுகளையும் விதைப்பதென்பது அரசியல்வாதிகள் பலருக்கு அனுகூலங்களைத் தருகின்றது.

அரசியலில் தங்களது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்கு இனவாதமும், அரசியல் பேதங்களும் அவர்களுக்கு கைகொடுத்து உதவுகின்றன. ஆனால் சாதாரண மக்களுக்கு நன்மை எதுவுமே விளைவதில்லை என்பதுதான் யதார்த்தம். மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்பதற்காக அரசியல்வாதிகளில் அநேகர் மனம்வருந்துவதுமில்லை.

இதுவே எமது நாட்டின் மாற்றமுடியாத கலாசாரமாகிப் போயுள்ளது. இவ்வாறான அவலநிலைமை மேலும் தொடர்வதற்கான கவலைக்குரிய அறிகுறிகளே இன்னும் தென்படுகின்றன. கொவிட் பெருந்தொற்று காரணமாக நாம் இழந்து போன உயிர்களும், பொருளாதார நலன்களும் கொஞ்சநஞ்சமல்ல. அதன் பின்னர் உருவெடுத்த பொருளாதார நெருக்கடியினால் வரலாறு காணாத பாதிப்புகளை அடைந்தோம். பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இன்னுமே எம்மால் மீளமுடியாதிருக்கின்றது. ஆனாலும் எமது நாடு இன்னுமே முரண்பாடுகளையும், பேதங்களையும் கைவிடுவதாக இல்லை. நாம் இன்னும் பாடம் கற்கவில்லை என்பதே உண்மை.

இவ்வாறான நிலைமையில், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணும் வகையில் பழைய முரண்பாடுகளை மறந்து அனைவரையும் ஒன்றிணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வியாழனன்று பாராளுமன்றத்தில்  உரையாற்றுகையில் அறைகூவல் விடுத்துள்ளார். நாட்டின் இன்றைய நெருக்கடி வேளையில் ஜனாதிபதி விடுத்திருக்கும் இந்த அழைப்பை அனைத்துத் தரப்பினரும் சாதகமாக அணுகுவதே நாட்டின் எதிர்கால நலனுக்கு நன்மையாக அமையுமென்பதில் ஐயமில்லை.

வேற்றுமையினால் விளைவது தீமையைத் தவிர வேறொன்றுமில்லை என்ற யதார்த்தமான தத்துவத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டியவர்கள் அரசியல்வாதிகளாவர். ஏனெனில் அரசியல்வாதிகளின் வார்த்தைகளே மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்துகின்றன. மக்களை எந்தவொரு திசையை நோக்கியும் மாற்ற இயலுமானவர்களும் அரசியல்வாதிகளேயாவர்.

Comments