புலமைக்கான சிறப்பை வெளிப்படுத்துவதில் SLIIT கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை வலியுறுத்தும் வகையில், ஆசியாவில் ‘உயர் கல்விக்கான ஒஸ்கர்’ விருது எனப் பொதுவாக அறியப்படும் பெருமைக்குரிய விருதுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஒரேயொரு இலங்கைப் பல்கலைக்கழகம் என்ற பாரியதொரு வெற்றியை அடைந்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்தில் உருவாக்கப்பட்டு 2019ஆம் ஆண்டு ஆசியாவுக்கு விஸ்தரிக்கப்பட்ட இவ்விருதானது ஆசியக் கண்டத்தில் உயர் கல்வியின் சிறப்பு மற்றும் புத்தாக்கத்தைக் கொண்டாடுவதாக அமைகின்றது. இந்த வருட விருதுக்கு ஆசியாவில் உள்ள 600 முன்னணி பல்கலைக்கழகங்களில் இருந்து விண்ணப்பங்கள் வழங்கப்பட்டிருந்தன.
கலை, மனிதநேயம் மற்றும் சமூகவிஞ்ஞானப் பிரிவில் வருடத்துக்கான ஆய்வுத் திட்டத்துக்காகத் தெரிவுசெய்யப்பட்ட ஒரேயொரு இலங்கைப் பல்கலைக்கழகம் என்பதன் ஊடாகப் பல்கலைக்கழகத்தின் சிறந்த சாதனை வெளிக்காட்டப்பட்டுள்ளது. SLIIT இன் வணிகப் பிரிவைச் சேர்ந்த பட்டதாரி மாணவர்களான தவீஷா ஜவர்தன, சசினி அநுத்தரா, தமஷா நிம்னாதி மற்றும் ரிட்மி கரதனாராச்சி ஆகியோர் இணைந்து எழுதி பேராசிரியர் ருவன் ஜயதிலகவினால் மேற்பார்வை செய்யப்பட்ட ‘முதியோர் சனத்தொகையும் உலகப் பொருளாதாரமும்’ ஆய்வுத் திட்டத்திற்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த ஆய்வுத் திட்டம் மூன்று வெளியீடுகளை உருவாக்கியிருப்பதுடன், இது அரிய, இதற்கு முன்னர் கிடைத்திராத அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டது மாத்திரமன்றி, உலகளாவிய கல்வி நிலையில் SLIIT இன் வளர்ந்துவரும் செல்வாக்கையும் வெளிப்படுத்தியுள்ளது.